கொங்கு தேன் 25 -‘சாகசக்காரர்கள்’

By செய்திப்பிரிவு

மண்ணுக்கு மண் சாகசக்காரர்கள் உண்டு. அவர்களை அந்த மண்மக்கள் கொண்டாடுவதும் உண்டு. அந்த வரிசையில் என் நினைவுகளை அலைக்கழிப்பவர்கள் இருவர். ஒருவர் மேட்டுப்பாளையம் கிட்டண்ணா. இன்னொருவர் வேட்டைக்காரன்புதூர் முத்துமாணிக்கம் அண்ணா.

கொங்கு மண்ணுக்கு வாலிபால் விளையாட்டு மூலமாகப் பெருமை சேர்த்தவர் வேட்டைக்காரன்புதூர் முத்து மாணிக்கம் அண்ணா. மோட்டார் சைக்கிள் சாம்பியனாக இருந்து இந்த மண்ணுக்கு பெருமை சேர்த்தவர் மேட்டுப்பாளையம் கிட்டு.

இதில் முத்துமாணிக்கம் அண்ணா என் சின்ன வயசிலயே எனக்குள்ள நுழைஞ்சுட்டார்.

‘‘சிவாஜி வேட்டைக்காரன்புதூர் வர்றாராமாப்பா. முத்துமாணிக்கம் தம்பி கல்யாணம் நடக்குது. அதுக்கு மெட்ராஸ்லிருந்து சிவாஜி வர்றாரு. நீ ரெண்டு மூணு படம் வரைஞ்சு வை. நாம அங்கே போயி சிவாஜியைப் பார்க்கலாம்!’னாரு ஒரு நாள் பொள்ளாச்சி மாமா.

வேகவேகமா ஒரே பேப்பர்ல கட்டபொம்மன், பராசக்தி, மனோகரா, சாக்ரடீஸ்னு நாலு கெட்டப்புல சிவாஜி இருக்கற படங்களை வரைஞ்சிட்டேன்.

அதை எடுத்துட்டு நாங்க கிளம்பறதுக்குள்ளே - ‘மோகன் ஆர்ட்ஸ் முதலாளி மோகன் அப்பாவுக்கு சீரியஸ்!’னு 1958- ஜூன் 5-ந்தேதி கல்யாணத்தை முடிச்சிட்டு மறுநாளே சென்னை புறப்பட்டுட்டாரு. எல்லோரும் கிளம்பி போயிட்டாங்கன்னு தகவல் வந்திருச்சு.

வேட்டைக்காரன்புதூர் முத்துமாணிக்கம் அண்ணா பிரமிக்க வைக்கிற பர்சனாலிட்டி. அவங்க தாத்தா காலத்தில ஆயிரக்கணக்கான ஏக்கர் பூமி மலையடிவாரத்தில இருந்திச்சாம். அவர் அப்பா காலத்தில கூட நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இருந்ததா சொல்லுவாங்க. முத்துமாணிக்கம் ஸ்டேட் வாலிபால் பிளேயர். துப்பாக்கி சுடுவதில் நிபுணர். ஜல்லிக்கட்டு மாடு போல அசாத்திய பலம் கொண்டவர் முத்துமாணிக்கம் அண்ணா. உயரத்துக்கு தகுந்த உடம்பு. வளையாத முதுகு. செல்வத்தையும், செல்வாக்கையும் தலைக்குள் ஏற்றிக் கொள்ளாத பண்பு.

என்னுடன் விருந்தில் -முத்து மாணிக்கம்

பராசக்தி படம் வெளியாகி தமிழ்நாட்டை கலக்கின சமயம். சிவாஜி ஒரே படத்தில் உலகப்புகழ் பெற்ற நேரம். அவருக்கு வேட்டைக்குப் போக ஆசை. நண்பர் மூலம் முத்துமாணிக்க அண்ணன் அறிமுகமானாரு. சீக்கிரமே ராத்திரி நேரங்கள்ல காடுகளுக்கு ரெண்டு பேரும் போயி சிறுத்தை, மான், காட்டெருமை எல்லாம் சுட ஆரம்பிச்சுட்டாங்க.

நட்பு நெருக்கமாகி, ஷூட்டிங் இல்லேன்னா சிவாஜியை வேட்டைக்காரன்புதூர்ல நிச்சயம் பார்க்கலாம்னு ஆயிருச்சு.

1960-களின் துவக்கத்தில் பிரபுராம் பிக்சர்ஸ்னு சிவாஜி புள்ளைங்க 2 பேர் பேரையும் இணைச்சு, தன்னோட தயாரிப்பு நிறுவனத்துக்கு பேர் வச்சு விடிவெள்ளி உள்பட பல படங்கள் எடுத்தாரு. நெருக்கம் இன்னும் அதிகமாகி சிவாஜி தம்பி ஷண்முகத்தின் மகன் கிரிக்கு முத்துமாணிக்கம் தம்பி ரத்தினத்தின் மகள் அனுவை திருமணம் செஞ்சிகிட்டாங்க.

முத்துமாணிக்கம் தம்பி ரத்னம்

சிவாஜி அவரது 72 வயதில் மறைந்தபோது உலகமே இருண்டு விட்டதாக உணர்ந்தார் முத்துமாணிக்கம் அண்ணா.

சிவாஜி வளர்ச்சி பார்த்து பணிந்து எல்லோரும் அவரைக்கும்பிடும் போது - பராசக்தி கால கட்டத்திலிருந்தே நண்பனான சிவாஜியை கடைசி வரை கணேசு என்றுதான் அழைத்தார்

நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து சிவாஜி பற்றி ஒரு புத்தகம் எழுத ஆரம்பித்தபோது ‘சிவகுமார்கிட்ட கேளுங்க. அவன் என்னைப் பத்தின தகவல் நிறைய சொல்லுவான்’னு முத்துமாணிக்கம் அண்ணன்கிட்ட சிவாஜி சொன்னாராம்.

பின்னாளில் அவருடைய வெளிப்படைத்தன்மை எல்லார்கிட்டயும் தோள் மீது கைபோட்டு பழகும் குணம், என்னை ரொம்பவும் கவர்ந்தது. சபரிமலைக்கு கொஞ்சகாலம் போய்கிட்டிருந்தார்.

‘நீங்க உண்மையிலேயே பெரிய பக்திமானா?’ன்னு ஒரு நாள் அவர்கிட்ட கேட்டேன்.

‘சாமி மேல பக்தி உண்டுதான். அதை விட வருஷம் பூரா புகை, மதுன்னு உடம்பைக் கெடுத்துக்கற ஆசாமிகளுக்கு சாமி பேரைச் சொல்லி 48 நாள் விரதம் இருக்கிறதுனாலயும், காட்டு வழி பல மைல்கள் நடக்கறப்போ, மூலிகை காற்றை சுவாசிக்கிற வாய்ப்பு கிடைக்கிறதனாலயும் உடம்பை சர்வீஸ் பண்ணிக்க முடியுது. அதுதான் மெயின் காரணம்!’ன்னாரு.

நான் நடிகனா இருந்த காலத்தை விட பேச்சாளனா மாறியது அவருக்க ரொம்ப பிடிச்சிருந்தது. அப்போ ரொம்ப நெருக்கமாயிட்டாரு. ‘தம்பி! கோயமுத்தூர் வட்டாரத்துல எங்க பேசறேன்னாலும் எனக்கு தகவல் குடு. நான் கண்டிப்பா வருவே!’ன்னு சொல்லி பல நிகழ்ச்சிகளுக்கு வந்திருக்காரு.

ஈரோடு புத்தகத்திருவிழா, ‘தவப்புதல்வர்கள்’ங்கிற தலைப்புல அன்னிக்கு பேசறேன். முத்துமாணிக்கம் அண்ணன் முதல் வரிசையில நடு சேர்ல உட்கார்ந்து என் பேச்சை கேக்கணும்ன்னு 2 ஆட்களை ஏற்பாடு பண்ணியிருந்தேன். நிகழ்ச்சி துவங்கறதுக்கு முன்னாடி மூலை முடுக்கெல்லாம் அவரைத் தேடறாங்க. ஆளே கண்ணுல படலே. பேச ஆரம்பிச்சுட்டு பார்த்தா 4-வது வரிசையில ராம்ராஜ் காட்டன் நாகராஜ் பக்கத்தில் ஜாலியா உட்கார்ந்து இருக்காரு.

கூட்டத்தில் ஒருவராக முத்து மாணிக்கம்

நிகழ்ச்சி முடிஞ்சதும், ‘எங்கண்ணா போயிட்டீங்க’ ன்னு கேட்டேன்.

‘‘அட,போ தம்பி! முதல் வரிசையில உட்கார்ந்தா கையக் காலை ஃப்ரீயா ஆட்ட முடியாது. இஷ்டம்போல கைதட்டி வாய்விட்டு சிரிக்க முடியாது. எல்லோரும் நம்மள வேடிக்கை பார்ப்பாங்க.4 வரிசை தள்ளி உட்கார்றதுதான் நம்மளுக்கு சவுகரியமா இருக்கும்!’னாரு.

கோயமுத்தூர்ல எங்கே எப்போ நான் எந்த கூட்டத்தில கலந்துகிட்டாலும் நாலாவது வரிசை இருக்கைகளை தேடறது இயல்பாயிருந்துச்சு. நிச்சயம் அந்த வரிசையில ஏதாச்சும் ஒரு இருக்கையில அமர்ந்து என் பேச்சை ரசிச்சிட்டிருப்பாரு.

அவரோட வசதிக்கும், பழகும் முறைக்கும் சம்பந்தமே இல்லாம, எல்லாருக்கும் நல்லவரா, ஏழை-பணக்காரன் வித்தியாசம் பார்க்காம பழகியவர் 90 வயசை தாண்டி வாழ்ந்து முடிச்சிட்டு போயிட்டாரு.

ஆனா, இப்பவும் நான் கலந்துக்கற கூட்டங்களில் - இருக்கைகளில் அவரை தேடறது இயல்பா இருக்கும். அப்புறந்தான், முத்துமாணிக்கம் அண்ணா நம்மை விட்டுப் போயிட்டார்ல’ ன்னு நினைப்பு வரும். மனசு கசியும்.

மேட்டுப்பாளையம் கிட்டண்ணா மோட்டார் சைக்கிள் பைத்தியம்.

அந்தக் காலத்திலேயே சென்னையில் நடந்த மோட்டார் சைக்கிள் ரேசில் கலந்து கொண்டவர். இலங்கை, பெங்களூரு, கோவை என்று மோட்டார் சைக்கிள் பந்தயம் எங்கு நடந்தாலும் அதில் கலந்து கொண்டு மின்னல் வேகத்தில் பைக் ஓட்டும் தீரர்.

இவரே சூலூரை ஒட்டியுள்ள விமான ஓடுதளத்தில் இரண்டு முறை மோட்டார் சைக்கிள் பந்தயத்தை சொந்த செலவில் நடத்தியிருக்கிறார்.

மேட்டுப்பாளையம் கிட்டண்ணா

குதிரை லாயத்தில் பல ஜாதிக்குதிரைகளை சிலர் கட்டி வைத்து அழகு பார்ப்பது போல, இவர் உலகில் எல்லா நாடுகளிலும் தயாரிக்கப்பட்ட விசேஷ மோட்டார் சைக்கிள்களை வாங்கி வீட்டில் வரிசையாக நிறுத்தி வைத்திருப்பார்.

‘6 சிலிண்டர் மோட்டார் பைக் இது!’ என்று 1976-ல் ‘ஆட்டுக்கார அலமேலு’ படப்பிடிப்புக்காக அவர் தோட்டத்துக்குப் போன போது எனக்கு காட்டினார்.

குட்டி விமானம் ஒன்று வாங்கி லைசன்ஸ் பெற்று வானத்தில் பறந்து விளையாடுவார்.

தனது 6 மாதக் குழந்தை ஷீலாவை தன் மடியில் உட்கார வைத்து, தாழ்வாக தன் வீட்டின் மேல் பறந்து வந்து மொட்டை மாடியில் நின்ற மனைவியிடம், ஒரு கையால் குழந்தையை வெளியே எடுத்து அந்தரத்தில் தொங்க விட்டு வேடிக்கை காட்டுவார்.

அம்மா பெயர் லிங்கம்மா. ஆதிமனிதன் காடுகளில் ஆலிலை கட்டிக் கொண்டு சுற்றித்திரிந்த காலத்தில் பெண் ஆதிக்கமே இருந்தது என்று வரலாற்று ஆசிரியர் ராகுலசாங்கிருத்யாயன் சொல்லியுள்ளார். கொங்கு மண்ணில் 100 ஆண்டுகளுக்கு முன்பு ஆளுமையோடு இருந்த பெண்களில் லிங்கம்மாவும் ஒருவர். 150 ஏக்கரா பூமியில் அவர் மேற்பார்வையில் விவசாயம் பார்த்தவர்.

தன் மகனுக்கு மைசூர் அரண்மனையில் ‘வெட்டினரி’ டாக்டராக (விலங்கியல் மருத்துவர்) இருந்த ஒருவரின் மகளை மணம் முடித்து வைத்தார். மகாலட்சுமி மாதிரி பெண் என்று சிலரைப் பார்த்து கையெடுத்து வணங்குவோமே, அப்படி ஒரு தெய்வீகக் களை பொருந்தியவர் கிட்டண்ணா துணைவியார்.

பிரேம லீலா கிட்டு

ஆட்டுக்கார அலமேலு, புதுவெள்ளம், கடவுள் அமைத்த மேடை... உள்ளிட்ட பல படங்களில் படப்பிடிப்பை மேட்டுப்பாளையத்திலுள்ள அவர் பண்ணை தோட்டத்தில் நடத்தினோம்.

ஆட்டுக்கார அலமேலு படம் மேட்டுப்பாளையம் வட்டாரத்தில் படமாக்கப்பட்டபோது பக்கத்திலுள்ள சென்னாமலையில் முருகப் பெருமானை கும்பிடப் போகும் பக்தர்களின் தாகத்தை தீர்க்க குடிநீர் குழாய் ஆற்றிலிருந்து பதித்துத் தருவதாக வாக்களித்திருந்தார் தேவர் அண்ணா.

கிட்டண்ணா அந்த பணியை ஏற்றுக் கொண்டு செய்து முடித்து 28.01.1983-ல் தேவரின் புதல்வர் தண்டாயுதபாணி, மருமகன் டைரக்டர் ஆர். தியாகராஜன் தலைமையில் என்னை சென்னையிலிருந்து வரவழைத்து திறப்பு விழா செய்து முடித்தார்.

சென்னா மலையில் குடிநீர்- நிகழ்ச்சியில் கிட்டண்ணா

விருந்தோம்பலுக்கு பெயர் போன மண் கொங்கு மண்.

திங்கள் - வெள்ளி கிழமைகளில் விரதம் இருந்து ஒரு வேளை மட்டும் பால், பழங்கள் சாப்பிடுபவர் திருமதி கிட்டு. ஆனால் சென்னையிலிருந்து நம் தோட்டத்தில் படப்பிடிப்புக்கு வந்திருக்கிறார்கள் என்றறிந்ததும் விரதத்தை ஓரங்கட்டி விட்டு, ஆடு, கோழி, மீன் வகையறாக்களை வாங்கிக் குவித்து கல்யாணத்துக்கு சமைக்கும் விசேஷ சமையல் ஆட்களை வரவழைத்து 150 பேருக்கு அசைவ விருந்து மனசார கொடுப்பார்.

‘‘சாமி நாளைக்கு கும்பிட்டுக்கலாம் தம்பி! நாளைக்கு நீங்க இங்க இருக்க மாட்டீங்களே. நம்ம ஊட்டுக்கு வந்தவங்களை உபசரிக்கிறதை விட சந்தோஷம் என்ன இருக்கு சொல்லுங்க!’’ என்று கேட்பார்.

1957-ல் சுவிட்சர்லாந்துடன் கூட்டாக சேர்ந்து செயற்கை வைரம் தயாரிக்கும் இந்தோ ஸ்விஸ் ஜெம் பாக்டரி துவங்கி நடத்தினார்.

கோவைக்கு நான் எப்போது வந்தாலும், எனது படங்கள் தியேட்டரில் ஓடினால், எல்லா நண்பர்களையும் அழைத்து ஒன்றாக படம் பார்ப்போம்.

மங்களூர் அடுத்த தாய் மூகாம்பிகை கோயிலுக்கு போனவர் ஆற்றில் இறங்கியபோது கண்ணாடி ‘சில்’ ஒன்று பாதத்தின் அடிப்பக்கம் 4 அங்குலம் அளவு கிழித்து விட்டது. ரத்தம் கட்டுப்படாமல் போயிட்டே இருந்தது.

விளையாட்டு வீரரான அவர் துணிந்து ஈரத்துணியை சுற்றிக் கொண்டு ஆஸ்பத்திரி போய் 5 தையல் போட்டுக் கொண்டார்.

‘ராமன் பரசு ராமன்’ படம் பார்க்க கோவைக்கு நான் அழைத்தபோது -படுக்கையில் இருந்தவர் ‘தம்பி அழைத்து நாம் போகாமல் இருக்கலாமா?’ என்று நொண்டிக் கொண்டே காரில் வந்து சேர்ந்தார். சென்னை வந்தால் எவ்வளவு முக்கியமான வேலை இருந்தாலும் 5 நிமிடம் வந்து எங்களைப் பார்க்காமல் செல்ல மாட்டார்.

ஆண்கள் எப்போதுமே குழந்தைகள் போலத்தான். வாலிபம் வரை அம்மா சீராட்டி தாலாட்டி வளர்த்து விடுகிறாள்.

திருமணமான பின் அவன் பலம் பலவீனங்களை அனுசரித்து அவனோடு குடும்பம் நடத்தி -அவன் சாதனைக்கு பக்கபலமாக மனைவி இருக்கிறாள்.

வயதானபின் மகளும் பேரன் பேத்திகளும் -அவனைக் கொண்டாடுகிறார்கள்.

பெண்ணால்தான் ஒரு மனித வாழ்வு அர்த்தமுள்ளதாகிறது. முழுமையும் பெறுகிறது.

அந்தப் பெண் 60 வயது ஆணை விட்டு அகாலமாக மறைந்து விட்டால் அவன் எஞ்சிய காலம் நரகம்தான்.

கிட்டு அண்ணா மடியில் பிருந்தா, சூர்யா

பிள்ளைகளோ, மருமகள்களோ, பெற்ற மகளோ நன்றாக கவனித்துக் கொள்வார்கள்தான். ஆனால் அவனை ஒரு குழந்தையாக பாவித்து, அவன் என்ன அடம்பிடித்தாலும் எவ்வளவு கோபித்துக் கொண்டாலும் பக்குவமாக உணவு கொடுத்து, உறங்க வைப்பவள் மனைவி மட்டுமே.

தாயோடு அறு சுவைபோம்

தந்தையோடு கல்விபோம்

சேயோடு தாம் பெற்ற செல்வம்போம்

ஆய வாழ்வு உற்றாரோடுபோம்

உடன்பிறப்போடு தோள் வலிபோம்

பொற்தாலியோடு எவையும்போம்

இந்த சத்திய வரிகளில் சொல்லியுள்ளது போல மகாலட்சுமியை இழந்த கிட்டண்ணா அவர் நினைவுகளில் நாட்களை நகர்த்துவதோடு, மகாஜன ஹையர் செகண்டரி ஸ்கூல் தாளாளராக இருந்து கல்விப் பணி ஆற்றுகிறார்.

சுவைப்போம்...

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

18 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

28 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்