’அசோகர் உங்க மகருங்களா?’  - மகா கலைஞன் டி.எஸ்.பாலையா நினைவு தினம் இன்று! 

By வி. ராம்ஜி

நடிப்பு என்றாலே சிவாஜிதான். ஆனால் அந்த சிவாஜிகணேசனே மலைத்து வியந்து மகிழ்ந்த நடிகர்களும் உண்டு. ’திரையில் ஒரு காட்சியில், ஃப்ரேமில், அந்த நடிகர் நடித்தால், மிகவும் கவனமாக இருக்கவேண்டும். கொஞ்சம் அசந்தாலும், நம்மைப் பின்னுக்குத் தள்ளிவிட்டுவிடுவார்’ என்று சிவாஜியே சொல்லியிருக்கிற நடிகர்கள், எஸ்.வி.ரங்காராவ், எம்.ஆர்.ராதா. இன்னொருவர் டி.எஸ்.பாலையா.

தனித்துவம் மிக்க நடிகர். அன்றைய நெல்லைச்சீமைக்காரர். சாதாரணக் குடும்பம்தான் அவருடையது. சிறுவயதிலேயே நாடகத்தில் நடிக்கத் தொடங்கினார் பாலையா. அப்போதே, இவரின் நடிப்பை எல்லோரும் பாராட்டினார்கள்.

எம்ஜிஆரின் முதல் படம் எது என்று கேட்டால், ‘சதி லீலாவதி’ என்று சொல்லிவிடுவோம். டி.எஸ்.பாலையாவின் முதல் படம் எது என்று கேட்டால், மலங்க விழிப்போம். பாலையாவின் முதல் படமும் ‘சதி லீலாவதி’தான். எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கிய அந்தப் படத்தில், வில்லத்தனத்திலேயே மிரட்டியிருப்பார்.

‘அவள் ஒரு தொடர்கதை’யில் ஏகப்பட்ட பேர் அறிமுகமானது போல், ‘ஒருதலைராகம்’ படத்தில் நிறைய பேர் அறிமுகமானது போல், ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் அதிகம் பேர் அறிமுகமானது போல், ‘சதி லீலாவதி’ படத்தில், என்.எஸ்.கிருஷ்ணன், எம்.கே.ராதா, கே.ஏ.தங்கவேலு முதலானோரும் அறிமுகமானார்கள். எல்லீஸ் ஆர்.டங்கனின் அறிமுகங்கள் எவருமே சோடை போகவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக மனதில் பதிந்தார்கள். இதில், டி.எஸ்.பாலையா கொஞ்சம் ஸ்பெஷல்தான். வில்லன் வேடத்தில் மிரட்டினார். குணச்சித்திர கேரக்டரில் உருவவைத்தார். காமெடி ரோலில் குலுங்கவைத்தார்.

கொல்கத்தாவில் படப்பிடிப்பு. எம்ஜிஆருக்கு ஒரு வேஷம் கொடுக்கப்பட்டது. பாலையாவுக்கு கேரக்டர் ஏதுமில்லை. வேறுவிஷயமாக வந்தவர், படப்பிடிப்புத் தளத்துக்கு வந்தார். அந்த இயக்குநருக்கு சட்டென்று மின்னல்... எம்ஜிஆருக்கு கொடுத்த வேடத்தை, பாலையாவுக்குக் கொடுத்துவிட்டார். அன்றைக்கு எம்ஜிஆர் முகம் சுருங்கித்தான் போனது. ஆனால், பின்னாளில் இதுபற்றிச் சொன்ன போது... எம்ஜிஆர் சொன்னது இதுதான்... ‘அந்தக் கேரக்டரை பாலையா செய்திருந்தார். பாலையா செய்தது போல், என்னால் அந்த அளவுக்கு அந்தக் கேரக்டரைப் பண்ணியிருக்கமுடியாது’ என்று மனம் திறந்து சொன்னார். அத்தனை மகத்தான கலைஞனாக அப்போதே பரிணமித்தார் பாலையா.

ஒருகட்டத்தில், ஹீரோ வாய்ப்பும் கிடைத்தது. இரண்டு மூன்று படங்களில் நாயகனாக வலம் வந்தார். ஆனால் அடுத்தடுத்த படங்களில், அட்டகாசமான கேரக்டர் ரோல்கள் கிடைக்கவே ஒவ்வொரு படத்திலும் வெரைட்டி காட்டி வியப்பூட்டினார்.

அண்ணாவின் ‘வேலைக்காரி’ படத்தில் பகுத்தறிவுவாதியாக நடித்ததுதான் பாலையாவின் வாழ்வில் இன்னொரு ஏற்றம்; மாற்றம். அந்தக் காலத்தில் பகுத்தறிவு பேச பயப்படுவார்கள். காங்கிரஸ்காரர் என்று வெளியே சொல்லும்படி நடந்த பாலையா, அந்தக் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.

எம்ஜிஆருக்கு வில்லனாக நடித்தார். ‘மதுரை வீரன்’ படத்தில் வில்லன் இவர்தான். ஜெமினியின் ‘மாமன் மகள்’ படத்தில் இவர் வரும் இடங்களெல்லாம் தெறித்துச் சிரித்தார்கள். காமெடியும் வில்லத்தனமும் கலந்த கதாபாத்திரம், அன்றைக்கு இவருக்கு மட்டுமல்ல... சினிமாவுக்கே புதுசு.

பாலையாவின் உடல் மொழி புது ரகம். அவரின் பார்வை உருட்டல், மிரட்டும். கொஞ்சம் சிரிப்பு சேர்த்த இவரின் வில்லத்தனம், சினிமாவுக்குப் போட்டது புதிய பாதை.
‘பாகப்பிரிவினை’ படத்தில், சிவாஜி, எஸ்.வி.சுப்பையா, எம்.ஆர்.ராதா, நம்பியார் முதலானோருடன் பாலையாவும் நடித்தார். ஆனால் சுப்பையாவின் அண்ணனாகவும் சிவாஜியின் பெரியப்பாவாகவும் தன் தேர்ந்த நடிப்பால், அருமையான குணச்சித்திரக் கதாபாத்திரத்தில் நெகிழச் செய்திருப்பார் பாலையா.

அந்த காலகட்டத்தில்தான், இயக்குநர் ஸ்ரீதர் புதிய முயற்சியில் இறங்கினார். ஸ்ரீதர் படமென்றாலே காதல் படம், சோகப் படம், சீரியஸ் படம் என்றே இருந்தது. ‘ஒரு காமெடிப் படம் எடுத்தால் என்ன?’ என்று தோன்றியதன் விளைவு... காதலிக்க நேரமில்லை’. முத்துராமன், ரவிச்சந்திரன், நாகேஷ் எனப் பலரும் நடித்திருந்தார்கள். ஆனாலும் டைட்டிலில் முதலில் இடம் பெற்றது... டி.எஸ்.பாலையாவின் பெயர்.

படம் முழுக்க முத்துராமன் வர மாட்டார். ரவிச்சந்திரன் வரமாட்டார். நாகேஷ் வரமாட்டார். ஆனால், முத்துராமனுடன், நாகேஷுடன், ரவிச்சந்திரனுடன், வி.எஸ்.ராகவனுடன், காஞ்சனா -ராஜஸ்ரீயுடன் என படம் நெடுக வலம் வருவார். நம் வயிறைப் பதம் பார்ப்பார்.

வாக்கிங் ஸ்டிக்கை பிடித்துக் கொண்டு, வேஷ்டியை பிடித்துக் கொண்டு, இந்தப் பக்கம் குதித்து, அந்தப் பக்கம் குதித்து, பாலையா செய்த சேட்டைகள்... சிரித்துச் சிரித்து கண்ணீரே வந்துவிடும் நமக்கு. ‘அசோகர் உங்க மகருங்களா?’, ‘அவர் பாக்கெட்ல நாலஞ்சு கப்பல் ஓடுது, கப்பல் ஓடுது’ என்பாரே... ‘பெத்த தகப்பன் கேக்கறேன், பெத்த தகப்பன் கேக்கறேன்’ என்பன போன்ற பல இடங்கள்... நடிப்பில் உச்சம் தொட்டிருப்பார். தியேட்டரில் எத்தனை முறை பார்த்தேன் என்று கணக்கில் வைத்துக்கொள்ளவே இல்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் பாலையாவுக்காகவே படம் பார்த்தவர்கள்தான் ஏராளம். அந்த கதை சொல்லும் காமெடியின் போது, படம் பார்க்கிறவர்கள், நாகேஷைப் பார்க்கவே மாட்டார்கள். பாலையாவின் முகத்தையும் எக்ஸ்பிரஷனையுமே பார்த்துச் சிரித்தார்கள்.

‘ஊட்டி வரை உறவு’ படத்தில் சிவாஜியின் அப்பாவாக படம் முழுக்க காமெடியில் தனி ராஜாங்கம் நடத்தியிருப்பார். ஒரு பக்கம் மனைவியை சமாளித்து, இன்னொரு பக்கம் மகனை சமாளித்து, அடுத்து கே.ஆர்.விஜயாவை சமாளித்து, நடுவே நாகேஷை சமாளித்து என காமெடிக் கபடி ஆடியிருப்பார் பாலையா.

கர்வம், ஆணவம், செருக்கு, இறுமாப்பு, அலட்டல் ஆகியவற்றையெல்லாம் ஒருங்கே கொண்டு வந்த ‘திருவிளையாடல்’ ஹேமநாத பாகவதர், பாலையா எடுத்த புது ஸ்டைல் அவதாரம்.

பாலசந்தரின் ‘பாமா விஜயம்’ படத்தில் மூன்று மகன்களையும் மருமகள்களையும் கவனிக்கிற, கவனித்துப் பொருமுகிற, கிண்டலடிக்கிற கேரக்டரை ரொம்ப அசால்ட்டாகச் செய்திருப்பார். ‘வரவு எட்டணா’வை பாடலில் இவரின் உடல் மொழி அசாத்தியமானது.

‘தில்லானா மோகனாம்பாள்’ சிவாஜியையும் நாகஸ்வரத்தையும் பத்மினியையும் தில்லானாவையும் மறக்கவே முடியாது. அப்படித்தான் பாலையாவையும் மேளத்தையும் எப்படி மறக்கமுடியும்?

‘திருவாரூர் வரை போயிட்டு வரேன்’ என்பார் சிவாஜி. ‘தம்பி நானும் வரேன் தம்பி’ என்றார் பாலையா. ‘அங்கே எனக்கு பீடாக்கடைக்காரனைத் தெரியும்ணே’ என்பார் சிவாஜி. சட்டென்று இவர் ‘எனக்கு சோடாக்கடைக்காரனைத் தெரியும்’ என்பார். ஆஸ்பத்திரியில் ஒரு நர்ஸ் போவார். அவர் பின்னே சென்று வாசம் பிடிப்பார். இன்னொரு இடத்தில் ‘என்ன... ஆட்டம் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு’ என்பார். ‘ஒண்ணுமில்ல தம்பி, பித்த உடம்பா, கப்புன்னு தூக்கிருச்சு’ என்பார். எல்லாவற்றுக்கும் மேலாக, ‘நலந்தானா’ பாட்டில் சிவாஜி வாசித்துக் கொண்டே இருக்கும் போது, அந்த வாசிப்பில் நெகிழ்ந்து வியந்து, சிவாஜியை அப்படி லேசாகத்தொடுவார். நாம் மனம் விகசித்துப் போய்விடுவோம்.

’காதலிக்க நேரமில்லை’ படத்தை ரீமேக் செய்ய முடிவு செய்து, இயக்குநர் ஸ்ரீதரிடம் சென்றார் இயக்குநர் ஒருவர். ஹீரோவா யாரைப் போடப் போறீங்க?’ என்று ஸ்ரீதர் கேட்டார். ‘ரவிச்சந்திரன் கேரக்டருக்கு அந்த நடிகரைப் போடலாம்னு இருக்கேன்’ என்றார். ‘ஹீரோ கேரக்டருக்கு யாரைப் போடப் போறீங்க?’ன்னு கேட்டேன் என்றார் ஸ்ரீதர். ‘முத்துராமன் கேரக்டருக்கா? அதுக்கு இந்த நடிகரைப் போடலாம்னு ஐடியா’ என்றார். ‘படத்துல ஹீரோ கேரக்டரை யார் செய்யப் போறாங்க?’ என்று கேட்டதும் ‘ஓ... நாகேஷ் கேரக்டருக்குத்தானே சார். அந்த நடிகர்தான்’ என்று சொன்னார். ‘படத்துல ஹீரோ பாலையாதான். அவர் நடிச்ச கேரக்டருக்கு யாரைப் போடப்போறீங்க? அவருக்கு பதிலா அந்த கேரக்டரைப் பண்றதுக்கு யாராவது இருக்காங்களா?’ என்று ஸ்ரீதர் கேட்க, அந்த இயக்குநர் மெளனமாகிப் போனார்.

‘ரீப்ளேஸ்மெண்ட்’ என்றொரு வார்த்தை உண்டு. பாலையா எனும் மகத்தான கலைஞனுக்கு ‘ரீப்ளேஸ்மெண்ட்’ இதுவரை எவரும் வரவில்லை. அதுதான் பாலையா ஸ்பெஷல்.

1914ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி பிறந்த டி.எஸ்.பாலையா, 1972ம் ஆண்டு ஜூலை மாதம் 22ம் தேதி காலமானார்.

டி.எஸ்.பாலையா நினைவு தினம் இன்று.48வது நினைவு தினம்.

பாலையா எனும் மகத்தான கலைஞனைப் போற்றுவோம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

24 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்