1971 ஜனவரி முதல் வாரம் தண்டையார் பேட்டை மயானத்துக்கு பக்கத்தில நடந்த பொருட்காட்சில கண்காட்சி படப்பிடிப்பு. ஏ.பி. நாகராஜன் அவர்களோட சொந்தப் படம். கதை, வசனம், டைரக்சன் எல்லா அவருதான்.
அன்னிக்கு சாயங்காலம் 5 மணிக்கு ஏ.பி.என்.,-ஐ பார்க்க கோயமுத்தூர்ல இருந்து ஒரு அம்மா வந்திருந்தாங்க. வசதியான வீட்டுப் பெண்மணி. கம்பீரமான தோற்றம், மிரட்டும் கூர்மையான விழிகள். கனமான தொண்டை. 60 வயசுக்குள்ளதான் இருப்பாங்க.
ஏபிஎன் அவர்களுக்கு 1956-ல் வெளிவந்த ‘நான் பெற்ற செல்வம்’ படப்பிடிப்பு நடந்த சமயம். கோயமுத்தூர்ல இந்தம்மா பழக்கமானவங்களாம்.
திடீர்னு என்னைப் பாத்ததும், ‘ஏண்டா! சிவா நீ நம்ம ஸ்கூல்லயா படிச்சே?’ன்னு கேட்டாங்க.
» கொங்கு தேன் 22: கோயமுத்தூரு ‘கோதா பொட்டி’
» கொங்கு தேன் 21: தண்டபாணி, பழனிசாமி நானே.. ஆவுடையம்மா, பழனியம்மா மகனும் நானே..!
‘‘இல்லேம்மா! நான் சூலூர்ல படிச்சேன்’’னு சொன்னேன்.
புறப்படும்போது தன்னோட மூத்தமகன் ராமகிருஷ்ணன் கல்யாணத்துக்கு ஏபிஎன் அவர்களுக்கு அழைப்பிதழ் குடுத்திட்டு, எனக்கும் ஒன்றை குடுத்து ஃபார்மலா, ‘நீயும் அவசியம் வந்துடு!’ன்னுட்டுப் போனாங்க.
மார்ச் 31-ம் தேதி கல்யாணம் கோவையில நடந்துச்சு ஏபிஎன் போயிட்டு வந்தாரு.
ஒரு வாரம் கழிச்சு, எனக்கு ஒரு கடிதம். ‘ஏம்பா! நீ கல்யாணத்துக்கு வர முடியாட்டா பரவாயில்லை. ஒரு வாழ்த்து தந்தி அனுப்பி உன் தம்பியை வாழ்த்தக்கூட முடியலியா?’ன்னு கேட்டிருந்தாங்க.
அந்தக் காலத்தில நாம தந்தி அடிச்சா, அதுக்கு ரசீது கொடுப்பாங்க. அதுல யாரு பேருக்கு அடிச்சோம்; என்ன தேதியில அடிச்சோம்ங்கிற விவரம் இருக்கும்.
நல்லவேளை! நான் தந்தி அடிச்ச ரசீது இருந்திச்சு. அதை அப்படியே ஒரு கவர்ல வச்சு, ‘நான் உண்மையில தந்தி அடிச்சேம்மா. நீங்களோ கோடீஸ்வரி. ஆயிரக்கணக்கான தந்திகள் வந்து குவிஞ்சிருக்கும். அதில என் தந்தியை நீங்க பார்த்திருக்க முடியாது!’ன்னு எழுதி அனுப்பினேன்.
நாலு நாள் கழிச்சு, ‘‘மன்னிச்சுக்கோப்பா! உன் தந்தியை தேடிக் கண்டு புடிச்சிட்டேன். என் கடிதம் உனக்கு வருத்தத்தை குடுத்திருந்தா இந்த அம்மாவை மன்னிச்சிருப்பா!’’
ஒரு கோடீஸ்வரி, ஒரு சாதாரண வளரும் நடிகரிடம் மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதிய பண்பு என்னை சிலிர்க்க வச்சது. வேலுமணி அம்மா பி.எஸ்.ஜி, கங்கா நாயுடுவின் மகள். கோயமுத்தூருலயே பெரிய தொழிலதிபர் குடும்பம். தொழிலதிபரும், எம்ஜிஆருக்கு நண்பரா,ராஜ்ய சபா எம்.பியா இருந்த ஜி.கே. வரதராஜனோட அக்காதான் இவங்க. தேசியத் தலைவர்கள் காமராஜர், இந்திராகாந்தி என இவரும் நட்பு பாராட்டாத தலைவர்கள் இல்லை. சமூக சேவகி. கொடை வள்ளல். நினைத்ததை முடிக்கும் துணிவு மிக்கவர்.
ஏப்ரல் 17-ம் தேதி கோவையில் நாடகம் போட டூரிஸ்ட் பஸ்ஸில் குழுவினரை அழைச்சிட்டுப் போனேன். வழியில சூலூரில் அம்மாவோட நான் இறங்கீட்டு, கோவை ஆர்.எச்.ஆர் ஓட்டலில் நாடகக்குழுவை தங்க அனுப்பி வச்சேன்.
பகல் 2 மணிக்கு நாடகக்குழு ஓட்டல் போய் சேர்ந்தது. 4 மணிக்கு பெரிய எவர்சில்வர் அண்டாவுல ஒரு 200 ஜிலேபி, மைசூர்பா, இன்னொரு அண்டாவுல மிக்சர், பக்கோடான்னு ஒரு ஜீப்ல வந்து எறங்கிச்சு.
‘‘சிவகுமார் நாடகக்குழுதானே நீங்க? இதை அம்மா குடுத்திட்டு வரச் சொன்னாங்க!’’
பள,பளன்னு மின்னற அண்டாக்கள். ஒரு கல்யாண கூட்டத்துக்கே பரிமாறும் அளவு அயிட்டங்கள்.
பயந்து போன என் மானேஜர், ‘‘நீங்க தப்பான எடத்துக்கு வந்திட்டீங்க. சரியான எடம் விசாரிச்சு அங்க கொண்டு போய் குடுங்க!’’ன்னு திருப்பி அனுப்பிட்டாரு.
சாயங்காலம் 6 மணிக்கு பீளமேட்ல நாடகம் நடக்கற கொட்டகைக்கு போனேன். டிக்கட் எடுக்கற ‘கவுன்ட்டர்’ துவாரத்திலிருந்து ஒரு கை என் காதை புடிச்சிட்டுது.
‘‘படவா ராஸ்கல்! கல்யாணத்துக்குத்தான் வரமுடியலே. புள்ளைங்க டிபனாவது சாப்பிடட்டும்ன்னு அனுப்பி வச்சா திருப்பியாடா அனுப்பறே?’’
அடடே! நம்ம வேலுமணி அம்மா.
‘‘அம்மா இது நீங்கதான் அனுப்பினதுன்னு தெரியாம போச்சு. தெரிஞ்சிருந்தா அண்டாக்களையும் நாங்களே வச்சிருப்போம்!’’ னேன்.
ஒரு வழியாக சிரித்து முடித்து நாடகம் போட்டோம். பீளமேடு மயானம் பக்கம், அலாதிகாடு. பஸ் ஆட்டோ வசதி இல்லை. பள்ளி, கல்லூரி தேர்வு சமயம். நாடகத்துக்கு 200 பேர் வந்திருந்தா பெரிய விஷயம்.
எங்க நிலமை அம்மாவுக்கு புரிஞ்சிருச்சு. மறுநாள் காலை 5, 6 பணக்காரங்க வீட்டுக்குப் போனாங்க. நன்கொடைய வாங்கியாந்து 10 ஆயிரம் ரூபாய் எங்களுக்கு கொடுத்தார். ‘நீங்க நம்மூர்ல நாடகம் போட்டு நஷ்டத்தில போகக்கூடாது!’ன்னு பரிவோடு சொன்னார்.
அம்மா கொடுத்த இனிப்பு பண்டங்களை மலம்புழா சுற்றுலா சென்று சாப்பிட்டுத் தீர்த்தோம்.
மாலை வேலுமணி அம்மா வீட்டிலதான் குழுவுக்கு விருந்து. நிறைய பேசி விட்டு சாப்பிடப் போனோம். ‘டிரைவர் சாப்பிடலியா?’ன்னு கேட்க, ‘வீட்டுக்கு எந்த விருந்தாளி வந்தாலும் முதல்ல டிரைவர்களைத்தான் சாப்பிட வைப்போம்’னாங்க.
‘‘டேய் சிவா! ராமகிருஷ்ணா கல்யாண மண்டபம் புதுசா கட்டியிருக்கோம். உன் கல்யாணம் இதிலதான் நடக்கணும்!’’னு ஒரு நாள் போன் பண்ணி தெரிவிச்சாங்க.
‘‘சினிமாக்காரனுக்கு அவ்வளவு சீக்கிரம் யாரும் பொண்ணு குடுக்க மாட்டாங்க. அப்படி எந்த அப்பாவியாவது பெண்ணு குடுத்தா அப்புறம் பார்ப்போம்!’’ ன்னு சொன்னேன்.
‘‘உனக்கு பொண்ணு கிடைக்காதா? என்னடா சொல்றே? நானே பொண்ணு பாக்கறேன்!’’ன்னு சொல்லி சொன்னாப்பலயே தேடினாங்க.
3 வருஷம் தேடினதுக்கப்புறம் 13-வது பொண்ணா, இந்த லட்சுமி அம்மையார் மாட்டினாங்க.
கோயமுத்தூருக்கு போன் பண்ணி அம்மாகிட்ட பொண்ணு கிடைச்சிட்ட செய்தியைச் சொல்லி, ‘நம்ம மண்டபத்திலயே வச்சுக்கலாம்!’ சொன்னேன்.
அந்தப் பக்கம் மெளனம்.
‘‘என்னம்மா பேசறது கேட்குதா?’’
‘‘கேக்குது, கேக்குது. பொண்ணு ஒரு வழியா கிடைச்சதில சந்தோஷந்தான். ஆனா 1974- ஜூலை 1-ம் தேதி யாரோ பொள்ளாச்சிக்காரர் கல்யாண மண்டபத்தை 3 மாசத்துக்கு முன்னாடியே புக் பண்ணயிருக்காரே!’’
‘‘கேன்சல் பண்ணச் சொல்லுங்க!’’
‘‘நம்ம வீட்டு கல்யாணம்னா கூட தேதிய மாத்தி வைக்கலாம். அட்வான்ஸ் வாங்கிட்டு எப்படிடா, விட்டுத்தரச் சொல்லி அவங்ககிட்ட கேக்கறது?’’
‘‘நீ கல்யாண தேதியை கொஞ்சம் தள்ளி வச்சுக்கறியா?’’
‘‘விளையாடறீங்களா? தெரியாத்தனமா கல்யாணத்துக்கு மாமனார் ஏதோ ஒத்துகிட்டாரு. தள்ளிப் போனா மனசு மாறி கல்யாணத்தை அவர் நிறுத்தினாலும், நிறுத்திடுவாரு!’’
‘‘சரி, நீ புறப்பட்டுவா. எப்படியாவது ஒரு மண்டபம் புடிச்சிடலாம்!’’
போனேன். கார் எடுத்துட்டு கோயமுத்தூர் முழுக்க சுத்தினோம். வெங்கடலட்சுமி கல்யாண மண்டபம், ஜி.டி.நாயுடு மண்டபம், குரு குக கான சபா ஹால்ன்னு எதுவுமே free யாக இல்லை.
‘‘ஒண்ணு செய்யலாம் வா!’’ ன்னு கார்ல ஏத்தி அவினாசி போய், வடக்கே புஞ்சைப் பளியம்பட்டி போற ரோட்டில, தண்டுக்காரன்பாளையம் -நாய்க்கமார் கோயிலுக்கு கூட்டீட்டுப் போனாங்க. தானியம் காயப்போடற மாதிரி களம் (திறந்தவெளி) அதுக்குப் பின்னாடி ஆஸ்பெஸ்டாஸ் கூரை போட்ட கட்டடம். 500 பேர் உட்காரலாம்.
‘‘என்னம்மா இது?’’
‘‘நீ கவலையே படாதே. 5000 பேருக்கு மேல உட்கார்ற மாதிரி தென்னை ஓலையில நீட்டா பந்தல் போட்டுத் தாரேன். கட்டடத்துக்குள்ளே சாப்பாடு, டிபன் பரிமாறிக்கலாம்!’’ ன்னாங்க.
‘‘உங்க இஷ்டம்!’’ ன்னு சொல்லீட்டு சென்னை வந்துட்டேன்.
வேலுமணி அம்மா ஹார்ட் பேஷண்ட். அப்படியிருந்தும் தினம் காலையில 8 மணிக்கு கார்ல புறப்பட்டு 50 கி.மீ., தூரம் அவினாசி வழியா தண்டுக்காரன்பாளையம் போய். ‘தென்னை ஓலைக வந்திருச்சா. பந்தல் போடற ஆளுக வந்திட்டாங்களா? சாப்பாடு, டிபன், எந்த சமையல்காரர், குடிக்கிற தண்ணி கொண்டு வர எத்தனை லாரி புக் பண்ணியிருக்கு?’ இப்படி எல்லா வேலைகளையும் அவங்களே பார்த்து, மாயாபஜார்ல அரண்மனை உண்டாக்குன மாதிரி கல்யாணத்தன்னிக்கு அந்த இடத்தையே மாத்தீட்டாங்க.
மேஜர் சுந்தராஜன் நாடகக்குழு நடிகன் நான் -குழுவில் உள்ள 30 பேருக்கும் ரயில்வே கம்பார்ட்மெண்ட் -ஒரு பொட்டியே போக வர ரிசர்வ் பண்ணினோம். சிவாஜி அரைமணி நேரம் லேட்டா வந்தாரு. சின்னப்பா தேவர் அண்ணன், ஏபிஎன் போன்றோர் தாலி கட்டறதுக்கு முன்னாடியே வந்திட்டாங்க.
அலாதிக் காட்டில் கல்யாணம். ஆனாலும் வெள்ளிக்கிழமை விரதம் படம் வந்து ‘ஹிட்’ ஆன நேரம். அழைப்பில்லாம யார் வேணும்னாலும் வந்தா சிக்கலாயிடும்ன்னு காலையில கல்யாணத்துக்கு வந்தவங்களுக்கு காலை டிபனுக்கு மஞ்சள் டோக்கன், மத்தியான சாப்பாட்டுக்கு பச்சை டோக்கன் 6 ஆயிரம் கொடுத்தோம். நம்ம ஆளுங்க கில்லாடியாச்சே. மஞ்சள் டோக்கன்ல டிபன் சாப்பிட்டு வெளியே போய் சிநேகிதனுங்ககிட்ட அதே மஞ்சள் டோக்கன் குடுத்து உள்ளே ரெண்டு மூணு தடவை அனுப்பினவங்களும் உண்டு.
எங்க கிராமத்திலருந்து ஊர் சனங்களை பிரைவேட் பஸ்ல 3 ‘டிரிப்’ அடிச்சு அள்ளிட்டு வந்திட்டோம் (ஊரே காலியாகி என் கல்யாணத்துக்கு வந்து விட என் அம்மா மட்டும் காலில் அடிபட்டு வீட்ல இருந்துட்டதும், அடுத்தநாள் சாயங்காலம் பொண்ணு மாப்பிள்ளைய கிராமத்துல வச்சு ஆசீர்வாதம் பண்ணினதும் தனி ட்ராக்). இப்படி அத்தனை பேரையும் கிட்ட நின்னு கவனிச்சு ஒத்தை ஆளா என் கல்யாணத்தை ‘ஜாம்-ஜாம்’ ன்னு பொறுப்பெடுத்து நடத்தினவர் வேலுமணி அம்மா.
எனக்கு மட்டுமா? எத்தனையோ பேருக்கு ஓடி ஓடி மரியாதை செஞ்சவங்க அவங்க. மத்தவங்க மகிழ்ச்சிதான் அவங்களுக்கான சந்தோஷம்.
திருவிளையாடல், கந்தன் கருணை, சரஸ்வதி சபதம், உயர்ந்த மனிதன், வியாட்நாம் வீடு-ன்னு சிவாஜி புகழின் உச்சியிலிருந்த நாட்கள். கோயமுத்தூருக்கு ஒரு நிகழ்ச்சிக்கு வந்தார். மறுநாள் அவருக்கு பிறந்தநாள். அதை கேள்விப்பட்டு 150 சிறுவர்களுக்கு புதிதாக சீருடை தச்சுக் கொடுத்து, தமிழாசிரியரைக் கொண்டு சிவாஜியை பற்றி ஒரு பாடல் எழுத வைத்து - நாடகத்துக்கு இசையமைக்கும் இசையமைப்பாளரை வைத்து டியூன் பண்ணித் தயார் செஞ்சு, 6 அடி விட்டத்தில ‘கேக்’ ஒன்று செஞ்சு, ஏர்போர்ட்ல விமானம் புறப்படும் முன்பு அந்த ‘கேக்’கை சிவாஜியை வெட்டச் சொல்லி, வாழ்த்துப்பாடி ‘சர்ப்ரைஸா’ அசத்தியவர் வேலுமணி அம்மா.
‘அன்னக்கிளி’ 50-வது நாள் படப்பிடிப்புக்குழு கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, திருப்பூர் தியேட்டர்ன்னு ‘விசிட்’ போனோம். படம் ஓடும்போது இடைவேளையில் நாங்கள் மேடை ஏறி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து படப்பிடிப்பில் நடந்த சுவையான சம்பவங்களை பகிர்ந்து கொள்வோம்.
கோவையில் ரசிகர்களை சந்தித்து விட்டு, மேட்டுப்பாளையம் 12 மணி ஷோவில் ரசிகர்களை சந்தித்தோம். அடுத்து பண்ணாரி அம்மன் கோயில் சுவாமி தரிசனம் செய்ய குழு புறப்பட்டது.
வேலுமணி அம்மா தியேட்டரில் இவர்களை சந்தித்து கோயிலுக்கு போனால் வழியில் எங்கும் சாப்பிட முடியாது. சாப்பாட்டு நேரம். வாங்க நம்ம ‘ஃபார்ம் ஹவுஸ்’ போய் சாப்பிட்டு போகலாம்’ னாங்க. ஆனா, இவ்வளவு பேர் - பத்து, பதினைஞ்சு பேர் சாப்பிட வருவாங்கன்னு அவங்களுக்கு தெரியாது. விருந்தும் ஏற்பாடு செய்யவில்லை.
எல்லோரும் போனோம். இருக்கிற சாப்பாட்டு பாத்திரங்களை சாதம், சாம்பார், பொறியல், ரசம், தயிர் எல்லாம் எடுத்து டேபிளில் வச்சு ‘இஷ்டம் போல போட்டு சாப்பிடுங்க’ன்னு சொல்லீட்டாங்க.
பஞ்சு அருணாசலம், தேவராஜ் மோகன், இளையராஜா மற்றும் நடிகர்கள் எல்லாம் வயிறார சாப்பிட்டு கிளம்பினார்கள். நான் அவங்க கூட போகலை. அவங்களை வழி அனுப்பி விட்டு வந்த வேலுமணி அம்மா,
‘‘டேய் சிவா! பாத்திரத்தில ஏதாச்சும் ஓரம் பாரமா சோறு இருக்கா, பாரு!’ ன்னார்.
பார்த்தேன்.
‘‘கொஞ்சம் இருக்கும்மா!’’ன்னேன்.
‘‘அதை வழிச்சுப் போட்டு கொஞ்சம் தயிரு ஊத்தி பிசைஞ்சிடு. ஆளுக்கு ஒரு வாய் சாப்பிடலாம்...!’’
அப்படியே செஞ்சேன்.
ஆமாம். ஆளுக்கு ஒரே ஒரு வாய்தான்; ரெண்டு பேருக்கும் அன்னிக்கு மத்தியான சாப்பாடு!
விலங்குகளை நேசிப்பவர்கள் இறைவனுக்கு நெருக்கமானவர்கள். வேலுமணி அம்மா நாய் பூனைகளுடன் யானைக்குட்டி ஒன்றையும் வளர்த்தார். தினமும் அதற்கு அவர்தான் உணவு ஊட்டுவார். நாய்க்குட்டியை கொஞ்சுவது போல அந்த யானைக்குட்டியை கொஞ்சுவார். அது குதிபோட்டு இவர் பின்னால் நடந்து வருவதை நான் பார்த்திருக்கிறேன்.
பணம் இருக்கறவங்க கோடீஸ்வரியா இருக்கலாம்; எல்லோருக்குமான - எல்லா ஜீவன்களுக்குமான மனமும் இருக்கிறவங்கதான் ‘கோடீஸ்வரியா வாழ’ முடியும். ‘கோடீஸ்வரியா ‘வாழ்ந்த’ வங்கதான் வேலுமணி அம்மா.
- சுவைப்போம்
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago