கோவிட்-19 அல்லது கரோனா வைரஸ் என்பதற்கு இன்னமும் அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை என்பது இல்லை என்ற நிலையில் கடந்த சில வாரங்களாக சாமானியர்கள் முதல் படித்தவர்கள் வரை மத்தியில் புழங்கும் வார்த்தை, ‘இம்யூன் சிஸ்டம்’ அதாவது நோய் எதிர்ப்பாற்றல் என்பதாகும்.
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறோம் பேர்வழி என்று உரிமைகோரும் ஆயுர்வேத மருந்துகள், பழச்சாறுகள், வைட்டமின் மாத்திரைகள், ஸிங்க் மாத்திரைகள், கை கிருமியழிப்பான்கள், முகக்கவசங்கள் ஆகியவை லாக் டவுன் காலமானாலும் சந்தையில் நிரம்பி வழிகின்றன.
உடலின் எதிர்ப்புச் சக்தியை சிலபல உணவுமுறைகளினால் மேம்படுத்தலாம், அதிகரிக்கலாம் என்று நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக செய்திகளும் தகவல்களும் குவிகின்றன.
ஆனால் நிபுணர்கள் கூறுவது வேறு ஒன்றாக உள்ளது. இது தொடர்பாக நோய் எதிர்ப்பாற்றல் நிபுணரும், சிஎஸ்ஐஆர் அமைப்பின் ஒருங்கிணைந்த மருத்துவத்துக்கான இந்திய கழகத்தின் முன்னாள் இயக்குநர் ராம் விஷ்வகர்மா என்பவர் ஆங்கில ஊடகம் ஒன்றில் இது தொடர்பாகக் கூறும்போது,
» ஆக்ஸ்போர்டு கரோனா வாக்சின் விலை ரூ.1000-த்திற்கும் குறைவு என்கிறார் சீரம் இந்தியா சி.இ.ஓ.
“இம்யூனிட்டி, அதாவது உடலுக்குள்ளேயே இருக்கும் நோய் எதிர்ப்பாற்றல் அல்லது தடுப்பாற்றல் என்ற பதம் சமீபகாலங்களாக அதிகம் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது, புரிதல் இல்லாததே காரணம். நோய் எதிர்ப்பாற்றல் அமைப்பு அல்லது இம்யூன் சிஸ்டம் என்பது மிகுந்த சிக்கல் நிரம்பியது. எனவே நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிப்பது என்பது அறிவுக்குகந்தது அல்ல, அறிவியலுக்கும் உகந்தது அல்ல.
அதாவது உடலுக்குள்ளேயே இருக்கும் சில அம்சங்களை நம் உடல் தன்னைச் சேர்ந்ததாக அங்கீகரிக்காது, அதாவது பாக்டீரியாக்கள், வைரஸ்கள், ஒவ்வாமை உருவாக்கும் சிறு துகள்கள் ஆகியவற்றை உடல் அங்கீகரிக்காது, இதைத்தான் இம்யூன் சிஸ்டம் என்கிறோம். எல்லா நோய்க்கிருமிகளிலும் மேற்புற புரதம் காணப்படும். இதனை நம் உடல் நோய் எதிர்ப்பமைப்பு அன்னியமாகக் கருதும். இவை ஆண்ட்டிஜென்கள் என்று அழைக்கப்படுகிறது.
மனித உடலில் இரண்டு வகையான நோய் எதிர்ப்பாற்றல் பதில்வினை உண்டு. உள்ளார்ந்த நோய் எதிர்ப்பாற்றல் பதில்வினை முதலில் செயல்படும், இது விலங்குகளிலும் காணப்படுவதுதான். இது பொதுவானது, குறிப்பிட்ட வகையினது அல்ல. இதனால் இம்யூன் செல்கள் ஆண்டிஜென்கள் என்ற புரதம் மீது தாக்குதல் தொடுக்கிறது. இத்தகைய வினை உடனடியாக தன்னை அதற்குத் தகவமைத்துக் கொள்ளும் விதமான இம்யூன் ரெஸ்பான்ஸாக மாறும். இது எந்த மாதிரியான நோய்க்கிருமியை எதிர்கொண்டதோ அதற்கு எதிரான ஒரு தடுப்பாற்றலை அமைத்துக் கொள்வதாக மாறுகிறது.
உள்ளார்ந்த இம்யூன் சிஸ்டம் என்பது ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் செயல்பாடாகும். தகவமைத்துக் கொள்ளும் தடுப்பு பதில்வினையில் டி செல்கள், பி-செல்கள், மற்றும் ஆண்ட்டி-பாடிகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் அடங்கும்.
இத்தகைய செல்களை உற்பத்தி செய்வதும் அதன் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துவதுதான் சைட்டோகைன்கள் என்ற புரதம் ஆகும். இதுதான் செல்களிடையே தகவல் தொடர்பை சாத்தியமாக்குகிறது. இது உருவாவது, இதன் செயல்பாடு ஆகியவை உணவுப்பொருட்களால் கட்டுப்படுத்தக்கூடியதோ மேம்பாடு அடையச் செய்யக் கூடியதோ அல்ல. வைட்டமின்கள் உடலுக்குத் தேவைதான், வைட்டமின் குறைபாடு இருந்தால் உடலுக்கு பிரச்சினைதான், ஆனால் அதற்காக அதிக வைட்டமின்கள் இருந்தால் கரோனா வைரஸை எதிர்கொண்டு விடலாம் என்பது அறிவியல் ஆதாரமற்ற கற்பிதமே” என்கிறார் விஸ்வகர்மா.
ஐஐஎஸ்இஆர், புனே அமைப்பைச் சேர்ந்த சத்யஜித் ராத் என்ற நோய் எதிர்ப்பாற்றல் நிபுணர் தனியார் ஊடகம் ஒன்றில் கூறும்போது, “நோய் எதிர்ப்பாற்றல் அல்லது இம்யூனிட்டி என்பது ஒரேயொரு விஷயம் அல்ல. உடலில் உள்ள பலவகையான மூலக்கூறுகள், செல்கள் ஆகியவை வெளிக்காரணம் இன்றி தானாகவே தூண்டப்பட முடியாதது.
எனவே புறக்காரணியின்றி இந்த எதிர்ப்பாற்றல் தூண்டப்பட முடியாதது, ஒருவருக்கு நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக இருக்கிறது என்பதன் அர்த்தம் என்னவெனில் இத்தகைய செல்கள், மூலக்கூறுகள் அவர் உடலில் குறைவாக உற்பத்தி செய்யப்படுவதாக அர்த்தம். இதன் குறைபாடுகள் குழந்தைகளில் பெரிய நோய்களை உருவாக்குமே தவிர சாதாரணமாக ஆரோக்கியமாக இருப்பவர்களிடத்தில் இது ஒரு பெரிய பிரச்சினையே அல்ல. எனவே நாம் என்னத்தை அதிகரிக்கப் போகிறோம்.
எனவே நோய்க்கிருமி தொற்று இல்லாத போது மேற்கூறிய நோய் எதிர்ப்பாற்றல் காரணிகளை நாம் தூண்டி விடுகிறோம் அல்லது செயல்படுத்துகிறோம் என்றால் ஏற்படும் விளைவு ‘அழற்சி’ (inflammation) என்பதாகவே இருகும். அதாவது நோய்க்கிருமி தாக்கிய பகுதி அல்லது செல் சேதமாகும் பகுதி வீக்கமடையும், சிகப்பு நிறமாகும், வலி ஏற்படும்.
எனவே தூண்டப்படும் இம்யூன் சிஸ்டம், இத்தகைய அழற்சியை உருவாக்கும் சைட்டோகைன்கள் என்ற புரதத்தை பெரிய எண்ணிக்கையில் உருவாக்கும், இதனால் வலியும் வீக்கமுமே ஏற்படும், எனவே யாராவது என் நோய் எதிர்ப்பாற்றலை தூண்டி விடுகிறேன், அதிகரிக்கிறேன் என்றால் எனக்குக் கவலையே ஏற்படும்” என்று விரிவான விளக்கம் அளிக்கிறார்.
கோவிட்-19 வைரஸ் நோயின் அடிப்படை பிரச்சினை என்னவெனில் தீவிரமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உடலில் மிகவும் ஆக்ரோஷமான தடுப்பாற்றல் சக்தி வேலை செய்யும் அப்போது சைட்டோகைன்கள் என்ற புரதம் அதிக எண்ணிக்கையில் உற்பத்தியாகும். இது அழற்சியை உருவாக்கும் காரணியாகும், இதனை மருத்துவ உலகில் ‘சைட்டோகைன் ஸ்டார்ம்’ என்று அழைக்கின்றனர். இதுதான் கோவிட்-19 நோயினால் மரணமேற்படுவதற்கு பொதுவான காரணம்.
உடலின் நோய் எதிர்ப்பாற்றல் அளவுக்கதிகமாகும் போது சைட்டோகைன் ஸ்டார்ம் உருவாகி ஆரோக்கியமான செல்களையும் அழிக்கிறது. இதனால்தான் உறுப்பு செயல்பாடின்மையை ஏற்படுத்துகிறது. சைட்டோகைன் ஸ்டார்ம்தான் நுரையீரலைப் பாழ்படுத்துகிறது, பல உறுப்பு பழுதுக்கு இட்டுச் செல்கிறது.
கரோனா வைரஸ் உயிரிழப்புகளின் பின்னணியில் நோய் எதிர்ப்பாற்றலின் அதீத செயல்பாடே காரணமாக இருக்கும் போது ஏன் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க வேண்டும், தூண்டி விட வேண்டும், என்று பர்மிங்ஹாம் அலபாமா பல்கலைக் கழக நோய்கூறியல் துறை முன்னாள் ஆய்வாளர் சுனில் கே.நூதி என்பவர் கேள்வி எழுப்புகிறார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago