சர்வதேசப் பாறுகள் விழிப்புணர்வு தின சிறப்புக் கட்டுரை; தாழப் பறக்கும் ‘நோய் தடுப்பான்’ பாறுகள்: அழியும் பாறுகளை எப்படி பாதுகாக்கப் போகிறோம்?

By செய்திப்பிரிவு

ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் முதல் சனிக்கிழமை பாறுகள் விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்படுகிறது.

பொதுவாக இந்தக் கழுகுகளைப் பாறு அல்லது பிணந்தின்னிக் கழுகுகள் என்று அழைப்பார்கள். இவ்வகைக் கழுகுகளைப் பொறுத்தவரை மக்களிடையே வெறுக்கத்தக்க ஒரு பார்வையே இருந்து வருகிறது. ஏனெனில் அவை மொட்டைத் தலையுடனும் கருப்பான நிறத்துடனும் இறந்த விலங்குகளை உண்ணுவதாலும் இருக்கக்கூடும். ஆனால், உண்மையில் நமது சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரும் பங்கை ஆற்றி வருகின்றன இந்த கழுகுகள்!

சூழல் உணவுச் சங்கிலியில் உச்சநிலையில் இருப்பவை கழுகுகள். இந்தியாவைப் பொருத்தவரை ஆறு வகையான கழுகுகள் பறவையியலாளர்களால் அடையாளம் காணப்பட்டு இருக்கின்றது. பறவையியல் விஞ்ஞானி சலீம் அலி தன்னுடைய ’இந்தியப் பறவைகள்’ என்னும் புத்தகத்தில் இதைக் குறிப்பிட்டுள்ளார்.

அவை, செந்தலை பாறு (Red head vulture - Sarcogyps calvus), சாம்பல் பாறு (Cinereous vulture - Aegypius monachus), யுரேசிய பாறு (Eurasian griffon - Gyps fulvus), நீண்ட அலகு பாறு (Long billed vulture/Indian vulture - Gyps indicus), வெண்முதுகு பாறு (Indian white backed vulture - Gyps bengalensis), எகிப்திய பாறு (Egyptian vulture - Neophron percnopterus).

ஆனால், தற்போது வரை இந்திய ஒன்றியத்தில் 9 வகைப் பிணந்தின்னிக் கழுகுகள் இருப்பதாகப் பறவையியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். மேலே குறிப்பிட்ட 6 பாறுகள் போக, இமாலய பாறு (Himalayan Vulture -Gyps Himalayensis), தாடி பாறு (Bearded Vulture -Gypaetus Barbatus), மெல்லிய அலகு பாறு (Slender-Billed Vulture -Gyps Tenuirostris).

இந்த 9 வகைப் பாறுகளில் செந்தலை பாறு, நீண்ட அலகு பாறு, வெண்முதுகு பாறு, மெல்லிய அலகு பாறு மிகவும் அருகி வரும் நிலையிலும் (critically endangered), இமாலய பாறு, தாடி பாறு அச்சுறு நிலையிலும் (Near Threatened), எகிப்திய பாறு அருகிவிட்ட நிலையிலும் (Endangered) உள்ளன.

நோய்த்தொற்று தடுப்பான்

இந்தப் பிணந்தின்னிக் கழுகுகள் வேட்டையாடி உண்ணுவதில்லை. பெரும்பாலும் இறந்த உயிரினங்களை உண்கின்றன. இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரும் நன்மையை இந்த வகைப் பிணந்தின்னிக் கழுகுகள் செய்கின்றன. இறந்த விலங்குகளை அது உண்ணுவதால் இறந்த விலங்குகளுக்கு நோய்த்தொற்று இருக்கும் பட்சத்தில் அந்த நோய் பிணந்தின்னிக் கழுகுகள் தாக்குவதில்லை. இதன்மூலம் உயர் நிலையிலுள்ள உள்ள இந்தக் கழுகுகளிடமிருந்து மற்ற உயிரினங்களுக்கு அந்த நோய் பரவுவது தடுக்கப்படுகிறது.

பிணந்தின்னிக் கழுகுகள் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இருந்ததாகப் பதிவேடுகள் குறிப்பிடுகின்றன. தற்போது பிணந்தின்னி கழுகுகளைப் பார்ப்பதே மிக அரிதான ஒன்றாக இருக்கிறது.

1980-ல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் பரத்பூர் கெலடியோ தேசிய பூங்காவில் மட்டும் 2000க்கும் மேற்பட்ட பிணந்தின்னிக் கழுகுகள் காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் 1998-ல் ஆய்வாளர்கள் கணக்கெடுப்பின்படி வெறும் 4 பிணந்தின்னிக் கழுகுகளைப் மட்டுமே கண்டதாகக் குறிப்பிட்டுள்ளனர். 18 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கில் கழுகுகள் பரத்பூர் தேசிய பூங்காவில் மட்டும் குறைந்திருப்பது மிகப்பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.

இந்தக் காரணங்களைக் கண்டுபிடிக்கப் பாரத் நாயர் என்ற ஆய்வாளர் (அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம்) மேற்கொண்ட ஆய்வில் இறந்துபோன பிணந்தின்னிக் கழுகுகளின் உடல்களையும் இன்னும் இறந்துபோன இதர பிற விலங்குகளின் உடல்களையும் சேகரித்து நடத்திய ஆய்வில் BHC, DDT பூச்சிக்கொல்லி மருந்தின் அளவு மிக அதிகமாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது. அவையே பிணந்தின்னிக் கழுகுகளின் இறப்புகளுக்கு ஒரு மிகப்பெரிய காரணமாக இருக்கவும் வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஏன் இவ்வாறு நடந்தது ?

வேளாண் நிலத்தில் பயன்படுத்தும் வேதிப்பொருட்களால் பூச்சிகள், எலிகள் எனத் தீங்கு விளைவிக்கும் உயிரினங்கள் இறந்தாலும் அதனை உண்ணும் பல பறவைகளும் அதனை உட்கொண்டபின் இறந்து போகின்றன. கோயம்புத்தூர் ஆனைகட்டியில் உள்ள சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி நிறுவனம் இதனைக் குறித்த பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

பெரும்பாலான பறவைகள் உடனே இறந்துவிடும், சில இனப்பெருக்கம் செய்வதில் சிக்கலைச் சந்திக்கும். வேதிப்பொருட்களால் பல பறவைகளின் முட்டைகள் முட்டை ஓடுகள் இன்றித் தோன்றுகின்றன.

மனிதர்களும் பெரிய விலங்குகளும் சிறிய விலங்கு அல்லது தாவரங்களை உண்ணும்போது அவற்றிலுள்ள நீடித்து நிலைக்கும் நச்சு மேற்சொன்னவற்றில் அழியாமல் திரளுதல் உயிர்வழித் திரள்வு அல்லது உயிர்வழித் திரட்சி (bio accumulation) எனப்படுகிறது.

அதேபோல உணவுச் சங்கிலியில் உச்சத்தில் இருக்கும் பறவைகள் நச்சு உள்ள மற்ற உயிரினங்களை உண்ணும்போது பறவைகளின் உடலிலும் அந்த நச்சு அதிகமாகும் பறவைகள் சாப்பிட்ட உயிரினங்களில் உள்ள நச்சை விடப் பறவைகளின் உடலில் அதிகமாகக் காணப்படும். இதுவே உயிர்வழி பெருக்கம் (biomagnification) எனப்படும்.

உதாரணமாக வயல்வெளிகளில் நாம் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகள் பூச்சிகளைக் கொல்லும். பிறகு அந்தப் பூச்சிகளை வேறு சில சிறு விலங்குகளான பாம்போ அல்லது வேறு சில விலங்குகளும் உண்ணும்போது அந்தப் பூச்சிகளில் உள்ள நச்சுப் பூச்சிகளைச் சாப்பிட்ட இந்த விலங்கின் உடலில் சேகரிக்கப்படும். மீண்டும் உணவுச் சங்கிலியின் தொடர்ச்சியாக அந்தப் பாம்பைச் சாப்பிடும் வேறு சில விலங்குகளுகளின் உடலில் தங்கிவிடும். பிறகு அந்த உயிரினத்தை உண்ணும் நரி, சிங்கம், புலி போன்ற மாமிச உண்ணிகளின் உடலில் அந்த நச்சு சேமிக்கப்படும். பிறகு அந்த மாமிச உண்ணிகள் இறந்தபின் அந்த உடல்களை உண்ணும் பிணந்தின்னிக் கழுகுகளின் உடலிலும் அந்த நச்சு சேகரமாகும். இதன் மூலம் பூச்சியைக் கொல்ல நாம் பயன்படுத்திய நச்சு சூழலியல் கூம்பில் உச்சத்திலுள்ள பருந்துகள் வரை சென்றடைகிறது. அதுமட்டுமின்றிப் பூச்சிகளில் 2 பிபிஎம் இருந்த நச்சின் அளவு உச்சத்தில் உள்ள பருந்துகளில் சுமார் 300 பிபிஎம் ஆகக் கூட உயிர்வழிப்பெருக்கம் அடையும். இது சூழலியலில் மிகப்பெரும் அழிவை ஏற்படுத்தும். உணவுச் சங்கிலியில் இது மிகப்பெரிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.

உயிர்வழித் திரள்வும் உயிர்வளி பெருக்கமும் மிகவும் ஆபத்தானவை. இதனால் உணவுச் சங்கிலியில் மிகப்பெரும் ஆபத்தான மாற்றங்கள் ஏற்படும். இதன் மற்றொரு விளைவாகச் சூழலியலின் சமநிலை தவறும். காலப்போக்கில் அந்த ஒரு உயிரினத்தை நம்பி வாழும் மற்ற உயிரினங்கள் அழியக்கூடும். உயிரினங்கள் அழிந்து வருவது இயற்கையின்படி மலர்ச்சியில் ஒரு அங்கம் தான் எனினும் இங்கே நடக்கும் உயிரினங்களின் அழிவு என்பது இயற்கையை விடப் பல மடங்கு வேகமாகவும் அதே சமயத்தில் இது நச்சுகளினால் செயற்கையாக நடக்கிறது. இதன் மூலம் இயற்கை விரும்பும் பல உயிரினங்களும் அழிய வாய்ப்புள்ளது.

பிணந்தின்னிக் கழுகுகள் அழிந்து வருவதற்கான காரணங்கள்:

பிணந்தின்னிக் கழுகுகள் இறப்பதற்கு மிக முக்கியமான காரணிகளாக 2 விஷயங்களை பெரும்பாலான ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. அவை இறந்த உடல்களின் மீது விஷத்தை தடவுதல், டைக்லோஃபெனாக் மருந்துகள்.

காடு, மலைகளின் ஓரம் உள்ள கிராமப்புறங்களில் பயிர்களைச் சேதப்படுத்தும் விலங்குகளிடம் இருந்து தற்காத்துக் கொள்ளவும் ஆபத்தான விலங்குகளிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளவும் விலங்குகளின் மீது நச்சுகளைப் பூசி விடுவார். இதன் மூலம் வேட்டையாடும் விலங்கு அந்த நச்சுவை உண்டுவிட்டு இறந்துவிடும்.

கால்நடைகளை வைத்திருப்பவர்கள், கால்நடைகளுக்கு வலிநிவாரணி மருந்தான டைக்லோஃபெனாக்கை கொடுப்பர், அந்தக் கால்நடைகள் இறந்தபின் அதன் கழிவுகளை உண்ண வரும் பாறுகள் இதுபோன்ற டைக்லோஃபெனாக் கொடுக்கப்பட்ட விலங்குகளின் உடல்களை உண்ணும்போது டைக்லோஃபெனாக் பாறுகளின் உடல்களிலும் செல்லும், இதன் மூலம் பாறுகள் இனம் வெகுவாகக் குறைந்துள்ளது என ஆய்வுகளில் தெரியவந்தது.

மேலும் தற்போது சில மருந்துகள் கீடோப்ரோபின், அஸ்க்ளோபினாக், நிம்முஸ்லைடு, கார்ப்ரோபின், பினைல்புட்டோசோன், நிமிசுலிடே ஆகியன பிணந்தின்னிக் கழுகுகளுக்குக் கேடு விளைவிக்கின்றன என ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். இம்மருந்துகள் இனியும் விலக்குங்கள் உபயோகத்திற்குத் தடை செய்யப்படவில்லை. இப்பெருங்கழுகினங்களைக் காக்க இந்திய அரசு மருந்துக் கட்டுப்பாட்டு ஆளுநர், மாற்று மருந்தை மேலோக்சிகாம் பரிந்துரைத்து டைக்குளோஃபினாக் கால்நடைகளுக்கு பயன்படுத்த தடை உத்தரவை 2006 ஆம் ஆண்டு பிறப்பித்து இந்தியா அரசு இதழில் வெளியிட்டுள்ளது. இந்த மருந்துகள் பாறு கழுகுகள் தற்போது வாழும் பகுதிகளான ஈரோடு , நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் கால்நடை மருந்தகங்களில் கால்நடைகளுக்குத் தாராளமாகப் பயன்படுத்தி வருவது எங்களின் கள ஆய்வில் தெரியவந்தது.

மாயாறு சமவெளிப் பகுதியானது தமிழக மற்றும் கர்நாடக எல்லைப் பகுதிகளை உள்ளடக்கியதாகும். இங்கு செந்தலை பிணந்தின்னிக் கழுகு, மஞ்சள் பூசி பிணந்தின்னிக் கழுகு, நீண்ட அலகு பிணந்தின்னிக் கழுகு ஆகிய கழுகினங்கள் மிக குறைந்த எண்ணிக்கையிலும், வெண்முதுகு பிணந்தின்னிக் கழுகானது அதிக எண்ணிக்கையில் தோராயமாக 300 மட்டுமே இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தப் பிணந்தின்னிக் கழுகினங்கள் முதுமலை, சத்தியமங்கலம், பந்திப்பூர் புலிகள் சரணாலயங்களில் மட்டுமே தனது இனப்பெருக்கத்தைச் செய்கின்றன, காரணம் இங்கு வாழும் புலி, செந்நாய், சிறுத்தை ஆகிய விலங்குகளாகும். கழுதைப் புலி மற்றும் காட்டுப் பன்றி ஆகிய விலங்குகள் பிணந்தின்னிக் கழுகுகளுக்கு உணவு போட்டியாளர்கள் ஆவார்கள். மாயாறு சமவெளிப் பகுதியில் பிணந்தின்னிக் கழுகுகளுக்குத் தேவையான இரையானது எப்போதும் கிடைத்துக் கொண்டிருக்கிறது. மாயாறு சமவெளி கழுகுகளைப் பாதுகாக்க தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடக அரசுகள் கூட்டு முயற்சி எடுக்கவேண்டும். உதாரணமாக முதுமலை நிர்வாகம் தென்னிந்தியாவின் முதல்பாறு கழுகுகள் இனப்பெருக்க மையத்தை நிறுவத் திட்டமிட்டுள்ளது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

கட்டுரையாளர் வெங்கிடாசலம் பாறு கழுகுடன்.

சொற்ப எண்ணிக்கை மிகவும் அழியும் தருவாயில் இருந்த கலிபோர்னியான் கண்டோர் இனத்தைப் பாதுகாக்க அமெரிக்கா விலங்கியல் விஞ்ஞானிகள் எடுத்த நடவடிக்கையால் தற்போது வெறும் 27 கலிபோர்னியான் கண்டோர் இனத்திலிருந்து 500 வரையிலும் அதன் எண்ணிக்கையை அது இனப்பெருக்கம் செய்யத் தகுந்த சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்து இனப்பெருக்க மையத்தின் மூலம் உருவாக்கியுள்ளனர். பிணந்தின்னிக் கழுகுகள் இனப்பெருக்க மையமானது இந்தியாவில் ஹரியாணா (பிஞ்சுர்), ராஜபாட்க்கவா (மேற்கு வங்கம்), அஸ்ஸாம் (ராணி) ஆகிய மாநிலங்களில் செயல்பட்டு வருகின்றன. இதேபோல மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், குஜராத் மற்றும் ஒடிஸா ஆகிய மாநிலங்களிலும் பிணந்தின்னிக் கழுகுகள் இனப்பெருக்க மையமானது செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

உயிர்ச் சங்கிலியில் உச்சத்தில் இருக்கும் பாறுகள் உயரப் பறக்க வேண்டியவை. நோய்த்தடுப்பை மேற்கொள்ளும் பாறுகள் எண்ணிக்கையில் தாழப் போய்க் கொண்டிருப்பது சுழலியல் சமநிலைக்கு மிகவும் ஆபத்தானது!

கட்டுரையாளர்கள்: ஜீ.கே.தினேஷ், ரா.வெங்கிடாசலம்,

பறவையியல் துறை ஆய்வாளர்கள்.

தொடர்புக்கு - writergkdinesh@gmail.com, poojithvenkat@gmail.com

புகைப்படங்கள் எஸ்.ஓம்பிரகாஷ்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்