பொள்ளாச்சி மாமா எங்கம்மாவோட பெரியம்மா மகன். இருந்தாலும் அந்தக்காலத்தில ஒண்ணுக்குள்ள ஒண்ணுன்னு கூடப் பொறந்த தம்பிய விட பாசங்காட்டுவாரு மாமா.
என்னை பொறுத்தவரைக்கும், அவரு தேவலோகத்தில இருந்து எறங்கின மனுஷன்தான். 6 அடிக்கு மேல உயரம், அண்ணாந்து, தென்னங்கொலைய பாக்கற மாதிரி, வாயத்தொறந்திட்டுத்தான் பார்ப்பேன்.
அமெரிக்கன் கிராப்பு. சுருட்டை முடி. கருகருன்னு முறுக்கு மீசை. 2 எலுமிச்சம் பழத்தை வச்சா அப்படியே நிக்கும். அவ்வளவு வெரசலான மீசை. ரெண்டு கண்ணும் முட்டைக்கண்ணு. கூரான மூக்கு. ‘லண்டன் நேவிகட்’ சிகரெட் எப்பவும் பொகைஞ்சிட்டே இருக்கும். வெள்ளை வெளேர்ன்னு ‘லாங்கிளாத்’ அரைக்கை சட்டை, வேட்டி. பொத்தான் மூணும் தங்கத்தில செஞ்சது. பொத்தானை இணைக்கிற சங்கிலியும் தங்கம்.
ஊருக்குள்ளே நடந்து வந்தார்னா, நம்ம அறியாம கைகள் சேர்ந்து கும்பிடும். அப்படி ஒரு கம்பீரம்.
கூடப்பொறந்த பெரியக்கா 9 வயசிலயே தாலியறுத்துட்டு, பஞ்ச பரதேசியாட்டம் கிராமத்தில இருக்காளே, அவங்களுக்கு ஏதாவது செய்யோணும்ன்னு எங்கூருக்கும், கலங்கலுக்கும் நடுவால 15 ஏக்கரா பூமி வாங்கி, கிணறு தோண்டி சாளை கட்டி அதில குடி வெச்சவரு.
ஒவ்வொரு வருஷமும் தைப் பொங்கல் சமயம் கார்ல குடும்பத்தோட இங்க வருவாரு. ஏரோப்பிளேனைப் பார்த்து, பின்னாலதான் எல்லோரும் வாயத் தொறந்தோம். அந்த வயசில காரைப் பார்த்தே வாயப் பொளந்திட்டு வேடிக்கை பார்த்தோம். கார் சக்கரத்தில நடுவால கண்ணாடியாட்டமா ஒரு மூடி இருக்கும் (UPCAP). அதுல மூஞ்சி நெளிஞ்சு கோணமாணலா தெரியும். லேசா பல்லைக் காட்டி சிரிச்சா காதுவரைக்கும் வாய் விரிஞ்ச மாதிரி மூஞ்சி தெரியும். சிரிப்பா இருக்கும்.
எஞ்சினை ஸ்டார்ட் பண்ணினதுக்கு அப்புறம் பின்னாடி குழல்ல புகை வரும், என்ன ஒரு வாசனை! சுத்தமான பெட்ரோல் இருந்த காலம்.
மாமா, அத்தை, மகன், ரெண்டு பொண்ணுங்க வந்து எறங்குவாங்க. எந்த ஊர்லயுமே பொண்ணுங்களுக்குத்தானே அலங்காரம்? சிவப்பு வெல்வெட் கலர்ல பைப்பிங் வச்ச ஜாக்கட்டு, கிளிப்பச்சை கலர்ல பாவாடை அதில கீழ்பக்கம் 4 இஞ்சுக்கு தங்க கலர் ஜரிகை பார்டர். கழுத்தில நெக்லஸ், கைகள்ல நெளிநெளியா வளையல்கள். காதில கம்மல், லோலாக்கு. என்ன ஒரு தெய்வீக அழகு!
அந்த வயசிலருந்தே கடவுள் மேல எனக்கு கோவம்.
கோழி இனத்தில சேவல்தான் கம்பீரம். மஞ்சள் செவப்பு, கருநீலம், சிவப்பு கொண்டையோட அத்தனை அழகா இருக்கும். ஆண் சிங்கத்துக்கு அழகூட்டறது பிடரி மயிர். முருகனுக்கே வாகனமா இருக்கற மயில் இனத்தில அழகா தோகை விரிச்சு ஆடறது ஆண் மயில். யானைகள்ள ஆண் யானைக்குத்தான் தந்தம். இப்படி பறவைகள், விலங்குகள்ள ஆண் இனத்தை அழகாப்படைச்ச கடவுள், மனுஷப்பிறவில மட்டும் தேவதையாட்டமா பெண்களை படைச்சுத் தொலைச்சிட்டான்.
ஆயிரம் ஆம்பிளைகள்ள 50 பேர் அழகா கம்பீரமா இருப்பாங்க. ஆனா, ஆயிரம் பொம்பளைகள்ள 900 பேர்
ஒரு வாட்டி திரும்பிப் பாக்க வக்கற அழகோட இருப்பாங்க. என்ன பண்றது?
மாமா எப்ப ஊருக்கு வந்தாலும் நாய்க்குட்டியாட்டமா அவர் பின்னாடி தோட்டத்து வரைக்கும் நிழலாட்டமா போவேன்.
செத்துப் போன எங்கண்ணன் சண்முகத்தை பொள்ளாச்சி கூட்டீட்டு போயி, 2, 3 வருஷம் அவரு வீட்லயே தன் புள்ளையாட்டம் வளர்த்தி படிக்க வச்சவரு. என்னைப் பாக்கறப்பவெல்லாம், ‘தண்டபாணி! நீ நல்லா படி. நான் உன்னை மேல படிக்க வைக்கிறேன்னு சொல்லுவாரு. என்னன்னு புரியாம அந்த வயசில சும்மா தலையாட்டுவேன்.
மாட்டுப் பொங்கலன்னிக்கு 2 காரி எருதுகளையும் (கருப்பு) குளிப்பாட்டி கொம்புகளை சீவி, செவப்பு கலர் ஒரு கொம்புக்கு நீலக்கலர் ஒரு கொம்புக்கு அடிச்சு -வாசல்ல குளம் கட்டி அந்த மாட்டை விட்டு மிதிக்க வச்சு குளம் ஒடைஞ்சதுக்கப்புறம் பூஜை பண்ணி, தழுகை சாதம் (கரும்பு சர்க்கரை, பழம் கலந்த சாதம்) எல்லோருக்கும் ஒரு உருண்டை சாப்பிடக் குடுப்பாங்க.
சாளைக்குள்ள ஜமுக்காளத்தை மடிச்சுப் போட்டு, அதில உட்காரச் சொல்லி, வாழை எலையில சாதம் பரிமாறுவாங்க. கோடீஸ்வரன், குடிசைவாசிய பக்கத்தில உட்கார வச்சு சாப்பிட்டா எப்படி ஒரு சந்தோஷம் அவனுக்கு வருமோ அதையெல்லாம் நான் அனுபவிச்சிருக்கேன்.
பத்துப் பன்னிரண்டு வயசு தாண்டியாச்சு. மொட்டை வெயில்ல மண்டை காய, காடுகரையில வேலை பாக்கற சனத்துக்கு பொள்ளாச்சி போறது தேவலோகம் போய் பாக்கற மாதிரிதான்.
காரணம்பேட்டை எங்க ஊர்லருந்து கிழக்கால பல்லடம் ரோட்ல இருக்கற ஊரு. சத்திமங்கலத்திலருந்து பொள்ளாச்சிக்கு சாயங்காலத்தில மட்டும் SRT பஸ் ஒண்ணு போகும். கூட்டமா இருந்தாலும் பொள்ளாச்சி டிக்கட்டை காரணம் பேட்டையில நிறுத்தி ஏத்திட்டுப் போவாங்க.
வரக்காத்து அடிச்சு ரோடு பூராவும் புழுதி பறக்கற எங்க ஏரியாவை தாண்டி நெகமம் ஊரை நெருங்கும் போதே கருமேகங்கள் படைபடையா திரண்டு வந்து ரோடை மறைக்கற அளவுக்கு ‘சட்டடி அடிச்சு’ மழை பேயும். ‘வைப்பர்’ போட்டாலும் ரோடு தெரியாது. டிரைவர் நிதானமா ஓட்டுவாரு. பஸ்ஸூக்குள்ள சாரல் அடிக்கக்கூடாதுன்னு ‘ஷட்டர்’களை எறக்கி விடுவோம். ஆவேசமா வீசற காத்தில ஷட்டர் விலகி மழைச்சாரலை உள்ளே இருக்கறவங்க மேல தெறிக்க விட்டுடும்.
சாயாங்கால நேரமே ராத்திரியாட்டமா ஆயிப்போகும். எதித்தாப்ல வர்ற வண்டிகளுக்கு ‘சிக்னல்’ குடுக்க டிரைவர் ஹெட்லைட்டை போட்டு உட்ருவாரு.
7 மணிக்கு கும்மிருட்டாயிரும். ரோட்டு விளக்கு வெளிச்சத்தில பஸ் பொள்ளாச்சி போய் சேரும். SRT பஸ் ஸ்டேண்டலருந்து மூணு கட்டடம் தாண்டினா எங்க மாமாவோட சென்ட்ரல் லாட்ஜ் -தேர்முட்டி வீதில இருக்கற ஓட்டல். தெரு பூரா வெள்ளக்காடாயிருக்கும். நான் 5 அடி உயரமிருப்பேன். இடுப்பு வரைக்கும் தண்ணிலே டவுசர் எல்லாம் நனைச்சுட்டு கடைக்குப் போய்ச் சேருவேன்.
எங்க மாமன் மகன் ரத்தினம் என்னை விட 2 வயசு பெரியவர். அவரு வந்து உள்ளே கூட்டிட்டு போவாரு.
ஓட்டலுக்குள்ள 2 பக்கமும் பத்து வரிசை டேபிள் சேர் போட்டிருக்கும். சாதாரணமா 100 பேர் உட்கார்ந்து சாப்பிடற அளவுக்கு விசாலம். டைனிங் ஹாலை தாண்டி உள்ளே போனா கிணறு.
அதை ஒட்டி பெரிய பெரிய கரி புடிச்ச அண்டா, குண்டாவெல்லாம் பெரிய பிரஷ் வச்சு தேச்சு
கழுவீட்டிருப்பாங்க. அதைத் தாண்டினா சமையல் செய்யற மண்டபம். கார்த்தாலருந்து ஓயாம காலைல டிபன் - மத்தியானம் பிரியாணி - சாயங்காலம் போண்டா, பஜ்ஜி -ராத்திரி சாப்பாடுன்னு செஞ்சிட்டே இருக்கிறதினால அடுப்பை அணைக்கவே மாட்டாங்க. சமையல்கட்டுக்குள்ள நுழைஞ்சதுமே, எரிமலைகிட்ட போன மாதிரி வெக்கை- சூடு நம்ம உடம்பை சுடும்.
அதை தாண்டினா, ரூம் முழுக்க சுட்டு குவிச்சு வச்சிருக்கற லட்டு, ஜிலேபி, மைசூர்பாகு -குட்டி மலையாட்டமா இருக்கும்.
அதையும் தாண்டினா குடியிருக்கற வீடு. ஹால், படுக்கை அறைகள், மாடிப்படி மேல, விசாலமான -காத்தோட்டமான அறை. அதிலதான் மாமா தூங்குவாரு.
அப்படியே போனா கடைசில பாத்ரூம், கழிப்பறை- கதவை தெறந்தா அடுத்த தெரு. அதாவது உடுமலை ரோடுல ஆரம்பிச்சு அடுத்த தெரு வரைக்கும் மாமா ஓட்டலும் குடியிருக்கற வீடும் -ரயில் பெட்டியாட்டமா நீளமா இருக்கும்.
பஸ்ஸில வந்த களைப்புக்கு சீக்கிரமா சாப்பிட்டு தூங்கப் போயிட்டேன். காலையில பாத்ரூம் உள்ள போனா - ‘பியர்ஸ்’ அப்படின்னு ‘பிங்க்’ கலர்ல கண்ணாடியாட்டமா சோப். கிராமத்தில நாம எப்ப சோப் போட்டு குளிச்சிருக்கோம்? இதைப் பாத்திட்டு ஊருக்குப் போயி, அம்மாகிட்ட சண்டை போட்டு லைஃப் பாய் சோப் - பணக்காரங்க வீட்டில, செல்லப்பிராணிய குளிப்பாட்டற சோப் - வாங்க என்ன கஷ்டப்பட்டேன்னு இப்ப நினைச்சுப் பாக்கறேன். அந்த சோப்,எங்க ஊரு கசப்புத் தண்ணிலே நுரைக்கவே இல்லே. திரி திரியா வந்திச்சு அதுக்கு வேற அழுதேன்.
இங்க மாமா வீட்ல பியர்ஸ் சோப் -‘ரெவலான்’ செண்ட். மாமா மகன் தினம் 2 வாட்டி குளிச்சு -டிரஸ் மாத்துவாரு. ராஜகுமாரன்!
அன்னிக்குத்தான் ‘மக்களைப் பெற்ற மகராசி’ -படம் சிலீஸ் ஆகியிருந்தது. சினிமாவுக்கு போலாமான்னு ரத்தினம் கேட்டாரு. குமரிப் பொண்ணாட்டமாக வெட்கப்பட்டு தலையக் குனிஞ்சிட்டு போலாம்னு தலையை ஆட்டினேன்.
மாமா கடையில -கல்லாப்பெட்டி பக்கத்தில அப்ப ஓடற படத்தோட விளம்பர தட்டி வைப்பாங்க தியேட்டர்காரங்க. அதனால அவங்களுக்கு இலவச டிக்கெட் 5 குடுப்பாங்க. அதை வாங்கிட்டு ‘செல்லம்’ டாக்கீஸ் போனோம்.
பொள்ளாச்சி கொஞ்சம் வசதியான ஊரு. பொம்பளைங்க மூஞ்சி கழுவி, பவுடர் போட்டு, கண்ணுக்கு மை எழுதி பொட்டு வச்சு தலைக்கு மணக்க மணக்க மல்லிகைப்பூ வச்சு, வெங்கலமணி அடிச்சாப்பல சிரிச்சுகிட்டு கூட்டம் கூட்டமா படம் பாக்க வந்தாங்க. ஆம்பிளைங்க வேட்டி சட்டைதான். கொஞ்சம் வசதியானவங்க கையில வாட்ச் மோதிரம் போட்டிருந்தாங்க.
தியேட்டருக்குள்ளே சுவத்தில புடைப்பு சிற்பங்கள் - ஆண், பெண் காதல் செய்வது போல ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ்-ல (சைனாக்களிமண்- வெள்ளை நிறம்) ரெண்டு பக்கமும் செஞ்சு சுவத்தில பதிச்சிருந்தாங்க.
‘மக்களைப் பெற்ற மகராசி’ - ஏ.பி. நாகராஜன் -வி.கே. ராமசாமி கூட்டுத்தயாரிப்புன்னு பின்னாடி தெரிஞ்சுகிட்டேன்.
சேலம் பக்கம் அக்கம்மா பேட்டை வேளாளக்கவுண்டர் குடும்பத்தில பொறந்தவர் ஏ.பி.நாகராஜன் அவர்கள்.
அதனால சிவாஜி பேசறதுக்கு மட்டும் கொங்கு தமிழில் வசனம் எழுதியிருந்தாரு.
‘என்ற பொறந்தவ பட்டணத்தில படிக்கப்போனவ இன்னிக்கு ரயில்ல நம்மூருக்கு வருதுங்க. டேசன்ல போய் நான் கூட்டியாரணும்ங்க. அதுக்கு நம்மகிட்ட வில்லு வண்டி வாங்கிட்டு போலாம்ன்னு வந்தங்க மாமோவ்’-னு சிவாஜி இழுத்து, இழுத்து பேசறப்ப சனங்க சந்தோஷத்தை பாக்கோணும்.
அதை விட ‘மணப்பாறை மாடுகட்டி மாயவரம் ஏரு பூட்டி வயக்காட்டை உழுதுபோடு சின்னக்கண்ணு -பசும் தளைய போட்டு பாடுபடு செல்லக்கண்ணு’ன்னு ஆரம்பத்தில ஒரு பாட்டு வரும்.
அதில ஒரு வரி -
‘பொதியை ஏத்தி வண்டியில பொள்ளாச்சி சந்தையில விருதுநகர் வியாபாரிக்கு சின்னக்கண்ணு அதை வித்துப் போட்டு பணத்தை எண்ணு செல்லக்கண்ணு!’ன்னு TMS பாடுவாரு.
‘அடேய்ய்! நம்மூரு பாட்ல வருதுடா’ன்னு தியேட்டரே எழுந்து நின்னு சீட்டு மேல ஏறி கை தட்டி கொண்டாடினது இன்னும் பசுமையா இருக்கு.
சுவைக்கலாம்...
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
3 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago