எங்கம்மாவுக்கு அடுத்த தங்கச்சி ராமாத்தான்னு பேரு. நாங்க சின்னம்மான்னு கூப்பிடற பழக்கமில்லே. அக்கான்னுதான் கூப்பிடுவோம்; சொந்த அக்காவை நான், ‘பாப்பா’ன்னுதான் கூப்பிடுவேன்.
அதைவிட இன்னொரு வேடிக்கை தகப்பனாரை அண்ணன்னு கூப்பிடற வழக்கம் 70 வருஷத்துக்கு முன்னாடியே எங்க ஊர்ப்பக்கம் இருந்தது.
ஆனா, பெரியப்பன், சித்தப்பனை அப்படியேதான் கூப்பிடுவாங்க. அண்ணன் சம்சாரத்தை 10 வயசு வரைக்கும் நானே ‘நங்கையா’ன்னுதான் கூப்பிட்டேன். 2 அண்ணன் சம்சாரங்கள்னா, ‘பெரிய நங்கையா’, ‘சின்ன நங்கையா’ன்னு கூப்பிடுவோம். தம்பி பொண்டாட்டியை ‘கொளுந்தியா’ன்னு கூப்பிடுவோம்.
‘அண்ணி’ன்னு கூப்பிடற கலாச்சாரத்தைக் கொண்டுட்டு வந்தது சத்தியமா சினிமாதான்.
ஆக, சின்னம்மா ராமாத்தாளை -‘அக்கா’ன்னுதான் அவங்களோட 100 வயசு வரைக்கும் கூப்பிட்டேன்.
நாரணாபுரம், பல்லடத்திலிருந்து 2 மைல் வடக்கால, மங்கலம் ரோட்ல கொஞ்சம் கிழபுறமா இருக்கிற சின்ன ஊரு.
அந்த ஊருக்கு ஒரு மணியக்காரர் இருந்தாரு. அவரு தோட்டத்தை -அநேகமா அது ஒரு 10 ஏக்கரா இருக்கும், ‘மணியக்காரரு தோட்டம்’னு சொல்லுவாங்க. ஊருக்கு தென்புறத் தோட்டம்.
எங்க சித்தப்பனுக்கு நில புலன் கிடையாது. அதனால மணியக்காரர் தோட்டத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் பண்ணினாரு.
‘குத்தகை’ன்னா, வருஷத்துக்கு ஒரு தடவை 10 மூட்டையோ, 15 மூட்டையோ, அதில விளைஞ்ச ராகி, சோளத்தை மணியக்காரருக்கு கட்டாயம் குடுத்திரணும். அதுக்கு மேல வர்றது இவங்க குடும்பச் செலவுக்கு. குத்தகைங்கறது ஒரு முறை (System). ‘வாரத்துக்கு பாக்கறது’ங்கறது இன்னொரு முறை. அது எப்படீன்னா விளைஞ்சதை ஆளுக்கு பாதி நிலத்துக்காரரும், சித்தப்பனும் பிரிச்சு எடுத்துக்கறது.
‘கரண்ட்’ன்னா என்னன்னு தெரியாத காலம். 70 வருஷம் முன்னாடி, முதுகெலும்பு ஒடைய மூட்டை தூக்கோணும். கால் தேயற அளவுக்கு ‘கவலை’ ஓட்டோணும்.. பொழுது கிளம்பி, பொழுது உழுகற வரைக்கும் மண்ணைப் பாத்தே வாழ்ந்த பரிதாபத்திற்குரியவர்கள் எங்க சின்னம்மா குடும்பம். அம்மா கூட பொறந்தவங்கள்ளே அதிகமா புள்ளைக இருக்கறது சின்னம்மா வூட்லதான்.
ஒரு நாள், ‘ஏங்க்கா (சின்னம்மா) எத்தனை கொழந்தை நீ பெத்தே?’ன்னு கேட்டேன்.
‘‘அதையெல்லாம் ஏஞ்சாமி இப்ப கேக்கறே? ம்.. 10 உருப்படி பெத்தேன்’’
‘‘எல்லா இருக்குதா?’’
‘‘பஞ்சத்தில, கஞ்சி ஊத்த முடியாம சிறுசுக மூணு செத்துப் போச்சு. மிச்சம் 7தான் இப்ப உசிற கையில புடிச்சிட்டிருக்குதுக!’’
‘‘கஞ்சி ஊத்த வழியில்லேங்கற. ஆனா, இஷ்டத்துக்கு பெத்துப் போட்டிருக்கறயே எப்படி? புள்ளை பெக்கறது அவ்வளவு சுலபமா?’’
‘‘அந்தக் ‘கோராமை’யெல்லாம் ஏஞ்சாமி கேக்கறே?’’ன்னு கதைய ஆரம்பிச்சாங்க.
மாசி, பங்குனி மாசங்கள்ளே (பிப்ரவரி- மார்ச்) வெயில் சாகடிக்கும். பல்லடம் சந்தைக்கு போயிட்டு 4 மணிக்கு ஊட்டுக்கு வந்தா ‘செகை’ (உஷ்ணம்- சிறுநீர் கழிக்கும்போது சூடு, எரிச்சல் தெரியும் -சில ஊர்களில் நீர்க்கடுப்புன்னு சொல்வார்கள்) புடிச்சுக்கும்...
ஒண்ணுக்குப் போனா ‘சுரீரு‘ன்னு எரிச்சலா இருக்கும். உடனே பழைய சோத்துத் தண்ணி 2 கிளாசு லேசா உப்பு போட்டு கலக்கி வச்சிட்டு - சின்ன வெங்காயம் 4 உரிச்சு - அந்த வெங்காயத்தை வாயில போட்டு மென்னுட்டு - கலக்கி வச்ச அந்த 2 டம்ளர் நீராகாரத்தை குடிச்சோம்னா அடுத்த அரை மணிநேரத்தில பன்னீராட்டமா ஒண்ணுக்குப் போகும்!
நம்ம போறாத நேரம். அந்த ‘வேசகை’ காலத்திலதான் (வெயில் காலம்) பேறு காலம் வந்து தொலைக்கும்.
சீமை ஓடு வெய்ய நேரத்தில உஷ்ணத்தை ஊட்டுக்குள்ள கக்கும். சீக்கிரம் புள்ளையப் பெத்துக்கலாம்னு - ஊட்டுக்குள்ள ‘மொகுட்டு’லருந்து (விட்டம்) 2 கவுறை தொங்க உடுவாங்க. ஒரு கவுறு சோத்தாங்கை (வலது) பக்கம்; இன்னொரு கவுறு ஒரட்டாங்கை (இடது) பக்கம். கீழே பாய் போட்டு, அதில மண்டி போடச்சொல்லி, மேலே ரெண்டு பக்கமும் தொங்கிட்டிருக்கிற கவுத்து முடிச்சை புடிச்சு, இழுத்தாப்பல முக்கோணும்...
7 மணிக்கு ஆரம்பிச்சா, 9 மணிக்கு முக்கி முக்கி ஒடம்பு சோர்ந்து போகும். நாக்கும் வறண்டு போகும். அப்பறமா கொத்து மல்லி காப்பித் தண்ணி ரெண்டு ‘மொடக்கு’ ( 2 மிடறு -இரண்டு வாய் அளவு) குடுப்பாங்க.
அதை முழுங்கீட்டு பழையபடி கவுத்தை புடிச்சு தொங்கீட்டே முக்கோணும். ஆச்சு 11 மணி, 12 மணி. ஒண்ணும் முடியாது. நம்ம வேதனைய யாரு பங்கு போட்டுக்குவா?
முத்து முத்தா நெத்தில வேர்த்து கன்னத்தில ஒழுகும் -கழுத்து, தோள்ல வேர்த்தது, அப்படியே கீழே எறங்கும்.
புது மண்பானைல தண்ணி ஊத்தி வச்சிருப்பாங்க. ஒரு சின்ன ‘டவலை’ அதில நனைச்சு, கொண்டாந்து, மூஞ்சி மேல புழிஞ்சு உடுவாங்க. உடம்பு பூரா ஈரத்துணில தொடச்சு உட்டுட்டு அரை கிளாஸ் அதே தண்ணிய குடுப்பாங்க. பனிக்கட்டி கணக்கா தண்ணி ஜில்லுன்னு தொண்டைக்குள்ளே எறங்கும்.
சித்த நேரம் எளப்பாறிட்டு பழையபடி தொங்கி, முக்கோணும். வெய்யத்தாள 3 மணி, 4 மணி ஆயிரும். சுக்கு காப்பி கொஞ்சம் கண்ணுல காட்டுவாங்க. ஒரு 6 மணிவாக்குல, ‘அய்யோ! ஆத்தா! உசிறு போகுதே!’ன்னு கத்தினா புள்ளை பொறந்திரும்.
‘குடிமகன்’ங்கற நாவிதன் சம்சாரம்தான் கிராமங்கள்ல மருத்துவச்சி. சோளக்கதிரு, ராகிக்கதிரு அறுக்கற ‘கம்பரக்கத்தி’யை (அரிவாளுடைய சின்ன வடிவம்) அடுப்பு நெருப்புல சித்தநேரம் போட்டு, அது சூடானதுக்கப்பறம் -வெளியில எடுத்து ஆற வச்சிருவாங்க (ஸ்டெர்லைஸ் பண்ணியாச்சு).
இப்ப அந்த ‘கம்பரக்கத்தி’யை கொண்டாந்து, தொப்புள் கொடியை அறுத்து குழந்தையை எடுப்பாங்க.
ஊருக்குள்ள, நல்ல தண்ணிப் பஞ்சம் எப்பவுமே இருக்கும். உப்புத்தண்ணில குழந்தையக் குளிப்பாட்ட முடியாது. அதனால பழையபடி நல்ல தண்ணி பானைக்குள்ளே துண்டைப் போட்டு, நனைச்செடுத்து, புழிஞ்சு, அந்த துணியக் கொண்டாந்து, குழந்தை உடம்பு, கை-காலு, மூஞ்சியெல்லாம் தொடைச்சு உடுவாங்க.
என்ன இருந்தாலும் சோப்பு போட்டு உடம்பு பூரா தேய்ச்சு, 5, 6 போசி தண்ணிய ஊத்தி குளிப்பாட்டற மாதிரி அது சுத்தபத்தமா இருக்குமா?
சித்தப்பா சோளத்தட்டு வெட்டற காண்ட்ராக்ட் எடுத்திருக்காரு. 5 ஏக்கரா சோளத்தட்டை ஒர வாரத்தில வெட்டி முடிக்கோணும். கூடமாட 3 ஆளை கூலிக்கு வச்சு வெட்ட ஆரம்பிச்சாங்க. இடையில பிரசவம் வந்திருச்சு. 3 நாளு அதில போயிருச்சு. புள்ளை பெத்த பெருமையில ஊட்டுலயே இருந்துக்க முடியுமா?
4-வது நாள் பச்சை உடம்பு. முந்தின நாள் ராத்திரி ஜன்னி வந்திட்டுது. ஒடம்பு ஜில்லுன்னு ஆகி நடுங்க ஆரம்பிச்சுட்டுது. வேற வழியில்லாம நாட்டுச்சாராயம் ஒரு கிளாஸ் வாங்கியாந்து குடிக்கச் சொல்லி தூங்க வச்சாங்க.
இன்னிக்கு வேலைக்கு போயே ஆகோணும். பழைய புடவையை கயிறாட்டமா முறுக்கி, வயிறு லூசாகாம இருக்க -இடுப்பைச் சுத்தி- ரெண்டு பேரு, ‘டைட்டா’ சுத்தி, சொருகி விட்டாங்க.
ரெண்டு கிளாஸ் பழைய சோத்தைக் கரைச்சுக் குடிச்சுட்டு, பொழுது கெளம்பறதுக்குள்ளே சோளக்காட்டுக்குப் போயிட்டோம். வேப்ப மரத்தில தொட்டில் கட்டி, புள்ளையப் படுக்க வச்சிட்டு வேலைய ஆரம்பிச்சோம்.
சித்த நேரத்தில குழந்தை ‘வீல்’னு கத்திச்சு. என்னாச்சோ, இப்படி அழுகுதேன்னு ஓடிப்போய்ப் பாத்தா, அந்த பாங்கொடுமைய எப்படிச் சொல்றது?
புள்ளைய நல்லா குளிப்பாட்டாம, ஈரத்துணியப் போட்டு தொடைச்சு மட்டும் உட்டுட்டு தூக்கியாந்திட்டனா. இப்ப ரத்த வாடைக்கு நாய் வந்து குழந்தையக் கடிச்சிட்டிருக்கு.
ஓடிப்போய் அந்த சனியனை விரட்டி உட்டுட்டு, சித்த நேரம் மடியில வச்சு -பால்குடுத்து, தூங்கினதுக்கு அப்புறம் கொண்டு போய் மறுபடி தொட்டில்ல தூங்க வச்சேன் சாமி.
நாங்க பட்ட துன்பம், நாயிகூட பட்டிருக்காது. சாமி குடுக்கற கொழந்தையை, வேண்டாம்னு சொன்னா பாவம்னு, நாங்க பாட்டுக்கு பெத்துப் போட்டுட்டே இருந்தோம்.
‘‘இன்னெத்த புள்ளைகெல்லாம் டவுனாஸ்பத்திரிக்கு போயி அலுங்காம வயித்த அறுத்து புள்ளைய எடுத்திடறாங்க. அதுமுட்டுமில்ல, வெவரமா ஒண்ணோ ரெண்டு பெத்துட்டு ஆபரேசனும் பண்ணிக்குதாம்ல? எங்க காலத்தில இதெல்லாம் நினைச்சே பாக்க முடியாது கண்ணூ...!’’
இப்படியெல்லாம் நெகிழ வச்ச வெள்ளச் சோளமா வாழ்க்கைய நடத்தீட்டிருந்த அந்த சின்னம்மாவின் 3-வது மகன் குமரேசன் மில்லில் பகல் வேலைக்கு போயிட்டு தினம் மாலையில் ஒரு வாத்தியார் வச்சு 1-ங்கிளாஸ்லருந்து +2 வரைக்கும் பள்ளிக்கூடம் போகாம படிச்சு பொதுத் தேர்வு எழுதினவரு.
அவரோட மூத்த பொண்ணு சரோஜா - அறிவுஜீவி. அமெரிக்கா பாஸ்டன் நகரத்தில் கம்யூட்டர் சாப்ட்வேர் நிறுவனத்தில ஹெல்த் இண்டஸ்ட்ரி தலைமைப் பொறுப்பில இருக்கா. மாப்பிள்ளை மோகனசுந்தரம் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் சாஃப்ட்வேர் ஆர்கிடெக்ட் ஆக விற்பனைப் பிரிவில் இருக்கார்.
- சுவைப்போம்...
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago