திருவிக பிறந்த நாள்: சீர்திருத்தங்களின் தாய்!

By செய்திப்பிரிவு

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தமிழ் அறிஞர்கள், தமிழ்ப் புலவர்கள், இதழாளர்கள் வரிசையில் குறிக்கத்தக்கவர்கள் மறைமலை அடிகள், திருவிக, பாரதியார், பாரதிதாசன் முதலியோர் ஆவர். சங்கத் தமிழ் நடையை எளிய தமிழாக்கி பேச்சிலும் எழுத்திலும் கவிதையிலும் உரைநடையிலும் மேடைப் பேச்சிலும் அரசியலிலும் சமயத்துறையிலும் இதழியல் துறையிலும் உருவாக்கிப் புதுமை தந்தவர் மறைமலை அடிகளாரின் மாணவர் என்று கூறத்தக்க திருவிக ஆவார்.

நல்ல தமிழையும் சங்கத் தமிழையும் சமயப் பொதுமையையும் பின்பற்றிய அடிகளார் அரசியலுக்கு வரவில்லை; ஆனால், திருவிக இந்திய விடுதலைப் போராட்ட அரசியலில் காந்திய நெறியில் நின்றவர்; கதர் ஆடையையும் காங்கிரஸ் கட்சியையும் ஆதரித்தவர். ஆனாலும் புரட்சி மிகுந்த சீர்திருத்தக் கருத்துகளை எழுத்திலும் பேச்சிலும் தென்றல் என இனிமையாகப் பரப்பியவர். அன்பான இனிமையான மெல்லிய பெண்மை சார்ந்த குரல், தூய வெண்ணிறக் கதர் ஆடை, சான்றாண்மை மிக்க துணிவும் உறுதியும் கொண்ட அமைதியான தோற்றம். ஆனால் அழுத்தமான மிகக் கடுமையான கொள்கைப் பிடிப்புள்ள சரியான கருத்துகளை வரையறையோடு வற்புறுத்தி கூறக்கூடியவர்; தம்முடைய கருத்துகளைச் சிறிதும் விட்டுக் கொடுக்காதவர்; மாற்றார் உடைய கருத்துகளை மாற்றிவிடக்கூடிய புரட்சித்தன்மை வாய்ந்தவர்: பழமைவாத மூடப் பழக்கவழக்கங்களைச் சார்ந்த தவறுகளை நீக்கி, உயர்ந்த பண்புகள் கொள்கைகள் உடையவர்களாக மாற்றக்கூடிய புரட்சியாளர் திருவிக ஆவார்

பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம், தொழிலாளர் நலம், உழைப்பாளர் ஊதியம் தமிழ் மொழி மேன்மை தமிழ் மொழி வளர்ச்சி, தமிழ்நாட்டின் தமிழர்களின் வாழ்வியல் முன்னேற்றம், தமிழ்க் கலைகள் பாதுகாப்பு முதலிய பல துறைகளில் பல முனைகளில் பங்காற்றியவர் திருவிக ஆவார். தமிழ்த் தென்றல், இராயப் பேட்டை முனிவர், சாது என்ற பட்டங்களால் பாராட்டப் பெற்றவர்; என்றாலும் புரட்சித் தென்றலாகத் தமிழ் நிலத்தில் உலவியவர்.

ஆசியாவிலேயே முதன் முதல் தொழிற்சங்கம் ஏற்படுத்தியவர் திருவிக ஆவார். முதன்முதலாகத் தொழிலாளர்களுக்காக அவர்கள் தந்த பங்குத்தொகை நிதியிலே “நவ சக்தி” என இதழ் தொடங்கியவர். தென்றலென ஆன்மிகத்தில் இருந்தாலும் தொழிலாளர் நலனுக்கக்காகவும் இந்திய விடுதலைக்காகவும் மென்மையான அதே நேரத்தில் சீறிப் பாயும் இதழியல் நடையைப் புரட்சிப் புயலாக வீசியவர் திருவிக. காந்தியடிகள், மார்க்ஸ் ஆகிய இருவர் கருத்துகளிலும் பொதுமை கண்ட புரட்சித் தென்றல் திருவிக!

ஆத்திகராகிய மறைமலை அடிகளாருடனும் நாத்திகராகிய பெரியாருடனும் நட்பு பாராடியதுடன், நாத்திகம் என்பது தூய்மையான அன்பு என்று புரட்சி முழக்கம் செய்து பொதுமையாகிய சித்தர் வழியைப் பரப்பினார். இந்திய தேசியம் பேசினாலும் வடவரின் ஏமாற்று வித்தைகளை எதிர்த்தார்; திராவிட நாடு திராவிடருக்கே என்றும் தமிழ்நாடு தமிழருக்கே என்றும் புரட்சி முழக்கம் எழுப்பியவர்தான் தமிழ்த் தென்றல்!

கடவுளின் பெயரால் சண்டை சச்சரவுகள் ஏற்பட்ட காலத்தில் வள்ளலாரும் வேதநாயகரும் மறைமலை அடிகளும் காட்டிய சமயப் பொதுமை (சமரச சன்மார்க்கம்) என்ற வழியில் பொதுமை அருள்வேட்டல் பாடியவர் திருவிக. கொடுக்கும் காசுக்கு ஏற்ப கடவுளுக்கு அர்ச்சனை, வரும் பக்தர்களுக்கு மரியாதை என்பவற்றை எதிர்க்கிறார்; உடல் வலிமை மிக்க சாமியார்களுக்குப் பிச்சை போடுவது தவறு என்றும் புரட்சிக் குரல் எழுப்புகிறார் தமிழ்த் தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனார். கோயில் என்பது சுரண்டுவோரின் ஏமாற்றுவோரின் கூடாரமாக இருக்கக் கூடாது என்று புரட்சி பேசியவர்தான் திருவிக.

இவ்வுலகம் பெண் ஆண் வடிவாய் இலங்குகிறது; இயற்கைப் பொருள்களும் பறவை விலங்குகளும் மனிதர்களும் மட்டுமல்லாமல் கடவுளும் கூட பெண் ஆண் வடிவாய் பொலிகின்றனர்; எனவே, பெண்ணும் ஆணும் கூடி வாழும் வாழ்வே வாழ்வு என்று அடிப்படையான ஒரு கருத்தை அழுத்தமாக மனத்தில் பதிய வைக்கிறார் திருவிக. அதற்கு மேல்தான் தென்றலாய் நுழைந்து புயலாக ஓர் கருத்தைச் சிந்திக்க வைக்கிறார். பெண்ம் ஆண் இரண்டனுள் உயர்வு தாழ்வு இல்லை என்றாலும் பெண்ணிற்கு முதன்மை வழங்கவேண்டும் என்பது அறிவும் அன்பும் வாய்ந்தோர் கருத்து என்று முதன்மை தருகிறார். பெண்மை என்பது அடக்கம், பொறுமை, தியாகம், இரக்கம், அழகு, தொண்டு முதலியன அமைந்த ஒன்று. அடக்கம், பொறுமை, தியாகம், இரக்கம் முதலியவற்றால் இன்பம் விளையும். அடங்காமை, பொறாமை, தன்னலம், வன்முறை ஆகியவற்றால் துன்பம் ஏற்படும். ஆகவே பெண்மை என்பது இன்ப நிலை! இன்பமும் மகிழ்ச்சியும் உலகில் ஏற்படுத்தவல்ல அழகும் ஆற்றலும் பெண்களின் பண்பு; எனவே பெண்கள் தெய்வம் என்று போற்றப்படுகிறார்கள். ஆண்களின் குணம் வீரம், சினம், சீற்றம், முரட்டுத்தன்மை அவா முதலியன. எனவே ஆண்கள், பெண்களின் நல்ல குணங்களைப் பெற்று வாழ வேண்டும் என்பது திருவிக கூறும் புதுமையும் புரட்சியும் வாய்ந்த கருத்தாகும்.

பெண்களுக்குக் கல்வியோ வீரமோ தேவையில்லை என்று அடிமையாக்கி வைத்திருப்பது மனித இனத்தில்தான் உள்ளது; விலங்குகளோ பறவைகளோ பெண்ணினத்தைத் தாழ்வாகக் கருதவில்லை. நம் மக்களும் வேத காலத்திலும் சங்க காலத்திலும் ஆழ்வார் நாயன்மார்களின் காலத்திலும் பெண்களுக்கு மதிப்பு அளித்தார்கள். பெண்களை மதிப்புடன் நடத்தி அவர்கள் கல்வி பெறவும் அறிவாற்றல் பெறவும் வழிவகை செய்ய வேண்டும். பெண் கல்வி மறுக்கப்பட்டுப் பெண்களுக்குச் சம உரிமை இல்லை என்று இருந்த காலத்தில் காந்தியடிகளும் பாரதியாரும் வற்புறுத்திய பெண் கல்வியை திருவிகவும் வற்புறுத்திப் பேசியதுடன் பரப்பியும் வந்தார்.

ஆண், பெண் சம உரிமை என்பதை வற்புறுத்திப் பேசியவர் திருவிக ஆவார். மேலும் பெண்களுக்கு இழைக்கப்படும் தீமைகளை எதிர்த்துக் குரல் கொடுத்தவர் தென்றலாக விளங்கிய திருவிக ஆவார். இளமை மணம், விதவை என்று அடிமைப்படுத்தி வைத்தல், பல பெண்களை ஒருவன் மணத்தல், மறு திருமணம் செய்து கொள்ளப் பெண்ணுக்கு மட்டும் உரிமை இல்லை; தவறான நடத்தைக்குப் பெண்ணுக்கு மட்டும் தண்டனை, ஆனால் ஆணுக்குத் தண்டனை இல்லை; ஆடவன் எச்சிலையில் உண்ணுமாறு பெண்களை வற்புறுத்தல் என்று சொல்லக்கூடியவற்றை எதிர்த்துப் புரட்சி குரல் எழுப்பினார். பெண்களின் கூடாஒழுக்கம் தவறுதான்; ஆனால் ஏன் ஆண்களின் தவறுக்கு தண்டனை இல்லை? அதனால்தானே ஒரு பாதியாய் உள்ள பெண்களுக்கும் சிறுமை ஏற்படுகிறது என்று தட்டிக் கேட்டார். ஆண்கள் ஒழுக்கத்தோடுஇருந்தால் வரைவின்மகளிர் விலைமகளிர் என்ற தோற்றத்திற்கு இடம் ஏது என்று வினா தொடுக்கிறார். ''மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்'' என்று பாரதியாரின் புரட்சி முழக்கத்தை முழங்குகிறார் திருவிக.

பெண் குழந்தைகளை வளர்ப்பது பற்றியும் திருவிக எழுதியுள்ளார். இளமையிலேயே கல்வி நல்க வேண்டும்; இளம் பெண்கள் தீய எண்ணங்களை ஊட்டக் கூடிய களி கதைகளை போலிப் புதினங்களைநாடகங்களைப் படிக்கப் பார்க்கக் கூடாது; பெண் குழந்தைகளுக்கு உடற் கூற்று நூல்கள் முறையாகப் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்பதும் அவரது புரட்சியான கருத்தாகும். கடவுள் சமயம் ஆகியன பற்றியும் பெண்கள் அறிய வேண்டும் தம் உடல் நலனைப் பாதுகாத்துக் கொள்ளவும் உடற்பயிற்சி செய்யவும் நல் உணவு சாப்பிடவும் கற்றுத்தர வேண்டும். தூய நல்ல அழகான உடைகளை அணிய வேண்டுமே தவிர, நல்ல ஆண்கள் மனத்தையும் கெடுக்கக்கூடிய கவர்ச்சியான உடலை இறுக்கிப் பிடிக்கும் உடைகளை அணியக்கூடாது; தலைமுடியை அலங்கோலமாகக் குறைத்துக்கொள்வது சில பெண்கள் செய்கிற தவறு ஆகும். இயற்கையாக இருப்பதே அழகு. இயற்கை அழகுதான் ஆண்டவனின் அருள் ஒளி போன்றது என்பன திருவிகவின் கருத்துகள்.

பெண்ணும் ஆணும் கூடி வாழும் திருமண வாழ்க்கையை சம்சாரசாகரம் - குடும்ப இருட்டு என்றும், பெண்களை மாயப் பிசாசு என்றெல்லாம் இழிவுபடுத்தி பெண்களை ஒதுக்கிவிட்டு இறைவனைப் பற்றி எப்போதும் எண்ணுகிற துறவுதான் உயர்ந்தது; அதுவே வீடு மோட்சம் தரும் என்றும் சொல்லப்பட்ட மதக் கருத்துகளை மூட நம்பிக்கைகளை உடைத்தெறிந்தவர் திருவிக. இயற்கை அறம் என்பதே ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது; இதனைத்தான் நம்முடைய ஆழ்வார்களும் நாயன்மார்களும் திருமூலர் முதலிய சித்தர்களும் திருவள்ளுவரும் கூறியுள்ளனர்.

இல்லற வாழ்க்கை என்பது வள்ளுவர்காட்டிய வழி. நீத்தார் பெருமை, துறவு என்ற அதிகாரங்களில் பெண்ணை துறக்குமாறு திருவள்ளுவரோ மற்ற பெரியோர்களோ கூறவில்லை. ‘‘இல்லறமல்லது நல்லறம் அன்று” என்றார் அவ்வையார்; “அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை” என்றார் திருவள்ளுவர். பெண்ணை வெறுப்பது துறவு இல்லை; தீமை, பொறாமை, அழுக்காறு, சினம், பண வெறி பதவி வெறி, இனி காமம் முதலிய தீமைகளை வெறுத்து ஒதுக்கி நீக்கிவிடுவதுதான் துறவு ஆகும் என்பது திருவிக காட்டும் புதுமை நெறி ஆகும்.

இளமை மணமும் பொருந்தா மணமும் இறுதியாக மிக மிகுதியாக பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் நடைபெற்றன. அவற்றை எதிர்த்துப் பொருந்திய வயதில் ஒத்த குண நலன் உடைய ஆண் பெண்ணை திருமணம் செய்து வைத்தால்தான் நல்லது குழந்தைப் பருவத்தில் திருமணம் செய்து வைப்பதால்தான் கைம்பெண்கள் (விதவைகள்) அதிகமாகிறார்கள். பதியிலார், தேவரடியார் என்று விலைமகளிர் தோன்றவும், ஓர் ஆண்மகன் பலரை மணக்கவும், தவறான நடத்தை மிகவும் இதுவே காரணமாகிறது. கைம்மை என்பது ஆணுக்கும் பொதுவானது. ஆனால் சிறு குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைத்து, குழந்தை மணத்தால் கணவனை இழந்த கைம்பெண்களை மொட்டை அடித்து மூலையில் உட்கார வைப்பது தவறு; என்ற புரட்சிக் குரல் எழுப்பியவர் திருவிக.

பெண்மை என்பது தாய்மையும் தூய்மையும் கொண்ட இறைமை ஆகும், பெண்களைக் கட்டுப்படுத்துதல் அடிமைப்படுத்துதல் கொடுமையாக நடத்துதல் அநாகரிகம். பெண்மையைப் போற்றுவதே நாகரிகம்; தெய்வம் எங்கே என்றுதேடி ஓடுகிறார்கள். பெண்மை என்பதே தெய்வம் என்று புரட்சிக் குரல் எழுப்புகிறார் புரட்சித் தென்றல் திருவிக. அவர் வழியைப் பின்பற்றிப் பெண்மையைப் போற்றுவோம். தாய் நாட்டையும் தாய் மொழியையும் போற்றுகிற பண்புடைய நாம் பெண்மையை, தாய்மையைப் போற்றுவோம்! பெண்கல்வி, கலப்பு மணம், கைம்பெண் மணம் முதலியவற்றைப் பேசியதுடன், “தமிழ் நாடு தமிழருக்கே!” என்று முழங்கி, தமிழருக்கு என்பது தமிழ்க் கலைகளுக்கு என்று கூறியதுடன், சீர்திருத்தத்தின் தாய் நான் என்ற திருவிக., புரட்சித்தென்றல் ஆவார்.

முனைவர் பா.இறையரசன்,

தொடர்புக்கு: iraiarasan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

1 day ago

வலைஞர் பக்கம்

1 day ago

வலைஞர் பக்கம்

3 days ago

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

18 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

21 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

28 days ago

மேலும்