அமெரிக்க வானூர்தியாளர் அமெலியா எர்ஹாட், வானூர்தி சாகசங்களில் பல சாதனைகளை நிகழ்த்திய பெண்ணாகத் திகழ்கிறார். இவருடைய சாதனைகள் மட்டுமின்றி, இவர் மறைந்துபோன சம்பவமும் நீண்ட காலத்துக்குப் பேசுபொருளாக இருந்தது.
1897, ஜூலை 24 அன்று நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த அமெலியா, இளம் வயதிலேயே பெண்களுக்கு என்று வரையறுக்கப்பட்ட விஷயங்களை மீறுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். கூடைப்பந்து விளையாடினார். வாகனப் பழுது குறித்துப் படித்தார். முதல் உலகப் போரில் செஞ்சிலுவைச் சங்கத்தில் செவிலியாகப் பணியாற்றினார். அப்போதுதான் போர் விமானங்களைக் கூர்ந்து நோக்கும் வாய்ப்பு கிடைத்தது.
பறவையைப் போல் வானில் சுற்றித் திரியும் விமானங்கள் மீது அளவுக்கு அதிகமான ஆர்வம் வந்தது. விமானங்கள் குறித்து நிறையப் படித்தார். விமானங்கள் தொடர்பான செய்திகளைப் பத்திரப்படுத்தினார். 1920-ம் ஆண்டு உலகப் போரில் விமானியாகப் பணியாற்றிய ஃப்ராங்க் ஹாக்ஸுடன் விமானத்தில் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அதற்குப் பிறகு விமான ஓட்டுநருக்கான பயிற்சியை எடுத்துக்கொண்டார் அமெலியா. பயிற்சிக் கட்டணம் செலுத்துவதற்காகத் தொலைபேசி நிறுவனம் உட்பட பல்வேறு இடங்களில் வேலை செய்தார். அந்த ஆண்டின் இறுதியில் பழைய கின்னர் விமானம் ஒன்றை வாங்கினார். மஞ்சள் நிறம் கொண்ட அந்த விமானத்துக்கு மஞ்சள் வண்ணப் பறவையான கேனரியின் பெயரைச் சூட்டினார்.
1921-ம் ஆண்டு விமான ஓட்டுநர் பயிற்சியை முடித்த அமெலியா, மிகக் குறைந்த காலத்திலேயே சாதனைகளைச் செய்ய ஆரம்பித்துவிட்டார். 1922-ம் ஆண்டு 14 ஆயிரம் அடி உயரத்தில் தனியாகப் பறந்த முதல் பெண் என்ற சாதனையைப் படைத்தார்.
ஜார்ஜ் சாப்மென்னுடன் அமெலியாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு வீட்டுப் பொறுப்புகளை மட்டுமே அமெலியா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினார் சாப்மென். அமெலியா சிறிதும் யோசிக்கவில்லை. லட்சியத்தையே விலையாகக் கேட்கும் திருமணம் தேவையில்லை என்று சொல்லிவிட்டார்.
பெண்ணை அட்லாண்டிக் பெருங்கடலைக் கடக்க வைப்பதற்கான திட்டத்தில் நிறுவனம் ஒன்று ஈடுபட்டது. அந்தத் திட்டத்துக்கு ஸ்பான்சர் செய்வதற்காகச் செல்வந்தரும் பதிப்பாளருமான ஜார்ஜ் பி.புட்னம் முன்வந்தார். அப்போதுதான் அமெலியாவைச் சந்தித்தார். இருவரும் சேர்ந்து பல திட்டங்களில் பணியாற்றினர். விவாகரத்து பெற்றிருந்த புட்னம், அமெலியாவைத் திருமணம் செய்துகொள்ள பல முறை கோரிக்கை வைத்தார். ஆறாவது முறை கோரிக்கை வைத்தபோது, தன் லட்சியத்தில் எந்தவிதமான குறுக்கீடும் இருக்கக் கூடாது என்ற உறுதிமொழியை வாங்கிக்கொண்டு, திருமணத்துக்குச் சம்மதித்தார் அமெலியா. திருமண உறுதியேற்பில் சம்பிரதாயமாகச் சொல்லப்படும் `கணவருக்கு அடங்கி நடப்பேன்’ என்பதைச் சொல்ல மறுத்துவிட்டார் அமெலியா.
1932-ம் ஆண்டு அட்லாண்டிக் பெருங்கடலைத் தனியாகக் கடந்த பெண் என்ற சாதனையை நிகழ்த்தினார். வானூர்திகளில் அசாதாரணமான சாதனைகளைப் படைத்தவருக்கான விருது, அமெரிக்க ராணுவத் துறை மூலம் வழங்கப்பட்டது. இந்த விருதை வென்ற முதல் பெண் அமெலியாதான். அமெரிக்க அரசும் பறக்கும் சிலுவை விருதை முதல் முறை ஒரு பெண்ணுக்கு வழங்கி, அந்த விருதுக்குப் பெருமை சேர்த்துக்கொண்டது.
அமெரிக்காவில் தொடர்ந்து 19 மணிநேரம் தரையிறங்காமல் விமானத்தை ஓட்டிய பெண் என்ற சாதனையும் இவர் வசம் வந்தது. ஹவாயிலிருந்து அமெரிக்காவுக்குத் தனியாக விமானம் ஓட்டிய பெண் என்ற சாதனையும் செய்தார்.
தன் அனுபவங்களைப் புத்தகங்களாக எழுதி, மக்களிடம் செல்வாக்கைப் பெற்றார். பறத்தல் குறித்து வெளிவந்த புத்தகங்களில் அதிகம் விற்பனையானது அமெலியாவுடையதுதான்! பர்டியூ பல்கலைக்கழகத்தில் வானூர்தி துறைக்கான வருகை தரும் பேராசிரியராகப் பணியாற்றினார். பெண்களின் பிரச்சினைகளுக்குக் குரல் கொடுத்தார்.
பெண் விமானிகளுக்காகவே `99’ என்ற அமைப்பை ஆரம்பித்தார். இந்த அமைப்பின் மூலம் ஏராளமான பெண்கள் விமானப் பயிற்சியைப் பெற்றார்கள்.
1937... அமெலியாவுக்கு உலகத்தைச் சுற்றி வர வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. அதற்கான பணிகளில் புட்னமும் அமெலியாவும் தீவிரமாக இறங்கினார்கள். அமெலியாவுடன் ஃப்ரட் நூனனும் செல்வதாக முடிவானது.
ஜூன் 1... வெற்றிகரமாக உலகைச் சுற்றி வந்துவிடுவேன் என்று புட்னமுக்கு நம்பிக்கை அளித்தார் அமெலியா. தரையிறங்கும் இடங்களிலிருந்து கடிதங்கள் எழுதுவதாகக் கூறினார். இனிமையான இல்லறத்துக்கும் சாதனை முயற்சிகளுக்குக் கொடுக்கும் ஆதரவுக்கும் நன்றி கூறிவிட்டுக் கிளம்பினார். நம்பிக்கையோடும் மகிழ்ச்சியோடும் கையசைத்தார் புட்னம்.
தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தியா, மியான்மர், தாய்லாந்து, சிங்கப்பூர் என்று தரையிறங்கிய இடங்களில் எல்லாம் தன்னுடைய அனுபவங்களை புட்னமுக்குக் கடிதங்களாக அனுப்பி வைத்தார் அமெலியா. புட்னமும் அமெரிக்க மக்களும் அமெலியா திரும்பி வரும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.
ஜூன் 29... 22 ஆயிரம் மைல்களைக் கடந்திருந்தார் அமெலியா. இன்னும் 7 ஆயிரம் மைல்களைக் கடந்தால், உலகைச் சுற்றும் இந்த சாகசப் பயணம் நிறைவடைந்துவிடும். வானிலை மோசமாக இருந்தது. சிக்னல்கள் சரியாக வேலை செய்யவில்லை. தகவல் கிடைப்பதில் சிரமத்தை உணர்ந்தார் அமெலியா. ஒரு கட்டத்தில் முற்றிலும் சிக்னல் இல்லாமல் போனது.
அமெலியாவும் ஃப்ரெட் நூனனும் என்ன ஆனார்கள் என்ற தகவல் தெரியவில்லை. அமெரிக்க அரசாங்கம் இரண்டு வாரங்கள் தேடிய பிறகு, பசிபிக் கடலில் விமானம் விழுந்திருக்கலாம் என்று அறிவித்தது. 2 ஆண்டுகள் வரை தேடுதல் முயற்சியில் இறங்கினார் புட்னம். இருபதாம் நூற்றாண்டின் கண்டுபிடிக்க முடியாத மர்மமாகவே அமெலியாவின் மறைவு இருந்தது. 80 ஆண்டுகளுக்குப் பின் 2017-ம் ஆண்டு, பசிபிக் பெருங்கடலுக்கு அருகில் உள்ள தீவில் கிடைத்த எலும்புகள் அமெலியாவுடையதாக இருக்கலாம் என்றார்கள்.
வானூர்தியாளர், எழுத்தாளர், பெண்ணுரிமைப் போராளி என 39 வயதுக்குள் தன்னுடைய தடத்தை அழுத்தமாகப் பதித்துவிட்டு மறைந்துபோன அமெலியா, இன்னும் நீண்ட காலத்துக்கு நினைவுகூரப்படுவார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago