1987- ஜூன் 7,8 தேதிகளில் சத்யராஜின் பாசத்திற்குரிய சின்னம்மா-சித்தப்பா பெண்கள் டாக்டர் நளினிதேவி - அகிலா திருமணம் பட்சிராஜா ஸ்டுடியோ மண்டபத்திலதான் ஏற்பாடு ஆகியிருந்திச்சு.
சத்யராஜ் 1977-ல் சாதாரண நடிகனா அறிமுகமாகி, பத்து ஆண்டுகளில் மளமளவென உயர்ந்து அவர் கால்ஷீட்டுக்கு தயாரிப்பாளர்கள் காத்திருந்த கால கட்டம்.
7-ந்தேதி கல்யாணத்துக்கு எம்.ஜி.ஆர் 6-ந்தேதி விமானத்தில கோயமுத்தூர் கிளம்பிட்டாரு. அதே விமானத்தில நானும் போனேன்.
பெங்களூரில் 20 நிமிடம் TRANSIT பயணிகளுக்கு விமானம் நின்று கிளம்பியது. முதல் வரிசையில் எம்.ஜி.ஆர்-ஜானகி அம்மா, அமைச்சர் ஈரோடு முத்துசாமி அமர்ந்திருந்தனர்.
பெங்களூரில் விமானம் தரை இறங்கியதும் என்னைப் பார்த்த முத்துசாமி, ‘வாங்க, உங்க அண்ணன்தானே!’ன்னு கர்ட்டஸிக்கு எம்ஜிஆரை பாக்க கூப்பிட்டார். போனேன். என்னைப் பார்த்த எம்ஜிஆர் பக்கத்தில உட்காரும்படி சைகை காட்டினார்.
உட்கார்ந்ததும், செல்லக் கோபத்துடன், ‘‘நீங்க எங்க ஆளு. கலைத்துறையை சேர்ந்தவரு. நீங்க ஏன் முதலமைச்சர் ஆனீங்க?’’ன்னேன்.
பேச்சுத்திறன் இழந்து சைகைளில் விளக்கும் நிலையில் இருந்தவர், ‘என்ன, என்ன பிரச்சனை?’ ங்கறதை கை ஜாடையில் கேட்டாரு.
‘‘இப்ப நான் இனி ஒரு சுதந்திரம்-னு சுதந்திரப் போராட்ட வீரனைப் பத்தி ஒரு படத்தில நடிச்சிருக்கேன். அதை நீங்க பாத்தா நல்லா இருக்கும். ஆனா, உங்க பி.ஏ, செயலாளர் - எல்லோருகிட்டயும் பர்மிஷன் வாங்கறது அவ்வளவு சுலபமில்லை’’-ன்னு சொன்னேன்.
ஜானகி அம்மா பக்கம் திரும்பிய அவர், ‘‘தம்பி என்ன கேக்கறானோ அதை செஞ்சு தர்றேன்னு சொல்லு!’’ன்னு அபிநயம் மூலமா விளக்கினாரு.
‘‘மெட்ராஸ் போயி ஒரு நாள் தகவல் தர்றேன் தம்பி. அப்ப அண்ணாவும் நானும் வந்து பாக்கறோம்!’’னு சொன்னாங்க ஜானகி அம்மாள்.
அடுத்தநாள் 7-ந்தேதி அதிகாலை 4.30 - 6.00 மணி முகூர்த்த நேரம்.
‘‘அந்த அகால நேரத்தில நீங்க வர வேண்டாம்; 6 மணிக்கு மேல வந்தா போதும்!’’ன்னும் சத்யராஜ் சொல்ல, ‘முடியாது. 4.30-க்கு வருவேன்!’னு கை ஜாடை காட்டினாராம் எம்.ஜி.ஆர். இரவு 2 மணிக்கே எழுந்து அதிகாரிகளை விரட்டி, தானும் தயாராகி ஜே,ஜேன்னு 4.30 க்கு கல்யாண மண்டபத்துக்குள்ள வந்திட்டாரு.
‘மலைக்கள்ளன்’ படத்தில எந்த ஸ்டுடியோவுக்குள்ள கதாநாயகனாக நடித்தாரோ, அந்த ஸ்டுடியோ இப்ப கல்யாண மண்டபமா வடிவமைக்கப்பட்டு, முதலமைச்சரா உள்ளே வர்றார்.
கோயமுத்தூரின் திரைப்பட அடையாளமா இருந்த ஸ்டுடியோவாச்சே. 1941-ல் நான் பொறக்கறதுக்கு முன்னாடியே ‘ஆர்யமாலா’ன்னு பி.யு.சின்னப்பா ஹீரோவா நடிச்ச ‘ஹிட்’படம் குடுத்தவர். பட்சிராஜா ஸ்டுடியோ அதிபர் -டைரக்டர் ஸ்ரீராமுலு நாயுடு.
‘இந்தப் படத்துக்கு ஒரு புதுமுகத்தை ஹீரோவா போடலாம்!’னு கலைவாணர் என்.எஸ்.கே.,கிட்ட நாயுடு சொல்லியிருக்காரு. ‘ரூ. 1000/-மும் ஒரு காரும் குடுங்க, நான் புதுசா ஒரு ஹீரோவை புடிச்சுட்டு வர்றேன்’னு பணத்தை வாங்கிட்டு புதுக்கோட்டைக்கு நேரா போயிருக்கார்.
‘சந்திரகாந்தா’-ன்னு ஒரு படத்தில் அறிமுகமாகி, திரையுலகத்தில நுழைஞ்சதும், ‘எப்படியும் சிகரம் தொட்டுடுவோம்!’ங்கிற நம்பிக்கையில நாடகக்குழுவை கலைச்சு, நடிகர்களையெல்லாம் வீட்டுக்கு அனுப்பிட்டாரு சின்னப்பா. துரதிருஷ்டவசமா படம் ஓடலே.
‘அரசனை நம்பி, புருஷனை கை விட்ட கதையா’ சினிமாவுலயும் தோத்து, நாடகக் கம்பெனியையும் மூடிட்ட மனுஷனுக்கு பெருத்த அவமானமா போய், தாடி வளர்த்திட்டு, காவி உடையில கோயில் கோயிலா, பரதேசி மாதிரி சுத்தீட்டிருந்தாரு. விடாப்பிடியா மடங்களில் தேடி பி.யு.சின்னப்பாவை கண்டுபிடிச்சு, அட்வான்ஸ் குடுத்து கூட்டி வந்து, ‘ஆர்யமாலா‘-வில் ஹீரோவா நடிக்க வச்சார் நாயுடு. படம் ஹிட்.
சிவாஜி ‘திருவிளையாடல்’ படத்தில் ‘பாட்டும் நானே; பாவமும் நானே!’ பாடல் காட்சியில 6 வேஷங்களில் நடிச்சதைப் பார்த்திருக்கோம். அதுக்கு 10 வருஷத்துக்கு முன்னாடியே பட்சிராஜாவின் ‘ஜகதலப் பிரதாபன்’ படத்தில மிருதங்கம், கஞ்சிரா கட்டை, தம்பூரா, மோர்சிங்கனு 6 வேஷங்கள்ள பாடி நடிச்சிட்டாரு பி.யு.சின்னப்பா. அந்த படமும் ஹிட்.
1944-ல் ஜகதலப்பிரதாபன் ஹிட் குடுத்த பட்சிராஜா 1954-ல் ‘மலைக்கள்ளன்’ படத்தை எடுத்தது.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி பையை தூக்கிட்டு ஸ்ரீராமுலு நாயுடு மெட்ராஸ் வந்து சிவாஜியை சந்தித்து, ‘இரட்டை வேடம் கதை. அதில நீங்க நடிச்சா எங்கயோ போயிடுவீங்க. நடிப்புக்கு நல்ல தீனி போடற கதை!’ன்னு சொல்லியிருக்காரு.
சிவாஜி அப்ப படுபிசியா இருந்த நேரம்.
‘‘மொதலாளி! தினம் 3 படங்களுக்கு இங்கே கால்ஷீட் குடுத்திருக்கேன். காலையில 7 மணியிலருந்து 1 மணி வரைக்கும் வயசான ரிக்சாக்காரன் வேஷம் போட்டு தாடி, மீசையெல்லாம் ஒட்டிகிட்டு வேகாத வெயில்ல ரிக்சா இழுத்து நடிக்கிறேன். மத்தியானம் புராணப்படங்கள்ள மகாவிஷ்ணு வேஷம் போட்டு செட்டுக்குள்ளே வெந்துகிட்டிருக்கேன். ராத்திரி 9 மணியிலிருந்து நடுஜாமம் 1 மணி வரைக்கும் மாடர்ன் டிரஸ் போட்டு குரூப் டான்ஸர்ஸ் கூட டான்ஸ் ஆடறேன். தாகத்துக்கு தண்ணி கேட்டவனை தடாகத்துக்குள்ளே வச்சு அமுக்கற மாதிரி -வேஷம் கிடைக்காதான்னு ஏங்கின காலம் ஒண்ணு இருந்திச்சு. இப்ப மூச்சு விட நேரமில்லாம வேலை செய்யறேன்!’’ அப்படின்னாரு.
‘‘சரிப்பா! அடுத்த மாசம் வந்து பாக்கறேன்!’ னுட்டு போனாரு ஸ்ரீராமுலு நாயுடு.
சொன்ன மாதிரியே அடுத்த மாசம் வந்தவரு, ‘ஒரு தடவை கதைய கேட்டுப் பாத்திட்டு சொல்லுப்பா சிவாஜி!’ன்னாரு.
கதை, வசனம் எல்லாம் பக்கவா நீங்க ரெடி பண்ணியிருப்பீங்கன்னு தெரியும். கேட்டா, ‘அடடா!ஒரு நல்ல கதையை ‘மிஸ்’ பண்றமேன்னு வருத்தம் வரும். நீங்க தப்பா நினைக்கலேன்னா, எம்.ஜிஆர் அண்ணன்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுப் பாருங்க. ரசிகர்கள் வேணும்ன்னா எங்களை ரெண்டு துருவமா பாக்கலாம். ஆனா எனக்கு சத்தியபாமாவும் ஒரு தாய்தான். எனக்கு சாதம் பரிமாறிட்டுத்தான் அண்ணனுக்கு சோறு போடுவாங்க. ஒற்றை வாடை தியேட்டர்ல நாடகங்கள் போட்ட காலத்தில பல நாட்கள் எம்.ஜி.ஆர் அண்ணன், எனக்கு மட்டுமில்ல -கூட நடிக்கிற நடிகர்களுக்கும் டிபன் வாங்கி குடுத்திருக்காரு. ‘பராசக்தி’ படம் ரிலீஸ் ஆகறதுக்கு முன்னாடியே என் கல்யாணம் நிச்சயம் ஆயிடுச்சு. பி.ஏ. பெருமாள் முதலியார், கண்ணதாசன், சகஸ்ரநாமம் இவங்களோட எம்.ஜி.ஆர் அண்ணனும் கும்பகோணம் வந்து என் கல்யாணத்தில கலந்துகிட்டாரு. வந்திருந்த நண்பர்களுக்கெல்லாம் வேட்டியை மடிச்சுக் கட்டிட்டு உணவு பரிமாறினாரு.
மாடர்ன் தியேட்டர்ஸ்ல நான் நடிக்கப் போறேன்னு தெரிஞ்சு ‘சர்வாதிகாரி’, ‘மந்திரிகுமாரி’-ல டி.ஆர்.எஸ் டைரக்சன்ல நடிச்ச அனுபவங்களை எங்கிட்ட சொல்லி -டிஆர்எஸ் கோபக்காரர் பாத்து நடந்துக்கப்பா - என்று அறிவுரை கூறி அவர் சொந்த கார்ல என்னை சேலம் அனுப்பி வச்சவரு.
‘அதனால ஒரு வேளை அண்ணன் free ஆக இருந்தா கேட்டுப் பாருங்க. நான் வேற அவரு வேற இல்லே!’ன்னு சொல்லியிருக்காரு.
நாயுடு எம்.ஜி.ஆரைப் போய் பார்த்திருக்காரு. அவர் கால்ஷீட் தேதிகள் அட்ஜஸ்ட் பண்ணிக் குடுத்தாரு. படம் சூப்பர் ஹிட். 6 மொழிகளில் அதுக்கப்புறம் அந்த படத்தை எடுத்தாங்க.
1936-லயிருந்து 10 வருஷம் சின்ன சின்ன வேஷங்கள்தான் கிடைச்சுது. 1947ல் ராஜகுமாரில ஹீரோவா நடிக்க முடிஞ்சது. அப்புறம் 7 ஆண்டுகள் ஹீரோ ஸ்தானத்தை காப்பாத்த போராட்டம். 1954-ல் மலைக்கள்ளன்- ஜாக்பாட் மாதிரி அடிச்சு தூக்கி நிறுத்திருச்சு. அப்புறம் ‘மதுரை வீரன்’, ‘அலிபாபாபா’, ‘நாடோடி மன்னன்’, ‘எங்க வீட்டுப் பிள்ளை’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ - இப்படி புகழ் கூடிகிட்டே போயிடுச்சு.
1959-ல் பட்சிராஜா ‘மரகதம்’ன்னு ஒரு படம் எடுத்தாங்க. சிவாஜி-பத்மினி ஹீரோ ஹீரோயினா நடிச்சாங்க. அந்தப்படமும் 100 நாள் ஓடுச்சு. அதில சந்திரபாபு பாடி நடிச்ச ‘குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே‘ -பாட்டை படம் பார்த்த யாரும் மறந்திருக்க முடியாது.
சந்திரபாபு ஒரு ஜீனியஸ். ஹாலிவுட்டில் ஒரு ஜெர்ரி லூயிஸ், தமிழ்நாட்டில் சந்திரபாபு. கே. சுப்பிரமணியம் நாட்டியப் பள்ளியில் பரதம் பயின்றவர். தன்னம்பிக்கை மிகுந்தவர். சிவாஜியைக் கூட சமயங்களில் ‘டே’ போட்டு பேசி விடுவார்.
போர் முனையில் வீரர்களை ஊக்குவித்த கலைஞர்கள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனை ராஷ்டிரபதி பவனில் சந்திக்க சென்றிருக்கிறார்கள். விருந்து முடிந்து கலகலப்பாக எல்லோரும் பேசிக் கொண்டிருந்த போது டாக்டர் ராதாகிருஷ்ணன் -பிறக்கும் போதும் அழுகின்றாய்; இறக்கும்போதும் அழுகின்றாய். ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே’ என்று சந்திரபாபு ‘கவலையில்லாத மனிதன்’- படத்தில் தான் பாடிய பாடலை, அவர் குரலில் பாட, உணர்ச்சி வசப்பட்ட சந்திரபாபு - ஒரே தாவாக தாவி ராதாகிருஷ்ணன் மடியில் உட்கார்ந்து, ‘நீ பெரிய ரசிகன்டா கண்ணா..!’ என்று ஜனாதிபதி தாடையை தடவிக் கொடுத்து சொல்ல, கலைஞர்கள் அத்தனை பேரும் அதிர்ச்சியில் உறைந்து விட்டார்களாம்.
‘பாபு’வின் ‘உனக்காக எல்லாம் உனக்காக -‘புதையல்’ -பம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே- ‘மணமகன் தேவை’.., புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை -‘அன்னை’ பட பாடல்கள் எல்லாம் தனித்துவம் மிக்கவை.
‘சகோதரி’ -படம் வெற்றிபெற சந்திரபாபுவுக்கு லட்ச ரூபாய் கொடுத்து 4 நாளில் படமாக்கிய பால்காரன் வேடம் பெரிதும் உதவியது.
அவர் கதை வசனம் டைரக்சனில் ‘தட்டுங்கள் திறக்கப்படும்‘ வித்யாசமான படம். காது கேளாத, வாய்பேச முடியாத பீட்டர் வேடத்தில் கிளைமாக்ஸில் நடித்த சோகக்காட்சி அவர் நடிப்பின் உச்சம்.
அவரோட படங்களில் நடிக்க முடியாமல் போன வருத்தம் எனக்கு உண்டு. அதேபோல பட்சிராஜா ஸ்டுடியோவில - நம்மூரில் ஒரு படத்தில் நடிக்க முடியாமல் போன ஏக்கமும் உண்டு.
இந்த ஸ்டுடியோவில் உள்ள காமிரா, லைட், மைக், டெக்னீஷியன்கள் எல்லோரையும் பெங்களூர் அழைத்துப் போய் சாமுண்டீஸ்வரி ஸ்டுடியோ என்று ஒன்றை துவக்கி நடத்தினார்கள்.
‘சோ’ அவர்கள் தன்னுடைய ‘ஹிட்’ நாடகமான ‘யாருக்கும் வெட்கமில்லை’ கதையை பெங்களூரில் சாமுண்டீஸ்வரி ஸ்டுடியோவில அவர் இயக்கத்தில படமாக்கினார்.
‘ஒரு பெண் பாலியல் தொழிலாளியாக மாறுவதற்கு சமூகமே அடிப்படை காரணம் - அது அவள் குற்றமல்ல’ என்கிற செய்தியை மையமாக வைத்த கதை. ஜெயலலிதா அம்மையார் அந்த வேடத்தில் நடித்தார். அவருக்காக வாதாடும் வக்கீல் வேஷத்தில் நான் நடித்தேன். அது பட்சிராஜா ஸ்ரீராமுலு நாயுடு ஸ்டுடியோவுக்குள்ளேயே படமானது போன்ற திருப்தி. அடுத்ததா சத்யராஜ் சகோதரிங்க கல்யாணத்துக்கு பட்சிராஜா ஸ்டுடியோவுக்குள்ளே (மண்டபத்தில்) நுழைஞ்சு என் ஆசையை நிறைவேத்திகிட்டேன்.
அதே நேரம் ‘மலைக்கள்ளன்’ ஹிட்டாகி அடுத்தடுத்து சினிமாவுல புகழேணியில உச்சம் தொட்டு, முதலமைச்சராகி, - தனக்கு ‘பிரேக்’ குடுத்த பட்சிராஜா ஸ்டுடியோவுக்குள்ளயே திரும்பவும் அன்னிக்கு கால் பதிக்கிறாரு எம்.ஜி.ஆர். எப்படியிருந்திருக்கும்? அவரை வரவேற்க ஸ்ரீராமுலு நாயுடு மட்டும் இல்லை.
--
சுவைப்போம்...
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
3 days ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago