- இயக்குநர் மகேந்திரன் 81வது பிறந்த தினம் (25.7.2020)
இதயம் தொட்ட இயக்குநர்கள் எத்தனையோ பேர் இருந்திருக்கிறார்கள். இன்னமும் இருக்கிறார்கள். ‘இந்த டைரக்டரின் படங்களைப் பார்த்துத்தான் சினிமாவுக்கு வந்தேன்’ என்று பல இயக்குநர்கள், ஒவ்வொரு இயக்குநரைப் பற்றியும் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், இந்த இயக்குநரைக் கண்டு மிரண்டு போய், வியந்து பார்த்தவர்கள்தான் உண்டு. ‘இதுமாதிரியெல்லாம் நம்மாள படம் எடுக்கமுடியாதுப்பா’ என்று மலைத்துப் பிரமித்தவர்களே அதிகம். இப்படி வியப்புக்கும் பிரமிப்புக்குமான படைப்பாளி... இயக்குநர் மகேந்திரன்.
எண்ணமும் எழுத்தும் செயல்பாடுகளும் ஒரு புள்ளியில் குவிந்த நவீன உலகின் இயக்குநர்... மகேந்திரன். இவருக்கு முன்னே இருந்த இயக்குநர்களின் எந்தச் சாயலும் இல்லாமல் படம் தந்த புதியதொரு அவதாரக் கலைஞன். இவருக்குப் பிறகு வந்த எவருமே இவரைப் போல் படமெடுத்ததில்லை என்பதால், மகேந்திரன் எனும் பூ... குறிஞ்சிப்பூவாய், அத்திப்பூவாய் தனித்துவம் பெறுகிறது.
‘சின்ன வயசிலிருந்தே சினிமா ஆசை இருந்துச்சு’ என்று சொல்லுவார்கள். ஆனால் மகேந்திரனுக்கு அப்படியெல்லாம் எந்த ஆசையும் இல்லை. ‘படிக்கணும், நல்ல வேலைக்குப் போகணும். நாலு காசு சம்பாதிக்கணும். குடும்பத்தையும் பெத்தவங்களையும் காப்பாத்தணும்’ என்று சராசரி மனிதனாக, மிடில் கிளாஸ் கனவுடன் மட்டுமே இருந்தவர்தான் மகேந்திரன். அதனால்தானோ என்னவோ... இவரின் கதை மாந்தர்களும் மிக மிக எளிமையானவர்களாக, நம் தெருவில் வசிப்பவர்களாக, நம் வீட்டுக்குடும்பத்தினராகவே இருந்தார்கள்.
காரைக்குடி அழகப்பா கல்லூரிக்கு எம்ஜிஆர் வந்ததுதான் மகேந்திரன் வாழ்வில் முதல் திருப்புமுனை. அதன் பின்னே எம்ஜிஆரின் இதயத்துக்குள் புகுந்து கொண்டார் மகேந்திரன். இந்த தேதி வரை ‘பொன்னியின் செல்வன்’ பிரமிப்பாகவே பார்க்கப்படுகிறான். பேசுபொருளாக இருக்கிறான். இவருக்கு வந்த முதல் வேலையே,’பொன்னியின் செல்வன்’ நாவலுக்கு ஸ்கிரிப்ட் நெசவிட்டதுதான். எம்ஜிஆரின் ஆசை அது. சினிமா ஆசையே இல்லாமல், சினிமாவுக்குள் மகேந்திரன் நுழைந்த தருணத்தின் முதல் படியும் அங்குதான்.
சோ நடத்திய ‘துக்ளக்’ பத்திரிகையில், உதவி ஆசிரியர். சினிமா விமர்சனம் எழுதும் வேலை. இங்கேதான் மகேந்திரன் இரண்டாவது படியில் ஏறினார். அவரின் சினிமா எப்படி புதுமாதிரியாக இருந்ததோ, அதேபோல், அவரின் விமர்சனமும் புதிதாக இருந்தது. அப்போது சோ பழக்கமானார். செந்தாமரை பழக்கமானார், சாமிக்கண்ணு பழக்கமானார்.
சிவாஜிக்கு ‘நிறைகுடம்’ படத்துக்கு கதை, வசனம் எழுதினார். முக்தா சீனிவாசன் இயக்கினார். செந்தாமரை நடித்த நாடகத்திற்கு கதை வசனம் எழுதினார். அந்த நாடகத்தைப் பார்க்க வந்த சிவாஜி, கதையிலும் சொல்லிய விதத்திலும் ஈர்க்கப்பட்டார். ‘மகேந்திரன், இதைப் படமாப் பண்ணுவோம்’ என்றார். ‘தங்கப்பதக்கம்’ உருவானது. தமிழ் சினிமாவின் முதல் போலீஸ் கதாபாத்திரம் ரசிகர்களைக் கவர்ந்து, இன்று வரைக்கும் மறக்காமல் கவுரமாக, சல்யூட் போடப்படுகிறதென்றால்... டி.எஸ்.பி.சவுத்ரி கேரக்டருக்குத்தான்! இதன் பிறகு சிவாஜி ‘மகேன்’ என்று அழைக்கும் அளவுக்கு மனசுக்கு நெருக்கமானார்.
எம்ஜிஆரையும் சிவாஜியையும் காந்தமென இழுத்த மகேந்திரன், பின்னாளில், கமலையும் ரஜினியையும் ஈர்த்ததில் வியப்பேதுமில்லை.
இடையே பல படங்கள்... வசனங்கள். நடுவே ‘சினிமாவும் வேணாம், சென்னையும் வேணாம்’ என்று காரைக்குடிக்கே திரும்பியதெல்லாம் மகேந்திரன் தன் வாழ்க்கைக்குள் போட்ட சடுகுடு ஆட்டங்கள்.
பார்த்த சினிமாக்களாலும் வேலை பார்த்த சினிமாக்களாலும் ஒரு முடிவுக்கு வந்திருந்தார் மகேந்திரன். ‘நாம படம் பண்ணும்போது இப்படிலாம் பண்ணவே கூடாது’ என்பதில் உறுதியாக இருந்தார். இவருடைய கதைகள் எத்தனையோ படமாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் எந்த சமரசமும் செய்துகொள்ளாமல், முதல் படத்தை உமாசந்திரன் நாவலைப் படமாக்கினார்.’பொன்னியின் செல்வன்’ எனும் பிரமாண்டத்தை திரைக்கதையாக்கியவருக்கு, அதற்கு நேர்மாறாக ‘முள்ளும் மலரும்’ அப்படியே எளிமையான படைப்பாக உருவாக்கியதுதான் மகேந்திரன் எனும் பண்பட்ட கலைஞனின் அசாத்திய சிந்தனை.
எம்ஜிஆருக்கு நெருக்கமானவர். ஆனால் சிவாஜிக்குத்தான் எழுதினார். அதேபோல், கமலுக்கு நெருக்கமானவர். ரஜினியை வைத்துதான் படங்களை இயக்கினார். ‘முள்ளும் மலரும்’ படத்துக்காக, ‘நல்ல ஒளிப்பதிவாளர் அமையலையே’ என்று தவித்த மகேந்திரனுக்கு, பாலு மகேந்திராவை அறிமுகம் செய்து வைத்தார் கமல். இன்னும் பல விஷயங்களும் செய்துகொடுத்தார். ஒருகட்டத்தில், தயாரிப்பாளரும் மகேந்திரனும் லேசாக முட்டிக்கொள்ள, மகேந்திரன் எடுக்க நினைத்த காட்சியை எடுப்பதற்கு சகலமாகவும் இருந்து உதவினார். ‘முள்ளும் மலரும்’ அடைந்த வெற்றியும் அது கொடுத்த தாக்கமும் இன்றைக்கும் பேசப்பட்டு வருகிறது. வணிகரீதியாக சூப்பர் ஸ்டாரான ரஜினியே கூட, இன்றுவரைக்கும் சிலாகித்துக்கொண்டிருக்கிறார். குருநாதர் பாலசந்தரிடமே ‘பிடித்த படம் முள்ளும் மலரும்’ என்று சொல்லுமளவிற்கு ரஜினியின் மனதைத் தைத்திருந்தது; மனதை மலரச் செய்திருந்தது.
புதுமைப்பித்தனின் ‘சிற்றன்னை’ கதையை ‘உதிரிப்பூக்கள்’ என்று கோர்த்துக் கொடுத்தார். படத்தின் வசனங்களை, பஸ் டிக்கெட்டின் பின்னே எழுதியிருந்தார். அநேகமாக, இவ்வளவு குறைந்த வசனங்களுடன் படம் நெடுக வந்த மெளனங்களே வசனங்களாகவும் இசையாகவும் உருமாறியிருந்தன. படத்துக்கு இசை அவசியம் என்பதை உணர்ந்து இளையராஜாவை இட்டு நிரப்பினார் மகேந்திரன். அந்த இசையை சப்தமில்லாமலும் ஆக்கி மகேந்திரனின் சிந்தனையைக் கலைக்காமல் இருந்தார் இளையராஜா.
நம்பவே முடியாத விஷயமோ வார்த்தையோ கேள்விப்பட்டால், ‘இன்னிக்கி மழை வரப்போவுது’ என்று சொல்லாதவர்களே இல்லைதானே. இதை வார்த்தையாக்காமல் காட்சிப்படுத்தியிருப்பார் மகேந்திரன். கொடுமைக்கார முசுடுப்புருஷன் விஜயன், ‘கிளம்பி இருக்கச் சொன்னாங்க. சினிமாவுக்குப் போறோமாம். அப்படியே ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு வந்துடுறோமாம்’ என்ற தகவல் தெரிந்ததும் அஸ்வினி, கிளம்பி, வாசலுக்கு வந்து நிற்பார். அப்படியே வானம் பார்ப்பார். லேசாக புன்முறுவல் பூப்பார். அதேபோல், உயிர் கரைகிற கடைசி நிமிடத்தில், அப்பா, தங்கை என சுற்றிக்கொண்டு கலங்கிக் கிடக்க, அஸ்வினி கண்ணில் இருந்து கன்னம் தொடும் கண்ணீருடன் குழந்தையைப் பார்ப்பார். அப்போது அந்தக் குழந்தை அஸ்வினியின் கையில் அணிந்திருக்கும் வளையல்களைத் தொட்டு விளையாடிக்கொண்டிருக்கும். க்ளைமாக்ஸ் காட்சியில், சலனமற்று ஓடிக்கொண்டிருக்கும் அந்த ஆற்றுக்குள் இறங்கி உயிரை விடுவார் விஜயன். அப்படி தண்ணீருக்குள் மூழ்குகிற தலை காணாமல் போகிற காட்சியை மிட் ஷாட்டாக, டாப் ஆங்கிள் ஷாட்டாக காட்டுகிற வழக்கத்தையெல்லாம் உடைத்தார் மகேந்திரன். விஜயனின் மரணத்தை, கரையில் இருக்கும் கேரக்டர்களின் தவிப்பையும் பதற்றத்தையும் கொண்டு மட்டுமே காட்டியிருப்பார்.
பிறகு, அந்த ஆற்றைக் காட்டுவார். வழக்கம் போல் சலனமே இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கும். கேமிரா நகர்ந்துகொண்டே வரும். அங்கே, விஜயனின் மகனும் மகளும் கரையிலேயே ஆற்றைப் பார்த்தபடி ஓடிக்கொண்டிருப்பார்கள். படம் போட்ட முதல் ரீல் தொடங்கி கடைசி ரீல் வரை, ‘விஜயனைக் கொல்லுங்கடா’ என்று பல் கடித்து, கைபிசைந்த ரசிகர்கள் கூட, பொசுக்கென்று அழுது, கண்ணீரைத் துடைத்துக்கொண்டே, துடைத்துக்கொண்டே, துடைத்துக்கொண்டே வெளியே வந்தார்கள், கனத்த இதயத்துடன். தமிழ் சினிமா அதுவரை கண்டிராத மகேந்திராத மொழி அவை! ’உதிரிப்பூக்கள்’ படத்தின் போஸ்டரில் அஸ்வினியும் இரண்டு குழந்தைகளும் இருப்பார்கள். ஒரு போஸ்டர், நம்மை என்னவோ செய்துவிடும். அப்படியெல்லாம் முடியுமா என்ன? அப்படிச் செய்தார் மகேந்திரன். ஆனால் அவர் மாயக்காரர் அல்ல... நிஜங்களை செல்லுலாய்டில் வார்த்துக் கொடுத்த ஒளிச்சுருள் சிற்பி.
மேக்கப் இல்லாத இயல்பு முகங்கள்... மகேந்திரனின் பாத்திர வார்ப்புகள். ’அடிப்பெண்ணே’வும், ‘அழகிய கண்ணே’வும் ‘மெட்டிஒலி காற்றோடு’வும், ‘அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா’வும் ‘தாழம்பூவே வாசம் வீசு’வும் ’காற்றில் எந்தன் கீதம் காணாத உன்னைத் தேடுதோ’வும் என மகேந்திரன் படத்தின் பாடல்கள் கூட, ஒரு கேரக்டராக நமக்குள் புகுந்து நிமிண்டிக் கொண்டே இருக்கும். இம்சை பண்ணிக்கொண்டே இருக்கும். எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் விஜயகுமாரி, ராதிகா, வடிவுக்கரசிக்கெல்லாம் ‘மெட்டி’யும் ‘மகேந்திரனும்’ மறக்கமுடியாத ஸ்பெஷல்.
நாவல்களை படங்களாக்கியவர்தான் மகேந்திரன். அதேசமயம், படங்களையே நாவல் போல் தந்தவர் அவர். ‘உதிரிப்பூக்கள்’ படத்தில் மனைவியின் தங்கை திருமணப்பத்திரிகையுடன் வந்திருக்கும் போது, விஜயன் செய்யும் காரியம்... அவளின் ஆடையையெல்லாம் இழுத்து தூக்கிவீசுவார். ஆடையே இல்லாமல், மூலையில் சுருண்டிருப்பார். அந்தப் பெண்ணைத் தொடக்கூட மாட்டார். அருகில் கூட போகமாட்டார். ‘ஆசீர்வாதம்... இதான் ஆசீர்வாதம். சாகறவரைக்கும் இந்த நினைப்பு உனக்கு இருக்கும்’ என்பார். தமிழ் சினிமாவில் இப்படியானதொரு சைக்கோ கேரக்டரை, கொடூரனை, வில்லனை இதுவரை எவரும் உருவாக்கியதில்லை.
இரண்டரை மணி நேர சினிமா. பாட்டு இருக்கணும். ஃபைட் இருக்கணும். குத்துப்பாட்டு இருக்கனும். கொஞ்சம் செண்டிமெண்ட் இருக்கணும். நிறைய ஆக்ஷன் இருக்கணும் என்றெல்லாம் பகுத்து வகுத்துக்கொண்டு, அதன் பின்னே ஓடிக்கொண்டிருக்கிற திரையுலகில், அந்த ‘உதிரிப்பூக்கள்’ படத்தில் சலனமே இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிற நதியைப் போல, மெளன மொழியின் அடர்த்தியுடனும் மெல்லிய உணர்வுகளும் கொண்டு தன் படைப்புகளைத் தந்த மகேந்திரன் இன்னும் ஆண்டாண்டு காலத்துக்கும் ஆச்சரியக்குறிதான்! காரணம்... தமிழ் சினிமாவில் ஒரேயொரு மகேந்திரன் தான்!
- ஜூலை 25ம் தேதி மகேந்திரன் பிறந்த தினம். 81வது பிறந்த தினம்.
‘உதிரிப்பூக்களை’ தந்து உதிராத பூவாக நம் மனதில் வாசம் வீசுகிற, ‘முள்ளும் மலரும்’ தந்து நம் மனதில் முள்ளெனக் குத்திக் காயம்பட்ட இடத்திலெல்லாம் மலரால் ஒத்தடமிட்ட மகேந்திரனைப் போற்றுவோம்!
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago