99-வது வயதில் நாளை அடியெடுத்து வைக்கிறார் எழுத்தாளர் கி.ரா - கையெழுத்து பிரதியில் கதை, தொடர் எழுத்தில் மும்முரம்

By செ.ஞானபிரகாஷ்

99-வது வயதில் நாளை அடியெடுத்து வைக்கிறார் எழுத்தாளர் கி.ரா. கரோனா காலத்தில் தனது கையெழுத்தில் ’அண்டரெண்டப் பட்சி’ எழுதி முடித்து கைப்பிரதியாகவே வெளியிட்டுள்ளார். தொடர் எழுத்தில் மும்முரமாக உள்ளார்.

கி.ரா. என்றும் 'தாத்தா' எனவும் அன்பாக பலரால் அழைக்கப்படும் கி.ராஜநாராயணன், கோவில்பட்டி அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். 1922-ம் ஆண்டு பிறந்த இவர் கரிசல் இலக்கியத்தின் முன்னோடி. 1958-ம் ஆண்டு முதல் இன்று வரை எழுதிக்கொண்டே இருக்கிறார்.

பள்ளிப் படிப்பை நிறைவு செய்யாவிட்டாலும் அவரது எழுத்தின் திறனால் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். சாகித்ய அகாதமி விருதைப் பெற்றவர். இவரது இலக்கியத்துக்கு மரியாதை அளிக்கும் வகையில் புதுச்சேரி லாஸ்பேட்டையில் அரசு ஊழியர் குடியிருப்பில் வீட்டை அரசு ஒதுக்கியுள்ளது.

நாளை செப்டம்பர் 16-ம் தேதி, 99 வயதை கி.ரா. எட்டுவதால், அவரது இல்லத்தில் 'கி.ரா. நூற்றாண்டை நோக்கி' எனப் பிறந்த நாள் விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 98 வயதை நிறைவு செய்து 99-வது வயதில் அடியெடுத்து வைக்கும் கி.ரா.வின் கரங்களால் எழுத்தாளர் கண்மணி குணசேகரனுக்கு விருதும், ரூ.1 லட்சமும் தரப்படவுள்ளது. கி.ரா. தேர்ந்தெடுத்த சிறுகதைகள் நூலும் வெளியிடப்படுவதுடன் கி.ரா. உரையாற்றுகிறார். யூடியூபிலும் நேரடியாகப் பார்க்க வசதி செய்துள்ளனர்.

கரோனா காலத்தில் அவர் தனது கைப்பட எழுதிய 'அண்டரெண்டப் பட்சி' நூலை கைப்பிரதியாகவே வெளியிட்டுள்ளார். இதை அச்சில் ஏற்றாமல் கைப்பிரதியாகவே வாசகர்கள் படிக்க வேண்டும் என்ற கி.ரா.வின் விருப்பம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 'மிச்ச கதைகள்' என்ற புத்தகத்தையும் உருவாக்கி வருகிறார்.

"ஒரு தங்கச் சங்கிலி செய்யும்போது சேதாரமாக தங்கம் விழும். அப்படி விழுந்தவற்றைக் கொண்டு மிச்ச கதைகள் உருவாக்குகிறேன். ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதனின் தேவை அவசியம். பேச்சுதான் மனிதனின் பலம். பேச்சுத்துணை மிகப்பெரிய விசயம். கரோனாவில் மனிதர்களைச் சந்திக்காமல் இருப்பது பெருந்துயரம். இதுபோல் பல நோய்களை உலகம் கண்டுள்ளது. இதை மனிதன் முறியடிப்பான்" என்கிறார், கி.ரா.

பாலியல் கதையாக கைப்பிரதியாக வெளியிட்டுள்ள 'அண்டரெண்டப் பட்சி' மூலம் பேரப் பிள்ளைகளுக்குத் தாத்தா கி.ரா. சொல்லும் அறிவுரையே, 'பறவைகளைப் போல வாழக் கற்றுக்கொள்ளுங்கள்' என்பதுதான்.

'அண்டரெண்டப் பட்சி'யின் உரையாடல் என்ற முறையில் கதை சொல்லியுள்ளார் கி.ரா. உயிரினங்களில் காமம் உருவானது தொடங்கி பல விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். அவருக்கு ஞானபீடம் தரப்பட வேண்டும் என்பதே பல எழுத்தாளர்கள் தொடங்கி, வாசகர்கள் பலரின் நீண்டகால விருப்பம். அது இந்த ஆண்டு நிறைவேறும் எனப் பலரும் எதிர்பார்க்கின்றனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE