கதை சொல்வதில் நேர்த்தியும் திரைக்கதை ஓட்டத்தில் தெளிவும் இருந்துவிட்டால், மக்களின் மனசுக்கு நெருக்கமான படத்தைக் கொடுத்துவிடலாம். அப்படியொரு ’கதை சொல்லி’ அவர். திரைக்கதையில் ஜாலம் காட்டும் மாயெமெல்லாம் இவருக்கு சர்க்கரைப் பாகு. அதனால்தான், மக்களின் மனதிலேயே தனியிடம் கிடைத்தது இவருக்கு. இதுவரை அந்த இடத்தை வேறு எவருமே அடையவில்லை. அது அவருக்கான இடம்... மனசுக்கும் அவருக்குமான முடிச்சு போட்டிருக்கிற இடம். சாதாரண முடிச்சு அல்ல அது. ‘முந்தானை முடிச்சு’. அந்த முடிச்சுக்கு சொந்தக்காரர்... கே.பாக்யராஜ்.
நான்கைந்து சின்னப்பசங்களுடன் ஊர் சுற்றும் வயசுப்பொண்ணு பரிமளம். ஊருக்கு கைக்குழந்தையுடன் வரும் பள்ளி வாத்தியார். மனைவியை இழந்தவர் என்பது தெரிந்ததும் வருகிற பிரியம். அதுவே காதலாகிறது. ஆனால் வாத்தியார் பரிமளத்தைப் புறக்கணிக்கிறார். காதலுக்காக, வாத்தியாரை அடைய எந்த நிலைக்கும் செல்லத் தயாராக இருக்கிறார். இதன் உச்சம் இரண்டு. ‘என்னை வாத்தியாரு கற்பழிச்சிட்டாரு’ என்பது முதலாவது. அடுத்தது... ‘எங்கே.. இந்தக் குழந்தையைத் தாண்டச் சொல்லுங்க. நான் ஒத்துக்கறேன்’ என்று வாத்தியார் சொல்ல... பொய்சத்தியம் செய்து குழந்தையைத் தாண்டுவது!
இதன் பிறகு, தாலியைக் கட்டுகிற வாத்தியார், பரிமளத்தை ஏற்காமல் புறக்கணித்து வாழ்கிறார். பரிமளத்தின் உண்மையான அன்பைப் புரிந்துகொண்டாரா, இருவரும் இணைந்தார்களா என்பதை, சிரித்துக்கொண்டே, அதிர்ந்தபடியே, வியந்தபடியே, மனம் கனத்தபடியே நம்மைப் பார்க்கச் செய்திருப்பார் பாக்யராஜ்.
» ’நெஞ்சிருக்கும் வரை’... ஸ்ரீதர்! - புதுமை இயக்குநர் ஸ்ரீதர் பிறந்தநாள் இன்று
» ’அசோகர் உங்க மகருங்களா?’ - மகா கலைஞன் டி.எஸ்.பாலையா நினைவு தினம் இன்று!
சின்னப்பசங்களுக்காகவும் பரிமளாவுக்காகவும் கூடுகிற பஞ்சாயத்துக் காட்சியில் இருந்துதான் படமே தொடங்கும். அடுத்து, பரிமளாவின் மாப்பிள்ளைக் கனவு. அடுத்து, பேருந்தில் இருந்து கைக்குழந்தையுடன் இறங்குகிற வாத்தியார் பாக்யராஜ். அவர் சமைத்த உணவை ருசி பார்க்கும் பரிமளா கோஷ்டி. மனைவியின் திதியில், பக்கத்து வீட்டு கோவை சரளாவுக்கு சாமிக்குப் படையலிட்ட புடவையைக் கொடுக்கும் காட்சி. பள்ளியில், சித்தி கொடுமையில் கையில் சூடு போடப்பட்ட நிலையில் வரும் பையன். ‘எம் பொண்ணைக் கொடுத்த உங்களுக்கு இப்போ என் ரெண்டாவது பொண்ணைக் கொடுக்கத் தயாரா இருக்கேன்’ என்று வரும் மாமியார்.
அழகும் கவர்ச்சியுமாக ஊருக்கு வருகிற டீச்சர் தீபா. அதற்கெல்லாம் மசியாத பாக்யராஜை, ‘கெடுத்துட்டாரு’ என்று பழிசுமத்தும் ஊர்வசி. பஞ்சாயத்தில் தாலி கட்டவேண்டிய நிலைமை. ஆனாலும் மனதளவில் ஊர்வசியை ஏற்காத பாக்யராஜ்.
‘எம் பொண்ணு மருமவளா வரும்னுதான் மூத்த பொண்ணோட நகையை வைச்சிருந்தேன். இப்ப வேற யாரோ வந்தாச்சு. இந்தாங்க...’ என்று நகைகளைக் கொடுத்துச் செல்லும் மாமியார். ஊர்வசியின் அப்பா கே.கே.செளந்தர், மாட்டுவண்டியில் கொடுக்கப்படும் சீர் செனத்தியைத் திருப்பி அனுப்புவார் பாக்யராஜ்.
காசு பணத்துக்கோ, அழகுக்கோ மயங்காதவர் என்றும் மனைவியின் தங்கை திருமணத்துத் தயார் என்றாலும் வேண்டாம் என்றும் ஒதுங்குகிற பாக்யராஜுக்கு காரணம்... தன் குழந்தையை வரக்கூடியவள் எப்படிப் பார்த்துக்கொள்வாள் என்பதுதான். இதற்குத் தகுந்தது போலவே, காட்சிகளை உள்ளே செருகிக்கொண்டே வருவதுதான் பாக்யராஜின் ஸ்டைல். பாக்யராஜின் ஜாலம்.
’வணக்கம்’ என்று வாய்வார்த்தையாகச் சொல்வதை கிண்டல் செய்யும் கிராமத்துக்காரர். ‘வணக்கம்’ என்று கைக்கூப்பிச் சொன்னதை இன்னும் நக்கலடித்த இன்னொருவர். ‘ரெண்டாவது மணி அடிச்சிருச்சா’ என்றும் மாட்டுக்காரர். முதல்நாள் பள்ளியிலே கடவுள்வாழ்த்தை திக்கித்திணறி பாட, கிராமத்துப் பெரியவர் பாடி நிறைவு செய்யும் காட்சி. குழந்தை காசு விழுங்கிப் பதறும் காட்சி. அப்போது பொய்சத்தியம் செய்து குழந்தையை ஊர்வசி தாண்டியதைச் சொல்லிவிடும் நிலை. அரிவாள் வெட்டு பட்ட ஊர்வசிக்கு பல் தேய்த்துவிடுவது, தலை வாரி விடுவது, புடவை கட்டிவிடுவது என்று சிரிக்கவும் பெண்கள் உருகவுமாகக் காட்சிகளை, கதைக்குள் சேர்த்துக் கொண்டே வருவதுதான் பாக்யராஜின் வெற்றிக்கான சூத்திரங்கள்.
தீபா கேரக்டர் பிரமாதம். கிளாமராகக் காட்டுவது, முதியோர் கல்விக் காட்சிகள், ‘அ’ போடுவது என எல்லாமே அந்தக் கேரக்டரின் மீது மரியாதை இல்லாமல் செய்ய, அந்த தீபாவைக் கொண்டே பாக்யராஜ் மனம் திருந்துவதாக பின்னியதுதான் கதையின் வலுவான முடிச்சு.
அந்தக்காட்சிக்கு முந்தைய காட்சி ஒன்று. தீபா பாக்யராஜைப் பார்க்க வீட்டுக்கு வருவார். தீபாவை சுள்ளென்று பேசுவார். அப்போது பாக்யராஜ் வருவார். ‘இந்தா... வர்றாரு. உள்ளே வாங்க பேசலாம்னு கூப்புடுவாரு. காபித்தண்ணி ஏதாவது குடிங்க’ன்னுவாரு. இப்பதான் குடிச்சிட்டு வந்தேன்னு சொல்லிட்டு, சட்டுபுட்டுனு போயிட்டே இருக்க்ணும்’ என்பார் ஊர்வசி.
பாக்யராஜின் கையை நீட்டச் சொல்லுவார் தீபா. ‘ராக்கி’ கட்டிவிடுவார். ‘இன்னிலேருந்து எனக்கு நீங்க அண்ணன்’ என்பார். காசு கேட்பார். இரண்டு ரூபாய் தருவார். ‘சரியான கஞ்சன்யா நீ. அந்தப் பொண்ணு எவ்ளோ ஆசையா அண்ணன்னு சொல்லி, கயிறெல்லாம் கட்டுச்சு. ரெண்டு ரூபா தர்றியே’ என்று சொல்லிவிட்டு, பத்து ரூபாயைத் தருவார். ‘உள்ளே வாங்க, சர்பத்கிர்பத் குடிச்சிட்டுப் போங்க’ என்பார். ‘ஒருவிஷயம் பேசனும் சார்’ என்று தீபா சொல்ல, ‘நல்லாப் பேசுங்க, அதான் நாத்தனார்னு சொல்லிட்டீங்களே’ என்பார். காட்சி இத்துடன் முடியாது. இருவரும் கிளம்புவார்கள். அப்போது, பாக்யராஜை அழைத்து, ‘அந்தப் பொண்ணு தங்கச்சின்னு சொல்லிருக்கு. அதை ஞாபகம் வைச்சிக்கிட்டே போ’ என்பார்.
இப்படித்தான் படம் நெடுக பஞ்ச் வைத்துக்கொண்டே இருப்பார். ‘சித்தி’ படத்துக்கு போகலாம் என்று பாக்யராஜும் ஊர்வசியும் கிளம்பி வெளியே வந்தால், வீட்டுக்குள் சத்தம். முதல் மனைவியின் படம் கீழே விழுந்து உடைந்திருக்கும். ஆனால் அதைக் கூட பொருட்படுத்தாமல், சினிமாவுக்குக் கிளம்புவார்கள். வழிநெடுக கலக்கிக்கொண்டு குதூகலத்துடன் செல்வார்கள். அப்போது, சித்தி கொடுமையால் பாதிக்கப்பட்ட பையனின் மண்டை உடைந்து ரத்தம் வழியும். சித்திக்காரி அடித்துவிட்டாள் என்பார்கள். சட்டென்று பாக்யராஜ், ‘இன்னொரு நாள் படத்துக்குப் போகலாம், தலைவலிக்குது’ என்று சொல்லி வீட்டுக்குத் திரும்புவார். இப்படி கதையையும் உணர்வையும் ஏக்கங்களையும் எதிர்பார்ப்புகளையுமே வில்லத்தனம் பண்ணவைத்திருப்பார்.
ஏவிஎம் தயாரித்த படம். ஏவிஎம் படம் என்றால் கிருஷ்ணன் பஞ்சு, ஏ.சி.திருலோகசந்தர், பின்னர் எஸ்.பி.முத்துராமன் இயக்குவார்கள். ஏவிஎம் பேனரில் முதன்முதலாக வேறொரு இயக்குநர் இயக்கியது பாக்யராஜ் தான். அடுத்த வருடமே பாரதிராஜா ‘புதுமைப் பெண்’ இயக்கினார். பிறகு விசு, ‘சம்சாரம் அது மின்சாரம்’ இயக்கினார். இதற்கெல்லாம் அச்சாரம் போட்டது... ‘முந்தானை முடிச்சு’.
ஊர்வசியின் முதல் படம். இப்போது பார்த்தாலும் அது முதல் படம் என்று நம்பவே மாட்டோம். பிரமாதம் பண்ணியிருப்பார். கே.கே.செளந்தருக்கு அற்புதமான கேரக்டர். பயில்வான் ரங்கநாதன், பசி சத்யா, கோவை சரளா, தீபா என எல்லோரும் அருமையான நடிப்பை வழங்கியிருந்தார்கள்.
ஊர்வசி வாந்தியெடுப்பார். உடனே வீட்டில் இருந்து கிளம்பிச் சென்றுவிட்டு திரும்பி வருவார். ‘என்ன, வைத்தியரைக் கூப்புடவா போயிருந்தே’ என்று கேட்பார் ஊர்வசி. ‘இல்ல, பரிமளம் வாந்தியெடுக்குது, வந்து என்னன்னு பாருங்கன்னு உங்க அம்மாகிட்ட சொன்னேன்’ என்பார். அந்தக் காட்சி, காமெடிக்குக் காமெடியாகவும் கதையின் நகர்தலுக்குமாகவும் பயன்படுத்தப்பட்ட காட்சி.
அசோக்குமாரின் கேமிரா ஜாலம் காட்டியிருக்கும். இளையராஜாவின் இசையைச் சொல்லவும் வேண்டுமா? எங்கே படப்பிடிப்பு நடந்தாலும் மனைவி வந்து உணவு சமைத்துப் பரிமாறுவதும் அப்போது ஒருவாய் அவருக்கு ஊட்டிவிடுவதும் நம்பியாரின் வழக்கம். இதை ‘தூறல் நின்னு போச்சு’ படப்பிடிப்பின் போது தெரிந்து கொண்ட பாக்யராஜ், படத்தின் முதல் காட்சியில் டைட்டில் பாடலில் வயதான தம்பதியைக் காட்டி ’விளக்கு வைச்ச நேரத்துல’ என்ற பாடலுடன் டைட்டில் போட்டிருப்பார் பாக்யராஜ்.
‘நான் புடிக்கும் மாப்பிள்ளைதான்’, ‘அந்திவரும் நேரம்’, ‘வா வா வாத்தியாரே வா’, ‘கண்ணத் தொறக்கணும் சாமி’, ‘சின்னஞ்சிறிய கிளியே’ என எல்லாப் பாடல்களுமே மிகப்பெரிய ஹிட்டடித்தன. ஒரு படத்தால், சாப்பிடும் காய் மிகப்பிரபலமாகவும் பேசு பொருளாகவும் ஆனதென்றால், அது ‘முந்தானை முடிச்சு’தான். ‘முருங்கைக்காய்’தான்’.
பாக்யராஜ் சாரை, மிக நீண்டதான வீடியோ பேட்டி எடுத்த போது, ‘முந்தானை முடிச்சு’ பற்றிய விஷயங்களைப் பகிர்ந்துகொண்டதை இங்கே பதிவிட வேண்டும்.
’’ஜெமினி கணேசன் நடித்த ‘ராமு’ படத்தின் போஸ்டர் என்னை ரொம்பவே இம்ப்ரஸ் பண்ணியிருந்துச்சு. சின்ன வயசில பாத்த போஸ்டர். அதுல ஜெமினி கணேசன் ஒரு ஜோல்னாப் பை போட்டுக்கிட்டிருப்பார். கையைப் புடிச்சிக்கிட்டு ஒரு பையன் நிப்பான். பாக்கும் போதே ஒரு சோகம் வந்துரும். இதைத்தான், இந்த போஸ்டரை வைச்சுத்தான், நான், ஒரு கைக்குழந்தையோட இருந்தா எப்படியிருக்கும்னு? கேள்வி கேட்டு, முன்னேயும் பின்னேயுமா ஒரு கதை ரெடி பண்ணினேன். அதுதான் ‘முந்தானை முடிச்சு’ என்றார் பாக்யராஜ்.
இன்னொரு விஷயம்...
‘’இந்தப் படம் பண்றதுக்கு முன்னாடி, கங்கை அமரன் ஒருநாள்...’நாம படம் பண்ணி ரொம்பநாளாச்சு’ன்னாரு. ‘அடுத்தாப்ல சேர்ந்து பண்ணுவோம்’னு சொன்னேன். அப்ப, ஏவிஎம் படம் ஓகே ஆச்சு. ‘இசை கங்கை அமரன்’ன்னு சொன்னேன். ‘கதை பக்காவா வந்திருக்கு. கிராமத்துக் கதையாவும் நல்லாருக்கு. அதனால இளையராஜாகிட்ட போலாம்’னு ஏவிஎம்ல சொன்னாங்க. எனக்கு சொன்னவார்த்தையைக் காப்பாத்தணும்னு ஒரு வைராக்கியம். கடைசில ஏவிஎம், கங்கை அமரன்கிட்ட பேசினாங்க. ஒத்துக்கிட்டாரு. இப்போ இளையராஜாகிட்ட போனேன். ‘முதல்லயே ஏன் நான் வேணும்னு தோணலை. பண்ணமாட்டேன் போ’ன்னு குழந்தையாட்டம் அடம் பிடிச்சாரு. அப்புறம் ஒத்துக்கிட்டார். அதுமட்டுமில்லாம, எல்லாப் பாடல்களையும் மிகப்பெரிய ஹிட்டாக்கிக் கொடுத்தார்’’ என்று ‘முந்தானை முடிச்சு’ நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார் பாக்யராஜ்.
1983ம் ஆண்டு, ஜூலை மாதம் 22ம் தேதி வெளியானது ‘முந்தானை முடிச்சு’. ஏ, பி, சி, என இன்னும் எத்தனை சென்டர்கள் உண்டோ... அனைத்திலும் மிகப்பிரமாண்டமான வெற்றியைப்பெற்றது இந்தப் படம்.
படம் வெளியான நாளில் இருந்து 100வது நாள், 125வது நாள் என்றான நிலையிலும் கூட, டிக்கெட் கிடைக்காமல் திரும்பியவர்களைக் கொண்டு, ஒரு ஹவுஸ்ஃபுல் ஷோவே நடத்தலாம். அந்த அளவுக்கு தியேட்டர்களில் தேர்க்கூட்டம் திருவிழாக்கூட்டம். 200 நாள், 250 நாட்களைக் கடந்து ஓடி, மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியது ‘முந்தானை முடிச்சு’.
படம் வெளியாகி, 37 வருடங்களாகிவிட்டன. என்றைக்கும் ‘முந்தானை முடிச்சு’க்கு தனியிடம் உண்டு. மக்களுக்கும் இந்தப் படத்துக்குமான முடிச்சு, எவராலும் அவிழ்க்க முடியாத நிலையான முடிச்சு!
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago