உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது என்பது ஒரு கலை. எந்த மொழியாக இருந்தாலும், உணர்ச்சிகளை முறையாக வெளிப்படுத்துவதே அவற்றின் அடிப்படை நோக்கம். உணர்ச்சிகளை அழகாகவும் மற்றவர்கள் புரிந்துகொள்ளும் விதமாகவும் வெளிப்படுத்துவதில் மனிதர்களாகிய நமக்கு தேர்ச்சி அதிகம். இருப்பினும், மற்றவர்களிடம் இனிமையாக நடந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கிலோ மற்றவர்களைக் காயப்படுத்திவிடுமோ என்ற எண்ணத்திலோ பல நேரங்களில் நம் முடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் புதைத்துவிடுகிறோம்.
அடக்கப்படும் உணர்ச்சிகள் மனத்தின் மகிழ்ச்சியைக் களவாடிச் செல்லும். மேலும் இதனால், பதற்றம், பயம், மன அழுத்தம், அமைதியின்மை உள்ளிட்ட மனச் சிக்கல்களும் ஏற்படும். உணர்ச்சிகள் சற்றுச் சிக்கலானவைதான். உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு எந்தச் சூழ்நிலையிலும் அவற்றை நேர்மறையாக வெளிப்படுத்தும்போது நம்முடைய ஆளுமைத் திறன் மேம்படும்.
உணர்ச்சிகளின் வகைகள்
உணர்ச்சிகள் நமது எண்ணங்களாலும் கண்ணோட்டங்களாலும் பாதிக்கப்படுகின்றன. ஒரு சூழ்நிலையை எப்படிப் புரிந்துகொள்கிறோம் அல்லது எடுத்துக்கொள்கிறோம் என்பதைப் பொறுத்து அது சம்பந்தப்பட்ட உணர்ச்சிகள் அதிகரிக்கின்றன. உதாரணத்துக்கு, ஒருவரைச் சுயநலவாதி என்று நாம் கருதினால், நமக்கு அவரைப் பார்க்கும்போது கோப உணர்ச்சி அதிகரிக்கும். அதேநேரம் நம்மைக் காட்டிலும் அந்த நபர் வளர்ந்துவிட்டார் என்கிற ஆதங்கத்தோடு நாம் இருந்தால் அவரைப் பார்க்கும்போது பொறாமை உணர்ச்சி அதிகரிக்கும்.
உணர்ச்சிகள் எளிமையானவையாகவும் இருக்கலாம், சிக்கலானவையாகவும் இருக்கலாம். நம் சிந்தனைகளால் இணைக்கப்படும் ஒன்றுக்கு மேற்பட்ட எளிய உணர்ச்சிகள் சிக்கலான உணர்ச்சிகளாக மாறும். கோபம், வருத்தம், துக்கம், பயம், காதல், அன்பு, பரவசம், சந்தோஷம் போன்றவை எளிய உணர்ச்சிகள். எளிய உணர்ச்சிகள் அனிச்சையாகத் தோன்றிக் கொஞ்ச நேரம் நிலைத்துப் பின் மறையும். சிந்தனைகளுடன் சம்பந்தப்பட்டிருப்பதால் சிக்கலான உணர்ச்சிகள் நீண்டநேரம் நிலைக்கும்.
வெளிப்படுத்தும் முறைகள் மனம் விட்டுப் பேசலாமே
உணர்ச்சிகளை நம்பிக்கையான நண்பரிடமோ உறவினரிடமோ பகிர்ந்துகொள்வது நல்லது. கேட்கும் அந்த நபர் உங்கள் உணர்ச்சிகளை மதிப்பிடாமல், நீங்கள் சொல்வதை வெறுமனே கேட்டு நீங்கள் வெளிப்படுத்துவதை ஊக்குவிப்பவராக இருக்க வேண்டும்.
உணர்ச்சிகளை எழுதலாமே
பேசுவது சிரமமாக இருந்தால், உங்களுடைய உணர்ச்சிகளை எழுதுவது நல்ல பலன் தரும். நீங்கள் எழுதியதை அவ்வப்போது வாசிப்பது மிகவும் நல்லது. உணர்ச்சிகளைப் பற்றி எழுதுவது ஓர் ஆரோக்கியமான வடிகால். படம் வரைதல், கவிதை எழுதுதல், கதை எழுதுதல் போன்றவை உங்கள் உணர்ச்சிகளுக்கு ஆக்கபூர்வமான வடிகாலாக அமையும்.
சோகத்தை வெளியேற்றுங்கள்:
சோகத்தை உள்ளுக்குள் அடக்கிவைத்தால் அது நம் மனம், உடல் மீது பாரத்தை ஏற்றி வைக்கும். சோகத்தின்போது அழுவது, அதை இறக்கி வைப்பதற்கான எளிய வழி. முடிந்த அளவு சோகத்தை உடனடியாக வெளியேற்றுவது மிகவும் அவசியம். இல்லையென்றால் சோகத்தின் அளவு கூடி அதற்குக் காரணமான மனிதரின் மீது கோபமாக மாறும்.
கோபத்தை வெளியேற்றுங்கள்:
மனதையும், உடலையும் விரைந்து ஊடுருவி ஆக்கிரமிக்கும் தன்மை கொண்டது கோபம். சின்ன எரிச்சலில் தொடங்கிக் கட்டுக்கடங்காத வெறிவரை வளரக்கூடிய தன்மை கோபத்துக்கு உண்டு. இதை அடக்கிவைப்பது மிகவும் தீங்கானது. மற்றவர்களிடம் இனிமையாக நடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கோபத்தைப் புதைத்துவைப்பது நம் மனநலனைப் பாதிக்கும். இது நம்மைப் பதற்றம் கொள்ளச் செய்யும். எனவே, கோபத்தை அடக்கிவைப்பதற்குப் பதிலாக அதைக் களையும் அறிவுபூர்வமான செயலில் ஈடுபட வேண்டும்.
உணர்ச்சிகளைக் கையாளும் முறைகள்
மனதையும் உடம்பையும் நிதானமாகக் கவனிக்கப் பழகினால், உணர்ச்சிகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது எளிது. அதற்கான எளிய வழிமுறைகள் இதோ:
1. உணர்ச்சிகளை மதிப்பீடு செய்யாமல் மவுன பார்வையாளராக இருத்தல்.
2. “நாம் இப்போது என்ன உணர்கிறோம்?” என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ளுதல்.
3. கோபம், பயம், வருத்தம் போன்ற உணர்ச்சிகளால் நம் உடம்பில் உண்டாகும் மாற்றங்களை உற்று கவனித்தல்.
4. அன்றாடம் உடற்பயிற்சி மூலம் உடலை ஆசுவாசப்படுத்துதல்,
5. தியானம் மூலம் மனதைச் சாந்தப்படுத்துதல்.
உணர்ச்சிகளே ஆற்றலின் ஊற்று
உணர்ச்சியில் சரி, தவறு என்று எதுவும் கிடையாது. உணர்ச்சி அவ்வளவுதான். உணர்ச்சிகள் நமக்கு ஆற்றலை அளிக்கும். உணர்ச்சிகளை உணர்ந்து முறையாக வெளிப்படுத்துவது நம்மைச் சுறுசுறுப்பு அடைய வைக்கும். உணர்ச்சிகள் பரவும் தன்மை கொண்டவை. சந்தோஷமோ வருத்தமோ கோபமோ எரிச்சலோ மற்றவர்களிடமிருந்து நம்மை எளிதில் தொற்றிக்கொள்ளும். உணர்ச்சிகளை முறையாக வெளிப்படுத்துவோம். மகிழ்ச்சியை நம்முடன் தக்கவைப்போம்
தொடர்புக்கு: mohamed.hushain@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago