பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம், அதனைத் தொடர்ந்து எழுந்த அடுத்தடுத்த சர்ச்சைகள் என கடந்த இரண்டு மாதங்களாக தேசிய அளவில் பேசுபொருளான இவ்விவகாரத்தில் அவரது காதலி ரியா சக்கரபர்த்தி போதைப்பொருள் வாங்கியதாகக் கைது செய்யப்பட்டார்.
பாலிவுட்டில் உள்ள இளம் நடிகர்கள் மத்தியில், தனக்கான இடத்தைப் படிப்படியாகப் பிடித்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். 'கை போ சே', 'சுதேசி ரொமான்ஸ்', 'டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பாக்ஷி', 'எம்.எஸ். தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். தனது இயல்பான நடிப்புக்காக கணிசமான ரசிகர்கள் வட்டாரத்தைப் பெற்றிருந்தார் சுஷாந்த். இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி பாந்த்ராவில் உள்ள தனது இல்லத்தில் சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டார்.
அவரது தற்கொலை, பாலிவுட் உலகம் அரசல் புரசலாகப் பேசிக் கொண்டிருந்த நெப்போடிசம் என்ற வாதத்தைப் பரவலாகப் பேசவைத்தது. பாலிவுட்டில் வாரிசு அரசியல் குறித்த விமர்சனங்கள் கடுமையாக எழுந்து ட்விட்டரில் மோதல்கள் இன்னமும் நடந்து வருகின்றன. பாலிவுட்டில் சுஷாந்த் சிங் ராஜ்புத் புறக்கணிக்கப்படுகிறார் என்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்தனர். இதனை நடிகை கங்கணா ரணாவத் வழிமொழிந்ததும் இந்த விவகாரம் பூதாகரமானது.
இன்னொரு பக்கம் அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது. இது தொடர்பாக முறையான விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று பரவலான கோரிக்கைகள் எழுந்தன. மும்பை போலீஸார் இந்த விவகாரத்தில் மெத்தனம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, பிஹார் போலீஸாரிடம் இந்த வழக்கு மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
இது தொடர்பாக சிபிஐ நடத்திய விசாரணையில், சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்ரபர்த்தி உட்பட அவருக்கு நெருக்கமான சிலர் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்பட்டது.
இதையடுத்து, இது தொடர்பாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் தனியாக வழக்குப் பதிவு செய்து, ரியா சக்ரபர்த்தியின் சகோதரர் ஷோயிக் சக்ரபர்த்தி மற்றும் சுஷாந்த் சிங்கின் மேலாளர் சாமுவேல் மிரண்டா ஆகியோரைக் கைது செய்தனர். இந்த நிலையில் போதைப் பொருள் விற்பனையாளர்களுடன் ரியா தொடர்பில் இருந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு அவரும் கைது செய்யப்பட்டு, ஜாமீன் மறுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
நெப்போடிசத்தில் ஆரம்பித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கு தற்போது போதைப் பொருள் விவகாரத்தில் வந்து நின்றுள்ளது.
இந்தியாவில் தினசரி கரோனா தொற்று ஒவ்வொரு நாளும் 80,000-ஐக் கடந்த நிலையில் நாட்டின் ஜிடிபி பாதாளத்துக்குச் சென்ற நிலையில், வேலையிழப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் சூழலில், நாட்டின் தேசிய ஊடகங்கள் அனைத்தும் சுஷாந்த் வழக்கையே தலைப்புச் செய்தியாக்கிக் கொண்டிருந்தன.
இந்த நிலையில் சுஷாந்த் தற்கொலை தொடர்பான வழக்கை உற்றுநோக்கினால், அவரது காதலி ரியா இந்த விவகாரத்தில் பலியாக்கப்பட்டிருக்கிறார் என்றும், அவர் மீது ஒரு தலைப்பட்சமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்ற கருத்துகளும் பரவலாக நிலவுகின்றன.
சுஷாந்தின் குடும்பத்திற்கும், ரியாவுக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடு காரணமாக முதலிலிருந்தே ரியா இந்த வழக்கில் குற்றவாளியாகப் பார்க்கப்பட்டார். சுஷாந்த் கேட்டுக்கொண்டதன் பெயரிலேயே அவரை விட்டு விலகியதாக ரியா ஊடகங்களுக்கு விளக்கம் அளித்தார். ஆனால், அவரது பதிலை யாரும் ஏற்கவில்லை. அவரது தனிப்பட்ட குறுஞ்செய்திகள் பொதுவெளியில் வெளியிடப்பட்டன. அவரைச் சூனியக்காரி என்றும் பணத்திற்காக சுஷாந்தை அவர் பயன்படுத்திக் கொண்டார் என்றும் சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டார்.
பண மோசடி, காதலில் ஏமாற்றிவிட்டார் என்று பல குற்றச்சாட்டுகள் ரியா மீது சுமத்தப்பட்டன. அவர் மீதான எந்தக் குற்றச்சாட்டும் இறுதிவரை நிரூபிக்கப்படாத நிலையில், தற்போது சுஷாந்துக்கு போதைப் பொருள் வாங்கிக் கொடுத்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
”போதைப் பழக்கத்திற்கு அடிமையான, பல ஆண்டுகளாக மனநலப் பிரச்சினைகளில் இருந்து மீள்வதற்காக ஐந்து முன்னணி உளவியலாளர்களின் பராமரிப்பில் இருந்த ஒருவரைக் காதலித்த குற்றத்திற்காக அரசின் முக்கிய மூன்று துறைகள் ஒரு பெண்ணை வேட்டையாடுகிறது” - இந்த வரிகள் ரியாவின் கைது குறித்து அவரது வழக்கறிஞர் சதீஷ் செய்தியாளர்களிடம் கூறியவை.
தன் காதலனுக்கு போதை மருந்து வாங்கிக் கொடுத்ததாகக் கூறப்படும் குற்றத்திற்காக பெண் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்றால், வட இந்தியாவின் பல முக்கியப் பிரபலங்கள் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் பல சமூக ஆர்வலர்களும், பெண் பத்திரிகையாளர்களும் ரியாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கக் தொடங்கியுள்ளனர்.
மேலும், கடந்த சில நாட்களாக ஊடகங்களால் ரியாவும், அவரது குடும்பத்தாரும் மனரீதியான துன்பத்துக்கு ஆளாக்கப்பட்டதற்கு எதிராகக் கண்டனங்களும் வலுவாக எழுந்துள்ளன.
ஊடகங்களால் பலிகடா ஆக்கப்பட்டாரா ரியா?
குற்றம் புரிந்தார் என்ற தீர்ப்பு வழங்குவதற்கு முன்னரே ஊடகங்கள் சுஷாந்த் வழக்கில் ரியாதான் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கிவிட்டன என்கிறார் வழக்கறிஞர் வெற்றிச்செல்வன்.
''சுஷாந்த் வழக்கைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் இருந்தே சில ஊடகங்கள் எவ்வாறு நடந்துகொண்டன என்பதை அனைவரும் அறிவர். தினமும் இவ்வழக்கு சார்ந்த விவாதத்தை ஊடகங்கள் முன்னெடுத்தன. மகாராஷ்டிராவில் பாஜக மற்றும் சிவசேனாவுக்கு இடையே நிலவும் அரசியல் மோதலில், சிவசேனாவைப் பழிவாங்கிட பாஜக முயன்றது. இன்னொரு பக்கம் பாலிவுட், நெப்போடிசம் விவாதம் பக்கம் அழைத்துச் சென்றது. இதற்கு ஊடகம் அளித்த முக்கியத்துவம்தான் ஒவ்வொரு நிர்பந்தத்தையும் உருவாக்குகிறது.
முதலில் மகாராஷ்டிர போலீஸ், பின்னர் பிஹார் போலீஸ், சிபிஐ என இவ்வழக்கு மாற்றப்பட்டுக் கொண்டே இருந்தது. இதன் பின்னணியில் ஊடகமும், அரசியல் கட்சிகளும் இருந்தன என்பதை மறுப்பதற்கில்லை. அரசியல் கட்சிகள் தங்கள் நலன்களுக்காக சுஷாந்த் சிங் வழக்கைப் பயன்படுத்திக் கொண்டன. இதற்கு ஊடகமும் உதவியது. இதற்குதான் ரியா பலிகடா ஆக்கப்பட்டிருக்கிறார்.
ரியா இந்த வழக்கில் சேர்க்கப்பட்டத்திலிருந்தே அவர் எவ்வாறு நடத்தப்பட்டார் என்பதற்கு இந்திய ஊடகங்களின் நடவடிக்கைகள் மோசமான முன்னுதாரணமாகும். இதற்கான வேறுபாட்டை கங்கணாவுக்கு அரசு அளிக்கும் பாதுகாப்புகளிலிருந்தே புரிந்துகொள்ள முடியும்.
இவ்வழக்கில் 'மீடியா ட்ரையல்' என்ற வார்த்தையை நாம் எவ்வாறு புரிந்துகொள்வது என்றால் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ரியாவை ஊடகங்கள் முன்னதாகவே குற்றவாளியாக அறிவித்துவிட்டன.
குற்றம் சாட்டப்பட்ட நபருக்கும், குற்றவாளிக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. குற்றம் சாட்டப்பட்ட நபர் என்பவர் நிரபராதி என்று விடுவிக்கப்படலாம். இதில் இரண்டு முடிவுகள் உள்ளன. இதுதான் இந்திய தண்டனைவியல் சட்டத்தின் அடிப்படை சாராம்சம்.
குற்றவாளியை அறிவிக்கும் பொறுப்பு நீதிமன்றத்திற்கே உள்ளது. ஆனால், ஊடகங்கள் முதல் நாளிலிருந்தே இவர்தான் குற்றவாளி என்று தீர்ப்பளித்து விடுகின்றது. இதன் காரணமாக பொதுமக்களும் அந்த முடிவுக்கு வந்துவிடுகின்றனர். இந்த வழக்கில் அவர் குற்றமற்றவர் என்று கூறப்பட்டாலும் மக்கள் அதனை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். பொதுமக்களுக்காகவே இந்த வழக்கில் ஜாமீன்களும் மறுக்கப்படுகின்றன. புறச்சூழலிலிருந்து வரும் அழுத்தமும் நீதித்துறைக்கு அழுத்தத்தைக் கொடுக்கும்.
எனவே ஊடகங்கள்தான் இந்த ஆபத்தை விளைவிக்கின்றன. ஊடகங்கள் இந்த வழக்கில் ஒருதலைப்பட்சமாக நடந்துகொண்டன. இதன் காரணமாக மக்களிடையே கூட்டு மனப்பான்மையை உருவாக்குகின்றன. இந்த கூட்டுமனப்பான்மையின் அழுத்தம் காரணமாக தற்போது ரியா பலிகடா ஆக்கப்பட்டிருக்கிறார். ஊடகங்கள் இதில் நடுநிலைமையுடன் செயல்பட வேண்டும்”.
இவ்வாறு வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் தெரிவித்தார்.
2018 ஆம் ஆண்டு சுஷாந்தின் 'கேதர் நாத்' படத்தை எதிர்த்த பிஹார் பாஜக, சுஷாந்தின் மரணத்துக்கு நீதி கேட்டு போஸ்டர்களை ஒட்டி, பிரச்சாரம் செய்ததை யாரும் நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
இவ்வாறு சுஷாந்தின் மரணத்தில் பாலிவுட், அரசியல் கட்சிகள், ஊடகங்கள் எனப் பலவும் தங்களுக்குக் கிடைத்த வெளிச்சத்தைப் பயன்படுத்திக் கொண்டன.
பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருந்த சுஷாந்த் வழக்கு அவரது காதலி ரியாவின் கைதுடன் தற்காலிக முற்றுப்புள்ளியை அடைந்துள்ளது.
ஆனால், இவ்வழக்கில் ரியா மீதான நடவடிக்கைகள், அவரை சமூக வலைதளங்களும், ஊடகங்களும் கையாண்ட விதம் நிச்சயம் தவறான முன்னுதாரணமாகி இருக்கிறது.
”காதலித்ததற்காக கைதா?”, ”ரோஜாக்கள் சிவப்பு, வயலட்கள் நீலம், அதிகாரத்தை நொறுக்குவோம், நானும் நீங்களும்”- ரியாவின் வார்த்தைகளும் அதைத்தான் நமக்கு உணர்த்துக்கின்றன.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
1 day ago
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
3 days ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
17 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
27 days ago