ஃபிடல் காஸ்ட்ரோ பிறந்த நாள் கட்டுரை- கரும்புத் தோட்டத்தின் இரும்பு மனிதன்!

By செய்திப்பிரிவு

கொரில்லா போர் முறையால், கியூபாவின் பாடிஸ்டா ஆட்சியை வீழ்த்தி, அமெரிக்காவின் காலனி ஆதிக்கத்தை வீழ்த்திய சோசலிசப் புரட்சியாளர், கியூபாவின் முன்னாள் அதிபர், இறுதிநாள் வரை ஏகாதிபத்திய எதிர்ப்பை நெஞ்சில் நெருப்பாக எரியவைத்து, கியூபாவை தன்னாட்சி, தன்னிறைவு பெற்ற நாடாக உயர்த்திக் காட்டிய ஃபிடல் என்ற போராளியின் பிறந்த நாள் (ஆகஸ்ட் 13, 1926) இன்று.

"நீங்கள் ஒரு குற்றவாளியைப் பிடித்து விசாரணை செய்வதற்கு முன்னர், உங்களால் குற்றவாளியாக கருதப்படும் அவன் எத்தனை காலம் வேலை இல்லாமல் இருந்தான் எனக் கேட்டதுண்டா? 'உனக்கு எத்தனைக் குழந்தைகள்? வாரத்தில் எத்தனை நாட்கள் உனது குடும்பத்தினருடன் உணவு உண்பீர்கள்? எத்தனை நாட்கள் பட்டினி கிடந்தீர்கள்?' என்றெல்லாம் அவனிடம் கேட்டதுண்டா? அவனின் சூழ்நிலை பற்றியாவது விசாரித்ததுண்டா? இவற்றைப் பற்றி எதுவும் அறியாமல், அவனைச் சிறையில் தள்ளி விடுகிறீர்கள். ஆனால், மக்களின் உரிமைகளைச் சுரண்டுபவர்களை ஒரு நாள்கூட சிறையில் தள்ள மாட்டீர்கள். இதுதான் உங்கள் சட்டம்"

1953 ஆம் ஆண்டு மோன் காடா தாக்குதலில் 76 நாட்கள் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டு பின் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட ஃபிடல் காஸ்ட்ரோ நீதிபதியைப் பார்த்து எழுப்பிய கேள்வி... மனித உரிமை மீறலுக்கு எதிராக தன்னையே நெய்யாக உருக்கிய வேள்வி...

ஃபிடல் காஸ்ட்ரோ... கரும்புத் தோட்டத்தில் முளைத்த திட இருப்பு... பிரபஞ்சத்தையே தனது புரட்சிவிரல்களால் பிளந்துப் பார்த்த பிரளயம்... பூகம்பத்தை புரட்டிப்போட்ட நெம்புகோல்... ஏகாதிபத்திய அழுக்கை வெளுக்க வந்த க்யூபாவின் கிழக்கு... சிறுமை கண்டு, சினந்து எழுந்த சிங்கத்தின் சிலிர்ப்பு... அமெரிக்காவின் அடிவருடியான "பாடிஸ்டா" என்ற தொற்றால் பீடிக்கப்பட்டிருந்த க்யூபாவை காக்க வந்த சிவப்புப் போராளி...

க்யூபாவின் பிரான் அருகில் ஒரு கரும்புத் தோட்டத்தில், 1926-ம் ஆண்டு ஆகஸ்ட் 13-ம் நாள் ஏஞ்சல் காஸ்ட்ரோ - லினா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் அல்ஜாந்திரோ காஸ்ட்ரோ என்கிற ஃபிடல் காஸ்ட்ரோ... பிடலின் தந்தை ஏஞ்சல் காஸ்ட்ரோ பெரும் பண்ணையார். அதனால் சுகபோக வாழ்வில் ஃபிடலுக்கு குறைவேதும் இல்லை. எனினும், இவர் இளைஞனாக இருந்தபோது, அமெரிக்கர்களின் ஏகாதிபத்தியத்தில் க்யூபா சிக்குண்டு கிடப்பதைக் கண்டு மனம் வெதும்பினார்.

பாடிஸ்டா ஒரு அமெரிக்கக் கைக்கூலி எனவும், அவரின் உண்மையான முகத்தைத் தோலுரித்துக் காட்டுவதற்காகவும், "குற்றம் சாட்டுகிறேன்" என்ற பத்திரிகையை தொடங்கிய ஃபிடல் காஸ்ட்ரோ, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிடரியை உலுக்கினார். இதனால் காஸ்ட்ரோவுக்கும், அமெரிக்காவுக்கும் உள்ள பகை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளரத் தொடங்கியது.

1953-ம் ஆண்டு மோன் காடா ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்த ஃபிடல் தலைமையில் ஒரு அணி சென்றபோது, அவரின் வாகனம் பழுதானதால், உடன் சென்ற மற்ற போராளிகள் இருட்டில் வழி தெரியாமல், விழி பிதுங்கி நிற்க, திட்டமிட்ட அந்த முதல் தாக்குதல் தோல்வியில் முடிகிறது. எல்லா ஆரம்பங்களும் அவமானங்கள் அல்லது தோல்விகளில்தானே தொடங்குகிறது? பாடிஸ்டா ராணுவத்திடம் சிக்கிக்கொண்ட ஃபிடல், சிறையில் அடைக்கப்பட்டு, 1955-ம் ஆண்டு விடுதலை ஆகிறார். அப்போது நீதிமன்றத்தில் "வரலாறு என்னை விடுதலை செய்யும்" என்று ஃபிடல் நிகழ்த்திய உரைதான், பின்னாளில் "The history will absolve me" என்ற புத்தகமாக வெளியானது.

போராட்டப் பாதையை மாற்றியமைத்து, புதிய யுத்த முறைகளைப் பயில்வதற்காக மெக்சிகோ பயணப்பட்ட ஃபிடல், அங்குதான் "எனது கால்கள் அநீதிகளை எதிர்க்க எல்லைகளைக் கடந்து பயணிக்கும்" என முழங்கிய போராளி சேகுவாராவைச் சந்திக்கிறார். கியூபாவின் விடுதலைக்கு இருபெரும் சக்திகள் இணைகின்றன. கியூபாவில் பாடிஸ்டாவின் ஆதிக்க வெறி அதிகமாகிக் கொண்டிருக்க, ஃபிடலும், "சே"வும் இணைந்து அடர்ந்த வனப்பகுதியில் விவசாயிகளையும், இளைஞர்களையும் ஒன்று திரட்டி போர்ப்பயிற்சிகளை வழங்குகிறார்கள். கொரில்லா யுத்தப் படை வீரர்களாக மாற்றி, 1959-ம் ஆண்டு பாடிஸ்டா அரசை ஆயுதப் போராட்டத்தால் வீழ்த்துகிறார்கள்.

சோசலிசக் குடியரசாக மாறிய கியூபாவுக்கு, ஃபிடல் காஸ்ட்ரோ தலைமை வகித்தார். 1959-ம் ஆண்டு முதல் 1976-ம் ஆண்டு வரை கியூபாவின் பிரதமராகவும், அதன்பின் 1976-ல் இருந்து அதிபராகவும் திகழ்ந்த ஃபிடல் காஸ்ட்ரோ, தனது நாட்டில் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். அனைவருக்கும் இலவசக் கல்வியை அறிமுகப்படுத்தினார். கியூபா வளங்கள், அந்நாட்டு மக்களுக்குச் சொந்தம் எனக் கூறி, அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை புரட்டிப்போட்டார். சுகாதாரம், மருத்துவத்துறையில் கியூபாவை சர்வதேச நாடுகள் கொண்டாடும்படி, பல மாற்றங்களைக் கொண்டு வந்தார் ஃபிடல் காஸ்ட்ரோ. மகப்பேறின்போது தாய்மார்களின் இறப்பு விகிதம் உலகிலேயே கியூபாவில்தான் மிகக் குறைந்த சதவீதம் என்பது அந்நாடு, எளிய மக்கள் நலனில் எத்தனை அக்கறையாய் இருக்கிறது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

எழுத்தறிவு இயக்கம் கியூபாவில் ஒரு புரட்சி வேள்வியாகவே இருந்து வருகிறது.

'தெரியாதவர்கள் கற்றுக் கொள்ளுங்கள்

தெரிந்தவர்கள் கற்றுக் கொடுங்கள்'

கியூபாவின் எழுத்தறிவு இயக்கத்தின் தாரகமந்திரம் இதுதான். எறும்புகளிடமிருந்து சுறுசுறுப்பைக் கற்றுக் கொள்ளும் மனிதர்கள் போல, சிறிய நாடான கியூபாவிலிருந்து அரிய விஷயங்களை உலக நாடுகள் கற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளன.

வயது மூப்பின் காரணமாக கடந்த 2008-ம் ஆண்டு, அதிபர் பொறுப்பை, தனது சகோதரர் ரால் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்து விட்டுப் பதவி விலகினார். சாமானியர்களை எளிதாக அண்டிவிடும் நோய் போராளிகளிடம் போராடித்தான் அனுமதி வாங்க வேண்டியுள்ளது. கடுமையான போராட்டத்திற்குப் பிறகு ஃபிடல் காஸ்ட்ரோவை படுக்கையில் வீழ்த்திய நோய், 2016-ம் ஆண்டு நவம்பர் 25-ம் தேதி, மரணத்தை அவருக்கு வழங்கியது. மரணம்... மாமனிதர்களை என்ன செய்துவிட முடியும்...

"புரட்சி என்பது ரோஜாக்களால் ஆன மெத்தை அல்ல... அது நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் இடையேயான போராட்டம்... கடந்த 1959-ம் ஆண்டு ஃபிடல் காஸ்ட்ரோவின் உதிர்த்த பொன்மொழி... அல்ல அல்ல புரட்சி மொழி...

இந்த பூமிப்பந்தில், அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் அடிமைப்பட்டுக் கிடக்கிற தேசங்களில் எல்லாம் நிகழ்காலத்துக்கும், எதிர்காலத்துக்கும் இடையேயான போராட்டம் நடந்துகொண்டேதான் இருக்கிறது...

லாரன்ஸ் விஜயன்,

மூத்த பத்திரிகையாளர்,

தொடர்புக்கு: vijayanlawrence64@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்