தடம் பதித்த பெண்: கெர்டி கோரி- அங்கீகாரத்துக்காகப் போராடி நோபல் பரிசை வென்றவர்

By எஸ். சுஜாதா

டாக்டர் கெர்டி தெரசா கோரி- இவர்தான் மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண். உயிர் வேதியியலில் கண்டுபிடிப்பை நிகழ்த்தி, மருத்துவத்துறையில் புரட்சியை ஏற்படுத்தியவர். படிப்பு, தகுதி, அனுபவம் இருந்தும் பெண் என்ற ஒரே காரணத்துக்காக பெரும்பாலும் குறைவான ஊதியமே பெற்றவர்.

செக் குடியரசில் 1896-ம் ஆண்டு பிறந்தார் கெர்டி கோரி. 10 வயது வரை வீட்டில் கல்வி கற்ற கெர்டி, பின்னர் பள்ளியில் சேர்ந்து படித்தார். இவருடைய அப்பா வேதியியலாளராக இருந்ததால் இவருக்கும் அறிவியல் மீது ஈடுபாடு அதிகம் இருந்தது. சார்லஸ் பெர்டினாண்ட் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். அங்கே கார்ல் பெர்டினான்ட் கோரி என்ற சக மருத்துவ மாணவரைச் சந்தித்தார். கெர்டியின் புத்திசாலித்தனம், நகைச்சுவை, அன்பு, வசீகரம் போன்ற குணங்களால் ஈர்க்கப்பட்டார் கார்ல் கோரி. இருவருக்கும் ஆராய்ச்சி, பனிச்சறுக்கு, மலையேற்றம் போன்றவற்றில் ஆர்வம் இருந்தது. நட்பு காதலாகக் கனிந்து, திருமணமும் நடைபெற்றது.

குழந்தை மருத்துவராகத் தன் பணியைத் தொடங்கினார் கெர்டி. முதல் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் கடினமான சூழல் நிலவியது. யூதர்களுக்கு எதிர்ப்பு வலுத்துவந்தது. யூதரான கெர்டி இனியும் இங்கே வசிக்க வேண்டாம் என்று முடிவெடுத்த கார்ல், அமெரிக்காவில் குடியேறினார்.

நியூயார்க்கில் உள்ள ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக கார்ல் கோரிக்கு வேலை கிடைத்தது. 6 மாதங்கள் போராடியும் கெர்டிக்கு ஆராய்ச்சியாளர் பணி கிடைக்காமல் உதவியாளர் பணியில் சேர்ந்தார். ஆனால், ஊதியம் வழங்கப்படவில்லை. ஆராய்ச்சி மேல் இருந்த ஆர்வத்தால் கெர்டி ஊதியத்தைப் பெரிதாகக் கருதாமல் கணவருடன் சேர்ந்து பணியாற்றி வந்தார். ஆனாலும்கூட, ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநருக்கு கணவனும் மனைவியும் ஒன்றாக வேலை செய்வது பிடிக்கவில்லை. அடிக்கடி வேலையை விட்டு நீக்குவதாக மிரட்டிக்கொண்டே இருந்தார். கெர்டியும் கார்லும் இணைந்து வலுவான ஆராய்ச்சிக் குழுவை உருவாக்கியிருந்தனர். எந்தக் காரணத்தை முன்னிட்டும் இந்த ஆராய்ச்சிக் குழு கலைந்து விடாமல் பார்த்துக்கொண்டனர்.

தைராய்டு சுரப்பியின் செயல்பாடுகள் குறித்த கெர்டியின் ஆராய்ச்சிக் கட்டுரை மருத்துவத் துறையில் முக்கியமானதாகக் கருதப்பட்டது. இதன் மூலம் நியூயார்க்கில் உள்ள ராஸ்வெல் பார்க் புற்றுநோய் நிறுவனத்தில் இருவருக்கும் வேலை கிடைத்தது. விரைவிலேயே கெர்டிக்கும் அவரது கணவர் கார்லுக்கும் அமெரிக்கக் குடியுரிமை வழங்கப்பட்டது. இருவரும் இணைந்து சுமார் 50 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டனர். இவற்றில் 11 ஆய்வுக் கட்டுரைகளை கெர்டி தனியாக வெளியிட்டார்.

1929-ம் ஆண்டு மனித உடலில் வேதி மாற்றங்கள் நடைபெற்று, சர்க்கரை மூலக்கூறுகள் எப்படி லாக்டிக் அமிலமாக மாறுகிறது என்ற கண்டுபிடிப்பை கெர்டியும் கார்லும் இணைந்து வெளியிட்டனர். இது, ‘கோரி சுழற்சி’ என்று புகழ்பெற்றது. ராஸ்வெல் நிறுவனத்தை விட்டு இருவரும் வெளியேறினார்கள். பல்வேறு பல்கலைக்கழகங்கள் கார்லுக்கு வேலை தருவதாக அழைத்தன. ஆனால், கெர்டிக்கு வேலை தர மறுத்தன. “பாலினப் பாகுபாடுகளும் தெரிந்தவர்களுக்குச் சலுகைகளும் எங்கும் காணப்படுகின்றன. இந்தச் சூழலில் தம்பதியாக வேலை செய்வது மிகவும் கடினமான செயலாக இருக்கிறது” என்று வருத்தப்பட்டார் கெர்டி.

1931-ம் ஆண்டு வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறையில் ஆய்வாளராகப் பணியாற்றும் வாய்ப்பு கார்லுக்குக் கிடைத்தது. கார்லுக்கு இணையான படிப்பு, உழைப்பு, அனுபவம், அறிவு இருந்தும் கெர்டிக்கு உதவியாளர் பணியைத்தான் கொடுத்தார்கள். கார்ல் வாங்கிய ஊதியத்தில் பத்தில் ஒரு பங்கு ஊதியமே கெர்டிக்கு வழங்கப்பட்டது.

அறிவியல் மற்றும் சமூகத்தின் மீது இருந்த ஆர்வத்தாலும் அக்கறையாலும் எல்லாவற்றையும் சகித்துக்கொண்ட கெர்டி, தன்னுடைய விடாமுயற்சியால் 1943-ம் ஆண்டு உயிர்வேதியியல் ஆய்வுத் துறையின் உதவிப் பேராசிரியர் பணியைப் பெற்றார். 1946-ம் ஆண்டு பேராசிரியர் பதவி வழங்கப்பட்டது.

திடீரென்று கெர்டியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் எலும்பு மஜ்ஜை நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சிகிச்சை ஒரு பக்கம், ஆராய்ச்சி ஒரு பக்கம் என்று உழைத்துக்கொண்டிருந்தார்.

1947-ம் ஆண்டு கெர்டி, கார்ல் இருவரும் இணைந்து ‘கோரி சுழற்சி’ ஆய்வுக்காக மருத்துவத்துக்கான நோபல் பரிசைப் பெற்றார்கள். இதன் மூலம் மருத்துவத் துறையில் நோபல் பரிசு பெற்ற முதல் பெண் என்ற சிறப்பைப் பெற்றார் கெர்டி. அறிவியலில் நோபல் பரிசு வென்ற முதல் அமெரிக்கப் பெண் என்ற சிறப்பையும் பெற்றார். அறிவியலில் நோபல் வென்ற மூன்றாவது பெண் என்ற பெருமையும் பெற்றார்.

10 ஆண்டுகளில் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. ஆராய்ச்சிக் கூடத்துக்குச் செல்ல முடியாத நிலை வந்தபோதுதான் ஓய்வெடுத்தார். அடுத்த சில மாதங்களிலேயே 61-வது வயதில் உயிர் துறந்தார் கெர்டி கோரி.

”இயற்கையின் மீதான ரகசியத் திரை விலகும்போது, இருண்ட, குழப்பமான விஷயங்கள் எல்லாம் தெளிவான, அழகான ஒளியாகக் தோன்றும். இந்த அற்புதமான தருணத்தைத் தருபவை ஆராய்ச்சிகளே!” - கெர்டி கோரி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்