‘‘பாப்பா நாளையிலிருந்து நீ பள்ளிக்கூடம் போக வேண்டாம். படிச்சது போதும்!’’
‘‘ஏம்மா! பெயிலானாத்தானே ஸ்கூலை விட்டு நிறுத்துவேன்னு சொன்னே?’’
‘‘ஆமா, சொன்னேன். இப்பவும் நானே சொல்றேன். நீ 3-ம் கிளாஸ் படிச்சதே போதும்!’’
‘‘நான் என்னம்மா தப்பு பண்ணினேன்?’’
‘‘நீ ஒண்ணும் பண்ணலை. என்னால 2 பேரையும் படிக்க வைக்க முடியாது. அவன் ஒருத்தன் படிச்சா ஊட்டுக்கு போதும்!’’
அம்மா ஏன் இந்த முடிவு எடுத்தாள்? கலங்கல் கிராமத்தில் பிரைவேட் பள்ளிக்கூடம். மொட்டை மண்டபத்தில் கல்யாணசாமி வாத்தியார் மொத்தம் 50 பசங்களை 4-ம் கிளாஸ்வரைக்கும் படிக்க வச்சிட்டிருந்தாரு.
பாட புஸ்தகத்தில இருக்கற எல்லா பாடத்தையும் 4 மாசத்தில படிச்சு முடிச்சிட்டா , உடனே பரீட்சை வச்சு, அதில பையனோ, புள்ளையோ பாஸ் ஆயிட்டா அடுத்த வகுப்பு.
1-ங்கிளாஸ்க்கு ஒரு ரூபா, 2-ங்கிளாசுக்கு 2 ரூபா, 3-ங்கிளாசுக்கு 3 ரூபா -4-ங்கிளாசுக்கு 4 ரூபா பீஸ். நான் 2-ங்கிளாஸ் படிக்கறேன். அக்கா 3-ங்கிளாஸ் படிக்கணும். அப்ப தங்கம் பவுன் (சவரன்) விலை 12 ரூபா. பையனுக்கு 2 ரூபா, பொண்ணுக்கு 3 ரூபா சேர்த்தா 5 ரூபா மாசம் சம்பளம் குடுக்கோணும்.
வறக்காட்டில (வறண்ட பூமில) வெளஞ்சது வகுறு (வயிறு)கழுவவே சரியா இருக்கு. மாசம் 5 ரூபான்னா வருஷம் 60 ரூபா ஆகுது. கடன் வாங்கி வட்டி கட்டி திரும்ப கடனை அடைக்கற அளவுக்கு நமக்கு நிச்சயமான வருமானமில்லே. அதனால, அக்காவை 3-ங்கிளாசோட அம்மா நிறுத்திட்டாங்க.
அம்மாவுக்கு காட்டு வேலை. - அக்கா அறியாத வயசிலயே வீட்டு வேலை. மாட்டுக்கட்டுத்தரைய சுத்தம் பண்றது. வாசக்கூட்டி (பெருக்கி) சாணி தொளிக்கறது, சோறாக்கறது -சாவடிக்காட்டு கிணத்தில 4 குடம் தண்ணி சேந்தியாரது. இதுதான் வேலை. கலங்கல் பள்ளிக்கூடம் முடிஞ்சு சூலூர் ஸ்கூல் போக ஆரம்பிச்சேன். தூக்கு போசில தெனஞ்சோறு, சோளச்சோறு, கம்மஞ்சோறு போட்டு பள்ளிக்கூடம் கொண்டு போய் பத்து பசங்க முன்னாடி சாப்பிடறது அவமானமா இருந்திச்சு.
அது பொறுக்க முடியாமத்தான் அம்மாகிட்ட, ‘பொங்கச்சோறு போட முடியாம ஏன் பெத்தே? நான் கேட்டனா?’-ன்னு சுருக்குன்னு ஒரு நாள் கேட்டுட்டேன்.
எங்கம்மாளுக்கு ரொம்ப இறுகிப்போன மனசு. ஆனா எதையும் முகத்தில காட்டாத பொம்பளை. அது அழுதோ -சிரிச்சோ -கல,கலன்னு பேசியோ நான் ஒரு வாட்டிகூட கண்டதில்லை. வரிசையா சாவுகளைப் பாத்து பாத்து உடம்பும் மனசும் மரத்துப் போச்சு.
எப்படியோ சமாளிச்சு கொஞ்சம் அரிசி வாங்கி சட்டில ஒளிச்சு வச்சுகிட்டு தினம் ஒரு நாம்பல் (கைப்பிடி) அரிசி எடுத்து ஸ்கூல் இருக்கறன்னிக்கு மத்தியான சாப்பாடு மட்டும் செஞ்சு தூக்குப் போசில போட்டுக் குடுத்திச்சு.
பழுப்பேறின வெள்ளைச்சேலையில பொழுது கிளம்ப தோட்டத்துக்கு அம்மிச்சியோட போனா, ‘மப்பலுக்கு’த்தான் (சூரிய அஸ்தமனமாகி இருட்டு ஆகும் சமயம்) வீட்டுக்கு வருவாங்க.
அதனால சாப்பாடு செய்யற வேலைய 12, 13 வயசிலயே அக்கா பாத்துக்கும். 90 சதவீதம் அரிசியும் பருப்பு சோறுதான் - சென்னையில லெமன் ரைஸ் -சாம்பார் சாதம் பண்ற மாதிரி -அரிசியும் பருப்பும் சேர்த்து செய்வது -கொங்கு நாட்டில் அவசரத்துக்கு செய்யற சாப்பாடு.
ஒரு பிடி அரிசில எவ்வளவு சோறு வரும். அதை அப்படியே போசில போட்டு குடுத்திடும் அக்கா. ஒரு நாள் சட்டியை எட்டிப் பார்த்தேன். ஓரம் பாரமா அங்கங்கே கொஞ்சம் சோறு ஒட்டியிருந்தது.
‘‘என்ன பாப்பா! சோறு கொஞ்சம் சட்டில இருக்கு போல இருக்கே!’’ன்னு கேட்டுட்டேன்.
‘‘அது கண்ணு! சுத்தமா சட்டியை சொறண்டினா ஊட்டுல தரித்தரம் புடிச்சுக்கும். அதான் கொஞ்சம் உட்டிருக்கேன்!’’ன்னு அக்கா சொல்லிச்சு.
‘அநேகமா நான் ஸ்கூலுக்கு போனதுக்கப்புறம் -பாவம் அந்த புள்ளே - கரண்டிய உட்டு வழிச்சு ஒரு வாய் சாப்பிட்ருக்கும். அதுக்கு மட்டும் பொங்கச் சோறு மேல ஆசை இருக்காதா?’ன்னு அப்பப்ப நெனச்சுக்குவேன்.
பொள்ளாச்சி மாமா மாசா மாசம் 85 ரூபா அனுப்புவாரு எனக்கு. அம்மா சோளமோ, ராகியோ, பருத்தியோ அந்த வருஷம் வெள்ளாமை பண்ணினதை வித்து, அதே வேகத்தில பொள்ளாச்சி போயி அந்த வருஷத்துக் கடனை அடைச்சிடுவாங்க. ராகிக்கழியும், சோளச்சோறுமே தினம் ஒரு வேளை மட்டும் சமையல் பண்ணி, 2 வேளை அதை சாப்பிட்டு பூமியில பாடுபட்டுது.
பாப்பாவுக்கு (அக்காவுக்கு) கல்யாணம் ஆகி குடித்தனமும் வச்சாச்சு. மச்சான் குணம் தங்கம். கல்யாணமாயி வந்த புதுசிலயே சூலூர் சந்தைக்கு போயிட்டு வந்தா - எங்கம்மிச்சியை கூப்பிட்டு, ‘ஆத்தா மடிய புடிங்க!’ன்னு 2 கையிலயும் பொறி கடலைய அள்ளிப் போடறதை பார்க்கறப்ப ஆடாத மனசும் ஆடிப்போகும். அப்படியொரு வெள்ளைச் சோளம்.
ஓவியக்கல்லூரில 4வது வருஷம் படிச்சிட்டிருந்தேன். பாப்பாவுக்கு 3-ம் பேறு (பிரசவம்). பாப்பநாயக்கன்பாளையத்தில - ஒரு சின்ன தருமாஸ்பத்திரில பெண் குழந்தைய பெத்திருந்தாங்க. லீவுல ஊருக்குப் போனேன். குழந்தையை பாத்தேன். வத்தலும், தொத்தலுமா, மழையில நனைஞ்ச குருவிக்குஞ்சாட்டமா இத்துனூண்டு, புளிச்சு,புளிச்சுன்னு பாத்திட்டு, ஒதட்டை (உதடு) பிதுக்கிட்டு தொட்டல்ல படுத்திருந்தது.
அக்கா எங்கிட்ட வந்திச்சு. காதுக்குள்ளே குசுகுசுன்னு பேசிச்சு.
‘‘பொறந்தப்பவே செத்துப் போகும்னு நெனச்சேன். எப்படியோ தப்பிச்சுகிச்சு. அம்மாகிட்ட பேசினேன். பையன் படிப்பு முடியற வரைக்கும் மூச்சு விடக்கூடாதுன்னுட்டா. ஒரு வத்தக்கறவை மாடு - நூறோ நூத்தம்பதுக்கோ வாங்கி குடுத்திட்டு போ. இல்லேன்னா இது பொழைக்காது!’’
அக்கா 80 வயசு வரைக்கும் தான் வாழ்ந்த காலத்தில எங்கிட்ட வச்ச ஒரே வேண்டுகோள் இந்த ஒண்ணுதான்.
வெளியூர்கள்ளே லீவு நாட்கள்ளே போயி ஸ்பாட் பெயிண்டிங் (SPOT PAINTING) செஞ்சு மவுண்ட்ரோட்ல விக்டோரியா டெக்னிக்கல் இன்ஸ்டிட்யூட்ல பிரேம் பண்ணி வச்சா வெளிநாட்டுக்காரங்க அதை விலைக்கு வாங்கிட்டுப் போவாங்க. அதுகளை 500 ரூபாய்க்கு வித்து 20 சதவீதம் கமிஷன் போக 400 ரூபாய் எனக்கு கிடைக்கும். அதை அப்படியே சேர்த்து வச்சு திருப்பதி, திருவண்ணாமலை, தஞ்சை, மதுரைன்னு கோடை விடுமுறையில ஊர் ஊரா போய் படம் வரைய பயன்படுத்திக்குவேன்.
அதில 150 ரூபா ஒதுக்கி அக்காவுக்கு வத்தக்கறவை மாடு ஒண்ணு வாங்கிக் குடுத்தேன். அப்பத்தான் கன்று போட்ட மாட்டை ‘எளங்கன்னு’ கறவைம்பாங்க. வாங்கின பின்னாடி 7,8 மாசம் பால் கறக்கும். அதை வாங்கணும்னா விலை 500 ரூபாய்க்கு மேல ஆகும். வத்தக்கறவை அதிகபட்சம் 2 மாசம்தான் பால்கறக்கும். பிறகு பால் இருக்காது. அடுத்த 2 மாசத்தில புதுசா கன்று போட்டு அப்புறம்தான் பால்கறக்கும். நம்மளுக்கு இளங்கன்னு கறவை வாங்க வசதியில்லே. அதனாலதான் வத்தக்கறவை மாடு அக்கா கேட்டாங்க. நானும் அதை இப்படி சேர்த்து வச்ச காசுல வாங்கிக் குடுத்தேன்.
ஓவியக்கலை படிப்பு முடிஞ்சுது. இறுதி ஆண்டு தேர்வு எழுதறதுக்குள்ளேயே ஏவிஎம்ல நடிக்கிற வாய்ப்புக் கிடைச்சது. முதல் படம் சம்பளம் 1000 ரூபாய். ஜெமினி படத்துக்கு 1500 ரூபாய் சம்பளம் -கந்தன் கருணை 3000 ரூபாய் சம்பளம். கந்தன் கருணை ரிலீஸ் ஆன கையோடு 9 வருஷம் ஓட்டல் சாப்பாடு சாப்பிட்டது போதும்ன்னு அம்மாவை மெட்ராஸ் கூட்டிட்டு வந்திட்டேன்.
1970-ல ஒண்ணரை கிரவுண்டுக்கு கம்மியா ‘தி-நகர்’ல ஒரு குட்டி பங்களா ரூ. 40 ஆயிரத்துக்கு வாங்கினேன்.
அக்கா குழந்தைகளை இங்க படிக்க வைக்கலாம்னு மூத்தவ ஜானகிய கூட்டியாந்து SIET காலேஜ்ல சேர்த்து உட்டேன். 3 மாசம் போயிட்டு எனக்கு படிக்கறதில இஷ்டமில்லை. வீட்லயே இருந்துகிட்டு, படத்தின் கால்ஷீட் விவகாரம், சம்பளம் வசூல்னு உங்களுக்கு மானேஜர் வேலை பாக்கறேன்னு ஜானகி சொன்னா.
படிப்பு வரலேன்னதுக்கப்புறம் வேற என்ன பண்ண முடியும்? எங்கம்மாவுக்கு துணையா பேத்தி இருக்கட்டும்னு விட்டுட்டேன். என் சம்சாரத்துக்கு மெட்ராஸ் புதுசு. சினிமா விவகாரம் சுத்தமா தெரியாது. ஜானகி கூட இருந்தது அவங்களுக்கு வசதியா போச்சு.
‘பட்டிக்காட்டு ராஜா’ -ஷூட்டிங். மகாபலிபுரம் கடற்கரையில பாடல் காட்சி. ஜெயசுதாவும் நானும் நடிச்சிட்டிருக்கோம். 5 மணிக்கு மெட்ராஸ்லிருந்து என் மானேஜர் திருப்பூர் மணி கொஞ்சம் பதட்டமா வந்தாரு. ‘நான் கார் ஓட்டறேன்’னாரு. ‘பரவால்லே, நானே ஓட்டறேன். என்ன ஒரு மாதிரி பதட்டமா இருக்கீங்க?’ன்னேன். ‘ஒண்ணுமில்லே’ன்னுட்டு - ரோட்டை வேடிக்கை பாத்திட்டு வந்தாரு. அடையாறு ஜங்ஷன் வந்ததும் ஜெனரல் ஆஸ்பத்திரிக்கு வண்டிய உடுங்கன்னாரு.
‘‘உண்மைய சொல்லுங்க. என்ன நடந்தது?’’ கேட்டேன்.
‘‘ஒண்ணுமில்லே. சமையல் பண்றப்போ ஜானகி புடவையில தீப்பிடிச்சிருச்சு. அணைச்சிட்டோம். எதுக்கும் செக்கப் பண்ணிக்கலாம்னு ஆஸ்பத்திரிக்கு அனுப்பியிருக்கோம்!’’னாரு.
அவரு எதையோ மறைக்கிறார்னு மட்டும் தெரிஞ்சுது. ஜி.ஹெச் உள்ளே நொழைஞ்சா ஓ.பி வார்டு வாசல்ல எங்கம்மா கசக்கிப் போட்ட கந்தல் துணியாட்டமா சுருண்டு தரையில படுத்திருந்தாங்க.
‘‘டேய்! ஜானகிக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா என்னையும் அவளோட சுடுகாட்டுக்கு தூக்கிட்டு போயிரு. நான் ஊட்டுக்கு வரமாட்டேன்!’’னாங்க. நிலைமையின் தீவிரம் புரிஞ்சுது. தீ விபத்துல அகப்பட்ட நோயாளிகள் வார்டு போனேன்.
பூலோக நரகம்னா அதுதான். கைகால் தோல் உரிஞ்சு, காத்தில படபடன்னு அடிக்க உரிச்சுப் போட்ட கோழி மாதிரி, உள்ளே இருக்கற வெள்ளைத் தோல் ரத்தக்கறையோட ஒரு பொண்ணு - மூஞ்சில தீ பற்றி விகாரமாயிட்ட பெண்கள் - தலைமுடி கருகிப்போய் முதுகுத் தோல் உறிஞ்ச பாட்டி - இப்படி கண் கொண்டு பாக்க முடியாத கோரக்காட்சி. போர்க்களத்தில அவலக்குரல்ம்பாங்க. அதை அங்கதான் கேட்டேன்.
அந்த வார்டுக்கு பொறுப்பு டாக்டர் கே.கே.ராமலிங்கம் இருந்தாரு -செளந்திரா கைலாசம் -கவிதாயினி மருமகன். அவரு கல்யாணத்துக்கு நான் போயிருக்கேன்.
கிட்னியை சுத்தி அடிவயிறு எரிஞ்சிருச்சு. பொழைக்கறது கஷ்டம். பெத்தவங்களுக்கு தகவல் குடுத்திடலாம்ன்னு அவரு சொன்னாரு.
40 வருஷத்துக்கு முன்னாடி - நைலக்ஸ் சேலை ரொம்ப பிரபலம். தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்த நண்பர் ஜானகிக்கு ஒரு நைலக்ஸ் சேலை அன்பளிப்பா குடுத்தாரு. ரொம்ப லேசான சேலை. உடுத்தினா ஒடம்பில இருக்கிறதே தெரியாது. ‘பிங்க்-ப்ளூ-வெள்ளை பூ போட்ட டிசைன். மத்தியான சாப்பாடு -ஜானகி அந்த சேலைய கட்டீட்டு செஞ்சிருக்கா. அடுப்பிலருந்து பாத்திரத்தை எறக்கறப்ப பொடவையில புடிச்ச தீ, பொசு,பொசுன்னு நொறை, நொறையா சுருண்டு உடம்பு ஏகத்துக்கும் பரவிருச்சு. கூட இருந்தவங்க தரையில போட்டு உருட்டி தீயை அணைச்சிருக்காங்க. உடனே ஒரு காரை புடிச்சு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்திருக்காங்க.
காலையில 5.15 மணிக்கு நீலகிரி எக்ஸ்பிரஸ்ல அக்காவும் மச்சானும் வந்தாங்க. தீக்காயங்களில் தவிக்கும் உருவங்களுக்கு நடுவுல கரிக்கட்டையாட்டமா இருந்த உருவத்தை காட்டி அதுதான் ஜானகின்னு அக்காகிட்ட சொன்னேன்.
‘‘எம்பொண்ணு செக்கச்செவேல்னு இருப்பாளே. யாரையோ காட்டறியே!’’ன்னு சொல்லி மயக்கமாயிட்டாங்க.
ஜானகிக்கு முழுசா நெனைவு தப்பலே. திடீர் திடீர்னு எழுந்து - வார்டு போன் அடிக்கும் போதெல்லாம் - ‘அதோ மாமா கூப்பிடறாரு!’ன்னு குரல் குடுத்திட்டே சாஞ்சிட்டது.
நேற்று மகாபலிபுரம் படப்பிடிப்பில் மத்தியானம் சாப்பிட்டது. இடையில் இதுவரை பச்சைத் தண்ணி பல்லில படலே.
ஜானகி உடலில் இதயத்துடிப்பு மட்டும் இருந்தது. அசைவுகள் எல்லாம் அடங்கிடுச்சு.
‘வீட்டுக்குப்போய் குளிச்சிட்டு வர்றேன் மாப்பிள்ளை!’ன்னு மச்சான்கிட்ட சொல்லிட்டு வந்தேன். குளித்து தலை துவட்டும்போது போன்.
பதறி அடிச்சு ஓடி ஜி.ஹெச் படிகளில் ஏறினேன்.
மாப்பிள்ளை கல்லாய் சமைந்து நின்னார். கண்ணுக ரெண்டுல நீர் முத்துக்கள் முட்டிகிட்டு நிக்குது. குரல் தடுமாறுது. இருந்தாலும் நிதானமா சொல்றார்:
‘‘ரெண்டு குழந்தைகளை தோள்ள போட்டு வளர்த்தீங்க. அதில ஒண்ணு போயிருச்சேய்யா..!’’
இந்த வார்த்தைக அப்படியே என் நெஞ்சில ஈட்டியாட்டம் பாயுது.
‘மெட்ராஸ் கூட்டிட்டுப் போய் ஆளாக்கி விடறேன்னு கூட்டியாந்து அநியாயமா எம் பொண்ணை கொன்னு போட்டியேப்பா!’ன்னு அவர் சொல்லியிருந்தா -பெத்தவனுடைய உணர்வு அதுன்னு புரிஞ்சுக்கலாம். இவர் உன் குழந்தைகள்ள ஒண்ணு போயிடுச்சேன்னு சொன்னதை என்னால தாங்கவே முடியலே. கதறீட்டேன்.
கண்ணம்மா பேட்டையில காரியமல்லாம் முடிஞ்சு - உடன் பால்னு நாளைக்கு பண்ற சடங்கையெல்லாம் அப்பவே முடிச்சு ஊர்லருந்து வந்த உறவுகளுக்கு சாப்பாடு போட்டு பஸ், ரயிலுக்கு அனுப்பினோம்.
மச்சான் அக்கா பின்னாடி அவங்க சின்ன மகள் நாய்க்குட்டி மாதிரி ஓடியாந்திச்சு.
‘‘இதா புள்ளே! நீ எங்க வர்ற? பேசாம ஆத்தா கூட இங்கேயே இரு!’’ன்னு தள்ளி விட்டாரு மச்சான்.
எனக்கு தாங்கல.
‘‘போதும்யா! ஏற்கனவே ஒண்ணை கூட்டியாந்து கொன்னுட்டேன். இவளாவது தப்பிப் பொழைக்கட்டும்!’’ன்னு வெடிச்சு அழறேன்.
அதுக்கு அந்த மனுசன் சொல்றார்:
‘‘இவளுக்கும் ஆயுசு கட்டையா இருந்தா செத்துட்டுப் போகட்டும். உனக்கில்லாத புள்ளே எனக்கு வேண்டாம்!’’னு ஊட்டுக்குள்ளே புள்ளைய தள்ளி கதவை வெளிய தாழ்பாள் போட்டுட்டு போயிட்டாரு. மலை மாதிரி எம்மேல நம்பிக்கை வச்சிருக்கற மனுஷனை நினைச்சு விக்கிச்சு நின்னேன்.
அவர் அப்படி உட்டுட்டுப் போன அந்த பெண் சின்ன லட்சுமி வளர்ந்து கல்யாணமாகி, மகன் -மகள் - பேரக்குழந்தைகளோட இப்ப கோவையில் இருக்கிறாள்.
சுவைக்கலாம்...
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
3 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago