மேட்டுப்பாளையத்தில் மாநில நிலச்சரிவு மேலாண்மை மையத்தை அமைக்க வேண்டும்; 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பு கோரிக்கை

By செய்திப்பிரிவு

மேட்டுப்பாளையத்தில் மாநில நிலச்சரிவு மேலாண்மை மையத்தை அமைக்க வேண்டும் என,
'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

கேரளாவின் இடுக்கி மாவட்டம் மூணாறு பஞ்சாயத்துக்கு உட்பட்ட பெட்டிமுடிப் பகுதியில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்திலும் அதுபோன்ற நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்பதால் அதைத் தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், மேட்டுப்பாளையத்தில் மாநில நிலச்சரிவு மேலாண்மை மையத்தை அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது, 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பு.

இதுகுறித்து அந்த அமைப்பு இன்று (ஆக.14) வெளியிட்ட அறிக்கை:

"தேசியப் பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005 கீழ், நிலச்சரிவுகளுக்கான வழிகாட்டுதல்கள் 2009-ம் ஆண்டு வெளியிடப்பட்டன. அதன்படி, ஆறு துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு பணிகள் அறிவிக்கப்பட்டன. ஆனால், அந்த முன்னெடுப்புகளில், வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்துவதில் பல போதாமைகள் உள்ளன.

நிலச்சரிவுகளைக் கையாள பேரிடர் ஆணையம் வெளியிட்டுள்ள உத்திகள்:

1. நிலச்சரிவு ஏற்படும் இடங்களைக் கண்டறிந்து, அவற்றின் தீவிரத்தன்மையைப் பொறுத்து மண்டலங்களாகப் பிரித்தல்

2. நிலச்சரிவுகளைக் கண்காணித்து, முன்னரே எச்சரிக்கும் கட்டமைப்புகளை உருவாக்குதல்

3. நிலச்சரிவுகள் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை முன்னெடுத்தல்

4. திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை நடத்துதல்

5. மலைகளுக்கு ஏற்ற நிலப் பயன்பாட்டு மண்டலங்களைப் பிரித்து அவற்றுக்கான ஒழுங்குமுறைகளையும், கொள்கைகளையும் வகுத்தல்

6. நிலச்சரிவுகள் தொடர்பான விஷயங்களை ஒருங்கிணைக்க தனியான சிறப்புக் குழுக்களை அமைத்தல்

மேலே சொல்லப்பட்டுள்ள ஷரத்துக்கள் எல்லாம் இன்னும் முழுவதுமாக நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளன. அவற்றை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

தமிழகம் செய்யவேண்டியவை:

1. மேற்குத் தொடர்ச்சி மலைகள் தொடர்பாக மாதவ் காட்கில் குழு கொடுத்த பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

2. கடந்த வருடங்களில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் அதிகமானவை நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளன. வரும் காலங்களில் அங்கும் நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே, நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவுகள் ஏற்படும் வாய்ப்புள்ள பகுதிகள் என ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ள 250-க்கும் மேற்பட்ட பகுதிகளில் உள்ள கேளிக்கை விடுதிகள், வணிக வளாகங்கள் காலி செய்யப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட வேண்டும். குறிப்பிட்ட அந்த இடங்களில் புதிதாக எந்த விதமான கட்டுமானங்களையும் அனுமதிக்கக்கூடாது.

3. அயல் தாவரங்களைக் கட்டுப்படுத்தி, அந்த மலைகளுக்கு உரிய இயல் தாவரங்களை மீட்டுருவாக்கம் செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

4. ஆண்டுதோறும் உதகையில் நடைபெறும் மலர் கண்காட்சியை மேட்டுப்பாளையம் அல்லது பொள்ளாச்சிக்கு மாற்ற வேண்டும். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர், உதகையை சுற்றுலா தலமாக பிரபலப்படுத்த இத்தகைய விழாக்கள் தேவைப்பட்டன. ஆனால், இப்போது அது தேவையில்லை. குறிப்பிட்ட அந்த ஒரு வார காலத்திற்கு மட்டும் பல லட்சக்கணக்கான மக்கள் உதகையில் கூடுகிறார்கள், அம்மலைகளுக்கு அது மிகப்பெரிய அழுத்தமாக அமைகிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

5. தமிழக பகுதியில், மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உத்தேசிக்கப்பட்ட நியூட்ரினோ ஆய்வகம் உள்ளிட்ட அனைத்துத் திட்டங்களையும் கைவிட வேண்டும். மற்ற பல திட்டங்களையும் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். செயல்பாட்டில் இருக்கும் நீர்மின் திட்டங்களை மேலும் விரிவாக்கம் செய்வதையும் கைவிட வேண்டும்.

6. நீலகிரியில் நிலச்சசரிவு குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளவும், அவற்றைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை அளிக்கக்கூடிய வகையிலும் 'மாநில நிலச்சரிவு மேலாண்மை மையம்' மேட்டுப்பாளையத்தில் அமைக்கப்படவேண்டும். அதன் மற்றொரு மையம் வத்தலகுண்டுவில் அமைக்கப்பட வேண்டும். இந்த மையத்தில் விஞ்ஞானிகள் மட்டுமில்லாமல் அந்த மலையின் 'பூர்வகுடிகளை’ உள்ளடக்கிய நிபுணர்கள் குழு'வும் அமைக்கப்படவேண்டும்.

7. காலநிலை மாற்றத்தால் தமிழகம் சந்திக்கும் பிரச்சினைகளைக் கையாள மாநில அளவிலான 'தமிழகக் காலநிலை மையம்' அமைக்கப்பட வேண்டும்.

8. மேற்குத் தொடர்ச்சி மலைகள் முழுவதும் இயற்கை வழியிலான விவசாய முறைகளைக் கட்டாயமாக்க வேண்டும்.

நமக்கு எல்லா வளங்களையும் அளித்து நம்மைப் பாதுகாத்த மண் இப்போது நம்மைக் காவுவாங்க ஆரம்பித்திருக்கிறது. இதற்கு இயற்கை காரணமல்ல; நாம் மட்டுமே காரணம். இம்மண்ணின் மீது நாம் நிகழ்த்திய வன்முறைக்கான எதிர்வினையை இப்போது நாம் அனுபவிக்கிறோம். இதன் தாக்கத்தை மட்டுப்படுத்தி, நாம் செய்த தவறுகளை சரிசெய்வதே இப்போது நம்முன் உள்ள முக்கியமான பணி"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்