- ஸ்ரீவித்யா பிறந்தநாள் ஸ்பெஷல்
நடிகையில் அம்மா நடிகை என்ன, ஹீரோயின் வேஷம் என்ன... ‘நடிப்பே விருப்பம், நடிப்பதே தொழில்’ என்றிருக்க எத்தனைபேரால் முடியும்? அந்த நடிகைக்கு அம்மாவாக நடிக்கும் போது இருவருக்கும் ஐந்து வயதுதான் வித்தியாசம். அப்போது அம்மாவாக நடிக்கும்போது அந்த நடிகைக்கு 22 வயதுதான். ஆனாலும் அம்மாவாக நடித்தார். ‘இந்தக் கேரக்டரை இவரைத் தவிர யாருமே பண்ணமுடியாதுப்பா’ என்று சொல்லும் அளவுக்கு நடித்துப் புகழ் பெற்றார்.
கேரள சினிமா உலகிலும் புதியதொரு சாதனையை நிகழ்த்தினார் இதே நடிகை. ’சட்டம்பிக்காவலா’ எனும் படத்தில், நடிகர் சத்யனுடன் நடித்தார். அப்போது சத்யனுக்கு 57 வயது. அவருடன் நடித்த இந்த நடிகைக்கோ, 17 வயது. 40 வயது வித்தியாசத்தையெல்லாம் பார்க்காமல், கேரக்டரையும் வாய்ப்பையும் நடிப்பை வெளிப்படுத்தமுடியுமா என்பதை மட்டுமே பார்த்தார். நடித்தார்.
இந்த இரண்டு படங்களைப் பற்றிச் சொன்ன இந்த இரண்டு விஷயங்களுமே அவரை பிறவிக் கலைஞன் எனும் அடையாளம் காட்டிவிடும். அவர்... ஸ்ரீவித்யா. முதலில் சொன்ன படம்... ‘அபூர்வ ராகங்கள்’.
‘காரைக்கால் அம்மையார்’ படத்தில் கே.பி.சுந்தராம்பாள் பாடிய ‘தகதகதகதகவென ஆடவா’ பாடல் நினைவிருக்கிறதுதானே. அந்தப் பாட்டுக்கு பம்பரமென காற்றையே கிழித்துக்கொண்டு இந்தத் தாளகதிக்கு ஆடினார் அவர். பார்த்தவர்கள் எல்லோரும் மிரண்டுபோனார்கள். வியந்து புகழ்ந்தார்கள். எம்.எல்.வி. எனும் எம்.எல்.வசந்தகுமாரியின் மகள், பாட்டுக்குயிலாக வருவார் என குடும்பம் நினைத்த போது, ஆட்டமயிலாக களமிறங்கிய அந்த நடிகை ... ஸ்ரீவித்யா.
அம்மாவின் அன்பு கிடைக்கவேண்டிய தருணத்தில், அம்மா கச்சேரி கச்சேரியாக மேடையேறினார், அப்பாவின் அரவணைப்பும் பார்க்கவில்லை. இறந்தார். பாட்டு ஈர்க்கவில்லை. நடனம் இழுத்தது. நாட்டிய சகோதரிகள் லலிதா, பத்மினி, ராகினி வீட்டுக்குப் பக்கத்துவீடு என்பதுதான் காரணமோ என்னவோ. அவர்களின் பாராட்டும் ஊக்கமும் முயற்சியும் பயிற்சியும் ஸ்ரீவித்யாவை மெருகேற்றின.
பிறகுதான், ‘திருவருட்செல்வர்’, ‘காரைக்கால் அம்மையார்’ என்றெல்லாம் படங்கள் கிடைத்தன. ‘ரகசிய போலீஸ் 115’ படத்தில் எம்ஜிஆருடன் ஜோடி சேரும் வாய்ப்பு வந்தது. ஆனால் ‘ரொம்பச் சின்னப்பொண்ணு’ என்று தடைப்பட்டது. ஆனாலும் அடுத்தடுத்த கட்டத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ படத்தில் ஸ்ரீவித்யாவையும் அவர் லொட்டுலொட்டு என்று தட்டுகிற கரண்டியையும் எவராலும் மறக்கவே முடியாது. கே.பாலசந்தர், ஸ்ரீவித்யாவுக்குக் கொடுத்த அருமையான கதாபாத்திரம். ஒரே நாயகனை, மூன்று சகோதரிகளும் காதலிக்க, அதில் தோற்று நொந்துபோகிற பாத்திரத்தை, அத்தனை நேர்த்தியாகச் செய்திருப்பார் ஸ்ரீவித்யா.
அதையடுத்து வரிசையாக படங்கள். அவரின் நடிப்பையும் அவரின் கண்கள் பேசும் வசனங்களையும் ரொம்பவே ரசித்தார்கள் மக்கள். அநேகமாக, டி.ஆர்.ராஜகுமாரியின் கண்களுக்குப் பிறகு, பேசும் கண்களாக ஸ்ரீவித்யாவின் கண்கள் திகழ்ந்தன. அந்தக் கண்களைக் கொண்டும் ஆகச்சிறந்த நடிப்பைக் கொண்டும், பைரவி எனும் கதாபாத்திரத்தை அப்படியே தாங்கிப் பிடித்தார் ஸ்ரீவித்யா. பாலசந்தரின் ‘அபூர்வ ராகங்கள்’ பைரவியை யாரால்தான் மறக்கமுடியும்? நிஜத்தில் தன்னைவிட ஐந்து வயது அதிகம் கொண்ட ஜெயசுதாவுக்கு அன்னை. படத்தில், தன்னை விட வயது குறைந்த கமலின் விருப்பத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்கும் மிகப்பெரிய பாடகி. கைவிட்ட காதலன் ரஜினியால் உண்டான குழந்தையை, அனாதைக் குழந்தை என்று வளர்க்கும் கொடுமை... என நடிப்பில் புதியதொரு பரிணாமும் உயரமும் அவதாரமும் காட்டினார் ஸ்ரீவித்யா.
’வெள்ளிவிழா’, ‘நூற்றூக்கு நூறு’, ’உணர்ச்சிகள்’, ‘ஆறு புஷ்பங்கள்’ என நடித்த படங்களிலெல்லாம் தனித்துத் தெரிந்தாலும் ஒருகட்டத்தில், ‘இந்தாங்க அம்மா வேஷம்’ என்றது தமிழ்த் திரையுலகம். அதேசமயம், கேரளத் திரையுலகம் விதம்விதமான கதாபாத்திரங்களை வாரி வாரி வழங்கியது. இருநூற்றம்பது படங்களுக்கும் மேல் அங்கே நடித்தார்.
இங்கே... எந்த கமலுடன் நடித்தாரோ அவருக்கு அம்மாவாகவும் ரஜினியின் முதல் படத்து நாயகியான நிலையிலும் அவருக்கு அம்மா, அக்கா, மாமியார் என்றும் நடிக்கத் தொடங்கியதெல்லாம் தமிழ் சினிமாவில் இவருக்குக் கிடைத்த சோகப்பக்கங்கள். ஆனாலும் எதையும் பொருட்படுத்தாமல், அட்டகாசமாக ஒளிர்ந்தார், குணச்சித்திர நாயகி என்று பேரெடுத்தார்.
‘ஏழு ஸ்வரங்களுக்குள்’ பாடலில் ஸ்ரீவித்யாவின் முகபாவங்கள் தனித்துவமிக்கவை. ஒவ்வொரு வரிகளையும் பாவங்களாலேயே சொல்லியிருப்பார். ‘கேள்வியின் நாயகனே, இந்தக் கேள்விக்கு பதிலேதய்யா’ பாடலிலும் அப்படித்தான். படத்தின் க்ளைமாக்ஸை பாடலைக் கொண்டே முடித்திருப்பார் கே.பி. அதை ஆரம்பித்து முடித்து வைப்பார் ஸ்ரீவித்யா.
‘நூற்றுக்கு நூறு’ படத்தில், ஆசிரியரையே காதலிக்கும் கேரக்டர். ஒருபக்கம் குற்ற உணர்ச்சியை ஒரு கண்ணும், இன்னொரு பக்கம் குறுகுறுப்பை இன்னொரு கண்ணும் கேரக்டராக மாறி எடுத்துச் சொல்லும்.
பின்னர், அஜித், விஜய், சூர்யா என எல்லா நடிகர்களுக்கும் அம்மா, அக்கா, அத்தை என வலம் வந்தார். எல்லோருக்கும் பிடித்த நடிகர், பிடித்த நடிகை என்று இருப்பது அரிது. அப்படி அரிதான நடிகை ஸ்ரீவித்யா.
ஸ்ரீவித்யாவை எல்லா இயக்குநர்களுக்கும் பிடிக்கும். பந்தா இல்லாமல், கெடுபிடிகள் செய்யாமல் நடித்துக் கொடுத்துவிட்டுப் போவார். எல்லா நடிகர் நடிகையருக்கும் பிடிக்கும். சீனியர் நடிகை, சிறந்த நடிகை என்கிற ஈகோ இல்லை. எல்லா ரசிகர்களுக்கும் பிடிக்கும். எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் மிகச்சிறந்த நடிப்பை வழங்குவார். ‘இமயம்’ படத்தில் சிவாஜிக்கு ஜோடியாகவும் நடித்தவர்... ‘ஆஹா’ படத்தில் விஜயகுமார் மனைவியாக மடிசார் புடவையுடன் வெளுத்து வாங்கினார்.
பத்திரிகையில், தொடர்கதையின் நாயகிக்கு மடிசார் கட்டிக்கொண்ட மாமியாக மாடலிங் செய்தது, அப்போது பெரிய அளவில் பேசப்பட்டது. சொல்லப்போனால் அந்தக் கதை, ஸ்ரீவித்யாவின் புகைப்படத்தாலேயே பிரபலமாயிற்று.
பாலசந்தரின் ’புன்னகை மன்னன்’ டான்ஸ் பள்ளி டீச்சரையும் வஸந்தின் ‘கேளடி கண்மணி’யின் வாய் பேச முடியாத காது கேட்காத அன்னை கதாபாத்திரத்தையும் மணிரத்னத்தின் ‘தளபதி’ அம்மா கதாபாத்திரத்தையும் வேறு எவரும் செய்யவே முடியாத கேரக்டர்களாக தன் நடிப்பால் இன்றளவும் நிற்கவைத்திருக்கிறார் ஸ்ரீவித்யா.
1953ம் ஆண்டு ஜூலை 24ம் தேதி பிறந்தார் ஸ்ரீவித்யா. 2006ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ம் தேதி புற்றுநோயால் காலமானார். 53ம் ஆண்டு பிறந்தவர், 53ம் வயதில் இறந்தார். ஆனாலும் ஸ்ரீவித்யாவும் அவரின் கண்களும் ரசிகர்களால் மறக்கவே மறக்கமுடியாது. ‘ஸ்ரீவித்யா...’ என்று சொல்லும்போதே ஏதொவொரு மென்சோகம் நமக்குள் சட்டென்று எழும். ஆனால் வாழ்க்கை முழுக்க சந்தோஷத்தையும் நிம்மதியையும் அனுபவிக்காமலே இறந்துவிட்டார் ஸ்ரீவித்யா.
கேரளத்தில், அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ததும் அவரை மொத்தத் திரையுலகமும் இன்றைக்கும் தனியிடத்தில் வைத்திருப்பதுமான பெருமையும்... காலத்துக்கும் அவரை இருக்கச் செய்யும். காலத்துக்கும் இருப்பார் ஸ்ரீவித்யா. அவரை போற்றிக்கொண்டே இருப்பார்கள் ரசிகர்கள்.
- இன்று ஜூலை 24ம் தேதி ஸ்ரீவித்யாவின் 67வது பிறந்தநாள்.
அந்த உன்னத நடிகையைப் போற்றுவோம்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago