மனைவிக்காக சிலிக்கான் சிலை வடித்த கர்நாடகாவைச் சேர்ந்த ஸ்ரீநிவாச குப்தா இணையவாசிகளால் நவீன கால ஷாஜஹான் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளார். ஷாஜஹான் அன்று காதலிக்காக நினைவுச்சின்னம் எழுப்பினார் ஸ்ரீநிவாச குப்தா இன்று மனைவிக்காக சிலிகான் சிலை வடித்துள்ளார். இரண்டும் காதல் சின்னமே.
கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் கிரகப்பிரவேச புகைப்படம் இணையத்தின் வைரல் புகைப்படமாகியுள்ளது. அந்தப் புகைப்படம் இத்தனை கவனம் ஈர்க்கக் காரணம் அதிலிருந்த பெண்ணின் சிலிகான் சிலை.
உற்று நோக்கினால் மட்டுமே அது சிலிகான் சிலை என்பதை உணர முடியும். அவ்வளவு தத்ரூபமான சிலை என்பதால் மட்டுமல்ல அந்த சிலைக்குப் பின்னால் இருக்கும் மெய்சிலிர்க்க வைக்கும் அன்பும், பாசமும், காதலுமே புகைப்படத்தை வைரலாக்கியுள்ளது என்பதையும் அறிய முடியும்.
கர்நாடகாவின் வடக்குப் பகுதியில் உள்ள கொப்பால் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸ் குப்தா. அவரது மனைவி கே.வி.என்.மாதவி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் மூத்தவர் அனுஷா, இளையவர் சிந்துஷா. அழகான அமைதியான குடும்பத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்னதாக ஒரு புயல் வீசியுள்ளது. குடும்பத்துடன் திருப்பதி சென்றபோது நடந்த சாலை விபத்தில் மாதவி உயிரிழந்தார். அன்பால் கட்டப்பட்ட அந்தக் குடும்பம் நொறுங்கிப் போனது. மாதவி பார்த்துப்பார்த்து தெரிவு செய்து கொடுத்த சொந்த வீட்டுக்கான வரைபடம் அடித்தளம் அமைக்கப்பட்டதோடு நின்றுபோனது.
மாதவியின் இழப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீள முயற்சித்த குப்தா குடும்பத்தினர் அவரின் கனவு இல்லத்தின் கட்டுமானத்தை மீண்டும் தொடங்கினர்.
மாதவி இருந்திருந்தால் வீட்டில் என்னென்ன அம்சமெல்லாம் சேர்க்கப்பட்டிருக்குமோ அத்தனையும் ஒருசேர அமைக்கப்பட்டு அந்த வீடு கட்டமைக்கப்பட்டது. ஆகஸ்ட் 7, 8 தேதிகளில் கிரகப்பிரவேசம் செய்ய தேதி குறித்தாகிவிட்டது.
ஆனால், ஸ்ரீநிவாச குப்தாவும் அவரின் மகள்களும் மாதவி இல்லாமல் எப்படித்தான் விழாவை நடத்துவது என வேதனையில் இருந்துள்ளனர். அப்போதுதான் ஸ்ரீநிவாச குப்தா மாதவியின் சிலிகான் சிலையை வடிக்க முடிவெடுத்துள்ளார்.
இது குறித்து அவரின் இளைய மகள் சிந்துஷா இந்து தமிழ் இணையதளத்துக்கு அளித்த பேட்டியில், "அம்மா இறந்த பிறகு எங்கள் குடும்பத்தில் மிகப்பெரிய வெறுமை சூழ்ந்தது. அதிலிருந்து வெளிவருவது அவ்வளவு எளிதானதாக இல்லை.
அம்மாவும் அப்பாவும் ஆழமான பாசம் கொண்ட தம்பதி. இருவரின் பிறந்தநாளும் ஜூலை 23-ம் தேதியே. அதனால் ஆண்டுதோறும் அவர்களின் பிறந்தநாள் விழாவே எங்கள் வீட்டில் ஒரு பெரிய கொண்டாட்டமாகத்தான் இருக்கும். இருவரும் அவ்வப்போது சண்டை போட்டுக்கொள்வார்கள். ஆனால், அந்த சின்னச்சின்ன சண்டைதான் அவர்களின் பாசத்தை அவ்வளவு ஆழகமாகக் கட்டமைத்தது என நான் நம்புகிறேன். கணவன், மனைவி உறவு மட்டுமல்ல. எந்த உறவிலும் சிறு உரசல்கள் சுகமானதே.
அம்மா மறைந்த போது வீட்டின் அடிமட்டம் மட்டும் முற்றிலுமாக முடிந்திருந்தது. அதன் பின்னர் ஒரு சிறு இடைவேளைக்கு அப்புறம் கட்டுமானம் வேகமெடுத்தது. கிரகப்பிரவேசம் தேதி குறித்தபோது அம்மாவை ரொம்பவே மிஸ் பண்ணோம்.
அப்பாதான் சிலிகான் சிலை யோசனையைச் சொன்னார். பெங்களூருவில் உள்ள ஒரு பொம்மை தயாரிக்கும் தொழிற்சாலையை அணுகினோம். ஸ்ரீதர் மூர்த்தி என்ற கலைஞர் எங்களுக்காக அந்த சிலிகான் சிலையை செய்து கொடுத்தார். சிலை முதன்முதலில் வீட்டுக்குள் வந்திறங்கியபோது எங்கள் அம்மாவே மீண்டும் எங்களிடம் வந்துவிட்டது போல உணர்ந்தோம். அப்பாவும் அப்படியே கண்களின் நீர் ததும்பவே அம்மாவின் சிலையை நாங்கள் மூவரும் எதிர்கொண்டோம்.
கிரகப்பிரவேச விழாவிற்க வந்த விருந்தினர்கள் பலரும் சிலையை ஆச்சர்யத்துடனேயே பார்த்தனர். நெருங்கிய உறவினர்கள் நெகிழ்ந்து கண்ணீர் சிந்தினர். நண்பர்கள் நம்பமுடியாமல் திகைப்புடன் பார்த்தனர்.
நாங்கள் இது வைரலாக வேண்டும் என நினைக்கவே இல்லை. சொல்லப்போனால் எங்களின் முகநூல் பக்கத்தில்கூட இதைப் பதியவில்லை. ஆனால், எங்கள் வீட்டுக்கு வந்த விருந்தினர்கள் சிலர் புகைப்படத்தையும், வீடியோவையும் தத்தம் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். அப்படித்தான் இது வைரலாகியுள்ளது. அம்மாவின் சிலையைப் பார்த்து எல்லோரும் பதிவிடும் கருத்துகள் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது" என்றார்.
சிலையை வடிவமைத்த பெங்களூருவைச் சேர்ந்த ஸ்ரீதர் மூர்த்தியிடம் பேசினோம். அவர், "இந்தச் சிலையை முழுக்க முழுக்க சிலிகான் (Silicon), கண்ணாடி இழைகள் (fibre glass) கொண்டு செய்துள்ளேன். இதை நீங்கள் தொட்டுப்பார்த்தாலும் கூட நிஜமாகவே மனித உடலைத் தொடுவதுபோல் உணர்வீர்கள். இந்தச் சிலையை விரும்பியபடி உட்கார வைக்கலாம். நிற்க வைக்கலாம், படுக்க வைக்கலாம். எளிதில் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டு செல்லலாம்.
சிலையை வடிக்கும் ஸ்ரீதர் மூர்த்தி
ஸ்ரீநிவாச குப்தா ஏற்கெனவே தனது தாயாரின் சிலிகான் சிலை ஒன்றை என்னிடம் செய்து வாங்கினார். அதன் அடிப்படையிலேயே மனைவிக்கும் சிலை செய்யச் சொன்னார். நான் எனது தொழில் அனுபவத்தில் சுவாமி சிலைகள், தலைவர்கள் சிலைகள் எல்லாம் செய்து கொடுத்துள்ளேன். ஆனால், ஸ்ரீநிவாச குப்தா தான் முதன்முதலில் தனது உறவினர்களுக்காக சிலை கேட்டார். அதுவும் மனைவிக்காக அவர் சிலை கேட்டபோது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. மனைவிக்காக தாஜ்மஹாலைக் கட்டிய ஷாஜஹான் தான் என் கண் முன்னால் வந்து சென்றார். மிகுந்த மகிழ்ச்சியுடனேயே சிலையைச் செய்து கொடுத்தேன். இந்த சிலையை வடிக்க ரூ.3 லட்சம் செலவானது." என்று உணர்வுப்பூர்வமாகப் பேசினார்.
ஸ்ரீநிவாச குப்தாவின் செயலை நெட்டிசன்கள் ஷாஜஹானுடன் ஒப்பிட்டு நெட்டிசன்கள் விமர்சிக்கின்றனர். இது மிகைப்படுத்தப்பட்ட விமர்சனம் என நினைக்கிறீர்களா அல்லது உங்கள் தந்தைக்கு உகந்த விமர்சனம் எனக் கருதுகிறீர்களா என்ற கேள்விக்குப் பதிலளித்த சிந்துஷா, "நாங்கள் இது இவ்வளவு வைரலாகும் என நினைக்கவில்லை. ஆனால், இந்த சிலை வந்ததால் எங்கள் குடும்பம் மீண்டும் முழுமையானதாக உணர்கிறோம். அப்பாவின் அன்புக்குக் கிடைத்த விமர்சனத்தில் எங்களுக்கு மகிழ்ச்சியே" என்றார்.
பேசித்தீர்க்கும் பிரச்சினைகளுக்குக் கூட சகிப்புத்தன்மை இல்லாமல் இன்று திருமணங்கள் முறிவதும், உறவுகள் முறிவதும் அதிகமாக இருக்கிறது. இப்படி ஒரு காலத்தில் மனைவிக்காக சிலை வடித்த ஸ்ரீநிவாச குப்தா பலரின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். அன்பை விதைப்போம். அன்பை வளர்ப்போம்.
வீடியோ இணைப்பு: (ஏஎன்ஐ )
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago