குளறுபடிகள் வெளிவரும்; நிவாரணம் கிடைக்கும்!- உயர் நீதிமன்ற உத்தரவால் நிம்மதியடைந்திருக்கும் பழங்குடி கிராமங்கள்

By கா.சு.வேலாயுதன்

கரோனா சூழ்நிலையில் மலைவாழ் மக்களும் வாழ்வாதாரம் இன்றி தவித்துக்கொண்டிருக்கிறார்கள். அரசு சார்பில் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நிவாரணம்கூட முழுமையாகப் போய்ச் சேர்வதில்லை.

இந்தச் சூழலில், மூன்று நாட்கள் முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் ‘கரோனா ஊரடங்கில் பாதிக்கப்பட்ட மலைவாழ் பழங்குடிகளின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக தலா ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்’ எனக் கோரப்பட்டிருந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘பழங்குடியினர் உள்ள பகுதிகளுக்கு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வுசெய்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்க வேண்டும். நிவாரணம் வழங்கப்பட்டது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் அளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மூன்று வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளனர்.

இது பழங்குடி மக்களுக்குப் பெரும் ஆறுதலைத் தந்துள்ளது. இதுகுறித்து கோவை மண்டலத்தில் களப் பணியாற்றிவரும் பழங்குடியினர் செயல்பாட்டாளர்கள் நம்மிடம் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

தன்ராஜ் - ஏக்தா பரிஷத் அமைப்பு, பொள்ளாச்சி:
“வால்பாறை, திருமூர்த்தி மலைக் கிராமங்களில் உள்ள பழங்குடிகளுக்கு ரேஷன் அட்டைக்கு ரூ.1,000; நலவாரிய அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரூ.1,000 தொகையை ஒரே ஒரு தடவை கொடுத்துள்ளார்கள். மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள்தான் இவற்றைப் பெற முடிந்தது. நலவாரிய அட்டை பெற்றவர்கள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதைப் புதுப்பிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. நலவாரிய அட்டை வாங்குவது எப்படி என்றே தெரியாத பழங்குடிகள் அதைப் பற்றியெல்லாம் அறிந்திருப்பார்களா? எங்களைப் போன்ற தன்னார்வலர்கள் பார்த்து வாங்கிக் கொடுத்தால்தான் உண்டு என்ற நிலை நீடிக்கிறது.

நிவாரணத் தொகையை முழுமையாக வழங்காமல் பழங்குடியினர் நல அலுவலர்கள் குளறுபடிகள் செய்ததாகவும் எங்களுக்குத் தகவல்கள் வருகின்றன. ‘மலைக் கிராமங்கள் எங்கெங்கே உள்ளன? அங்கே எல்லாம் செல்ல வாகனம் ஏற்பாடு செய்யுங்கள்’ என்று என்னிடமே சில அலுவலர்கள் கேட்டார்கள். ‘உங்களிடம் அதற்கான வசதி இருக்கும்போது எங்களிடம் எதற்குக் கேட்கிறீர்கள்?’ என மறுத்துவிட்டோம். பிறகு பார்த்தால் அவர்கள் சென்ற கிராமங்களில் வாகனச் செலவுக்கு அந்தப் பழங்குடி மக்களிடமே பணம் வாங்கியிருக்கிறார்கள் என்று தெரியவந்தது.

கோவை மாவட்டத்தில் எத்தனை மலைக் கிராமங்கள் உள்ளன, எத்தனை பழங்குடியினர் வசிக்கிறார்கள் என்ற விவரம்கூட பழங்குடியினர் நல அலுவலர்களிடம் இல்லை என்பது சமீபத்தில் தகவல் உரிமைச் சட்டத்தில் விவரம் கேட்டபோது எங்களுக்குக் கிடைத்த தகவல். இப்போது நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் உத்தரவின் மூலமாவது எல்லா மலைக்கிராமங்களுக்கும் அலுவலர்கள் அவசியம் செல்ல வேண்டும். கணக்கெடுத்து அறிக்கை கொடுத்தாக வேண்டும். இது நல்ல விஷயம். இதன் மூலம் பழங்குடி மக்களின் துயரம் நீங்கட்டும்.

செல்வராஜ் - விவசாயிகள், பழங்குடிகள் நல சங்கம், கூடலூர்:

“தமிழ்நாட்டில் 36 பழங்குடி இனங்கள் உள்ளன. கடைசியாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 7 லட்சத்து 97 ஆயிரத்து 697 பழங்குடி மக்கள் உள்ளதாகப் புள்ளிவிவரம் உள்ளது. நீலகிரியில் அடர் வனங்களில் வசிக்கும் பலருக்கு இன்னமும் ரேஷன் அட்டை இல்லாத நிலை நீடிக்கிறது. எத்தனை பேருக்குக் கடந்த மாதங்களில் நிவாரணத் தொகை கொடுத்தார்கள் என்ற பட்டியலை வெளியிட்டால்கூட எத்தனை பேருக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என்று கண்டுபிடித்துவிடலாம். இப்போது நீதிமன்ற உத்தரவுப்படி இது எல்லாம் வெளிவர வேண்டும்.

தன்ராஜ், செல்வராஜ், நடராஜ்

நடராஜ் - சுடர் அமைப்பு, சத்தியமங்கலம்:

அந்தியூர், பர்கூர் காடுகளில் மட்டும் 35 மலைக் கிராமங்கள் உள்ளன. தொண்டு நிறுவனங்கள் மூலம் இங்கெல்லாம் நிவாரண உதவிகள் கொண்டு போனபோதுதான் அக்னிபாவி என்ற கிராமத்தில் வசிக்கும் 54 பழங்குடிகள் குடும்பங்களில் 33 குடும்பங்களுக்கு ரேஷன் அட்டையே இல்லை என்று கண்டுபிடித்தோம். பிறகு எப்படி அவர்களுக்கு நிவாரணத் தொகையை முழுமையாகக் கொடுத்திருக்க முடியும்?

பிற கிராமங்களில் விசாரித்தபோது சுமார் 350 குடும்பங்களுக்கு ரேஷன் அட்டை இல்லை எனத் தெரியவந்தது. இது தொடர்பான துல்லியமான தரவுகள் வேண்டும் என்பதால் தமிழ்நாடு பழங்குடியினர் சங்கத்தினர் துணையோடு ஒவ்வொரு கிராமமாகக் கணக்கெடுக்கத் தொடங்கினோம். ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, நலவாரிய அட்டை, காப்பீடு அட்டை, வங்கிக்கணக்கு, 100 நாள் வேலை திட்ட அட்டை என எல்லாவற்றையும் பட்டியலிட்டே கணக்கெடுப்பை நடத்துகிறோம். ஐ.டி. நிறுவனம் ஒன்று இந்த விஷயத்தை எல்லாம் கேள்விப்பட்டு 6 டன் அரிசி, பருப்பு மற்றும் இதர மளிகைப் பொருட்களை பழங்குடி மக்களுக்கு வழங்கியிருக்கிறது. ரேஷன் அட்டை, நலவாரிய அட்டை இல்லாதவர்களுக்கு அவற்றை வழங்க ஏற்பாடு செய்துள்ளோம்.

இப்போது வரை 10 கிராமங்களில் எங்கள் கணக்கெடுப்பு முடிந்திருக்கிறது. மீதியை முடிக்கும்போது இதுகுறித்த துல்லியமான விவரங்கள் நமக்குக் கிடைக்கும். அநேகமாக நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகள் வந்து கணக்கெடுப்பு நடத்தும்போது, எங்கள் தரப்பில் கணக்கெடுப்பை நிறைவு செய்திருப்போம் என்று நினைக்கிறேன். எப்படியிருந்தாலும் அரசுத் தரப்பு கணக்கெடுத்து எல்லோருக்கும் நிவாரணம் கொடுக்க வழி வகை செய்தால் அதைவிட மகிழ்ச்சி வேறென்ன வேண்டும். இந்தக் கரோனா காலத்தில் இப்படியொரு உத்தரவைப் பிறப்பித்த நீதிபதிகளுக்கு, பழங்குடி மக்கள் சார்பில் மனமார்ந்த நன்றி.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

27 days ago

வலைஞர் பக்கம்

29 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

4 months ago

மேலும்