கர்னாடக இசை மேதை, திரைப்படப் பாடல் ஆசிரியர், இசையமைப்பாளர் என்று பன்முகத் திறன் கொண்ட பாபநாசம் சிவன் (Papanasam Sivan) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 26). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l அன்றைய தஞ்சை மாவட்டம் போலகம் கிராமத்தில் (1890) பிறந்தார். இயற்பெயர் ராமசர்மா. 7 வயதில் தந்தையை இழந்தார். இதையடுத்து, பிள்ளைகளுடன் திருவனந்தபுரத்தில் குடியேறினார் தாய். மஹாராஜாவின் ஏற்பாட்டால் இலவச உணவுடன், கல்வியும் கிடைத்தது.
l மலையாளம், சமஸ்கிருதமும் பயின்றார். இளம் வயதிலேயே இசையில் ஆர்வமும் திறமையும் கொண்டிருந்தார். மஹாராஜா சமஸ்கிருதக் கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றார்.
l தாய் மறைவுக்குப் பிறகு, அண்ணனுடன் தஞ்சை மாவட்டம் பாபநாசம் வந்தார். நெற்றி நிறைய திருநீறு பூசியபடி சிவன் கோயில் முன்பு மனமுருகிப் பாடுவார். பரமசிவனே பாடுவதாக கருதிய மக்கள் ‘பாபநாசம் சிவன்’ என்றனர். அதுவே பெயராக நிலைத்தது.
l வித்வான் நூரணி மகாதேவ ஐயர், சாம்ப பாகவதரிடம் முறைப்படி இசை பயின்றார். கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயரிடம் மாணவனாகச் சேர்ந்தார். 7 ஆண்டுகள் அவருடன் தங்கி, பல இசை நிகழ்ச்சிகளுக்குச் சென்றார். திருவையாறு தியாகராஜர் ஆராதனையில் 1918-ல் இவரது முதல் கச்சேரி நடைபெற்றது. தொடர்ந்து பல இடங்களில் கச்சேரிகள் நடத்தினார்.
l கிருதி, வர்ணம், பதம், ஜாவளி என பல இசை வடிவங்களை இயற்றியுள்ளார். ‘என்ன தவம் செய்தனை’, ‘கற்பகமே கண் பாராய்’, ‘நான் ஒரு விளையாட்டு பொம்மையா’ போன்றவை இவரது புகழ்பெற்ற கீர்த்தனைகள். இசைக் கலைஞர்களால் ‘தமிழ் தியாகய்யர்’ என்று போற்றப்பட்டார்.
l வீணை எஸ்.பாலச்சந்தரின் தந்தை சுந்தரம் மூலம், 1934-ல் ‘சீதா கல்யாணம்’ என்ற திரைப்படத்துக்கு பாடல் எழுதும் வாய்ப்பும் கிடைத்தது. தொடர்ந்து அசோக்குமார், சாவித்திரி, நந்தனார், சிவகவி, ஜகதலப்பிரதாபன், அம்பிகாபதி உள்ளிட்ட பல திரைப்படங்களில் பாடல்கள் எழுதினார்.
l காலத்தால் அழியாத பாடல்களான ‘மன்மத லீலையை’, ‘ராதே உனக்கு’, ‘அம்பா மனங்கனிந்து’ ஆகியவை இவர் இயற்றியவை. பாடல் எழுதும்போதே மெட்டும் அமைத்துவிடும் திறன் பெற்றவர்.
l ‘பக்த குசேலா’, ‘அம்பிகாபதி’ உட்பட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். பல படங்களில் பாடி நடித்துள்ளார். 70-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்காக 800 பாடல்களை எழுதியுள்ளார். 100 கிருதிகளைக் கொண்ட இவரது முதல் நூலான ‘கீர்த்தன மாலை’ 1934-ல் வெளிவந்தது.
l 10 ஆண்டுகள் பாடுபட்டு 1952-ல் ‘சமஸ்கிருத பாஷா ஷப்த சமுத்ரா’ என்ற நூலை எழுதினார். ராமாயணத்தை சுருக்கி, 24 ராகங்களில் 24 பாடல்களாக ‘ராமசரித கீதம்’ என்னும் நூலை படைத்தார். 75 வயதிலும் மார்கழி மாதக் குளிரில் அதிகாலை நேரத்தில் வீதிகளில் பஜனை பாடிச் செல்வார். மிக எளிமையானவர். இவரது சகோதரர் ராஜகோபால் ஐயரின் மகள்தான் எம்ஜிஆரின் மனைவி வி.என்.ஜானகி.
l பத்மபூஷண், சங்கீத கலாநிதி, இசைப் பேரறிஞர், சங்கீத சாகித்ய கலா சிகாமணி, சிவபுண்ய கானமணி, சங்கீத கலாரசிகமணி என பல்வேறு விருதுகளைப் பெற்ற பாபநாசம் சிவன் 83-வது வயதில் (1973) மறைந்தார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago