கொங்கு தேன் 17: ‘கத்தாளை’ முட்டி

By செய்திப்பிரிவு

கிராமப்புறங்கள்ல சர்வசாதாரணமா எல்லா பசங்களுமே 10 வயசு, 12 வயசுக்குள்ளே தானா நீச்சல் கத்துக்குவாங்க.

எங்கூர்ல 2 குட்டை இருந்திச்சு. அதுல பரமசிவன் கோயில் குட்டை ஒண்ணு - பாந்தோட்டத்து குட்டை ஒண்ணு - மழை காலங்கள்ள அந்த ரெண்டு குட்டைகளுமே ரொம்பிடும் - ஆழமான எடங்கள்ள 4 அடி இருக்கும். மத்த எடங்கள்ளே கால்முட்டிய தாண்டாது. செங்காட்டுல பேயற தண்ணிங்கறதனால தண்ணி செகப்பு கலர்ல இருக்கும். 5, 6 வயசு தாண்டின சிறிசுகல்லாம் கோமணத்தைக் கட்டீட்டு விலாங்கு மீன் மாதிரி நாலா பக்கமும் நீச்சலடிப்பாங்க.

எங்கவூட்டுலே முதல்ல ஒரு 9 வயசுப் பையன் செத்துப் போயிட்டான். அப்புறம் 6 வயசு பொண்ணு போயிருச்சு. கடைசியா 16 வயசு அண்ணன் 'பிளேக்’கில போய் சேர்ந்துட்டான். இருக்கிறது ஒரே பையன்ங்கிறதினால அம்மா தண்ணிகிட்டயே விட மாட்டாங்க.

அதை மீறி ஏழெட்டு வயசிருக்கறப்போ பாந்தோட்டத்து குட்டைகிட்ட போனேன். பசங்க ‘அசால்ட்’டா நீந்தறதை பாத்துட்டு கோமணத்தை கட்டீட்டு, நானும் தண்ணிக்குள்ளே எறங்கி நின்னேன்.

தூரத்தில எங்கம்மா வந்தாங்க. அதை பாத்த பசங்க ‘‘டேய், டேய்... உங்கம்மா வர்றாங்க. அவங்க முன்னாடி நீ ஜோரா நீந்திக் காட்டு!’ன்னு என்னை அரணாக்கயிறோட இடுப்பு பக்கம் புடிச்சு அலாக்கா தூக்கி தண்ணில முக்கினாங்க. அதாவது தலை தண்ணிக்குள்ளே போயிருச்சு. கால் ரெண்டும் மானத்தை பாத்திட்டிருக்கு. தண்ணிக்குள்ளே சிரசாசனம் பண்ற மாதிரி.

அம்மாவுக்கு பகீர்னு ஆயிடுச்சு. ‘இருக்கறது ஒரே பையன்; அவனையும் கொன்னு போடுவீங்க போல இருக்கு - ‘வாடா, மேல’ன்னு கூப்பிட்டு, ‘இனிமே குட்டைப் பக்கம் உன்னைப் பாத்தேன், காலுக்கு சூடு வெச்சிருவேன்’னு கையப்புடிச்சு ‘தரத்தர’ன்னு ஊட்டுக்கு இழுத்திட்டு போயிட்டாங்க.

அதுக்கப்புறம் நீச்சல் கத்துக்க வாய்ப்பே இல்லாம போயிருச்சு.

எங்க தோட்டத்தை குத்தகைக்கு பாத்தவரு பேரு மாரப்ப கவுண்டர். ‘கத்தாழை’ முட்டி ஒண்ணு 3 அடி நீளத்துக்கு கொண்டுட்டு வந்தாரு. கத்தாழை முட்டி பாக்க பெரிசா இருக்குமே தவிர, தண்ணிக்குள்ள போட்டா மொதக்கும். எவ்வளவு பெரிய ஆளு அதை அமுக்குனாலும் தண்ணிக்குள்ளே போகாது.

அந்த கத்தாழை முட்டிய என் முதுகுல கட்டி, கிணத்துக்குள்ளே என்னை தூக்கிப் போட்டாரு. அந்தக் கிணத்தில தண்ணி எப்படியும் 30 அடி ஆழத்துக்கு மேல இருக்கும்.

‘டேய்! குப்புறப்படுத்து, கையில தண்ணிய பின்னாடி தள்ளு - காலு ரெண்டையும் தண்ணிக்கு மேல தூக்கி அடீடா’-னு கத்தறாரு.

மாரப்பகவுண்டர்

எனக்கு செர்ர்ரியான பயம். குப்புறப்படுத்தா, வாய்க்குள்ளே தண்ணி போயிடும்னு, காலை சுத்தறேன்; சைக்கிள் ஓட்டற மாதிரி. அப்பவும் உடம்பு நகர மாட்டேங்குது. ‘ம்கூம். இவன் சொன்ன பேச்சு கேக்கமாட்டான்!’னு வேட்டிய மடிச்சுக் கோமணமா கட்டீட்டு தண்ணிக்குள்ள எறங்கினாரு கவுண்டர். அதே வேகத்தில என் முதுகில இருந்த முட்டி மேல ரெண்டு கையையும் வச்சு ஒரு அமுக்கு அமுக்கினாரு.

அப்படியே 10 அடி ஆழம், தண்ணிக்குள்ளே நான் போயிட்டேன். மூக்கு, காது, வாய் வழியா தண்ணி எனக்குள்ளே பூதுது. ‘ஓ! நம்ம கதை முடியுது, உசிரோட மேல போக மாட்டோம். செத்துட்டிருக்கறோம்’னு மனசு சொல்லுச்சு.

கத்தாழை முட்டி உடுமா? அப்படியே அல்லாக்கா, மேல தூக்கீட்டு வந்திருச்சு.. பெருமூச்சு விட்டு, கண்ணைத் தொறந்து, ஆகாயத்தை பார்த்தேன்.

அட, நாம பயந்தமாதிரி சாகலே. இந்த கவுண்டன் நம்மள கொல்றதுக்கு பாக்கறான் -நீச்சலும் வேண்டாம்; ஒரு மசுரும் வேண்டாம், ‘முட்டிய அவுத்து விடு மாமா!’ன்னு கத்தினேன்.

‘அட பைத்தியக்காரா! பயந்தெளியோணும்னுதான் தண்ணிக்குள்ள உன்னை அப்பிடி அமுக்கினேன். இனி பயம் வராது வா!’ன்னாரு. ‘இந்த வேலையே வேண்டாம், முதல்ல முட்டிய கழட்டி விடு!’ன்னு அவுத்துட்டு, நடுங்கிட்டே ஊருக்குப் போனேன்.ராத்திரி கனவுல கூட தண்ணிக்குள்ளே முக்குளி போட்டு திணர்ற மாதிரி கத்த ஆரம்பிச்சுட்டேன்.

இப்படியே 4, 5 வருஷம் போயிருச்சு. மெட்ராஸ் போறதுன்னு முடிவாயிருச்சு. கிராமத்துப் பையன், நீச்சல் தெரியாதுன்னா அங்கே எவனும் நம்ப மாட்டான். மாரப்ப கவுண்டர் மாதிரி எவனாவது நீச்ச கொளத்தில தூக்கிப் போட்டான்னா வேற வெனையே வேண்டாம். எப்படியாச்சும் நீச்சக் கத்துக்கணும்ன்னு நெனைச்சேன்.

அப்போ என் பயத்தை போக்கி நீச்சல் கத்துக்குடுத்த புண்ணியவாளன் கிருஷ்ணசாமிதான். கிட்டுசாமின்னுதான் எல்லோரும் கூப்பிடுவோம். எங்கள் ஊர்ல ஆணழகன் அவருதான். 6 அடி உசரம் இருப்பாரு. வெள்ளைக்காரன் கணக்கா ‘செக்கச்செவே’ன்னு உடம்பு. மார்புக்காம்புகள் கூட செவப்பா இருக்கும். 8-வதுக்கு மேல படிக்க முடியாத குடும்ப சூழல். ஒண்டிப்புதூர்ல ஸ்ரீஹரிமில் அப்பத்தான் கட்டினாங்க. அதில மேஸ்திரி வேலைக்கு சேர்ந்திட்டாரு. சிரிச்ச முகம். அரிசிப்பல் -கிட்டுசாமிக்கு கோபம் வந்தே நான் பாத்ததில்லை.

கிட்டுசாமி 70 வயதில்

சூலூர் தியேட்டர்ல படம் பாக்க ரெண்டு பேரும் பல தடவை சைக்கிள்ளே போயிருக்கோம்.

அந்த கிட்டுசாமிதான், ஒரு நாளு - ‘அநியாயமா உன்னை பயமுறுத்தியிருக்கறாங்க. நீச்சல் ஒண்ணும் கம்பசூத்திரமில்ல, அலுங்காம நான் கத்துக்குடுக்கறேன்’னு சொல்லி - என் கனம் தாங்கற மாதிரி பெரிய கத்தாழை முட்டி ஒண்ணு ரெடி பண்ணுனாரு.

ஒரு நாள் பகல் 12 மணி. உச்சி வெயில். முதுகில முட்டிய கட்டி படிக்கட்டில என்னை கிணத்துக்குள்ளே கூட்டீட்டு போனாரு. தண்ணிக்கு மேல இருக்கற படிக்கட்டில என்னை உக்காரச் சொல்லீட்டு, இவரு தண்ணிக்குள்ளே போனாரு.‘

அப்படியே தண்ணி மேல குப்புறப்படு!’ன்னாரு. படுத்தேன். என்கை புடின்னாரு. எட்டிப் புடிச்சேன். அவுரு உள்ளே நகர்ந்துகிட்டே, ‘இப்ப ரெண்டு காலயும் மேல தூக்கி தண்ணில அடி!’ன்னாரு. அடிச்சேன்.

‘முன்னால.. கைகளை நீட்டி, தண்ணிய தள்ளு!’ன்னாரு. செஞ்சேன். கை பாவறேன். கால்களை அடிக்கறேன். எனக்கே தண்ணிக்குள்ள நான் நகர்றது தெரியுது. ‘அவ்வளவுதாம்பா நீச்சலு!’ன்னாரு. இமய மலையில கொடி நட்டுன சந்தோஷம் எனக்கு.

‘முட்டி முதுகுல இருக்கு, நீ தண்ணிக்குள்ளே போகவே முடியாது. இஷ்டத்துக்கு கிணறு முழுக்க (40 அடி நீளம், 60 அடி அகலம்) நீச்சலடி!’ன்னுட்டு அவரு பகல் ஷிப்டு மில் வேலைக்கு போயிட்டாரு.

ஒரு வாரம், நானே ஊர் முச்சூடும் கேக்கற மாதிரி ‘டமால்; டுமீல்’ன்னு கிணத்துக்குள்ளே நீந்தினேன்.

மறுநாள் வந்தாரு. முட்டிய முதுகிலருந்து கழட்டிட்டு தண்ணிக்குள்ளே எறங்கி நீந்திட்டே, ‘வா, வந்து என்னை புடி!’ன்னாரு. நானும் பின்னாடியே போனேன். ஒரு எடத்தில நீட்டிட்டிருந்த ஒரு கல்லை புடிச்சேன். அது புட்டுகிட்டு கையோட வந்திருச்சு. கண்ணு மூடி முழிக்கற நேரத்துக்குள்ளே தண்ணிக்குள்ளே போக ஆரம்பிச்சுட்டேன். என் முதுகில இருந்த கயித்த புடிச்சு கிட்டுசாமி இழுத்து கொண்டாந்தாரு.

ஆக நீச்சல் தெரிஞ்சிருச்சு. ‘டைவிங்’ கத்துக்கணுமே. முதல்ல, 2 படிக்கட்டில இருந்து தண்ணிக்குள்ளே குதிச்சேன். உள்ளே போயிட்டு தம் புடிச்சு மேல வர்றது புது அனுபவமா இருந்திச்சு.

அப்புறம் 4 அடி உயரத்திலருந்து, 6 அடி உயரத்தில இருந்து குதிச்சு மேல வந்தேன். ஒரு நாள் 8 அடி உயரத்திலிருந்து கிணத்துக்குள்ளே குதிச்சேன் பாரு. ‘குமுக்’குன்னு காதுக்குள்ளே ஒரு சத்தம். அவ்வளவுதான் உலகமே அமைதி ஆயிருச்சு.

ராத்திரில சமையல்கட்டில சாப்பிட்டிருப்பேன். 5 அடி தூரத்தில அம்மா தோசை சுட்டுட்டிருப்பாங்க. ‘ஏங்கண்ணு! இன்னொரு தோசை போடட்டுமா?’ன்னு கேப்பாங்க. நான் பேசாமயே இருப்பேன். ‘டேய்..!’ன்னு கத்துனா, ‘கூப்பிட்டியாம்மா?’ம் பேன். ஆக, செவிட்டுக் காது நம்மோடதுன்னு தெரிஞ்சு போச்சு.

எங்கத்தை மகன், அப்பாச்சி கவுண்டர் -ஒண்டிப்புதூர்ல குடியிருந்தாரு. அங்க கூட்டீட்டுப் போயி தருமாஸ்பத்திரில டாக்டர்கிட்ட காட்டினாரு. டாக்டர் சிரிஞ்ச் வச்சு காதுக்குள்ள தண்ணி அடிச்சாரு. கொஞ்சம் நஞ்சம் கேட்டிட்டிருந்ததும் போயி ‘டமார’ச் செவிடாயிட்டேன்.

பொள்ளாச்சி மாமா வீட்டுக்குப் போனேன். அங்கயும் ராத்திரி சாப்பிடும் போது பக்கத்தில உட்கார்ந்திருந்த மாமா மகன் ரத்தினம், ‘இன்னும் கொஞ்சம் உப்புமா போட்டுக்கறியா?’ அப்படீன்னு கேட்டு -நான் பேசாம இருக்க - அவரே ஒரு கரண்டி உப்புமாவை அள்ளி என் எலையில போட்டாரு. ‘போதும்பா’ன்னேன். ‘நான் கேட்டதுக்கு நீ பேசாம இருந்தே, அதான் போட்டேன்!’ன்னாரு.

‘எனக்கு காது அடைச்சிருக்கு!’ன்னேன். ரத்தினமும், அவரு தங்கச்சிக ரெண்டு பேரும் சிரிச்சாங்க. அவமானமா போயிருச்சு. அதே காதோட வால்பாறை எஸ்டேட்டுக்கு போயி, படம் வரையலாம்னு ஏ.பி.டி பஸ் புடிச்சுப் போனேன். வால்பாறை சுமார் 4000 அடி உயரம் இருக்கும். பஸ் 3000 அடி உயரத்தை தாண்டும் போது காத்தோட ‘ப்ரஷர்‘ல ‘பளக்’-குன்னு காதுக்குள்ளே அடைபட்டிருந்த தண்ணி, ரெண்டு காதிலிருந்தும் வெளியே வந்து சட்டைய நனைச்சிருச்சு.

2 மாசமா கேக்காத காது, மீண்டும் கேக்க ஆரம்பிச்சுட்டுது. சொன்னா நம்ப மாட்டீங்க. 3 சீட் முன்னாடி உட்கார்ந்திருக்கிற ஆள் மூச்சு விடறது கூட துல்லியமா கேட்டுச்சு. மீண்ட சொர்க்கம்-ன்னு இதைச் சொல்லலாம்.

தண்ணிகிட்டயே போகாம எங்கம்மா என்னை வளர்த்தாங்க.இப்ப என் மகனுக சூர்யா - கார்த்தி கட்டியிருக்கிற வீட்டுக்குள்ள என் ரூம் தாண்டி 10-அடி தூரத்தில நீச்சல் குளம் இருக்கு.

சுவைப்போம்...

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்