கொங்கு தேன் 22: கோயமுத்தூரு ‘கோதா பொட்டி’

By செய்திப்பிரிவு

‘‘சிவா! நம்ம படத்தில நடிக்க என்ன சம்பளம் எதிர்பார்க்கறே?’’

‘‘சிவகுமார் ஒரு படத்துக்கு என்ன சம்பளம் வாங்கறான்னு இதுக்குள்ளயே 10 புரொட்யூசர்கிட்ட விசாரிச்சிருப்பீங்களே? உங்களுக்கு தெரியாதா?’’

அவர் சிரிப்பின் அர்த்தம் புரிந்தது. அவர் என் வாயால் கேட்க ஆசைப்படுகிறார்.

‘‘25 ஆயிரம் சம்பளம் வாங்கறேன்!’’ சொன்னேன்.

‘‘அதை விடு. இப்ப, ரெண்டு படத்திற்கு நான் புக் பண்றேன். மொத்தம் 40 ஆயிரம். இப்பவே 10 ஆயிரம் அட்வான்ஸ் வாங்கிக்க!’’

‘‘நீங்களும் ஊரை விட்டு ஓடப்போறதில்லே; நானும் போகப் போறதில்லை. எதுக்கு அவசரப்பட்டு 2 படத்துக்கு புக் பண்ணனும். இப்போதைக்கு ஒரு படமே போதும்!’’

‘‘என்னப்பா புடி குடுக்காம பேசறே!’’

நான் சிரித்தேன்.

‘‘சரி, சரி 10 ரூபா (10 ஆயிரம்) அட்வான்ஸையாவது வாங்கிக்க!’’

‘‘வேண்டாம்! செட்டுக்குள்ளே எல்லா நடிகர்களையும் கோயமுத்தூர் கெட்ட வார்த்தையில சொல்லி திட்டறீங்களாம். காசு வாங்கீட்டேல்ல -ஒழுங்கா வாங்கப்பா’ன்னு’’

‘‘அட, இதை வேற விசாரிச்சிட்டியா?’’

‘‘அப்படி என்னை நீங்க திட்ட விட மாட்டேன். அட்வான்ஸ் எல்லாம் வேண்டாம். கடைசில படம் முடிஞ்சு வாங்கிக்கறேன்!’’

‘‘....!’’

‘‘ஆமா, யாருண்ணே ஹீரோயின்?’’

‘‘என்னப்பா, எந்த ஹீரோயின்கிட்ட உம் பேரைச் சொன்னாலும் அப்படி சந்தோஷப்படறாங்க. என்ன பண்றியோ, ஏது பண்றயோ?’’

‘‘உங்களுக்கு எங்கப்பா வயசு. நான் எதையும் மறைக்க வேண்டியதில்லை. நம்ம ஒண்ணும் ராமபிரான் இல்லை. எங்கிட்டவும் தப்பு இருக்கலாம். ஆனா எந்த ஹீரோயினையும் நான் லவ் பண்றேன்னு சொல்லி ஏமாத்தினதில்லை. எல்லை மீறி அவங்ககிட்ட இதுவரைக்கும் நடந்துகிட்டதில்லை. நாளைக்கு தப்பு பண்ணீட்டா -அண்ணா தப்பு பண்ணிட்டேன்னு உங்ககிட்ட சொல்லுவேன்!’’

‘‘முருகா! முருகா! அடேய், சிவா! இந்த புத்தி இருக்கிற வரைக்கும் உன்னை எவனும் அசைக்க முடியாது... அப்புறம் ஒண்ணு கேள்விப்பட்டேன். ஒரு புரொட்யூசர்கிட்ட அட்வான்ஸ் வாங்கீட்டீன்னா, அப்புறம் எவ்வளவு பெரிய புரொட்யூசர் வந்து லட்ச, லட்சமா குடுக்கறேன்னாலும், முதல்ல ஒப்புகிட்ட புரொட்யூசருக்கு நடிச்சு குடுத்திட்டுதான் அடுத்த படத்துக்கு போவியாமே. இந்த குணத்தை உசிரே போனாலும் உட்டுடாதே!. அதுதான் உன்னை வாழ வைக்கும்’’

மேலே என்னுடன் நடத்திய உரையாடலுக்கு சொந்தக்காரர் தேவர் பிலிம்ஸ் சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பா தேவர்ன்னு எல்லோருக்கும் புரிஞ்சிருக்கும். எனக்கு கோயமுத்தூரும், சினிமாவும்ன்னா சட்டுனு நினைப்புல வர்றது தேவர் அண்ணனும், அவரோட முதல் சந்திப்பும்தான். .

சிங்கத்துடன் தேவர்

இன்னிக்கு சினிமான்னா மெட்ராஸ்தான்னு நினைக்கிறாங்க. அது இல்லை. சினிமாவுக்கு முதல் முதலா கொடி நட்டது கோயமுத்தூருதான்.

தமிழ்நாட்டு மக்களுக்கு முதல் முதல் சினிமா படத்தை காட்டினவர் கோயமுத்தூரைச் சேர்ந்த சாமிக்கண்ணு வின்சென்ட்.

இந்தியாவுக்கு வந்த பிரெஞ்சுக்காரன், இங்கிருந்து தன் நாட்டுக்கு திரும்பறதுக்கு முன்னாடி ‘LIFE OF JESUS’ ங்கிற துண்டு படத்தையும், புரொஜக்டரையும் சாமிக்கண்ணுக்கு வித்துட்டு போயிட்டான். அதை ஊர் ஊரா காட்டி சினிமா மேல ஜனங்களுக்கு ஓர் ஈர்ப்பை ஏற்படுத்தினவரு சாமிக்கண்ணு. 1914-ல் வெரைட்டி ஹால்னு கோயமுத்தூர்ல சொந்தமா தியேட்டர் கட்டி ஓட்டினாரு. அவர் அதிகமா பட விநியோகம்தான் பண்ணினாரு. சில படங்களையும் தயாரிச்சாரு.

அதுக்கப்புறம் சினிமாங்கிற கலை வளர கோவையில் சென்ட்ரல் ஸ்டுடியோ, பட்சிராஜா ஸ்டுடியோ காரணமா இருந்திச்சு. ஜூபிடர் சோமு, மொகைதீன் - சென்ட்ரல் ஸ்டுடியோவுல பல படங்கள் எடுத்தாங்க. பட்சிராஜா ஸ்டுடியோ முதலாளி ஸ்ரீராமுலு நாயுடு பல ஹிட் படங்களை உருவாக்கினாரு.

1946- காலகட்டம். கலைஞர் கருணாநிதி வசனம் எழுதிட எம்.ஜி.ஆர் முதல் முதலா ஹீரோவா நடிச்ச ராஜகுமாரி படப்பிடிப்பு நடந்துகிட்டிருந்த சமயம். எம்.ஜி.ஆர்., ஜூபிடர்ல மாதச் சம்பள நடிகரா இருந்தாரு. நம்பியார், எஸ்.வி.சுப்பையான்னு ஏகப்பட்ட பேர் மாதச்சம்பளத்தில நடிச்சிகிட்டிருந்தாங்க.

சென்ட்ரல் ஸ்டுடியோ ராமநாதபுரம் ஏரியாவை ஒட்டியுள்ள இடம் எம்.ஜி.ஆரின் தாயார் வாடகைக்கு ஒரு வீடு புடிச்சு மகனோட தங்கியிருந்தாங்க. அதுக்குப் பக்கத்திலதான் ‘கோதா பொட்டி’ (தேகப்பயிற்சி சாலை) வச்சிருந்தாரு சாண்டோ சின்னப்பா தேவர்.

எம்.ஜி.ஆருடன் தேவர்

ஷூட்டிங் இல்லாத சமயங்கள்ள கோதா பொட்டிக்கு போய் எல்லோரும் தீவிரமா உடற்பயிற்சி பண்றதை எம்.ஜி.ஆர் பார்ப்பார். அதுல தேவர் அண்ணனுக்கும், அவருக்கும் சிநேகம் ஏற்பட்டது. எம்.ஜி.ஆரும் கடுமையா உடற்பயிற்சி பண்றவர். ‘ராஜகுமாரி’ படத்தில வர்ற சண்டைக் காட்சியில தன்னோட மோதறதுக்கு சின்னப்பா தேவர் சரியா இருப்பார்னு டைரக்டர் ஏ.எஸ்.ஏ. சாமிக்கு சிபாரிசு பண்ணினவரு எம்.ஜி.ஆர். படம் வெளியாகி ‘ஹிட்’ ஆயிருச்சு.

சின்னப்பா தேவர் தான் முதல் முதல் தயாரிக்கிற சினிமாவுல எம்.ஜி.ஆர்தான் நடிக்கணும்ன்னு ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தார். 1946-ல் ஏற்பட்ட நட்பு காரணமா 1956-ல் ‘தாய்க்கு பின் தாரம்’ படம் எடுத்தார். ஹிட் ஆயிருச்சு. அந்தப் படத்தோட கிளைமாக்ஸ் சீன் அமைக்கறதில எம்.ஜி.ஆருக்கும், தேவர் அண்ணனுக்கும் சிறு மனத்தாங்கல் ஏற்பட்டிருச்சு.. ரெண்டு பேரும் பிரிஞ்சிட்டாங்க. தேவர் ‘நீலமலைத் திருடன்’, ‘செங்கோட்டை சிங்கம்’, ‘வாழவைத்த தெய்வம்’, ‘யானைப் பாகன்’னு பல படங்களை தயாரித்தார். எதிர்பார்த்தபடி வெற்றி கிடைக்கலே.

எம்.ஜி.ஆருடன் தேவர் உணவு அருந்தும் வேளை

‘திரும்பவும் ஊருக்கே போய் வேற தொழில் பார்க்கலாம்ன்னு முடிவு பண்ணிருக்கேன்’னு சொல்ல வாஹினி ஸ்டுடியோ நாகிரெட்டியார்கிட்ட போனாரு.

ஆரம்பத்தில ஒரு சின்ன தொகையை தேவர்கிட்ட அட்வான்ஸா வாங்கிட்டு -முழு படத்தையும் தன்னோட வாகினி ஸ்டுடியோவுல எடுத்து ரிலீஸ் பண்ண உதவினவர் நாகிரெட்டியார்.

‘நீ ஒண்ணும் கவலைப்படாதே. ஒரு பாட்டை ரிக்கார்ட் பண்ணு. மிச்சத்தை நான் பார்த்துக்கறேன்’ னாரு ரெட்டியார். வாஹினி ஏ- தியேட்டர்ல ரிக்கார்டிங் வேலை நடந்துகிட்டிருந்திச்சு.

இதற்கிடையில எம்.ஜி.ஆர் -சீர்காழியில தன்னோட ‘இன்பக்கனவு’ -நாடகத்தில நடிச்சிட்டிருகறப்போ -ஒரு காட்சியில குண்டுமணிய தோள்ள தூக்கி சுத்தி கீழே போடணும். பாலன்ஸ் தவறி தன் முழங்கால் மேல குண்டுமணியை போட, கிட்டத்தட்ட 150 கிலோ எடையுள்ள அவர் உடம்பு, எம்.ஜி.ஆர் எலும்பை ஒடைச்சிட்டுது. 6 மாதம் படுக்கையில் இருந்தாரு. ‘எம்.ஜி.ஆர் கதை முடிஞ்சுது’ன்னு சினிமா உலகம் பேசிகிட்டிருந்தப்போ, வேகமா குணமடைஞ்சு -அதே வாகினி ஸ்டுடியோவுல பத்திரிகையாளர், புகைப்படக்காரங்களை வரவழைச்சு -அதே குண்டுமணிய தூக்கி போட்டோவுக்கு ‘போஸ்’ குடுத்திட்டிருக்காரு.

செய்தி தேவருக்கு எட்டுச்சு. ‘ரெக்கார்டிங்’ தியேட்டர்லயிருந்தவரு அவரை பார்க்கப் போனாரு.

‘எம்.ஜி.ஆர் கதை முடிலண்ணே வந்திட்டேன்’னாரு எம்.ஜி.ஆர்.

‘‘நீங்க என்ன பண்றீங்க. நான் ஒரு song ரெக்கார்டு பண்றேன். கேக்கலாமா? வாங்க..!’’

எம்.ஜி.ஆர் போனார். பாட்டை கேட்டார்.

‘‘பாட்டு நல்லா இருக்கே. யாரு ஹீரோ?’’

‘‘எனக்கு எந்த ஹீரோ இருக்கான். யாராவது புதுமுகத்தை வச்சு எடுக்கப் போறேன்!’’ என்றார் தேவர்.

‘‘ஏண்ணே! நான் இல்லையா?’’ எம்.ஜி.ஆர் குரல் தழு, தழுக்க, ரெண்டு பேரும் கட்டிப்புடிச்சு கண்ணீர் விட்டனர்.

‘தாய்க்குப் பின் தாரம்’ 1956-ல் வந்தது. 4 ஆண்டு சோதனைக் காலம். பிறகு 1960-லருந்து 16 படங்கள் தேவர் பிலிம்ஸ்ல, ‘நல்ல நேரம்’ படம் வரைக்கும் எம்.ஜி.ஆர் நடிச்சு கொடுத்தார். ஆரம்பத்தில் கடவுள் நம்பிக்கையுள்ளவராக இருந்தவர் எம்.ஜி.ஆர். திருப்பதிக்கு போய் சாமி கும்பிட்டவர். பின்னாளில் கடவுள் மறுப்பாளர் கட்சியில் சேர்ந்து விட்டார். அப்படி நாத்திகனாக மாறிய எம்.ஜி.ஆரை தன் அன்புக்கு கட்டுப்பட வைத்து, முருகன் வேஷத்தில் நடிக்க வைத்தவர் தேவர் அண்ணன். சினிமாவுல உயர்ந்த நட்புக்கு அடையாளமா தேவர் - எம்.ஜி.ஆர் நட்பை சொல்லலாம்.

முருகன் வேடத்தில் எம்.ஜி.ஆர் தேவருடன்

அப்படிப்பட்ட தேவர் அண்ணனை அவர் ஆபீஸ்ல சந்திச்சது இன்னமும் பசுமையா நினைப்புல இருக்கு. ஆமாம் அப்போது அட்வான்ஸ் வாங்கிக்க வைப்பதில் கறராக நின்னார். நான் மறுத்தேன்.

‘‘சரி! பேருக்கு ஒரு 1000-மாவது அட்வான்ஸ் வாங்கிக்க!‘‘

‘‘உங்க மேல எனக்கு அசாத்திய நம்பிக்கை இருக்கு. தேவர் பிலிம்ஸ் பணம் பேங்க்ல இருக்கற மாதிரி.. இந்த சம்பளத்தை நீங்களே வச்சுக்குங்க. நடிகனுக்கு பொண்ணு குடுக்க நம்ம சனங்க ரொம்ப யோசிக்கிறாங்க. தப்பித்தவறி எந்த மனுஷனாவது பொண்ணு குடுத்தா - அப்பா ஸ்தானத்திலருந்து கல்யாணத்தை நீங்களே நடத்தி வையுங்க. மெட்ராஸ் திருமண வரவேற்புக்கு என் சம்பளத்தை அப்படியே பயன்படுத்திக்கலாம்!’’

‘வெள்ளிக்கிழமை விரதம்’ படப்பிடிப்பு சமயத்தில் எனக்கு பெண் நிச்சயமாகி விட்டது.

கோவை நகருக்குள் கல்யாணத்தை நடத்த மண்டபம் கிடைக்கவில்லை. கோவை முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான வேலுமணி அம்மாள் அவினாசி தாண்டி அத்துவானக்காட்டில் 5 ஆயிரம் பேர் உட்காருகிறாற் போல அவங்க செலவுல பந்தல் போட்டு குடுத்தாங்க.

சொந்த கிராமத்திலிருந்து எல்லா மக்களையும் ஒரு பிரைவேட் பஸ்ல 3 டிரிப் அடிச்சு (சுமார் 50 கிலோமீட்டர் தூரம்) கல்யாண மண்டபம் கூட்டீட்டு போனோம்.

எதிர்பார்த்ததை விட கொஞ்சம் அதிகம் செலவாகலாம். அதனால மெட்ராஸ்லருந்து வரும்போது ரூ.20 ஆயிரம் கையில கொண்டு வரவும்னு வாத்தியார் குமாரசாமி எழுதியிருந்தார்.

திருமணத்தில் ஆசீர்வாதம்

வேறு எங்கும் பணம் புரட்ட முடியாமல் தேவர் பிலிம்ஸில் ரூ.15 ஆயிரம் வாங்கிப் போனேன்.

வாக்களித்தபடி தேவர் அண்ணணும், ஏபிஎன் அவர்களும் நேரில் வந்திருந்து, தாலிகட்டும்போது அட்சதை தூவி வாழ்த்தினார்கள். சிவாஜி கொஞ்சம் தாமதமாக வந்து வாழ்த்தினார்.

கைமாத்தாக வாங்கிச் சென்ற பணம், 15 ஆயிரம் கர்ச்சீப்பில் முடிந்து வைத்தது அப்படியே இருந்தது.

அதிகாலை 3 மணிக்கு எழுந்து கடற்கரையில் நடை பயிற்சி முடிந்து 4.30க்கு குளித்து பூஜை முடித்து 5 மணிக்கு வெற்றிலை பாக்கு பெட்டியோடு வீட்டில் இருந்த தேவர் அண்ணனிடம் பணத்தை திருப்பிக் கொடுத்தேன்.

‘‘லட்ச, லட்சமா ஹீரோ, ஹீரோயினுக்கு அட்வான்ஸ் குடுத்திருக்கேன். யாருகிட்டவும் திருப்பி கேட்டதில்லை. இந்த பணத்தை குடுத்து அசிங்கப்படுத்திட்டியேப்பா!’’ன்னாரு அண்ணன்.

‘‘எங்கப்பாவுக்கு மேலா உங்களை நினைச்சதாலதான் கைமாத்து வாங்கினேன். வேற ஆளுன்னா - அந்த பணத்தை,

நடிச்சு சம்பாதிச்சிட்டு அப்புறமாத்தான் கல்யாணத் தேதியை முடிவு பண்ணியிருப்பேன்’’ னேன்.

‘ரோஷக்கார பயலா இருக்கியே’ன்னாரு.

திருமணத்தில் தேவர், மேஜர் சுந்தரராஜன்

1974 ஜூலை 6-ம் தேதி ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில நானும், துணைவியும் வந்ததும் 3 அடி உயர வெள்ளிக் குத்து விளக்கு 2 பரிசா குடுத்து வாழ்த்தினாரு. தேவர் பிலிம்ஸ் குழு வரவேற்பு ஏற்பாடுகளை கவனிச்சிட்டுது.

வெள்ளிக்குத்து விளக்கு அன்பளிப்பு

வரவேற்பு நடக்கையிலயே தேவர் அண்ணன் காணாம போயிட்டாரு. மறுநாள் அதைபத்தி நண்பர்கள்கிட்ட கேட்டேன்.

‘‘நம்ம ரிஸப்சன் அன்னிக்கு காலையில தேவர் அண்ணன் மாமியார் இறந்திட்டாங்க. நம்ம அங்கே போயிட்டா சிவா ‘பொக்கு’ன்னு போயிடுவானே!’ன்னு சாயங்காலம் வரைக்கும் இருந்து வரவேற்பை துவக்கி வச்சிட்டு ராவோட ராவா கார்ல கோயமுத்தூர் போயி காரியத்தை முடிச்சாரு!’ ன்னு அவங்க சொன்னது இப்பவும் நெஞ்சை கனமாக்குது.

எப்படிப்பட்ட மேன்மையான ஆத்மா? இந்த மாதிரி ஆத்மாக்கள் ஆசிதானே இன்னிக்கும் நம்மை வாழ வைக்குது.

சுவைப்போம்...

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

3 days ago

வலைஞர் பக்கம்

3 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்