கொங்கு தேன் 11: வெள்ளைச்சீல குழந்தை

By செய்திப்பிரிவு

‘‘அட, கொள்ளையில போனவீகளா! (அடப்பாவிகளா!). பாவாடை, ரவிக்கை போடற வயசுல அந்த பச்சைப் புள்ளை உடம்பில வெள்ளைச்சீலைய சுத்தறீங்களே. நீங்க நல்லா இருப்பீங்களா?’’

‘‘என்ன பண்ணச் சொல்றிங்க, அவ தலையில 9 வயசிலயே முண்டச்சி ஆகணும்னு பகவான் எழுதித் தொலைச்சிட்டானே?’’

7 வயசிலயே சொந்தம் உட்டுப் போகக்கூடாதுன்னு, அவிய ஆத்தா, அண்ணன் மகனுக்குக் கட்டிக் குடுத்தா. ஓடிப்புடிச்சு விளையாடீட்டிருந்த குழந்தைகள்ளே ஒண்ணோட கதை இப்படி முடியும்னு யாரு எதிர்பார்த்தா?

மாப்பிள்ளை பையன் முத்துசாமிக்கு 12 வயசுதான் ஆகுது. கல்யாணமாயி 2 வருஷந்தான் ஆச்சு. சிறுசுகளுக்கு கண்ணாலம் பண்ணி வக்கறது ஒண்ணும் புதுசு இல்லியே நமக்கு? பேய் மழை பேயோணும், ஊர் முச்சூடும் வெள்ளக்காடாகோணும், கிணறுகள்ள தண்ணி ‘கட’ (நிரம்பி வழிவது) போகோணும், அந்தக் கிணத்தில முத்துசாமி கதை முடியோணும்னு அவந் தலையில எழுதியிருந்தா அதை யாரால மாத்த முடியும்?

தச்சாசாரி பையனா இருந்தாலும், முடி வெட்டற குடிமகன் பையனா இருந்தாலும், பூசாரி புள்ளையா இருந்தாலும், கவுண்டப்பசங்களா இருந்தாலும், வித்தியாசம் பாக்காம பழகின காலம். தண்ணில குதிச்சு, நீச்சலடிச்சுட்டிருந்தாங்க. வளிசப்பசங்க. அத்தனை பேருமே 10, 12 வயசுக்குள்ளதான் இருப்பாங்க. முத்துசாமி கிணத்து மேட்டுல நின்னு வேடிக்கை பார்த்தான்.

‘‘அட, ஏண்டா அங்கே நின்னுட்டிருக்கற. குதி!’’ன்னு கத்தினாங்க பசங்க.

‘‘எனக்குத்தான் நீந்தத் தெரியாதே!’’ன்னான் முத்துசாமி

கிணறு நீச்சல்

‘‘கவுண்டப்பையனுக்கு நீச்சத் தெரியாதுன்னு யாருக்கு காதுகுத்தறே?’’ன்னு ரெண்டு பேரு அவனைத் தூக்கி தண்ணிக்குள்ளே வீசினாங்க. 2 வாட்டி தண்ணிக்கு மேல வந்து ‘காப்பாத்துங்க’ன்னு பீதியில கத்தினான்.

‘‘தெரியும், தெரியும்... நீந்திட்டு வாடா’’ன்னாங்க.

3-வது தடவை மேல வந்திட்டு உள்ளே போனவன், போயே போயிட்டான்.

எல்லாம் சின்னஞ்சிறுசுக, ‘முக்குளி போட்டு அடில போயி படிக்கட்டுல ஏறி வந்துருவான்!’னு ஒருத்தன் சொன்னான்.

5 நிமிஷம்.. 10 நிமிஷம் ஆச்சு. எந்தப் பக்கமும் முத்துசாமி முகத்தைக் காட்டலே.

பசங்களுக்கு நடுக்கம் வந்திடுச்சு. தண்ணிக்குள்ளே நீந்திப் போய் தொளாவற (தேடற) அளவுக்கு பயிற்சியுமில்லே, வயசுமில்லே.

வேகவேகமா எழுந்து ஈரத்தலையோட ஓடி, ‘‘முத்துசாமி கிணத்துக்குள்ள மாட்டிட்டான். ஒடியாங்க...ஒடியாங்க..!’’ன்னு ஊருக்குள்ளே கத்தினாங்க.

பெரிசுகளுக்கு கையும் ஓடலே, காலும் ஓடலே. 2 பேரு வேகமா வந்து கிணத்துல குதிச்சு தேடினாங்க. அதுக்குள்ள ஒருத்தரு பாதாள சங்கிலி கொண்டாந்தாரு. கவுத்தில கட்டி கிணத்துக்குள்ள வீசி அலாசுனாரு.

தண்ணி மூக்குல ஏறி மூச்சு விட முடியாம செத்துப் போனவன் ஒடம்பு கிணத்துக்கு அடியில போயிரும். அப்புறம் 2 நாள் கழிச்சுத்தான் வயிறு உப்பி மேல வந்து மொதக்கும். இன்னைக்கு அது மேல வராது. மூல மூலையா பாதாள சங்கிலிய விட்டு தேடினாங்க.

100 வருஷத்துக்கு முன்னாடி பசங்கல்லா நீளமா முடி வெச்சிருப்பாங்க. ‘கிராப்’ வெட்டற பழக்கமெல்லாம் வராத காலம்.

2 மணி நேரம் போராடினதுக்கப்புறம் பாதாள சங்கிலி, முத்துசாமி தலைமயிருல சிக்கி அவனை மேலே கொண்டாந்து சேர்த்துது.

ஊரே ஆடிப் போச்சு. தாங்க முடியாத சோகம். வாயிலயும், வயித்திலயும் அடிச்சு அழுதாங்க. என்ன பண்ணியென்ன, போனவன் திரும்பியா வரப்போறான்? அகால மரணமடைஞ்சவங்களை எங்க ஊர்ல எரிக்கறது வழக்கம். எல்லாம் முடிஞ்சுது.

விளையாட்டுப் புள்ளைக்கு வெள்ளைச்சீலை சுத்தினதுதான் கொடுமையிலும் கொடுமை.

அந்த பாவப்பட்ட ஜென்மம்தான், எங்க பெரியம்மா...

பெரியம்மா

7 வயசுல எதுக்கு அலங்காரம் பண்ணினாங்க. எதுக்கு கழுத்தில மஞ்சக்கயித்த கட்டினாங்க. இப்ப எதுக்கு வெள்ளைச்சீலை சுத்தறாங்க. ஒண்ணும் புரியலே. அந்தக் கோலத்துலயே 4 வருஷம் ஓடிச்சு, வெள்ளைச்சீல குழந்தை 13 வயசில வயசுக்கு வந்த கொடுமை உலகத்தில எங்கியுமே நடந்திருக்காது.

ஒரு பொண்ணு பூப்படையறதே தலைமுறையை உருவாக்கத்தான். குடும்பத்தை விருத்தி பண்ணத்தான். இந்தப் புள்ளைக்கு அந்த வாய்ப்பே இந்தப் பிறவில இல்லை.

எனக்கு 7, 8 வயசாகும்போது நான் பார்த்த பெரியம்மா ஊருக்குள்ளேயே ஒசரமான பொம்பளை. கம்பீரமான குரலு. அதட்டினா ஊரே நடுங்கும். எங்க மாமங்காரன் பொள்ளாச்சியில ஓட்டல் நடத்தறதா சொல்லுவாங்கோ. அவரு தன்னோட அக்கா அடுத்தவன் காட்டுக்கு கூலி வேலைக்கு போகக்கூடாதுன்னு 15 ஏக்கரா நெலம் வாங்கி, கெணறு வெட்டி விவசாயம் பண்ண வச்சாரு. ரெண்டு சோடி வண்டிமாடு, ஒரு கறவை மாடு வாங்கிக் குடுத்திருந்தாரு.

சூலூரு காபி கிளப்புக்கு, கிராமப்புறங்கள்ளே - பால்காரங்க வந்து - மாடு வச்சிருக்கிறவங்ககிட்ட விடியக் காலையில பால்கறந்து, பால்கேன்ல ஊத்திக் கொண்டு போய் வியாபாரம் பண்ணுவாங்க.

ஊட்டுக்கு ஒரு கறவை மாடு இருந்தா குடும்பச் செலவுக்கு வேற சம்பாத்தியம் வேண்டியதில்லை.

எப்பவாச்சும் ஒரு நாள், ஊர்க்கோடீல இருந்த பெரியம்மா வீட்டுக்குப் போவேன். அப்பத்தான் கறந்து காய வச்ச பால்ல சக்கரை போட்டு, ‘ஓவல் டின்’னுன்னு ஒண்ணு - அதுக்கு முன்னால கேள்விப்பட்டதே இல்ல. பொள்ளாச்சில இருந்து மாமன், அப்பப்ப அனுப்புவாரு போல. அந்த ஓவல் டின்னுல ரெண்டு ஸ்பூன் பால்ல கலந்து ஆத்திக் குடுப்பாங்க. என்ன ருசி? என்ன ருசி? தேவாமிர்தம்தான்.

சென்னை கல்யாண வரவேற்பில் பெரியம்மாவுடன்.

வாழ்க்கையில எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்காத எங்க பெரியம்மாவை, என் கல்யாண வரவேற்புக்கு மெட்ராஸ் கூட்டியாந்து, ஊரெல்லாம் சுத்திக்காட்டி, 4 நாள் வச்சிருந்து அனுப்பினதில எனக்கு ரொம்பவும் சந்தோஷம்.

‘வெறும் மரமா’வே வாழ்ந்து 90 வயசில, இந்த உலகத்தை விட்டுப்போன புண்ணியவதி அந்தப் பெரியம்மா...

சுவைப்போம்...

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்