அமெரிக்காவில் குடியேறிய ஜமைக்காவைச் சேர்ந்த தந்தைக்கும், தெற்காசிய நாட்டைச் சேர்ந்த தாய்க்கும் பிறந்தவரான கமலா ஹாரிஸைத் துணை அதிபர் வேட்பாளராக ஜோ பிடன் தேர்ந்தெடுத்திருப்பது வரலாற்று முக்கியத்துவம் கொண்ட, ஊக்கமளிக்கக்கூடிய விஷயமாகும்.
ஆப்பிரிக்க, ஆசிய பெண்கள் உட்பட இந்தப் போட்டியில் இருந்த எந்தப் பெண் தெரிவுசெய்யப்பட்டிருந்தாலும் அது உத்வேகம் தரும் விஷயமாகவே இருந்திருக்கும். ஆனால், மிக உறுதி வாய்ந்தவர் எனும் சிறப்பு கொண்டவரும், நிஜமான போராளியுமான கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க விஷயம்.
கலாச்சார அதிர்வுகள்
அதேசமயம், கமலாவின் கொள்கை நிலைப்பாடுகள், நற்சான்றிதழ்கள் போன்றவை அளிக்கும் தோற்றத்தை மட்டும் வைத்து அவரை மதிப்பிடுவதைவிடவும், அவரது தெரிவு ஏற்படுத்தியிருக்கும் கலாசார அதிர்வுகளைப் பற்றியும் அலசுவது அவசியம். இதுபோன்ற பெரிய பொறுப்புக்காகப் பிரதான கட்சியால் நிறுத்தப்படும் முதல் கறுப்பினப் பெண் இவர்தான். இவர் கலப்பினத்தைச் சேர்ந்தவர் என்பதும் முக்கியமான விஷயம். இதில் இவருக்கு முக்கியமான சாதகங்கள் இருப்பதுடன், சில சிக்கல்களும் இருக்கின்றன.
அமெரிக்காவின் தேர்தல் தொடர்பான முடிவுகளைப் பொறுத்தவரை கொள்கைதான் பிரதான அம்சமாக இருக்கும். தனிநபர் ஆளுமை, தனிநபரின் பின்னணி, அவர்களின் உணர்வுகள் போன்றவை மிகக் குறைவாகவே பரிசீலிக்கப்படும். துரதிருஷ்டவசமாக, ஒரு வேட்பாளர் முன்னிறுத்தப்படும் விதமே அமெரிக்கத் தேர்தல்களில் மிக முக்கியமான இடத்தை வகிக்கிறது.
உற்சாகமான பெண்
அந்த வகையில், கமலாவுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதன் காரணியாக இருப்பது அவரிடமிருந்து வெளிப்படும் உற்சாகம்தான். அது சாதாரண விஷயமல்ல.
2016 அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளின்டன் செய்த தவறுகளில் ஒன்று, டிம் கெய்னைத் துணை அதிபர் வேட்பாளராகத் தேர்வுசெய்தது. டிம் கெய்ன் சிறந்த மனிதராக, உறுதியானவராக இருக்கலாம். அவருக்கும் ஹிலாரிக்கும் இடையிலான புரிதலும்கூட சிறப்பாகவே இருந்திருக்கலாம். ஆனால், அந்தத் தெரிவு பெரும் தோல்வியில்தான் முடிவடைந்தது. அவரது தெரிவில் உண்மையான உற்சாகத்தன்மை இருக்கவில்லை.
கமலா அபரிமிதமான உற்சாகத்தன்மையுடன் களம் காண்கிறார். அதுதான் பிடனுக்கு மிக அதிகமாகத் தேவைப்படுகிறது. குறிப்பாக, அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய அரசியலை விரும்புபவர்களுக்கு அந்த உற்சாகம் அதிகமாகத் தேவைப்படுகிறது. கமலா துறுதுறுப்பான, அனுபவத் திறன் வாய்ந்த பெண். குறிப்பாக, பாலின அடிப்படையிலான தாக்குதல்களை எதிர்கொள்ளும் விஷயத்தில் மற்ற பெண்களைவிட இவர் திறமையானவர்.
ஆனால், பாலின அடிப்படையிலான பாகுபாடு என்பது அமெரிக்க சமூகத்தில் மிக அழுத்தமாக வேரூன்றியிருக்கும் ஆபத்தான விஷயம். அத்துடன், தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பைப் பெற்றிருக்கும் கமலா, பெண் எனும் முறையில் பாலினப் பாகுபாட்டால் பாதகத்தை எதிர்கொள்ள நேரலாம். ஹிலாரி பின்னடைவைச் சந்திக்க அதுவும் ஒரு காரணமாக இருந்தது கவனிக்கத்தக்கது.
சாதக பாதகங்கள்
கமலாவைப் பொறுத்தவரை, இவர் ஒரு கலப்பினப் பெண், குடியேறிகளுக்குப் பிறந்த மகள், கலப்புத் திருமணம் செய்துகொண்டவர் (கணவர் வெள்ளையினத்தைச் சேர்ந்தவர்) ஆகியவை சிறப்பம்சங்களாகக் கருதப்படுகின்றன. குறிப்பாக, பெருமளவிலான குடியேறிகளைக் கவர்ந்த தாராளவாத போக்கு கொண்ட நகரங்களில் கமலாவுக்குச் சிறப்பான வரவேற்பு இருக்கிறது. கலப்பின மக்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் மேற்கு அமெரிக்காவிலிருந்து வரும் வேட்பாளர் இவர்.
தென் மாநிலங்களைப் பொறுத்தவரை, வழக்கமான அமெரிக்க மனப்பான்மைதான். ஒருபோதும் வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும், கலப்பினத்தவர்களை மனதளவில் ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள் தென் மாநிலங்களில் அதிகம். அங்கு இவருக்கு எதிர்ப்புகள் இருக்கும். டெக்சாஸ், ஃபுளோரிடாவைத் தவிர பிற தென் மாநிலங்களில் குடியேறிகளின் எண்ணிக்கை குறைவு. மேலும், அங்கு வசிப்பவர்களில் பெரும்பாலானோர் கலப்புத் திருமணங்களுக்கு எதிரானவர்கள்.
பெரும்பாலான தென் மாநிலங்கள் 'ஸ்விங் ஸ்டேட்ஸ்' (குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி என இரு கட்சிகளுக்கும் சமமான எண்ணிக்கையில் ஆதரவாளர்களைக் கொண்ட மாநிலங்கள்) அல்ல. வாக்களிப்பதன் அடிப்படைக் காரணிகள் பெரும்பாலும் மாநில எல்லைகளுக்குட்பட்டவை என்றாலும், வேட்பாளர்கள் குறித்த வாக்காளர்களின் உள்ளார்ந்த உணர்வுகள் (அவை நேர்மறையாக இருந்தாலும் சரி, எதிர்மறையாக இருந்தாலும் சரி), மாநில எல்லைகளைக் கடந்து நாடு முழுவதும் எதிரொலிக்கக்கூடியவை என்றே எனக்குத் தோன்றுகிறது.
கறுப்பினச் சமூகத்துக்குள் பிளவு
அமெரிக்காவில் பல்வேறு கலப்பின மக்கள் இருக்கும் நிலையில், கமலாவின் கலப்பினத்தன்மை வெவ்வேறு இனங்களுடன் இவரை அடையாளப்படுத்திக்கொள்ள உதவக்கூடும். உயர் கல்வியைக் கற்க, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கறுப்பினப் பல்கலைக்கழகத்தைத்தான் தேர்ந்தெடுத்தார் கமலா. அதேபோல, மிகப் பிரதானமானதும், செல்வாக்கு மிக்கதுமான ஒரு கறுப்பின மகளிர் கழகத்திலும் சேர்ந்தார். இவரது இந்த நிலைப்பாடுகள் பெரும்பாலான கறுப்பின மக்கள் மத்தியில், குறிப்பாகக் கறுப்பினப் பெண்கள் மத்தியில் இவருக்கு வலுவான இடத்தைப் பெற்றுத்தரக்கூடியவை.
ஆனால், வழக்கறிஞர் எனும் முறையில் இவரது செயல்பாடுகள் கறுப்பின மக்கள் மத்தியில், குறிப்பாகக் கறுப்பின ஆண்கள் மத்தியில் இவர் மீது அதிருப்தியை உருவாக்கியிருக்கின்றன என்பதும் கவனிக்கத்தக்க விஷயம். அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கறுப்பின மக்கள் பெருவாரியான வாக்குகளை வழங்கிவருகிறார்கள் என்றாலும், இவ்விஷயத்தில் கறுப்பின ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான இடைவெளி, கடந்த சில தேர்தல்களில் அதிகரித்துக்கொண்டே வந்திருக்கிறது. 2008 தேர்தலின் வாக்குக் கணிப்பின்படி (Exit polls), இந்த இடைவெளி 1 சதவீதமாகவே இருந்தது. 2012 தேர்தலில் இது 9 சதவீதமாக அதிகரித்தது. 2016-ல் 12 சதவீதமானது.
இந்தக் காலகட்டத்தில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்கான கறுப்பினப் பெண்களின் ஆதரவு ஒப்பீட்டளவில் நிலையாகவே இருந்துவருகிறது. கறுப்பின ஆண்களின் ஆதரவுதான் கணிசமாகக் குறைந்திருக்கிறது. ஒரு செனட் (அமெரிக்க மேலவை) உறுப்பினராக கமலாவின் பணிகள் முன்மாதிரியானவை. குறிப்பாக, சமூக நீதி சார்ந்த விஷயங்களைச் சொல்லலாம். இவரது முந்தைய பணியின் அடிப்படையில் அல்லாமல், செனட் உறுப்பினராக இவரது செயல்பாடுகளின் அடிப்படையில் மட்டும் மதிப்பிடப்பட்டால் இவருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், அது மட்டும் போதாது என்பது நமக்குத் தெரியும்.
பொருளாதாரத்தில் கவனம், குற்றவியல் நீதித் துறையில் சீர்திருத்தம், கறுப்பின மக்களின் வளமான வாழ்க்கைக்கு லத்தீன் அமெரிக்கக் குடியேறிகள் அச்சுறுத்தலாக இருப்பார்கள் எனும் பிரச்சாரம் ஆகியவற்றின் மூலம் கறுப்பின ஆண்களின் வாக்குகளைப் பெறலாம் என்று கணக்குப் போடுகிறார் டிரம்ப்.
உள் முரண்கள்
மேலும், இனரீதியான அநீதிகளுக்கு எதிரான போராட்டங்கள், காவல் துறையில் சீர்திருத்தம் கோரி நடந்த போராட்டங்கள் ஆகியவற்றுடன் கமலாவின் செயல்பாடுகளைப் பொருத்திப் பார்க்க முடியாது. ஒரு வகையில், இரண்டும் எதிர் எதிர் பக்கங்களில் இருப்பவை. அவர்கள் எதிர்த்துப் போராடும் அமைப்பின் ஓர் அங்கமாக இருப்பவர் கமலா. குற்றவியல் நீதி தொடர்பான பிடனின் நிலைப்பாடுகள் ஏற்கெனவே ஒரு பிரச்சினையாக உருவெடுத்திருக்கின்றன.
கமலா அங்கம் வகித்த, 'ஆல்ஃபா கப்பா ஆல்ஃபா' கறுப்பின மகளிர் கழகமானது, கறுப்பின சமூகத்தில் மிகுந்த செல்வாக்கு மிக்கதுதான். எனினும், கறுப்பின மகளிர் கழகமும், சகோதரத்துவ வர்க்கத்தினரும், கறுப்பினச் செயற்பாட்டாளர் வர்க்கத்துடன் அப்படி ஒன்றும் இணக்கமாக இருந்ததில்லை.
1960-களில் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், ரால்ஃப் ஆபர்னேதி, ஜெஸ்ஸி ஜாக்ஸன், தர்குட் மார்ஷல் போன்ற சிவில் உரிமைத் தலைவர்கள் பலர், கறுப்பின சகோதரத்துவ அமைப்புகளிலும், கறுப்பின மகளிர் கழகங்களிலும் உறுப்பினர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால், கடந்த சில தசாப்தங்களாக, இந்த அமைப்புகளுக்கும், இளம் கறுப்பினச் செயற்பாட்டாளர்களுக்கும் இடையில் ஒரு பதற்றமான சூழல் நிலவிவருகிறது. எனது கல்லூரிக் காலத்தில் இதை நான் உணர்ந்திருக்கிறேன். தனது 'ஸ்கூல் டேஸ்' (School Daze) திரைப்படத்தில் இயக்குநர் ஸ்பைக் லீ இந்தப் பதற்றத்தை அழகாகச் சித்தரித்திருப்பார்.
இன்னும் சில மாதங்களுக்குத் தேர்தல் பிரச்சாரங்கள் நடக்கவிருக்கின்றன. பிடனால் கமலா தேர்ந்தெடுக்கப்பட்டதன் தாக்கம் குறித்த உண்மையைத் தேர்தல் முடிவுகள்தான் நமக்குச் சொல்ல முடியும். ஆனால், ஆரம்பத்திலேயே இவரது தெரிவு தொடர்பான விவாதங்களை மிகவும் எளிமைப்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.
பிற அரசியல் தலைவரைப் போல, பிற தனிமனிதரைப் போல கமலாவும் சிக்கல்களைக் கொண்டவர் எனும் நிலையில், துணை அதிபர் வேட்பாளராக இவர் நிறுத்தப்படுவது சாதக பாதகங்களை ஏற்படுத்தவே செய்யும் - குடியரசுக் கட்சியினர் மத்தியிலும், கறுப்பின மக்கள் மத்தியிலும்கூட!
- சார்லஸ் எம். ப்ளோ
நன்றி: 'தி நியூயார்க் டைம்ஸ்'
தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago