மனமே நலமா: 4: தற்கொலை என்பது தடுக்கக்கூடிய பொது சுகாதாரப் பிரச்சினை

By பாரதி ஆனந்த்

இந்தக் கட்டுரையை எழுதத் தொடங்கிய நொடியில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் எரியூட்டப்பட்ட சடலத்தின் மீது படுத்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி கிடைத்தது. கடந்த 3 நாள்களாக தன்னை யாரோ தாக்க வருவதாகவும் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும் குடும்பத்தினரிடம் கூறிவந்த நிலையில் இந்தத் தற்கொலை நடந்துள்ளது.

காலரா, மலேரியா, டெங்கு தொடங்கி இன்றைக்கு சர்வதேச அச்சுறுத்தலாக இருக்கும் கரோனா வரையிலும் பொது சுகாதாரப் பிரச்சினையாக அணுகும் நாம், தற்கொலையை ஏன் பொது சுகாதாரப் பிரச்சினையாக அணுகுவதில்லை? இப்படி ஒரு கேள்வியை முன்வைத்தார் தற்கொலைத் தடுப்புக்காக செயல்படும் மதுரையைச் சேர்ந்த மருத்துவரும் சமூக ஆர்வலருமான நந்தினி முரளி.

நம்மைச் சுற்றி இருப்பவர்கள் எப்போதாவது இந்த வாழ்க்கையே வெறுத்துப் போகிறது, ஏன் வாழ வேண்டும் எனத் தோன்றுகிறது என்றெல்லாம் கூறும் வார்த்தையை நாம் நோய் அறிகுறி எனப் பார்ப்பதில்லை. காய்ச்சலோ, இருமலோ இல்லை வேறு உடல் வழி வெளிப்படும் காரணிகளைக் கவனித்து சிகிச்சைக்கும் உட்படுத்தும் நாம் வார்த்தைகளும் அதுவும் வெறுப்பு, விரக்தியால் தடித்த வார்த்தைகள் வந்து விழும்போது அவை சிகிச்சைக்கான அறிகுறி என நினைப்பதில்லை. தொற்று நோய்களைப் போல் தற்கொலையையும் கவனிக்காமல் விட்டால் சமூகத்தில் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது என்றார் அவர்.

சர்வதேச தற்கொலை தடுப்பு தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 10-ல் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் தற்கொலை தடுப்பு தினத்துக்கான கருத்தாக்கம் 'தற்கொலைகளைத் தடுக்க இணைந்து பணியாற்றுவோம்' (Working Together To Prevent Suicide).

இந்தக் கட்டுரையும் கூட அத்தகைய அறைகூவலையே முன்வைக்கிறது.

புள்ளிவிவரத்துடன் தொடங்குவோம்..

சர்வதேச அளவில் நிகழும் தற்கொலைகளில் இந்தியா மற்றும் சீனாவில் 40% தற்கொலைகள் நடக்கின்றன. அதேபோல் உலக அளவில் தற்கொலை செய்து கொள்ளும் பெண்களில் 40% பேர் இந்தியப் பெண்கள். அதாவது தற்கொலையால் இறக்கும் 5-ல் 2 பெண்கள் இந்தியப் பெண்கள். சர்வதேச தற்கொலை சராசரி விகிதத்தைவிட இந்தியப் பெண்களின் தற்கொலை விகிதம் இருமடங்கு அதிகம். ஆகவேதான் தற்கொலையை இந்தியா பொது சுகாதாரப் பிரச்சினையாகக் கருத வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

உலக சுகாதார அமைப்பு தனது புள்ளிவிவரத்தில், சர்வதேச அளவில் சராசரியாக ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர் எனக் குறிப்பிடுகிறது. ஒவ்வொரு தற்கொலைக்குப் பின்னும் சுமார் 20 முயற்சிகள் இருப்பதாகவும் குறிப்பிடுகிறது.

தற்கொலை என்பதை ஒரு பெரிய பொது சுகாதாரப் பிரச்சினை என அறிவித்துள்ள உலக சுகாதார நிறுவனம் அதனை எதிர்த்துப் போராடவும், கட்டுப்படுத்தவும் வேண்டும் என வலியுறுத்துகிறது. சுகாதாரச் சேவை அமைப்புகள் தற்கொலைத் தவிர்ப்பை முக்கியமாகக் கருதி செயல்படவும் வலியுறுத்துகிறது. தற்கொலைத் தடுப்புக்கு முக்கியத்துவம் வழங்க தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

காலப்போக்கில் மாறிப்போன காரணங்கள்:

தற்கொலைகள் பெருமளவில் வறுமையால் நடப்பதாக புள்ளிவிவரங்கள் கூறினாலும் காலப்போக்கில் தற்கொலைக்கான காரணங்கள் மாறி வருகின்றன. கல்வியில் தோல்வி, காதலில் விரக்தி ஆரம்பித்து ஆசிரியரின் கண்டிப்பு, வீடியோ கேம் விளையாடத் தடை போன்றவற்றிற்கும் தற்கொலைகள் நடைபெறுகின்றன. அதுவும் குறிப்பாக பதின்ம வயதினர் தற்கொலை செய்து கொள்வதும் அதிகரித்து வருகிறது.

தற்கொலைகள் அதிகரித்து வரும் சூழலில், தற்கொலைக் காரணங்கள் வித்தியாசமாக உருமாறி நிலையில் தற்கொலைத் தடுப்பின் அவசியம் குறித்து பேசுகிறார் நந்தினி முரளி. தற்கொலையால் இவரே நேரடியாக பாதிக்கப்பட்டவர். ஸ்பீக் (SPEAK) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை மதுரையில் இயக்கி வருகிறார். எம்.எஸ்.செல்லமுத்து ட்ரஸ்ட் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் கைகோத்து தற்கொலை தடுப்புப் பணியை இவர் மேற்கொண்டு வருகிறது.

நந்தினி முரளியின் வார்த்தைகளில்..

"தற்கொலையால் நானே நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கிறேன். மதுரை நகரில் நன்கு அறியப்பட்ட மருத்துவராக இருந்த எனது கணவர் தற்கொலை செய்து கொண்டார். அதுவரைக்கும் என் குடும்பத்தில் அப்படி ஒரு சம்பவம் நடந்ததில்லை. அந்தத் தற்கொலை என்னை முற்றிலுமாகப் புரட்டிப்போட்டது. என் கணவரின் தற்கொலைக்குப் பின்னர், நான் சமூக நெருக்கடி, அவமானம், ரகசியம் பாதுகாக்க வேண்டிய நிர்பந்தம், அழுத்தம் தரும் மவுனம் ஆகியனவற்றால் பாதிக்கப்பட்டேன். அப்போதுதான், உறவின் அல்லது நட்பின் தற்கொலையால் நெருக்கடிக்கு உள்ளாகும் நெருங்கிய பந்தங்களுக்கு எத்தகைய ஆறுதலும் தேறுதலும் தேவை என்பதை உணர்ந்தேன். அதேபோல் தற்கொலை எண்ணங்களால் தவிப்பவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவதன் அவசியத்தையும் உணர்ந்தேன். மாற்றம் என்னிடம் இருந்தே உருவாக வேண்டும் என்பதால் 2018 ஏப்ரல் 27-ல் ஸ்பீக் அமைப்பைத் தொடங்கினேன். அன்று தான் எனது கணவரின் முதல் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதன் நோக்கம், தற்கொலை தடுப்பு தொடர்பான விவாதங்களை ஊக்குவித்தல், மனநலம் பேணுவதை வலியுறுத்தல்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாள் ஒரு பயிலரங்கில் கலந்து கொண்டபோது என்னிடம் ஒருவர் தனக்கு ஏற்பட்டுள்ள தற்கொலை எண்ணம் குறித்துப் பேசினார். அவரிடம் நான் எனது கதையைக் கூறினேன். குடும்ப உறுப்பினரின் தற்கொலையால் நான் எவ்வாறு பாதிக்கப்பட்டேன் என்பதைக் கூறினேன். அதில் ஓரளவு சமரசமடைந்த அவருக்கு பின்னர் தனிப்பட்ட முறையில் மனநல ஆலோசனை வழங்கப்பட்டது. சிறிது காலத்தில் தற்கொலை எண்ணத்திலிருந்து மீண்ட அவர் இன்று வாழ்வதற்கான புதிய நம்பிக்கையைப் பெற்றிருப்பதாகக் கூறுகிறார்.

தற்கொலை எண்ணங்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உணர்த்துபவர்களிடம் நாம் பேசுவது மிக மிக அவசியம். அவர்களுக்குப் பாதுகாப்பான அரவணைப்பைத் தர வேண்டும். மன அழுத்தத்தில் இருந்தால் அவர்களுக்கு அதற்கான உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும். மன அழுத்தம், மனச் சோர்வு ஏற்பட்டிருப்பதை மற்ற நோய்கள் போல் வெளியே சொல்லத் தயங்கும் அளவுக்கு சமூக நெருக்கடி இருப்பதால் மன அழுத்தம் இருந்தால் உடனடியாகத் தீர்வு காண்பதன் அவசியத்தை பொது வெளிகளில் அதிகமாகப் பேச வேண்டியுள்ளது. இதைத்தான் ஸ்பீக்கும் இன்னும் பல தற்கொலைத் தடுப்பு அமைப்புகளும் செய்கின்றன" என்றார் அழுத்தமாக.

ஸ்பீக் அமைப்பில் மனநல மருத்துவர்கள், மனநல ஆலோசகர்கள், மனநலம் சார்ந்த சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்று தன்னார்வலர்கள் பங்களிப்பை நல்குகின்றனர். பள்ளி, கல்லூரிகளில் தற்கொலைத் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல். 24 மணி நேர இலவச தொலைபேசி சேவை மூலம் தற்கொலை தடுப்புக்கான ஆலோசனை வழங்குதல் (1800 3000 2233, 900600600 ) போன்ற சேவைகளை ஸ்பீக் மேற்கொள்கிறது. மேற்கூறிய கட்டணமில்லா எண்களை தற்கொலை எண்ணங்களால் தவிப்போ, தற்கொலையால் பாதிக்கப்பட்டோர் தொடர்பு கொள்ளலாம்.

பேசினால் மட்டும் தீருமா?

அண்மையில் ஒரு திரைப் பிரபலத்தின் தற்கொலையைத் தொடர்ந்து சமூக வலைதளங்கள் முழுவதும் மன அழுத்தம் இருந்தால் மனம் விட்டுப் பேசுங்கள், உங்கள் சொந்த பந்தங்கள், நட்புக்களிடம் பேசி அவர்களிடம் நானிருக்கிறேன் என்று நம்பிக்கையூட்டுங்கள் என்ற அறிவுரைகள் மலிந்து கிடந்தன. அதன்படி மன அழுத்தத்தில், தற்கொலை எண்ணத்தில் இருப்பவர்களிடம் பேசினால் மட்டுமே போதுமா என்று நந்தினி முரளியிடம் கேட்டபோது. "பேசுவது என்பது ஆரம்ப நிலை. அது அப்போதைய தற்கொலை எண்ணத்தைத் தள்ளிப் போடும். ஆனால், மன அழுத்தத்திலோ அல்லது போதை வஸ்துகளினாலோ ஒருவர் ஆட்கொள்ளப்பட்டிருந்தால் அவருக்கு உடனடியாக மருத்துவ உதவி தேவை. அந்த மாதிரி நேரங்களில் நாங்கள் மனநல மருத்துவரைப் பரிந்துரைக்கிறோம்" என்றார்.

இன்னும் சிலர் தொழில் நஷ்டம், கல்வி கற்க வாய்ப்பின்மை, வேலை வாய்ப்பின்மை, கடன் தொல்லை என்றெல்லாம் தற்கொலை எண்ணத்துடன் வருவர். அவரவர் பிரச்சினைக்கு ஏற்ப யாருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்தால் வேலை வாய்ப்போ, கல்விக்கான வாய்ப்போ அல்லது சிறு நிதியுதவியோ பெற முடியும் என்பதை அறிந்து வழிவகைகளை ஏற்படுத்தித் தர வேண்டும். வெறும் ஆலோசனைகள் மட்டுமே ஒருவரின் தற்கொலை எண்ணத்துக்குத் தீர்வாகாது. தகுந்த உதவிகளுக்கான வழிகாட்டுதலும் அவசியம் என்று அவர் கூறுகிறார்.

தற்கொலை எண்ணம் இருப்பவரைக் கண்டறிவது எப்படி?

தற்கொலை என்பது தடுக்கப்பட வேண்டிய பொது சுகாதாரப் பிரச்சினை என்று உலக சுகாதார நிறுவனமே அங்கீகரித்துள்ள நிலையில், தற்கொலை எண்ணம் இருப்பவர்களை அடையாளம் கண்டுகொள்ள வழிவகைகள் உள்ளன.

முதலில் அப்படிப்பட்டோர் மிகத் தெளிவான தற்கொலை எச்சரிக்கைக் குறிப்புகளைக் கொடுப்பார்கள் என்கிறார் நந்தினி முரளி. தற்கொலையில் தப்பித்தவர்களும் நாங்கள் எச்சரித்தும் அதை யாரும் சட்டை செய்யவில்லை என்ற ஆதங்கத்தையே முன்வைப்பதாக அவர் கூறினார்.

எண்ணங்கள், மனநிலை, செயல்பாடு இவை மூன்றுமே ஒருவரின் தற்கொலை எண்ணத்தைத் தெளிவாக உணர்த்தும் எச்சரிக்கை சமிக்ஞைகளாம்.

சிலவற்றைக் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், 1. இனிமேல் எனக்கு க்கவலையில்லை 2. எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்போகிறேன், 3. இவை எல்லாவற்றிலும் இருந்து முடிவுக்கு வர விரும்புகிறேன். 4. என்னை எதுவும் மீட்கப்போவதில்லை 5. நான் இல்லாமல் போனால் நிலைமை சீராகும் போன்ற வார்த்தைகள் தற்கொலை எண்ண ஓட்டத்தின் பிரதிபலிப்பே என்கிறார் நந்தினி முரளி.

அதேபோல், சிலர் தங்களுடைய தோற்றத்தைப் பற்றி சிறிதும் கவனம் கொள்ளாமல் இருக்கலாம். எதிர்மறை எண்ணங்கள், தனிமையை நாடுதல், மறதி, எதிலும் நாட்டமின்மை, உணவு, கலவியில் விருப்பமின்மை. தூக்கமின்மை. தனிப்பட்ட சுகாதாரத்தில் அக்கறையின்மை, தூக்க மாத்திரைகள் போன்றவற்றை வாங்கிவைத்து ஆயத்தமாக இருத்தல் ஆகியன தற்கொலைக்கான செயல்பாட்டுக் குறியீடுகளாம்.

வெகுநாட்களாக சோர்வாக இருந்த ஒருவர், காரணமின்றி வழக்கத்தைவிட அதீத மகிழ்ச்சியை சொல், செயல் எல்லாவற்றிலும் வெளிப்படுத்தும் போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஆலோசனை வழங்குகின்றனர். தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டால் பிரச்சினைகள் தீர்ந்து விடும் என்ற கற்பிதத்தோடு அவர்கள் போலியாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தலாம் என்றும் கூறுகின்றனர்.

காய்ச்சல், தலைவலி இன்னும் பிற நோய் அறிகுறிகள் போல் மனச்சோர்வு, மன அழுத்தம், விரக்திப் பேச்சு, விரக்திப் போக்கு என எதை நம்மிடம் உணர்ந்தாலோ அல்லது நம்மைச் சார்ந்தவர்களிடம் கண்டாலோ உடனே விழிப்புடன் செயல்பட்டு மீள்வோம், மீட்போம்.

பொது சுகாதாரப் பிரச்சினையாக ஏன் அணுக வேண்டும்: மருத்துவர் கு.கணேசன்

"உலகளவில் 40 விநாடிக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார். அதுவும் 20 முதல் 40 வயதுடையவர்களே அதிகமாக தற்கொலை செய்து கொள்கின்றனர். முன்பு தற்கொலைகளுக்கான காரணம் தனிநபர் சார்ந்ததாக இருந்தது. தனிப்பட்ட உடல் நோய்கள், மன நோய்கள், இன்ன பிற குடும்பப் பிரச்சினை சார்ந்ததாக இருந்தது. ஆனால், இன்று தற்கொலைக்கான காரணங்கள் வெவ்வேறாக உருவெடுத்துள்ளன. சமூக வலைதளங்களால் எழும் பிரச்சினைகள், சைபர் புல்லியிங் என்று காரணம் நீள்கிறது.

தற்கொலைக்கான தனிப்பட்ட காரணங்கள், சமூகக் காரணங்களாக மாறிய நிலையில் அதற்கான தீர்வும் சமூகத்தில் இருந்துதான் ஏற்பட வேண்டும். அந்த வகையில் தற்கொலைத் தடுப்பை பொது சுகாதாரப் பிரச்சினையாக அணுக வேண்டும் என்ற உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல் சரியானதே.

அதற்கான தீர்வு முதலில் குடும்பத்திலிருந்து தொடங்க வேண்டும். அதன் நீட்சியாக பள்ளி, கல்லூரிகளில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அதையும் தாண்டி மனச்சிக்கல் வரும்போதே மனநல மருத்துவரின் தேவை முக்கியத்துவம் பெறுகிறது.

தற்கொலை தடுப்புக்கான தீர்வு முதலில் குடும்பத்திலிருந்து தொடங்க வேண்டும். அதன் நீட்சியாக பள்ளி, கல்லூரிகளில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அதையும் தாண்டி மனச்சிக்கல் வரும்போதே மனநல மருத்துவரின் தேவை முக்கியத்துவம் பெறுகிறது.
அரவணைப்பான குடும்பம், ஆரோக்கியமான நட்பு வட்டம், பள்ளிக், கல்லூரிகளில் மனநல ஆலோசகர்களின் பங்களிப்பு, பின்னர் பணியிடங்கள் அரசாங்கத்தின் பங்களிப்பு, தன்னார்வலர்களின் ஒத்துழைப்பு என அனைத்தும் இணைந்தாலே இப்பிரச்சினைக்கு தீர்வு என்ற நிலையால் நிச்சயமாக தற்கொலை தடுப்பை பொது சுகாதாரப் பிரச்சினையாகவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து அணுக வேண்டும்" என்கிறார் பொதுநல மருத்துவர் கு.கணேசன்.

பொதுநல மருத்துவர் கு.கணேசன்

தோல்வியும் சேர்ந்தது தான் வாழ்க்கை..

உலகில் பிறந்த எல்லா மனிதர்க்கும் ஏதோ ஒரு காலகட்டத்தில் இந்த வாழ்வு முடிந்துவிட்டால் என்னவென்ற மனநிலை தோன்றாமல் இருப்பது அரிது. வாழ்தலுக்கான பிடிப்பும் வீழ்தலுக்கான எண்ணமும் இணைந்தே இருப்பதுதான் வாழ்க்கை. சிலருக்கு அது கடந்து செல்லும் மேகமாக இருக்கலாம் சிலருக்கு உயிர் பறிக்கும் சோகமாக அமையலாம். யாருக்கெல்லாம் சாவதற்கான எண்ணம் மேலோங்கி இருக்கிறதோ அவர்கள் நிச்சயமாக தேர்ந்த வல்லுநர்களின் உதவியை நாட வேண்டும்.

இதை அவர்களாகவே தனியாகச் செய்வது கடினம் என்பதால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து தற்கொலைகளைத் தடுக்க வேண்டும். அதே போல் தற்கொலை ஒரு குற்றச்செயல், பாவச் செயல், முட்டாள்தனம் போன்ற வார்த்தைகளால் வரையறுத்தலும் தவறு. அவ்வாறு செய்வதால் தற்கொலை சிந்தனை கொண்டவர்கள் ரகசியம் காக்கலாம். அவர்களின் மவுனத்தை உடைக்கும் உளிதான் முதல் மருந்து. அந்த உளியாக சமூகத்தில் ஒவ்வொருவரும் ஒரு காலகட்டத்திலாவது இருப்பது அவசியமாகிறது. அத்தகைய மாற்றம் சமூகத்தில் நிகழும் போது தற்கொலை என்ற பொது சுகாதாரப் பிரச்சினைக்கு வியத்தகு தீர்வு கிடைக்கும்.

தற்கொலை என்பது மிகவும் சிக்கலான விவகாரம். தற்கொலைத் தடுப்பு முன்னெடுப்புகளில் சுகாதாரத் துறை, கல்வித் துறை, தொழிலாளர் நலத் துறை, வேளாண் துறை, நீதித் துறை, அரசியல், ஊடகம், கலைத் துறை என அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து பங்களிக்க வேண்டும். கூட்டு முயற்சியாக ஒருங்கிணைந்த விரிவான திட்டங்களால் மட்டுமே தீர்வை எட்டலாம் என உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டுகிறது.

தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

18 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

28 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்