செப்டம்பர் 19 ஆம் தேதி இந்த வருட ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது. முதல் ஆட்டமே சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடக்கிறது. இரண்டுமே ஐபிஎல் தொடரில் சாதனைகள் நிகழ்த்திய அணிகள். முக்கியமாக உலக அளவில் பெரும் ரசிகர் கூட்டத்தைப் பெற்றுள்ள அணிகள். ஆனால் இம்முறை இந்தியாவில் எந்த ஆட்டங்களும் நடைபெறாது என்பதால் ரசிகர்கள் சற்று மனமுடைந்துதான் போயிருக்கிறார்கள்.
ஆனால், இந்தக் கட்டுப்பாடுகளைத் தாண்டியும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேவின் ஆட்டத்தை ரசிக்க முடிவு செய்து திட்டம் போட்டு வருகின்றது விசில் போடு ஆர்மி.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர் வட்டமான இது பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு ரசிகர் குழு. இந்தியா முழுவதும் உறுப்பினர்களைப் பெற்றிருக்கும் விசில் போடு ஆர்மியை சமூக வலைதளங்களில் பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருக்கிறது. சிஎஸ்கே அணியால் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கும் ரசிகர் குழு என்பதால் அணியில் கிட்டத்தட்ட அனைத்து வீரர்களுக்குமே இவர்கள் பரிச்சயம். விசில் போடு ஆர்மியின் சமூக வலைதளப் பக்கத்தை தொடராத சிஎஸ்கே வீரரே இல்லை எனலாம். இவர்கள் செய்யும் நல உதவிகள் பற்றி கேப்டன் தோனி வரை தெரிந்து வைத்திருக்கிறார். கடந்த வருடம் சிறந்த ரசிகர் குழு என்கிற விருதையும் தேசிய அளவில் வென்றிருக்கிறது விசில் போடு ஆர்மி.
இந்த ஆர்மியின் நிறுவனர்களில் ஒருவரான, தற்போது பொருளாளராகவும் செயல்பட்டு வரும் வினோத் அடிப்படையில் ஒரு எம்பிஏ பட்டதாரி. தனியார் நிறுவனம் ஒன்றில் உயர் பதவியில் இருப்பவர். கிட்டத்தட்ட இந்தியாவில் இருக்கும் அத்தனை கிரிக்கெட் மைதானங்களிலும் ஆட்டங்களை ரசித்திருக்கும் கிரிக்கெட் ரசிகர், இந்த வருட ஐபிஎல், விசில் போடு ஆர்மியின் செயல்பாடு, ரசிகர்கள் மனநிலை உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து, சமூக விலகல் விதிகளை மதித்து, நம்மிடையே தொலைபேசியில் உரையாடினார்....
ஐபிஎல்லுக்கு முன்னால் சிஎஸ்கே அணியின் முக்கிய நட்சத்திரங்கள் தோனியும் ரெய்னாவும் ஓய்வு அறிவித்திருப்பது விசில் போடு ஆர்மிக்குள் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது?
இரண்டு பேருமே ஒரே நேரத்தில் ஓய்வு அறிவித்தது எங்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சிதான். ஆனால் உடனடியாகவே இருவரையும் ஐபிஎல்லில் பார்க்க முடியும் என்பதால் அதை வைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டோம். ரெய்னாவை மிஸ்டர் ஐபிஎல் என்போம். ஒரு முக்கியமான வீரர். அவர் சில தனிப்பட்ட காரணங்களால் பங்கேற்க முடியாமல் போய்விட்டது.
இந்தியாவில் ஆட்டங்கள் நடக்கவில்லை, சிஎஸ்கே அணியில் கரோனா தொற்று என அடுத்தடுத்து நம் அணிக்கு சிக்கல்தான். ஆனால் இதுபோன்ற சிக்கல்கள் நம் அணிக்கு ஒவ்வொரு வருடமும் வரும். 2018-ல் மீண்டு வரும்போது பல தடங்கல்களை மீறித்தான் கோப்பையை நாம் வென்றோம். எனவே கோப்பையை வெல்ல வரும் தடைகள்தான் இவை. அப்படித்தான் இதை ரசிகர்கள் பார்க்கிறோம்.
தல-தளபதி ரசிகர்களைப் போல ஐபிஎல் அணி ரசிகர்களுக்கும் சமூக ஊடகத்தில் போர் நடக்கிறதே, அதை எப்படிக் கையாள்கிறீர்கள்?
தல தளபதி சண்டையை விடுங்கள். அது இரண்டு தரப்புக்குத்தான். சிஎஸ்கேவைப் பொறுத்தவரை எல்லா அணி ரசிகர்களும் போட்டு வாட்டி எடுக்கின்றனர். ஏனென்றால் சிஎஸ்கேவின் புகழ் அப்படி. பெங்களூரு ரசிகர்கள், மும்பை ரசிகர்கள் என அனைவரும் கிண்டல் செய்வார்கள். சில கிண்டல்களில் அர்த்தமே இருக்காது. வீட்டில் தண்ணீர் வரவில்லையென்றாலும் சிஎஸ்கே சரியாக ஆடவில்லை என்கிற ரீதியில் பேசுவார்கள்.
ஆனால் இதையெல்லாம் நாங்கள் பெரிய சண்டையாகப் பார்க்கவில்லை. இதற்கென தனியாக ஒரு குழு வைத்து பதிலெல்லாம் போடுவதில்லை. முடிந்தவரை நேர்மறையாக, உண்மையாக பதில் சொல்லிவிடுவோம். மேலும், நாங்கள் அனைவரும் முதலில் கிரிக்கெட் ரசிகர்களே. ஐபிஎல்லில் சிஎஸ்கே, ஆனால், இந்தியா விளையாடும்போது இந்தியாவுக்குத்தான் ஆதரவு.
மற்றவர்களின் கிண்டல்கள், மீம்களுக்கு அதே போல எதையும் செய்ய வேண்டும் என்று நாங்கள் நினைத்ததில்லை. எதிர்மறை விஷயங்களைப் புறக்கணித்துவிடுவோம். உதாரணத்துக்கு பெங்களூரு ரசிகர்கள் கிண்டல் செய்ய ஆரம்பித்தால், நாங்கள் சிஎஸ்கேவின் சாதனைகளை மட்டும் பதிலாகப் போடுவோம். வெறுமனே சிஎஸ்கேவின் கோப்பை வரிசை, ஆரிசிபியின் கோப்பை வரிசை எனக் காட்டினாலே போதும்.
விசில் போடு ஆர்மியை எப்படி உறுப்பினர்களைச் சேர்க்கிறது?
உலக அளவில் பல உறுப்பினர்கள் இருக்கின்றனர். ஒரு வருடத்துக்கு ஆயிரம் பேர் என்கிற அடிப்படையில் உறுப்பினர்களைச் சேர்க்கிறோம். எங்கள் ஆர்மியில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வந்து கொண்டே தான் இருக்கும். வரும் விண்ணப்பங்களை பகுதி வாரியாக பிரித்து வைத்து பதில் சொல்வோம். ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனியாக அம்மாநிலத்துக்கான ரசிகர் குழு ஒன்றை உருவாக்கியுள்ளோம்.
பதிவு செய்யப்பட்ட ரசிகர் குழு நீங்கள், பதிவு செய்வதால் என்ன பயன்?
யார் வேண்டுமானாலும் ரசிகர் குழு ஆரம்பிக்கலாம். ஆனால் நாங்கள் எல்லாவற்றையும் முறையாக, வெளிப்படையாகச் செய்ய வேண்டும் என்று நினைத்தோம். அதனால் பதிவு செய்தோம். இதனால் நாங்கள் வசூலிக்கும் பணம், எங்கள் கணக்கு வழக்குகள் என அனைத்துமே முறைப்படுத்தப்படும். நிறைய நல உதவிகள் செய்து வருகிறோம். நிறுவனர்கள், தலைவர், துணைத் தலைவர் என ஒரு அமைப்பைப் போல ஒருங்கிணைப்போடு அனைத்தும் செய்து வருகிறோம்.
ரசிகர் மன்றங்கள் என்றாலே இங்கு ஒரு எதிர்மறையான அபிப்ராயம்தான் மக்களிடையே உள்ளது. நடிகர்களுக்கு இருக்கும் ரசிகர் மன்றத்தைத் தாண்டி ஒரு கிரிக்கெட் அணிக்கான ரசிகர் குழு எனும்போது விமர்சனங்கள் எழவில்லையா?
ரசிகர் மன்றம் என்றால் அவர்களுக்குப் பிடித்தவர்களுக்காக பேனர், கட் அவுட் வைப்பது. தோரணம் கட்டுவது என்கிற ரீதியில் தான் பலரும் நினைக்கின்றனர். ஆனால் அப்படி எந்த நடவடிக்கைகளையும் நாங்கள் செய்வதில்லை.
அரசுப் பள்ளிகளில் செடி நட்டிருக்கிறோம், சில பள்ளிகளில் கரும்பலகைக்கு கருப்பு வண்ணம் அடித்து புதிதாக்கியிருக்கிறோம், பல ஆதரவு இல்லங்களில் சென்று உதவியிருக்கிறோம். எங்கள் குழுவில் யாருக்காவது பிறந்த நாள் என்றால் ஏதாவது ஒரு அனாதை இல்லத்துக்குச் சென்று அவர்களுடன் பகிர்ந்து கொண்டாடுவோம், 2016லிருந்து ஒவ்வொரு வருடமும் ரத்த தான முகாம் நடத்தி வருகிறோம். இப்படி சமூக நல உதவிகள் செய்ய வேண்டும் என்பதால் தான் நாங்கள் அதிகாரபூர்வமாக பதிவு செய்துகொண்டோம்.
இந்த வருடம் விசில் போடு ஆர்மி ஐபிஎல் ஆட்டங்களை எப்படிப் பார்க்கப் போகிறது?
இந்தியாவில் நடக்கும் என்று எதிர்பார்ப்போடு இருந்தோம். தல தோனியைப் பார்க்கும் ஆசையில் இருந்தோம். ஆனால் இப்போது வேறு வழியில்லை. தொலைக்காட்சியில்தான் பார்க்க வேண்டும். ஆனால் வாடஸ் அப், ஸூம் அழைப்புகள் மூலமாக அனைவரும் இணைந்திருந்து ஆட்டங்களைப் பார்த்து ரசிக்கலாம் என்ற திட்டம் இருக்கிறது. எல்லோரும் இணைந்திருக்கும்போது மைதானத்தில் சேர்ந்து பார்க்கும் அந்த சூழல் வரும் என நினைக்கிறோம். கொல்கத்தா, மும்பை எனப் பல பகுதிகளிலிருந்து இப்படி ஸூம் மூலம் இணைந்து பார்க்கலாம் என உறுப்பினர்கள் கேட்டு வருகின்றனர்.
திடீரென ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார் தோனி. அதேபோல சிஎஸ்கேவிலிருந்தும் அடுத்த வருடம் ஓய்வு பெற்றால் என்ன ஆகும்? அவர் இல்லாத ஒரு சிஎஸ்கே அணி எப்படி இருக்கும்?
தோனி இல்லாத சிஎஸ்கே அணியை நினைத்தே பார்க்க முடியாது. இந்திய அணிக்கு அப்படி அடுத்த தலைமுறை வீரர்களை அமைத்துவிட்டுப் போனாரோ அதேபோல சிஎஸ்கே அணிக்கும் அமைத்து கொடுத்துவிட்டுத்தான் செல்வார். உடனடியாகச் செய்ய மாட்டார். அவர் ஓய்வு பெற்றாலும் கூட சிஎஸ்கே அணியுடனனான அவரது பிணைப்பு அப்படியே தொடரும்.
இந்த வருடம் விசில் போடு ஆர்மியில் என்ன புதுசு?
உறுப்பினர் சேர்க்கை ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் ஆரம்பிப்பதற்கு முன் நடக்கும். இந்த வருடம் தற்போது அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. இப்போது உறுப்பினர்களுக்குப் புதிதாகச் சில விஷயங்களை சேர்த்து அனுப்புகிறோம். உறுப்பினர் அட்டை, டீ ஷர்ட், சிஎஸ்கே ஸ்டிக்கர் இவற்றோடு சேர்த்து விதை கலந்த காகிதத்தை அனுப்பி வைக்கிறோம். சிஎஸ்கேவின் சின்னம் இருக்கும் இந்தக் காகிதத்தைச் செடி போல மண்ணுக்கு அடியில் நட்டு வைத்தால் செடியாக முளைக்கும். பின் காலத்து ஏற்ற முகக் கவசத்தையும் அனுப்புகிறோம். வீட்டிலிருந்தே சிஎஸ்கே அணியை உற்சாகப்படுத்துங்கள் என்று வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு வினோத் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
13 hours ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
30 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago