"அடுத்தவருக்கு காட்டும் பரிவு ஆண்டவனுக்கு செய்யும் உதவி" என்கிறது வேதம். பிறர் கண்ணீரை தொட்டுத் துடைக்கிற விரல், ஆறுதல் தருகிற அன்பு, அரவணைக்கும் நேசம் இவையெல்லாம் உலகின் உன்னதங்கள். இந்த உன்னதங்கள் ஏழை-எளிய ஒடுக்கப்பட்ட, உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களுக்காக நீளும்போது, வாழ்க்கை அர்த்தப்படுகிறது. இப்படிப்பட்ட அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்நாள் முழுவதும் வாழ்ந்துகாட்டியவர்கள் அற்புத மனிதர்களாக அறியப்படுகிறார்கள். அப்படி அன்பால் மனிதர்களை வசீகரித்து, இறந்தும் இறவாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் புனிதர் அன்னை தெரசாவுக்கு இன்று பிறந்த நாள். இந்த பூமியையும் தன் அன்பால் வசப்படுத்திக்கொண்டது வாஞ்சை மிகுந்த அந்தத் தொண்டு தேவதை.
அன்பு, காதல், வீரம், கோபம் உள்ளிட்ட உணர்வுகளில் எந்த உணர்வு அதிகமாக ஆக்கிரமிக்கிறதோ, அது மனிதனின் இயல்பான குணமாகிவிடுகிறது. அன்பு குடிகொள்கிற இடத்தில் சொல்லிக்கொள்ளாமல் சுயநலம் வெளியேறிவிடுகிறது. வணிகம் சார்ந்த இவ்வுலகில், மனிதம் போற்றும் மகத்தான பிறப்பாக உருவெடுத்தார் அன்னை தெரசா என்கிற ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ. அல்பேனியாவில் 1910-ம் ஆண்டு துளிர்த்த இந்த அரும்புதான், அன்பின் உருவமாக, அன்னை தெரசாவாக, மாதரசியாக பாசப் பரிணாமம் பெற்றது. தனது 18-வது வயதில் Sisters of Loreto சபையில் அவரை மறைப் பணியாளராகச் சேர்த்தது.
1929-ம் ஆண்டு இந்தியா வந்த அன்னை தெரசா, டார்ஜிலிங்கில் தனது துறவறப் பயிற்சியினை ஆரம்பித்தார். கொல்கத்தாவை சுற்றி வறுமையை வாழ்க்கை முறையாக ஏற்றுக்கொண்ட எளிய மனிதர்கள்பால் தன் பார்வையை திருப்பினார். ஏழைகளோடு ஏழையாக வாழ்ந்து அவர்களின் துயர் களைந்து, கண்ணீர் துடைத்து, காயத்திற்கு மருந்திட்டு வாழும் தொண்டு வாழ்க்கை தொடர வேண்டும் என விரும்பினார்.
ஒடுக்கப்பட்ட மக்களின் வலிமிகுந்த வாழ்க்கையில் நம்பிக்கை ஒளி ஏற்றும் வழியை அமைப்பதற்கான பாதையாக தன்னை மாற்றிக் கொண்ட அன்னை, 1950-ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 7-ம் நாள் Missionaries of Charity என்ற தொண்டு அமைப்பைத் தொடங்கினார். உணவே கனவாகிப் போனவர்கள், மானம் மறைக்கக்கூட மாற்றுடை இல்லாதவர்கள், தெருவோரங்களே வீடாகிப் போனவர்கள் ஆகியோரை அரவணைக்கும் ஆல விருட்சமாய் அன்னை தெரசா தன்னை மாற்றிக்கொண்டார்.
பெரும்பாலான "ஆரம்பங்கள்" அவமானங்களில் இருந்து தொடங்குவதைப் போல அன்னையின் தொண்டின் தொடக்கமும், அவமானத்தையே அவருக்கு அறிமுகம் செய்து வைத்தது. பரிகாசங்களே பரிசுகளாக கிடைத்தன. ஒரு செல்வந்தரிடம் ஆதரவற்ற பிள்ளைகளுக்காக யாசகம் கேட்க, அந்த செல்வந்தரோ, அன்னையின் மீது காரி உமிழ்ந்தார். அதைத் துடைத்துக் கொண்ட அன்னை, 'இதை நான் வைத்துக் கொள்கிறேன், என் குழந்தைகளுக்கு ஏதாவது கொடுங்கள்' என மன்றாடுகிறார். அடுத்தவரின் வலியை தன் வலியாய் உணர்பவர்கள் மட்டுமே இப்படி நடந்து கொள்ள முடியும். தனக்கான வாழ்க்கையே பிறருக்கான சேவை என்ற அன்னையின் கொள்கை, ஆயிரம் அவமானங்களைத் தாங்கவல்லது. ஆயினும் பாலையில் விழும் மழைத்துளிபோல, பரந்த மனம் கொண்ட ஒருசிலர் அன்னையின் அன்பு உள்ளத்திற்கு அடிபணிந்தனர். Missionaries of Charity-யின் புனித பணி நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது.
"தீண்டாமை" என்கிற சமூக வியாதி தொழுநோயாளிகளின் வாழ்விலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால், தொழு நோயாளிகளைத் தொட்டுத் தூக்கி, வாழ்வு மறுக்கப்பட்டவர்களை வாஞ்சையோடு அரவணைத்து, அன்னையின் Missionaries of Charity அமைப்பு மறுவாழ்வு தந்தது. கொல்கத்தாவில் வெறும் 13 உறுப்பினர்களைக் கொண்டு சிறியதொரு அமைப்பாக விதைக்கப்பட்ட Missionaries of Charity, இன்று ஆதரவற்றவர்களுக்கு நிழல் தரும் ஆலமரமாய் விரிந்து, பரந்து காணப்படுகிறது. அன்னையின் அன்பை மூலதனமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட Missionaries of Charity, விலங்குகளாய் வீதியில் வீசியெறியப்பட்டவர்களுக்கு மனிதத்தின் விலாசத்தை ஏற்படுத்தித் தந்தது. தற்போது 120க்கும் மேற்பட்ட நாடுகளில் 60 ஆயிரம் சேவை மையங்களோடு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அருட்சகோதரிகளைக் கொண்டு Missionaries of Charity தன் அன்புக் கரங்களை அகலமாக விரித்து வைத்திருக்கிறது.
மனிதம் போற்றும் அன்னைத் தெரசாவுக்கு மரியாதை அளிக்கும்விதமாக கொடைக்கானலில் உள்ள பெண்கள் பல்கலைக்கழகத்திற்கு அவர் பெயரைச் சூட்டினார், அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர்.
அல்பேனியாவில் பிறந்து, ஆதரவற்றவர்களுக்காக இந்தியாவில் தொண்டாற்றிய அன்னை தெரசாவின் Missionaries of Charity இயக்கம், எத்தியோப்பியாவின் வறுமையையும், செர்னோபிலின் அணுக்கதிர் ஆழிவினால் ஏற்பட்ட பாதிப்புகளையும், ஆர்மீனியாவின் பூகம்ப தாக்கத்தையும் அகற்ற பேருதவி செய்தது. உலகம் முழுவதும் உள்ள ஆதரவற்றவர்களின் கண்ணீரைத் துடைக்கிற சுட்டுவிரலாக மாறியுள்ளது, Missionaries of Charity அமைப்பு.
மனிதம் போற்றும் சேவை ஒன்றையே சிந்தித்துக் கொண்டிருந்த தனது இதயத்துடிப்பை 1997 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 5-ம் தேதி, தனது 87-வது வயதில் அன்னை நிறுத்திக்கொண்டார். அகிலமே அழுதது... அன்னையின் மறைவுச் செய்தி கேட்டு... அப்படிப்பட்ட அன்னைக்குதான், மறைந்தபின் அவர் செய்த புதுமைகளுக்காக புனிதர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
ஏழை மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள், புறக்கணிக்கப்பட்டவர்களின் தொண்டுக்காகப் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, மறைந்து இன்னும் மறையாமல் இருக்கும் அன்னை தெரசா எழிலரசியாகத் திகழ்கிறார்.
உலகம் கரோனாவால் உருளப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், அன்னையின் அரவணைப்பும், ஆதரவும் முக்கியத்துவம் மிகுந்ததாக உணரப்படுகிறது. அன்பு என்ற ஆயுதம்தான் யாரையும் தாக்குதலுக்கு உள்ளாக்காத ஆயுதம் என்பதை உலகுக்கு உணர்த்தினார் அன்னை தெரசா. உலகத்தின் பலகோடி மக்கள் அன்புக்காக ஏங்கியும், தங்களுக்குள் அழுத்தும் நோய்களுக்காக வலி நிவாரணிகளையும் தேடி அலைகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், அன்னையின் அரவணைப்பும், அன்பும் அவசியமானதாகக் கருதப்படுகிறது. அன்னை, ஆதரவற்றவர்களுக்கு அடைக்கலம் தரும் திண்ணை.
வயோதிகத்தால், அன்னையின் முகத்தில் குடிகொண்ட முக வரிகள், ஆதரவற்றவர்களின் முகவரிகளாக உள்ளன. ஏதோ ஒரு நோக்கத்திற்காக பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து முடிந்துவிடுகிற மனித வாழ்க்கையில், தொடக்கம் முதலே தொண்டுள்ளத்தையே நோக்கமாகக் கொண்டு வாழ்ந்து, மறைந்து, இன்று புனிதர் பட்டம் பெற்றாலும், பிறந்த நாள் முதலாய் இப்பூவுலகில் புனிதையாகவே வாழ்ந்துவந்த அன்னையின் ஆன்மா Missionaries of Charity-யில் தொடர்ந்து உலா வந்து கொண்டிருக்கிறது, உலகம் முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்கும் தேவதையாக....
லாரன்ஸ் விஜயன்,
மூத்த பத்திரிகையாளர்,
தொடர்புக்கு:vijayanlawrence64@gmail.com
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
1 day ago
வலைஞர் பக்கம்
1 day ago
வலைஞர் பக்கம்
3 days ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
18 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
29 days ago