வடவறத்து (வடக்கு) வீட்டு கருப்பியன், ‘டப்பா’வாட்டா ஏதோ ஒண்ணு வாங்கீட்டு வந்தாரு (Box camera - என்று பின்னால் தெரிந்து கொண்டேன்). ‘இதில போட்டோ எடுக்கலாமாக்கும். நீ வந்து நில்லு!’ன்னாரு. பரமசிவன் கோயிலுக்கு கிழபுறம் (கிழக்கு) சூரிய வெளிச்சம் மூஞ்சில படற மாதிரி நின்னேன்.
அந்த டப்பாவுல இருக்கற கண்ணாடியப் பாத்துட்டு, ‘கிளிக்’ பண்ணினாரு. நம்ம மூஞ்சி எப்படி இருக்கும்னு கண்ணாடிய பாத்ததோட சரி.
மறுநாள் சூலூர் போயி பிரிண்ட் போட்டு கொண்டாந்து காட்டுனாரு. நான் 5 அடி உயரம். என் நிழல் 20 அடி நீளம் போட்டோவுல உழுந்திருந்தது. பொழுது உழுகறதுக்கு முன்னால எடுத்ததனால அசிங்கமா போச்சு.
அதுக்கப்புறம் 2, 3 வருஷம் கழிச்சு, ஊருக்குள்ளே ‘பம்பாய் மிட்டாய்’ விக்கிறதுக்கு உலக்கையாட்டமா ஒரு மரம். அது மேல கலர்கலரா இனிப்பு உருண்டை இருக்குமே. அதை தூக்கீட்டு வர்ற மாதிரி, கரேன்னு ஒரு சதுர பொட்டி, மூணு காலோட (Stand) ஒருத்தர் தூக்கீட்டு ஊருக்குள்ள வந்தாரு.
அதுதான் போட்டோ புடிக்கற பொட்டியாம். பகல் 12 மணி. உச்சிப் பொழுது. ஸ்டேண்டை விரிச்சு வச்சு பொட்டிய தயார் பண்ண - கருப்புத் துணிய மூடிட்டு உள்ளே போய் என்னமோ பண்ணினாரு. அப்புறம் வெளிய வந்து - எங்க மூஞ்சில பவுடர் அடிக்கச் சொல்லி நல்ல புடவை, அங்கராக்கு (சட்டை) போடச் சொல்லி பெஞ்சில உட்கார வச்சு, ஊறுகாய் பாட்டில் மூடியாட்டமா, கருப்பா இருந்த மூடிய 2 செகண்ட் திறந்திட்டு, கேமரா வாயை பட்டுன்னு அந்த மூடியால மூடிட்டு, ‘போட்டோ எடுத்தாச்சு’ன்னாரு.
என்ன ஆச்சர்யம்னா, பிரிண்ட் போட ஸ்டுடியோவுக்கு போயிட்டு நாளைக்குத்தான் வருவாருன்னு நெனச்சா, கோழிக்கூட்டுக்குள்ளே கைய விட்டு, முட்டை எடுக்கற மாதிரி - எங்க படத்தை (PRINT) அப்பவே டப்பாவுக்குள்ளே கைய விட்டு எடுத்துக் காட்டினாரு.
அவ்வளவு சீக்கிரத்தில போட்டோ எடுத்து பிரிண்டும் போட்டது ஆச்சர்யமா இருந்தது.
ஆனா, ஒரு கொடுமை! எங்கக்கா லைட் புளூ கலர்ல -வெளிர் நீலக்கலர்ல பொடவை கட்டியிருந்ததால -படத்தில வெள்ளைப் பொடவை கட்டின மாதிரி இருந்திச்சு.
அக்கா ‘பொக்கு’ன்னு போயிடுச்சு. காசு பத்து ரூபாய குடுத்திட்டு, அந்த போட்டோவை வாங்கினோம். வெள்ளைச் சீலையில கொமரிப்பொண்ணு இருக்கற படத்தை பிரேம் போட்டு வைக்க வேண்டாம்னு அம்மா சொல்லீட்டாங்க.
போட்டோவுக்கும் எனக்கும் ராசி இல்லையோன்னு மனசுக்குள்ளால ஒரு ஏக்கம் வந்திருச்சு. எங்கக்காளுக்கு கண்ணாலம் ஆகறப்போ, எனக்கு 12 வயசு.
பொண்ணு மாப்பிள்ளையோட ஒரு போட்டோ புடிச்சுக்கோணும்னு கோயமுத்தூர் போனோம். எங்க பெரியம்மா மகன், நாச்சி முத்தண்ணனும் கூட வந்தாரு. கோவை ராயல் தியேட்டர் வாசலுக்கு கிழபுறம், 2-வது கட்டடம் ராஜா போட்டோ ஸ்டுடியோ.
மச்சான் வரி வரி சட்டை, தோள்ள மஃப்ளர் போட்டு, இட்லர் மீசை வச்சு, அமெரிக்கன் கிராப்போட ‘கும்’முன்னு இருந்தாரு. எங்கக்கா கருப்பு நீல சேலை. பார்டர் வச்ச ஜாக்கெட் போட்டு, கழுத்துல உள்கழுத்து டாலரோட ஒரு செயின் போட்டிருந்தாங்க. இடது பக்கம் மூக்குத்தீருந்தாங்க. காதில் கம்மல், கொப்பு, மாட்டல்னு..., புதுப்பொண்ணும் லட்சணமாத்தா இருந்திச்சு.
எனக்கு , 5 வயசில எங்கம்மிச்சி காது குத்திப் போட்டு உட்ட ஸ்டார் கடுக்கன் காதில இருந்திச்சு. மடிச்ச கையோட ஒரு வெள்ளை சட்டை. கசங்கிப் போன ஃபுல் பேண்ட். காலுக்கு ஷூ போட்டோ ஸ்டுடியோவுல குடுத்தாங்க. வெறுங்கையோட இருக்கனேன்னு நாச்சிமுத்து அண்ணன் தன்னோட ரிஸ்ட் வாட்ச்சை எனக்கு கட்டி உட்டாரு.
இந்தப் படத்தைத்தான் பொன் போல பாதுகாத்து வர்றேன். ஒரு ஓவியன் பார்வையில - அப்பவே எனக்கு முருகன் வேஷம் போடறதுக்கான கண்ணு, மூக்கு, வாய், ஓவல் ஷேப் முகம் இருந்திருக்கு. அதுக்கப்புறம் 5, 6 வருஷம் போட்டோ எடுக்கறதுக்கான வாய்ப்பே வரலே.
என் வயித்தெரிச்சலைக் கொட்டிட்டிருந்தவர் கிருஷ்ணசாமி. நல்லா வாட்டசாட்டமா 6 அடிக்கு பக்கமா உயரம், பாசமலர் சிவாஜி புருவம் மாதிரி அகலமான , அடர்த்தியான புருவம். அலை, அலையா தலைமுடி - முத்துப் பல்வரிசை. செக்கச் செவேன்னு வெள்ளைக்காரனாட்டமா இருப்பாரு.
ஆள்தான் நாம உசரமா? இல்லே -கிட்டுசாமி மாதிரி செவப்பா? இல்லே, தலை முடியாவது சுருட்டையா இருந்திருக்க கூடாதான்னு ஏங்குவேன். சினிமாவுல எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஜெமினி கணேசன் ரெண்டு பேருக்கும் அலை, அலையா தலைமுடி.
அந்த மாதிரி நம்ம முடியையும் அலையலையா மாத்திப் பாக்கலாம்ன்னு - ஒரு நாள் தலைக்கு ‘திக்கா’ வெளக்கெண்ணெய் பூசி, பொகத்தாளை (புகையிலை) குத்தற இரும்புக்கம்பிய அடுப்பில வச்சு நல்லா சூடாக்கி, தலையில எங்கெல்லாம் ‘கர்லிங்’ வேணுமோ அங்கெல்லாம் அந்த சூட்டுக்கம்பிய வச்சு அமுக்கி எடுத்தேன். ‘சொய்’ன்னு சத்தம். மயிர்ல சுடுகம்பிய வைக்கும் போதெல்லாம் வந்திச்சு.
கண்ணாடில இப்ப பார்த்தேன். ஜெமினியாட்டம் என் தலையிலயும் அலை அலையா சுருள். வீட்டுக்குள்ளே போயி சீப்பை எடுத்து, கர்வத்தோட தலைய சீவினேன். கொத்து கொத்தா - அரை அங்குலம் அளவு மயிர் சீப்பில வந்திட்டே இருந்திச்சு. 4 வாட்டி சீவினேன். சப்பிப் போட்ட மாங்கொட்டையில இருக்கிற நார் மாதிரி - அங்கங்கே சொட்டைத் தலை தெரிஞ்சது.
இப்படி ஒரு கேவலமான காரியத்தை பண்ணிட்டமேன்னு அவமானமா போச்சு. ஸ்கூல்ல ஒரு வாரத்துக்கு எல்லா பசங்களுக்கும் நான்தான் கோமாளியா ஆயிட்டேன்.
இந்த ஒரிஜினல் ‘கர்லிங் ஹேர்’ கிட்டுசாமி தங்கமானவர்தான். ஒண்டிப்புதூர்ல திருச்சி ரோடுல கம்போடியா மில்லுக்கு மேபுறம் ஸ்ரீஹரி மில்ஸ்னு ஒண்ணு கட்டினாங்க. அதில மேஸ்திரி வேலையில சேர்ந்திட்டாரு.
ஒண்டிப்புதூர்லருந்து 3-மைல் போனா சிங்காநல்லூர். அங்கே அம்பாள் அரங்குன்னு தெக்கு (தெற்கு) பாத்து ஒரு சினிமா தியேட்டர். அதுக்கு எதித்தாப்பில வடக்குப் பாத்து சிவராம் போட்டோ ஸ்டுடியோஸ் இருந்திச்சு. சினிமா தியேட்டருக்குள்ளே போனதும் ஷோ கேஸ்ல - கண்ணாடி பிரேமுக்குள்ள -அன்னிக்கு பாக்கற சினிமா ஹீரோ -ஹீரோயின், காமெடியன் புகைப்படங்கள் -கண்ணம்பாடி டேம்ல சிவாஜி-பத்மினி ஆடற போட்டோ எல்லாம் இருக்கும். அதைப் பாத்தா ஒரு சிலிர்ப்பு உடம்புக்குள்ளே வரும். அது கந்தர்வலோகத்து மக்கள் படம்.
அதேமாதிரி சிவராம் போட்டோ ஸ்டுடியோ வாசல்ல, சின்ன பாப்பா பட்டு முகம், வயசுக்கு வந்த அழகிகள் படம், கல்யாணமான இளம் ஜோடிகள் படம் எல்லாம் வரிசையா மாட்டி வச்சிருப்பாங்க. ரோட்ல போறவன், வர்றவனுக்கு அது மாதிரி நாமும் ஒரு போட்டோ எடுத்துக்கணும்னு தூண்டும்.
அந்த போட்டோ ஸ்டுடியோவுக்கு 6 மாசத்துக்கு ஒரு வாட்டி கிட்டுசாமி போயி - ஒரு தடவை கருப்பு பேண்ட், வெள்ளை அரைக்கை சட்டை ‘இன்’ பண்ணி நின்னு புன்னகையோட ஒரு போட்டோ எடுத்துட்டு வருவாரு. அடுத்த தடவை ‘டை’கட்டி, ‘கோட்’ போட்டு ஒரு போட்டோ - அப்புறம் எம்ராய்டரி பண்ணின ஜிப்பா போட்டு ஒரு போட்டோ எடுத்தாந்து அவங்க வீட்டு ஆசாரத்தில வரிசையா மாட்டி வச்சிருப்பாரு.
பாவி மனுசன், ஒரு வாட்டிக்கூட வாப்பா, சிவராம் ஸ்டுடியோ போயி ஒரு போட்டோ எடுத்துக்கலாம்னு மறந்தும் கூப்பிட்டதே இல்லே. அவரு வீட்டுக்குப் போய் வரிசையில இருக்கற படங்களை பார்க்கறப்போ, சகுனி சிரிப்பொண்ணு சிரிப்பாரு. நம்மளுக்கு கோபம் பொத்திட்டு வரும்.
இப்படியே காலம் போயி SSLC படிக்கறப்போ கூடப்படிச்ச எல்லா பசங்க புள்ளைங்களோட போட்டோ எடுக்க ஒரு வாய்ப்பு வந்தது.
வருஷத்தோட கடைசி மாசம். நாங்க படிச்ச காலத்தில SSLC-க்கு மாதக் கட்டணம் அஞ்சே கால் ரூபா. சோளத்தட்டு அறுவடை பண்ற சமயம். அம்மாவும் தட்டு வெட்டுவாங்க. கூலிக்கு 4 ஆளும் வச்சுக்குவாங்க.
ஸ்கூல் பீஸ் கேட்டவுடனே அஞ்சேகால் ரூபாய் குடுத்திட்டாங்க. 2 நாள் கழிச்சு பொதுத் தேர்வுக்கு (Public exam) 11 ரூபாய் 50 பைசா கேட்டேன். ‘முந்தா நேத்து காசு குடுத்தனே?’ன்னாங்க. ‘அது மாசாமாசம் கட்டறது. இது பொதுத் தேர்வுக்கு!’ ஒரு தடவை முறைச்சுட்டு சுருக்குப் பையிலருந்து கசங்கிப்போன 10 ரூபாய் நோட்டும் சில்லறையும் குடுத்தனுப்பினாங்க.
6-ங் கிளாஸ்லருந்து 6 வருஷம் கூடப்படிச்ச 25 பசங்க, 8 புள்ளைங்க, எல்லா வாத்தியார்கள், ஹெட்மாஸ்டரோட ஒரு குரூப் போட்டோ எடுத்துக்கலாம். ஒண்ணா படிச்சதுக்கு நியாபகார்த்தமா இருக்கும்னு முடிவு பண்ணி ஸ்வீட், காரம், காபியோட ஒரு போட்டோ பிரிண்ட்டுக்கும் சேர்த்தி 5 ரூபாய் ஆகும்னாங்க.
இதை எப்படி அம்மாகிட்ட கேக்கறது - அடுத்தவங்கிட்ட கை நீட்டி 5 பைசா வாங்கறது கேவலம்னு வாழ்ந்துகிட்டிருக்கறவங்ககிட்ட சும்மா சும்மா போய் காசு காசுன்னு அரிக்கறமேன்னும், முக்கியமான போட்டோவாச்சேன்னும் மாறி, மாறி நெனைப்பு. கார்த்தால காட்டுக்கு கிளம்பறப்போ லேசா சொன்னேன். பத்ரகாளி ஆயிட்டாங்க.
‘‘சாகப்போற வயசில நாம சடைஞ்சா வேலையாளுகளும் சொணங்கிப் போயிடுவாங்கன்னு இடுப்பு வலியோட வேலை செஞ்சிட்டிருக்கேன். போட்டோ கேக்குதா உனக்கு. இந்த போட்டோ எடுக்கலீன்னு யாரு அழுதா? கூலி ஆளுகளுக்கு கூலி முக்கியமா? போட்டோ முக்கியமா? நெடு நெடுன்னு வளந்தா போதாது, புத்தீல இதெல்லாம் உறைக்கோணும்!’’
சொல்லீட்டு போயிட்டாங்க. அவங்க மேல எந்த குத்தமும் சொல்ல முடியாது. நிலைமை நமக்கும் புரியாம இல்லை.
மத்தியானம் 3 மணிக்கு பெல் அடிச்சதும், பசங்க வேகவேகமா போய் ஸ்கூல் கட்டடத்துக்கு நடுவுல இருக்கற மைதானத்தில அவனவன் பெஞ்சுகளையும் சேர்களை வாத்தியார்களுக்கும் எடுத்துட்டுப் போயி அடுக்கினாங்க.
வகுப்பில முதல் ரேங்க், 2-வது ரேங்க் வாங்கற பையன் வீட்லயும் என் நிலைமைதான். வலைப்பைய (புத்தகப்பை) தூக்கி தோள்ள போட்டுட்டு புளுவாட்டமா கிளம்பி வெளியே வந்தோம். அஞ்சாறு பசங்க ஓடி வந்தாங்க.
‘‘எங்கப்பா போறீங்க. குரூப் போட்டோ எடுக்கணும்ல?’’-ன்னாங்க.
‘‘அது காசு குடுத்தவங்களுக்கு. எங்களுக்கு இல்லே!’’ன்னோம்.
‘பொக்கு’ன்னு போயிட்டாங்க.
‘‘பரவால்லப்பா போட்டோவுக்கு நின்னுட்டு போயிடலாம்..!’’
‘‘காசு குடுக்காம போட்டோவுல நிக்கறது நல்லா இருக்காது...!’’
‘‘ஏம்பா! நல்லா படிக்கற பசங்க 4 பேரு. அதில 2 பேரு போயிட்டீங்கன்னா அப்புறம் படம் எடுத்து என்ன பிரயோஜனம்? பரவால்ல வாங்கப்பா!’’
‘‘இல்லை. அது சரியா வராது!’’
கிளம்பிட்டோம்.
192 படங்கள்ல, 175 படத்தில ஹீரோவா நடிச்சிருக்கேன். எங்க காலத்தில பிலிம்லதான் படப்பிடிப்பு நடக்கும். 12 ஆயிரம் அடி சினிமாவுக்கு குறைஞ்சது 40 ஆயிரம் அடி பிலிம் ‘ஷூட்’ பண்ணி அப்புறம் ‘எடிட்’ பண்ணி குறைப்பாங்க. 192 படத்துக்கு 40 ஆயிரம் அடி கணக்குப் போடுங்க. படத்துக்கு 20 ஆயிரம் அடி பிலிம்ல என் மூஞ்சி பதிவாயிருக்கும். சாதாரணமா 4 கோடி பிரேம்லயாவது எம் மூஞ்சி படமாயிருக்கும்.
ஆனா, அந்த 5 ரூபா ’குரூப்’ போட்டோ -எடுக்க முடியலேங்கற வருத்தம் இத்தனை வருஷம் ஆகியும், முள்ளா குத்தீட்டே இருக்கு.
காலமும், கடவுளும் கருணையுள்ளவர்கள்தான்.
1957-ல் அந்த போட்டோ எடுக்க முடியலே. 2007-ல் விஜய் டிவிக்காரங்க, ‘மீண்டும் பள்ளிக்கூடம் போகலாம்’-னு ஒரு புரோக்ராம் செஞ்சாங்க. வி.ஐ.பி.,க்களை அவங்க சின்ன வயசில படிச்ச கிராமத்து பள்ளிக்கூடத்துக்கு கூட்டிட்டு போயி பழைய நினைவுகளை பகிர்ந்துக்கற மாதிரி ஒரு நிகழ்ச்சி எடுத்தே ஆகணும்னாங்க.
‘நான் சூலூர் பள்ளிக்கூடத்துக்குப் போயி 50 வருஷம் ஆச்சே!’ன்னேன். ‘பரவாயில்ல போலாம்’னு கிளம்பினாங்க. போனோம்.
என்னோட படிச்ச பொண்ணுக 4, 5 பேர் பாட்டி ஆயிட்டாங்க. நானும் தாத்தாதானே? வாத்தியார்கள் 5, 6 பேர் உயிரோட இருந்தாங்க. சீனியர் மாணவர்கள், எங்கூட படிச்சவங்கன்னு ஒரு 25 பேர் கிடைச்சாங்க.
அதே இடம் - 1957-ல் படம் எடுத்த அதே எடத்தில சேர், பெஞ்சுகள் போட்டு 50 வருஷத்துக்கு முன்னாடி எடுக்காம விட்டு ஏங்கிப் போன போட்டோவை எடுத்தோம்.
அதை விட அப்ப மாவட்டக் கல்வி அதிகாரியா இருந்த கார்மேகம், ‘அரசாங்க பள்ளிகளுக்கு எந்த வருமானமும் இல்லை அண்ணா. அந்த பள்ளிகளை உங்க தாத்தா பாட்டியா நெனைச்சுக்குங்க’ன்னு சொன்னாரு.
அன்னிக்கே அந்தப் பள்ளிய தத்து எடுத்தோம். ஊர், ஊரா மேடை ஏறி 25 ஆயிரம் ஒரு நிகழ்ச்சிக்குன்னு வாங்கி, முன்னாள் மாணவர் கல்வி அறக்கட்டளைக்கு அதை அனுப்பச் சொல்லி 3 வருஷத்தில 18 லட்சம் வசூல் பண்ணினேன். கூடப் படிச்சவங்க ஆளுக்கு 1 லட்சம், 2 லட்சம்னு போட்டாங்க. ரூபாய் 50 லட்சம் ஆச்சு. அரசாங்கம் 50 லட்சம் குடுத்தது. 5 வகுப்பறை மேல 200 பேர் உட்கார்ற மாதிரி கலை அரங்கம் கட்டினோம். சூர்யா, கார்த்தி சேர்கள் வாங்கிக் குடுத்தாங்க.
இப்ப 25 லட்சம் ரூபாய் டெபாசிட் இருக்கு. நான்தான் தலைவர். சூலூர் வட்டார மாணவ, மாணவிகளில் நல்ல மார்க்கு வாங்கின 30 பேருக்கு ஆண்டுதோறும் பரிசு குடுத்திட்டிருக்கோம்...
சுவைப்போம்...
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago