’ஆசையே அலைபோலே’, ‘வாராய் நீ வாராய்’, உலவும் தென்றல் காற்றினிலே’, ’கல்யாண சமையல் சாதம்’, ‘புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே’ - ஜிகர்தண்டா குரலோன் திருச்சி லோகநாதன்

By வி. ராம்ஜி

வாத்தியக் கருவியில், சிறிய கருவி, பெரிய கருவி எனும் பேதங்களெல்லாம் இல்லை. கலைஞர்களிலும் அப்படித்தான். இந்தத் தலைமுறையினருக்கு அந்தப் பாடகரைத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் கடந்த தலைமுறையினருக்கு நன்றாகவே பரிச்சயப்பட்ட தனித்துவமிக்க குரல் அவருடையது. வாழ்வியல் தத்துவங்களை இவரின் குரல் வழியே கேட்டால், வாழ்க்கைப் பாடத்தை கன்னத்தில் அறைந்து சொல்லித்தருவது போல் இருக்காமல், செல்லமாக காது திருகி சொல்லித் தருவது மாதிரியான வசீகரக் குரல் அது. அந்த இலவம் பஞ்சுக்குரலுக்கு சொந்தக்காரரின் பெயர்... திருச்சி லோகநாதன். தமிழ் சினிமாவின் முதல் பின்னணிப் பாடகர். ஆமாம்... அப்போதெல்லாம் நடித்தவர்களே பாடினார்கள்.

திருச்சி மலைக்கோட்டைக்குப் பக்கத்தில்தான் வீடு. மனதின் அளவை விட, மனதுக்குள் இருந்த சங்கீதப் பித்து, மலையளவு இருந்தது. அரை நிஜார் பைகளுக்குள்ளே அந்தக்காலத்து இசைஞானியான ஜி.ராமநாதனின் பாடல்களை நிரப்பிவைத்துக்கொண்டு, எப்போதும் பாடிக்கொண்டே இருப்பார். ‘லோகு நல்லாப் பாடுறாம்பா. எங்கே... ஒரு பாட்டுப்பாடு லோகு’ என்று கேட்டதும் காவிரி வெள்ளமென கரை புரண்டோடி வந்தது போல், உதடு தாண்டி வந்து விழுந்தன பாட்டுகள். கேட்டதும் பாடியதும் முதல் முயற்சி; பயிற்சி.

அப்பாவின் நகை செய்யும் தொழிலில் ஆர்வமில்லை. பின்னர், நடராஜன் என்பவரிடம் சங்கீதம் பயின்றார். அங்கேதான் இன்னும் இன்னுமாகப் பட்டை தீட்டப்பட்டார். அந்தச் சிறுவயதிலேயே உச்சஸ்தாயிக்குச் சென்றுவிட்டு, அழகாகக் கீழிறங்கிய சங்கதிகளில் சொக்கிப்போனார்கள் திருச்சியில்.

காலமும் நேரமும் சேர்ந்து வந்தது. எந்த ஜி.ராமநாதனின் இசையில் திளைத்தாரோ... அதே ராமநாதன் இசையில் முதன்முதலாகப் பாடினார். அந்தப் பாட்டு... ‘வாராய் நீ வாராய்... போகுமிடம் வெகுதூரமில்லை... நீ வாராய்’! ‘வாராய்....’ என்று திருச்சி லோகநாதன் குரலுக்காகவே ஒவ்வொரு முறையும் தியேட்டருக்கு ஓடிவந்தார்கள் ரசிகர்கள். வாய்ப்புகளும் அப்படித்தான் வந்தன அவருக்கு.

உற்சாகமான பாடல், வாழ்க்கையையே வெறுத்த பாடல்... இந்த இரண்டும் கிழக்கு, மேற்கு. ஆனால், இந்த இரண்டுக்கும் பொருந்துகிற குரலைக் கொண்டவர்தான் திருச்சி லோகநாதன். ‘ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே’ என்று இவர் பாடினார். டெண்ட் கொட்டகையில் மணல் திட்டில் உட்கார்ந்திருந்த ரசிகர்களை அப்படியே ஓடத்தில் ஏற்றிக்கொண்டு ஒரு ரவுண்டு வந்தார்.

‘புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே, தங்கச்சிக் கண்ணே’ என்று திருச்சி லோகநாதன் பாடிய பாடல்தான், அன்றைக்குக் கல்யாண வீடுகளில் ஒலிபரப்பாகும். தங்கையே இல்லாதவர்கள் கூட, இந்தப் பாடலை எப்போதும் முணுமுணுத்தார்கள். அப்போது, செல்போன் இருந்திருந்தால், ‘ஆசையே அலைபோல’, ‘வாராய் நீ வாராய்’, என்கிற பாட்டையெல்லாம் ரிங் டோனாகவும் காலர் டியூனாகவும் வைத்துக்கொண்டிருப்பார்கள்.

‘உலவும் தென்றல் காற்றினிலே’ என்ற பாடல். அதில், ‘களங்கம் அதிலும் காணுவாய் கவனம் வைத்தே பார்’ என்று பாடும் போது, நம்மையும் உலாவவிட்டு கூட்டி வருவார். அப்படியொரு குலோப்ஜாமூன் குரல் அவருக்கு.

‘பொன்னான கைகள் புண்ணாகலாமொ, போதும் போதும் போகலாம்’ என்றொரு பாடல். பட்சணம் செய்யும் மனைவிக்குப் போட்டியாக கணவன் வர, அங்கே இருவரும் சமையற்கட்டில் பாடுகிற பாட்டு. மணக்க மணக்கக் கொடுத்திருப்பார். ’ஏபிசிடி படிக்கிறேன், இஎப்ஜிஹெச் எழுதுறேன்’ என்ற ஜாலியான பாடலிலும் குதூகலம் குழைத்துக் கொடுத்திருப்பார்.
’அடிக்கிற கைதான் அணைக்கும்’ அந்தக் காலத்தின் வித்தியாசமான பாடலில் இடம்பிடித்தது. அந்த விக்கல் சத்தத்தில் கிறங்கி மிரண்டார்கள் ரசிகர்கள்.

கல்யாண சமையல் சாதம்
காய்கறிகளும் ப்ரமாதம் - அந்த
கௌரவப் பிரசாதம்
இதுவே எனக்குப் போதும்
ஹஹஹஹஹஹஹஹ
ஹஹஹஹஹஹஹஹ
ஹஹஹஹஹஹஹஹ

அந்தார பஜ்ஜி அங்கே
சுந்தார சொஜ்ஜி இங்கே
அந்தார பஜ்ஜி அங்கே
சுந்தார சொஜ்ஜி இங்கே
சந்தோஷ மீறிப் பொங்க
ஹஹஹஹஹஹ
இதுவே எனக்குத் திங்க

என்ற பாடலை திருச்சி லோகநாதனின் குரலில் கேட்டதும், வயிறு முட்டச் சாப்பிட்டவர்களுக்குக் கூட கபகப என வயிறு குரல் கொடுக்க ஆரம்பித்துவிடும். அந்தக் காலத்தில், குழந்தையின் தொப்பையைத் தடவிக்கொண்டு, இந்தப் பாடலைப் பாடியபடியே, சாதம் ஊட்டிவிட்டவர்களும் ஏராளம். அப்படி வளர்ந்தவர்களும் ஏராளம்.

சன்னமான குரலில், சங்கதிகள் சேர்த்துக் கொண்டே வந்து உச்சம் தொடும் குரல், மயக்கிப் போட்டது. ‘என்று தணியும் இந்த சுதந்திர தாகம்’ என்பது உள்ளிட்ட எத்தனையோ பாடல்கள். கேட்டால் துன்பமெல்லாம் பறந்தோடும். கேட்டுக் கொண்டே இருக்கவைக்கும்.

நம்மை ரசிக்க வைக்கிற ரசகுல்லாக் குரலோன் திருச்சி லோகநாதன். இப்படித்தான், நடிகர் தங்கவேலு வீட்டில் நவராத்திரி விழா. மதுரை சோமு பாடினார். அவர் பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்த திருச்சி லோகநாதன், விறுவிறுவென மதுரை சோமு அருகே சென்றார். ‘பிரமாதம்’ என்று சொல்லி, கையில் இருந்த வெற்றிலைப் பெட்டியை அன்பளிப்பாகக் கொடுத்தார். அது வெள்ளி வெற்றிலைப் பெட்டி. ஒரு கலைஞனாக இருக்கவேண்டுமெனில், ஒரு ரசிகனாகவும் இருக்கவேண்டும். திருச்சி லோகநாதன் மகா கலைஞன்; அற்புத ரசிகன்.

1924ம் ஆண்டு ஜூலை 24ம் தேதி பிறந்தார் திருச்சி லோகநாதன். 89ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி காலமானார். இன்று அவருடைய 96வது பிறந்தநாள். நூற்றாண்டு கொண்டாட இன்னும் நான்கு வருடங்களே இருக்கின்றன.

‘வாராய்’ பாடலைக்கேட்க மலைகளும் ‘உலவும் தென்றல்’ பாட்டைக் கேட்க ஓடங்களும் ‘ஆசையே அலை போல’ பாடலின் குரலைக் கேட்க, அலைகளும் திருச்சி லோகநாதனின் குரலுக்கு ஏங்கிக் கொண்டிருக்கின்றன.

இரவுகளில் திருச்சி லோகநாதனின் பாடல்களைக் கேட்டுப் பாருங்கள். தூக்கம் வராதவர்களுக்கு தூக்கம் வரும். தூக்கம் சொக்கிப் போனவர்கள், தூங்காமல் திருச்சி லோகநாதன் அழைத்துச் செல்லும் இரவுகளுக்குள் பயணிப்பீர்கள்.
திருச்சி லோகநாதன் பிறந்தநாள் இன்று. அந்த ஜிகர்தண்டா குரலோனைக் கொண்டாடுவோம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்