கொங்கு தேன் 21: தண்டபாணி, பழனிசாமி நானே.. ஆவுடையம்மா, பழனியம்மா மகனும் நானே..!

By செய்திப்பிரிவு

‘‘லஞ்ச் டைம்ல வந்து ஏந்தம்பி உயிரை எடுக்கறே? நீ சொல்ற பேர்ல, அந்த வருஷத்தில, எந்தப் பையனும், உங்க ஊர்ல பொறக்கலை’’

‘‘சார், உங்க முன்னால, நான் உயிரோட நிக்கறேன். என்னை நம்புங்க...!’’

‘‘நீ நின்னு என்ன பிரயோஜனம்? நீ எழுதிக் குடுத்திருக்கிற பையன் அந்த தேதில பொறக்கலே. வேணும்னா நீயே பாரு!’’

அவர் புஸ்தகத்தை தூக்கிப் போட்டாரு. பரபரப்பா அதில என் பேரைத் தேடினேன். ‘சாமி, கால வாரி விட்டுடாதே!’ன்னு வேண்டிக்கிட்டேன். ‘இதோ எம் பேரு!’

‘‘சார்.. சார்..! இதோ இங்க இருக்கு சார். நான் பொறந்த ரெக்கார்டு!’’

‘‘படி..!’’

‘‘ராக்கியாக்கவுண்டர் ஆவுடையம்மாளுக்கு பால தண்டபாணி ஜனனம்..!’’

‘‘சரி, நீ விண்ணப்பத்தில என்ன எழுதிக் குடுத்திருக்கறே?’’

‘‘ராக்கியாக்கவுண்டர்- பழனியம்மாளுக்கு பிறந்த பழனிசாமி எழுதிக் கொடுக்கும்

விண்ணப்பம்!’’

‘‘எனக்கே நீ காது குத்தறியா?’’

‘‘சார், சார்! ஆவுடையம்மாள்ங்கறதும் எங்கம்மா பழனியம்மாதான் சார்! பாலதண்டபாணிங்கறதும் என்னோட இன்னொரு பேரு சார்’’

‘‘யோவ்!! ரெண்டு பேரு மாறுது. என்னையே ஏமாத்த பாக்கறியா? போய்யா, போ!’’

கண்ணில தண்ணி தேங்கிட்டுச்சு. மெட்ராஸ் படிப்பு ‘அம்போ’தான்னு பயம் வந்திருச்சு.

எங்கப்பா பள்ளிக்கூட வாத்தியாரா ஆரம்பத்தில இருந்தவரு. கூலி நாலி வேலைக்கு போயிட்டு ராத்திரில வர்ற பசங்களுக்கு எழுதப் படிக்க, கத்துக் குடுத்தாரு.

வாத்தியாருக்கு சம்பளம், தோட்டத்தில விளைஞ்ச அரசாணிக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், வாழைத்தார் இதைத்தான் குடுப்பாங்க. அப்புறம் மலையாள ஜோதிடர் ஒருத்தர்கிட்ட ஜாதகம் பாக்கற கலைய கத்துகிட்டாரு. வாக்கு பலிதம், நாலா பக்கமும் இருந்து ஜோசியக்கார வாத்தியார் வீடு தேடி சனங்க வர ஆரம்பிச்சாங்க.

சோதிடம் பார்த்து சொல்ல 4 அணா குடுப்பாங்க. இதுக்கு மேல ‘நிமித்தம்’ கூட பார்ப்பாராம். ‘இப்ப கோயமுத்தூர்ல வேலாயுதம் என்ன ‘அங்கராக்கு (மேல் சட்டை) போட்டிருக்காரு?’ ன்னு அப்பா கேட்பாரு. பக்கத்தில இருக்கறவர், ‘அவரு காவி சட்டை, பேண்ட் போட்டுகிட்டிருக்கறாரு’ ன்னு குத்து மதிப்பா சொல்லுவாரு.

இந்தக் காலம்னா செல்போன் வசதி இருக்கு. போன் பண்ணி, ‘வேலாயுதம் என்ன டிரஸ் போட்டிருக்கீங்க?’ன்னு கேட்டா, எங்கப்பா சொன்ன, ‘முண்டா பனியன், வேட்டிலதான் அவரு இருப்பாராம்.

ரோட்ல போற வண்டில என்ன பாரம் ஏத்திட்டு போறாங்கன்னு கேப்பாரு. 4 பர்லாங் தூரத்தில போற வண்டில, ‘வெங்காய மூட்டை போகுது!’ன்னு நாம சொன்னா, ‘சைக்கிளை எடுத்துட்டு ஓடிப் போய் பாரு, ‘ஆட்டுத்தோலு’ வண்டில போகுது’ன்னு சொல்லுவாராம்.

போயி பார்த்தா அவரு சொன்னதுதான் சரியாக இருக்குமாம்.

‘என் தோட்டத்தில பண்ணை உருளைய யாரோ திருடிட்டு போயிட்டாங்க!’ன்னு வந்து ஜோசியம் கேட்டா, ‘கிழக்க போற தார் ரோட்ல 12 மைல் போ (பல்லடம்). அப்புறம் தென்கிழக்கா போற ரோட்ல (தாராபுரம் ரோடு) 2 மைல் போ. வாகை நாராயண மரம் ஒண்ணு ரோட்டு மேல ஒரட்டாங்கை (இடதுகை) பக்கம் இருக்கும். அதுக்கு வடபுறமா இருக்கற தோட்டத்து கிணத்துக்குள்ளே உன் தோட்டத்து பண்ணை உருளை கிடக்கும் போய்ப் பாரு!’ம்பாராம். அவர் சொன்ன மாதிரியே இருக்குமாம்.

அது போக நிலத்தடி நீர்மட்டம் பார்த்துச் சொல்லுவாராம். அங்க 40 அடி தோண்டினா தண்ணி வரும்பாராம். நாரணாபுரத்தில எங்கப்பா சொல்லி தோண்டின கிணறு இப்பவும் இருக்கு. தண்ணி வத்தறதில்லை.

எங்கப்பாவோட ஒரே சிநேகிதர் 90 வயசு வரை வாழ்ந்த சின்னத்தம்பி மாமா. எங்கப்பா யாருக்கும் கடன் கொடுக்க மாட்டார். கடன் வாங்கவும் மாட்டார். ரொம்பக் கண்டிப்பானவர்.

சின்னத்தம்பி மாமா

ஒரு நாள் சின்னத்தம்பி மாமா வேற வழியே இல்லாம எங்கப்பாகிட்ட போயி, ‘இந்த ஒரு தடவை மட்டும் 50 ரூபாய் கைமாத்தல் குடுங்க. 2 நாள்ல திருப்பிக் குடுத்தடறேன்!’னு கேட்டாராம்.

எங்கப்பா எதுவும் பேசாம ஊட்டுக்குள்ளே போயி 100 ரூபாய் எடுத்திட்டு வந்து கொடுத்தாராம்.

‘இத பாருப்பா! கடன் அன்பை முறிக்கும்பாங்க. அதனால நான் யாருக்கும் எதுவும் குடுக்கறதில்லை. இந்த ஊர்ல எனக்கு இருக்கற ஒரே சிநேகிதன் நீதான். நீயும் என்ன விட்டு போயிடக்கூடாது இல்லையா? இந்த 100 ரூபாய். கடன் இல்லை. நீயே வச்சுக்க. திருப்பித்தர வேண்டாம். ஆனா இனி ஆயுசுக்கும் எங்கிட்ட வந்து நீ கை நீட்டக்கூடாது!’ ன்னு கண்டிப்பா சொல்லிட்டாராம்.

அப்பா தன்னோட 33 வயசில செத்துப் போயிட்டாரு.

‘பாலதண்டபாணி என் மகன்ங்கிறது உண்மைன்னா அந்தக் குழந்தைக்கு ஒரு வயசாகும்போது அவன் அப்பன்- அதாவது நான் உயிரோட இருக்க மாட்டேன்!’ னு, ஜாதகம் கணிச்சு, சொன்ன மாதிரியே நான் 10 மாசக் குழந்தையா இருக்கும்போதே அப்பா போய்ச் சேர்ந்துட்டாரு.

அப்பா பத்தி ஏதாவது தெரிஞ்சிக்கணும்னா நான் சின்னத்தம்பி மாமாகிட்டதான் கேட்பேன்.

‘உங்கய்யன் பெரிய முருக பக்தர், ஒவ்வொரு கிருத்திகைக்கும் பழநி மலைக்கு போயி திருப்புகழ் மொத்தப் பாட்டுகளையும் (200 பக்கம் இருக்கும்) மனப்பாடமா சொல்லி சாமி கும்பிடுவாரு!’ன்னு இந்தத் தொடர்ல 8-ம் அத்தியாயத்தில நான் சொல்லியிருக்கிற விவரமெல்லாம் சின்னத்தம்பி மாமா சொன்னதுதான்.

சின்னத்தம்பி மாமாவுடன் என் மகள் பிருந்தா-செல்வி

அதே சின்னத்தம்பி மாமாதான், ‘அன்னிக்கு பழநில திருப்புகழ் பாடி முடியும் போதே உங்கய்யனுக்கு நாவு உழுந்துருச்சு (தொண்டை கட்டி சத்தம் வரவில்லை). அப்படியே ஊருக்கு வந்தவரு, 15 நாள்ளே உலகத்தை விட்டு போயிட்டாரு!’ ன்னு அப்பா இறந்த துயரத்தையும் சொன்னாரு.

எங்கய்யன் அப்படிப் போறப்ப, 4 அணா 4 அணாவா சேர்த்து சாகறதுக்குள்ளே ஊர் ஓரமா 8 ஏக்கராவுல , ‘சுடுகாட்டுத் தோட்டத்தையும்’, ஏரோட்ரூம் காட்டுல 6 ஏக்கர் ‘மொண்டிக்காட்டையும்’ வாங்கி வச்சிருந்தாரு.

வெள்ளைக்காரன் காலத்தில 3 ஏக்கராவை ஏரோப்ளான் காட்டுக்கு எடுத்திருந்தாங்க. கவர்மெண்ட் குத்தகை. அவங்க வச்சதுதான் சட்டம். குத்தகை தொகை ரொம்ப கம்மிதான். கூட்டிக்கழிச்சுப் பார்த்தா மொத்தமாவே ரூ.3,500 வரும். குடும்பத்துல இருக்கற மைனர் (டீன் ஏஜ்) மேஜர் ஆனதா நிரூபிச்சா, கவர்மெண்ட்டு அந்தப் பணத்தை நமக்கு குடுக்கும். சப் ரிஜிஸ்தார் ஆபீஸ் போயி விண்ணப்பம் எழுதிக் குடுத்தேன்.

‘கைக்கு வந்தது வாய்க்கு எட்டலே!’ங்கற மாதிரி பேரு குழப்பத்தால அந்தப் பணம் நமக்குக் கிடைக்காது போல இருக்குன்னு நினைச்சிட்டே வெளியே வந்தேன். ஆபீஸ் வாசல்ல சின்னத்தம்பி மாமா.

‘என்ன தண்டபாணி?’ ன்னாரு.

நடந்ததைச் சொன்னேன். ‘சரி, நீ போ நான் பாத்துக்கறேன்’னாரு. கேசு, சிவில் கோர்ட்டுக்குப் போச்சு.

மாஜிஸ்ட்ரேட் விசாரிச்சு முடிச்சிட்டு, ‘சரிப்பா. நீங்க சொல்றீங்கன்னு பழனியம்மா மகன் பழனிசாமிக்கு இந்தப் பணத்தை குடுத்திட்டா, நாளைக்கு அந்த ஒரிஜினல் ஆவுடையம்மாள் மகன் பாலதண்டபாணி வந்தா என்ன பண்றது?’ ன்னு கேட்டாரு.

‘அப்படி ஒருத்தன் வந்தா -எனக்கு 10 ஏக்கரா பூமி இருக்கு. 2 ஏக்கராவை வித்து பணத்தைக் கட்டிடறேன்’ னு சொல்லி வாதாடி, மெட்ராஸ் படிப்புச் செலவுக்கு உதவ - அந்தப் பணத்தை வாங்கிக் குடுத்தவர் சின்னத்தம்பி மாமா.

அப்படிப்பட்ட புண்ணியவான் என்னைக் கடைசி வரைக்கும் ‘தண்டபாணி’ன்னுதான் கூப்பிட்டுட்டு இருந்தாரு. எங்கய்யன் வச்ச அந்த பேரைச் சொல்லி ஊர்ல உரிமையாகக் கூப்பிட்டவங்க மூணே மூணு பேருதான். அதில ஒருத்தர் சின்னத்தம்பி மாமா. அவர் 2003-ல இறந்திட்டாரு. அடுத்தது எங்க ஊர் பொங்கியண்ண கவுண்டர். அதுக்கப்புறம் குமாரசாமி வாத்தியார்.

பொங்கியண்ண கவுண்டர் எங்க ஊர் அடையாளமா இருந்த முக்கியமானவங்கள்ல ஒருத்தர். இவர் பேரை நினைச்சாலே கதிரி மில்தான் நினைப்பு வரும்.

பொங்கியண்ணன்

ஒருவனுக்கு ஒருத்தின்னு ஆதர்ச தம்பதியைச் சொல்ற மாதிரி கதிரி மில்லோட கடைசி மூச்சு வரைக்கும் தொடர்புல இருந்தவர்.

கட்டுன கோமணத்துக்கு மாத்துக் கோமணம் இல்லாம - மழை மாரி பெய்யாம -சனங்க சாகாம செத்திட்டிருந்தப்ப காமதேனு மாதிரி கொங்கு மக்களுக்குக் கை கொடுத்தது அந்தக்காலத்தில மூலைக்கு மூலை நாயக்கமாருகளோட மில்லுகதான்.

வெள்ளைக்காரன் ஆண்டுக்கிட்டிருந்த 1930-களிலேயே கிட்டத்தட்ட 50 மில்லுகளை கோயமுத்தூர் வட்டாரத்தில உருவாக்கியிருந்தவங்க கம்மாநாயுடுமாரு.

அந்தச் சூழ்நிலையில கதிரி மில் கட்ட அஸ்திவாரம் போட்டப்பவே அங்கே கூலி வேலைக்கு போய்ச் சேர்ந்தவர் பொங்கியண்ணன்.

பொங்கியண்ணன், குமாரசாமி வாத்தியாருடன்.

அந்த வேலைக்கே வலுவான சிபாரிசு இருந்தாத்தான் அந்தக் காலத்தில சேர்ப்பாங்க. ஆரம்பத்தில நடந்து போய் வேலை பார்த்தாரு. அப்புறம் பஸ்ல போனாரு. கடைசியா சைக்கிள் ஒண்ணு வாங்கி செளகரியமா அதில வேலைக்குப் போனாரு.

டெக்ஸ்டைல் மில்லுங்கிறது நூல் தயாரிக்கிற மில்.

கோவை சுத்து வட்டாரத்தில வெளையற பருத்திய வாங்கியாந்து, அதில இருக்கற இலை, தழையெல்லாம் பொறுக்கிப் எறிஞ்சிட்டு, தூசு துப்பை நீக்கி, தரம் குறைவா வெளைஞ்ச பருத்திலயும், நல்லதை மட்டும் எடுத்து பல்வேறு மிஷின்கள் வழியா சுத்தப்படுத்தின பஞ்சுல, நூல் உற்பத்தி பண்றது டெக்ஸ்டைல் மில்லுகளோட வேலை.

நூல் தடிமனுக்கேத்த மாதிரி ‘கவுண்ட்’னு பிரிச்சு சொல்லுவாங்க. பொங்கியண்ணனுக்கு புளோ-ரூம்ல பஞ்சு அள்ளிப் போடற வேலை.

அதுக்கப்புறம் ஜெர்மனியிலிருந்து புதுசா புளோ ரூம் மிஷின்கள் வந்திச்சு. அது எப்படி வேலை செய்யுதுன்னு துல்லியமா கவனிச்சாரு. பின்னால அதுல எந்த எடத்தில ரிப்பேர் ஏற்பட்டாலும் மிஷினை கழட்டி சரி பண்ற அளவுக்கு கெட்டிக்காரர் ஆயிட்டாரு.

காலேஜ்ல பி.இ., எம்.இ., படிச்சிட்டு செய்முறை அனுபவம் இல்லாம (Practical Knowledge) வர்ற பசங்களுக்கு இவருதான் அந்த மெஷினைப் பத்தி சொல்லிக் குடுப்பாரு.

அவரோட தொழில் திறமை. கடுமையான உழைப்பு மொதலாளிகளுக்கு ரொம்பவும் புடிச்சுப்போயி -காக்கி டிராயரும், சட்டையுமா வேலை பார்த்த அண்ணனை ரிடையர் ஆனதுக்கப்புறம் மில்லுக்கு வரச் சொல்லி சம்பளம் கொடுத்தாங்க.

வயசாகி முடியாதப்பவும், ‘கார் அனுப்பறோம். வாரம் 2 நாள் வந்து மிஷினை செக்கப் பண்ணிட்டு போங்க!’ ன்னு கேட்டுக்கிட்டாங்க. சுத்துவட்டாரத்தில 10-20 சின்ன மில்கள் உருவாச்சு. எல்லா மில்களுக்கும் இவர் போயி மிஷின்களை மாட்டி ஓட வச்சிட்டு வருவாரு.

மாமா மகன் தங்கமுத்து குடும்பத்தினர்.

காலை சூரிய உதயத்துக்கு முன்னாடி சைக்கிள்ல கிளம்பினாருன்னா, பொழுது உழுந்து இருட்டானதுக்கப்புறம்தான் குருவி கூடடைய வர்ற மாதிரி வந்து புழுவாட்டமா ஊட்டுக்குள்ளே போயிருவாரு.

இவரு இந்த ஊருக்குள்ளதான் குடியிருக்கறாரான்னு சந்தேகப்படற அளவுக்கு பகல்ல இவரை யாருமே பார்க்க முடியாது.

மெட்ராஸ் புறப்படறதுக்கு ஒரு வருஷம் இடைவெளி இருந்தப்ப நெருங்கிப் பழகினோம்.

பகல்வேலை முடிஞ்சு 4 மணிக்கு வந்தாருன்னா - சூலூர் சந்தைப் பேட்டை பக்கம் தாடிக்காரன் கடையில போண்டா, பஜ்ஜியெல்லாம் வாங்கிக் குடுப்பாரு. குமுதம், கல்கண்டு, தினமணி தவறாம வாங்கி படிச்சிட்டு எங்கிட்ட தருவாரு.

நெறைய சினிமாக்களுக்கு 2 பேரும் சைக்கிள்ல போய் சூலூர் தியேட்டர்ல படங்கள் பார்த்திருக்கோம். அதோட குமாரசாமி வாத்தியாரைக் கிண்டல் பண்றதுக்கு எங்க ரெண்டு பேரை விட்டா ஆளில்லை.

‘மேகாத்து வேகமா அடிச்சா, ஒல்லியான வாத்தியார் ஊர்லயிருந்து காத்தை எதிர்த்து எங்க ஊர் பள்ளிக்கூடத்துக்கு நடந்து வர முடியாது. பேப்பர் காத்தில பறக்கற மாதிரி இவரும் பறந்திருவாரு’ன்னு எங்க பேச்சு நீளும்.

60 ஆண்டுகள் தாண்டிய நட்பு. அவரு எங்க சொந்த ஊர் காசி கவுண்டன் புதூர்லயும், நான் சென்னையிலும் இருந்த போதும் தொடர்ந்து இருந்திச்சு. சென்ற ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி இவரும் விடைபெற்றுக் கொண்டார்.

ஊரில் பெரியவர்கள் ஒவ்வொருத்தரா இப்படி புறப்பட்டுப் போகும்போது நம்மை அந்த வரிசைக்கு காலம் தள்ளுவது போல சில சமயம் நடுக்கம் வரத்தான் செய்கிறது.

சுவைப்போம்...

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்