’பாட்டுக்கு பாட்டெடுத்து’, ‘அவளுக்கென்ன அழகிய முகம்’, ‘சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே’, ‘முக்காலா முக்காபுலா’, ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே! - ’சாக்லெட்’ கவிஞர் வாலியின் நினைவுதினம் இன்று! 

By வி. ராம்ஜி


’எனக்கு திறமை இருக்கிறது. எனக்கு வாய்ப்பு கொடுங்கள்’ என்று கம்பெனி கம்பெனியாக ஏறுவார்கள். சான்ஸ் கேட்பார்கள். ஆனால் அவர், ஒரு போஸ்ட்கார்டில் எழுதி அனுப்பினார். அந்தக் கடிதத்தில், அவரைப் பற்றிய குறிப்பு இருந்தது. ஒரு பாட்டு எழுதப்பட்டிருந்தது. கடிதத்தைப் பார்த்த அந்தப் பாடகர், பாடலைப் படித்துவிட்டு பிரமித்துப் போனார். அதைப் பாட்டாகவே பாடினார். ‘உனக்கு திறமை இருக்கிறது. சென்னைக்கு வா. உனக்கு சன்மானமும் தரவேண்டும்’ என்று அழைத்தார். அந்தப் பாடல் இன்றைக்கும் பிரபலம். ‘கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்!’ ஒலிக்காத கோயில்களே இல்லை. ஊரே இல்லை.

சரி... அந்தக் கடிதத்தைப் பாட்டாகவேப் பாடியவர்... காந்தக் குரலோன் டி.எம்.எஸ். பாடகர் டி.எம்.எஸ்.க்கு தபால்கார்டில் பாட்டெழுதி அனுப்பியவர்... கவிஞர் வாலி.திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கராஜன், ‘வாலி’யானதும் வாழ்நாள் முழுக்க புகழுச்சியில் இருப்பதற்குத் தொடங்கிய பயணமும் அங்கிருந்துதான்!

ரேடியோ நாடகங்கள் எழுதிக்கொண்டிருந்த வாலி, திருச்சியில் இருந்து சென்னைக்கு வந்தார். கொஞ்சம் போராட்டங்களுக்குப் பிறகு திரைக்குள் நுழைந்தார். அப்போதிருந்தே தன் பாடல்களால் திரையுலகையும் ரசிகர்களையும் வசப்படுத்தினார் வாலி.

சென்னை தி.நகரில் உள்ள கிளப் ஹவுஸில் தங்கியிருந்த போது, நாகேஷும் வெங்கியும் (நடிகர் ஸ்ரீகாந்த்) நண்பர்களானார்கள். ஒன்றாய் கஷ்டப்பட்டார்கள். கஷ்டத்தையும் உணவையும் பங்கிட்டுக் கொண்டார்கள். சாப்பிடக் காசில்லாமலும் இருந்தார்கள். ஆனால் சந்தோஷமாக இருந்தார்கள். அப்போதுதான் டி.எம்.எஸ். வாலியை அழைத்துக் கொண்டு, எம்.எஸ்.வி.யிடம் அழைத்துச் சென்றார். ‘விசு, இவன் நல்லாப் பாட்டு எழுதுறான். வார்த்தைகளெல்லாம் அவ்ளோ சரளமா வந்து விழுது இவனுக்கு. இவனை பயன்படுத்திக்கோ’ என்றார்.

அதற்கு முன்னதாக பாட்டெழுதினார். எப்போதாவது எழுதினார். சில படங்கள் வரவே இல்லை. வந்த படங்களும் பெரிதாகப் போகவில்லை. இப்போது எம்.எஸ்.வி., இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் அழைத்துச் சென்றார். ‘இவர் பேரு ரங்கராஜன். வாலிங்கற பேர்ல பாட்டெல்லாம் எழுதுறாரு. பெரியாளா வர்றதுக்கான திறமை இருக்கு. படத்துல பாட்டெழுத சான்ஸ் கொடுப்பா’ என்று கேட்டார். அதுவரை கண்ணதாசனின் பாடல்களைக்கொண்டு ஏராளமாக படமெடுத்த கே.எஸ்.ஜி, யோசித்தார். ‘வேணும்னா ஒரு பாட்டு தரேன்’ என்றார்.

‘அத்தைமடி மெத்தையடி’ என்ற பாடலை எழுதினார். டியூனுக்கு இம்மியும் பிசகாமல் வரிகள் அழகு காட்டி அமர்ந்திருந்தன. அப்புறம் ஒரு பாட்டு, அப்புறம் ஒரு பாட்டு என்று அந்தப் படத்தின் எல்லாப் பாடல்களையும் எழுதினார். எல்லாப் பாடல்களும் ஹிட்டாகின. அந்தப் படம் ‘கற்பகம்’. அன்றிலிருந்து விருட்சமாகத் தொடங்கினார் வாலி.

1963ம் ஆண்டு, நவம்பர் 15ம் தேதி எம்ஜிஆரின் ‘பரிசு’ வெளியானது. இதில் எம்ஜிஆர், சாவித்திரி நடித்திருந்தார்கள். கே.வி.மகாதேவன் இசையமைத்திருந்தார். இதேநாளில், சிவாஜியின் ‘அன்னை இல்லம்’ வெளியானது. சிவாஜியுடன், தேவிகா, நாகேஷ், நம்பியார் நடித்திருந்தனர். இந்தப் படத்துக்கும் கே.வி.மகாதேவன் இசை. இந்தப் படத்தின் இரண்டு படங்களுக்கும் கண்ணதாசன் பாடல்களை எழுதியிருந்தார். எம்ஜிஆர் படமும் சிவாஜி படமும் வெளியான அதே நாளில், ஜெமினி கணேசன், சாவித்திரி, கே.ஆர்.விஜயா நடித்த படமும் வெளியானது. கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார்.

‘மன்னவனே அழலாமா’, ‘அத்தை மடி மெத்தையடி’ முதலான எல்லாப் பாடல்களும் செம ஹிட்டு. மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர். ஒரேயொரு பாடல் எழுதச் சென்ற வாலிக்கு ஒட்டுமொத்த வாய்ப்பையும் பெற்றார். அன்றைக்கு வந்த படங்களில், ‘கற்பகம்’ மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. வந்த படங்களில், வாலியின் பாடல்கள் வசீகரமாக ஈர்த்தன.

அடித்தது ஜாக்பாட். எல்லாப் பாடல்களையும் அவர்தான் எழுதினார். எம்ஜிஆர், சிவாஜி படங்களைத் தாண்டி, இந்தப் படம் பேசப்பட்டது. இந்தப் படத்தின் பாடல்கள் முணுமுணுக்கப்பட்டன. வாலியை எல்லோருக்கும் தெரிந்தது. எல்லோருக்கும் பிடித்தவராகவும் ஆகிப்போனார் வாலி. எல்லோருக்கும் பிடித்தவரானார். பிறகு, எம்ஜிஆருக்கும் பிடித்தவரானார். சிவாஜிக்கும் பிடித்தவரானார்.

அந்தப் படத்தில் ஒரேயொரு பாடலை எழுதுவதற்கு வாலியை அழைத்திருந்தனர். கதையையும் பாட்டுக்கான சூழலையும் கேட்டார் வாலி. மளமளவென பாட்டெழுதிக் கொடுத்தார். அந்தப் பாடல் ரிகார்டிங் செய்யப்பட்டது. ‘இது யார் எழுதினது?’ என்று கேட்டார் எம்ஜிஆர். படத்தின் நாயகன் அவர்தான். ‘இது வாலி எழுதினது’ என்றார்கள். ‘நல்லாருக்கே பாட்டு. அப்படீன்னா அவரையே எல்லாப் பாடலையும் எழுதச் சொல்லிருங்க’ என்றார் எம்ஜிஆர்.

‘பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதை கேட்டாயோ’ என்றார். ‘கொடுத்ததெல்லாம் கொடுத்தான்’, ‘தரை மேல் பிறக்கவைத்தான்’, ‘நானொரு குழந்தை’ என்று அத்தனை பாடல்களையும் எம்ஜிஆர் படத்துக்கு வாலி எழுதினார். அவ்வளவு ஏன்... அந்தப் படத்துக்கு ‘படகோட்டி’ என்று டைட்டில் வைத்ததே வாலி தான்! பிறகென்ன... வாலி ராஜ்ஜியம் உருவானது.

’நான் ஆணையிட்டால்’ என்று தெறிக்கவிட்டார். ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’ என்றார். எம்ஜிஆரின் அரசியல் வளர்ச்சிக்கு வாலியின் பாடல்கள் கட்டியப்பாடல்களாகவே அமைந்தன. ‘ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால், அவன் தேவனென்றாலும் விடமாட்டேன்’ என்ற வரிகளில் கட்டுண்டு போனார்கள் எம்ஜிஆர் ரசிகர்கள்.

‘வெற்றி வேண்டுமா போட்டுப்பாரடா எதிர்நீச்சல்’ என்று கரை சேர்ந்தார். தொடமுடியாத தூரம் சென்றார். ‘சேதிகேட்டோ சேதிகேட்டோவும்’ எழுதினார். ‘அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா’வும் எழுதினார். ‘வெற்றி வேண்டுமா போட்டுப்பாரடா பாட்டை யார் எழுதினது? வாலியா? அவருக்கு என் பாராட்டுகளைச் சொல்லிருங்க’ என்று இயக்குநர் பாலசந்தரிடம் வாலியைப் புகழ்ந்து சொன்னார் பேரறிஞர் அண்ணா.

பாலசந்தர் ஸ்ரீதரின் காலத்தில்தான் வந்தார் . பாலசந்தர் கோலோச்சிக் கொண்டிருந்தபோதுதான் பாரதிராஜா வந்தார். பாரதிராஜாங்கம் பண்ணிக்கொண்டிருக்கும் போது, அவரின் சிஷ்யர் பாக்யராஜ் வந்தார். வாலியும் கண்ணதாசன் காலத்தில்தான் வந்தார். கண்ணதாசனின் பாட்டொளி, பட்டிதொட்டியெங்கும் ஒலித்துக்கொண்டிருந்த போதுதான் வாலியின் பாடல்களும் இடம் பிடித்தன. தடம் பதித்தன.

‘இது கண்ணதாசன் பாட்டுதானே?’ என்று நாம் நினைத்து சிலாகித்துக் கொண்டிருக்கிற நூற்றுக் கணக்கான பாடல்களை, வாலி எழுதியிருந்தார். இப்படி, ‘கண்ணதாசன் பாட்டுதானே இது?’ என்று நாம் பிரமிப்பானதுதான் வாலியின் எல்லை கடந்த இனிப்பான வெற்றி.

இங்கே ஒரு சுவாரஸ்யம். அதை வாலியே பல முறை பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

’’மாசத்துல ஒரு பாட்டு, ரெண்டு பாட்டுன்னுதான் கிடைக்கும். வாழ்க்கைக்கு இது போதாதே. அந்த சமயத்தில், ‘சினிமாவே வேணாம்னு முடிவு பண்ணினேன். மதுரையில் என் நண்பன் ‘இங்கே வாடா, வேலை வாங்கித்தரேன்னு கூப்பிட்டான். நொந்து போயிருந்தேன். தோத்துட்டோமேனு கதறினேன். விடிஞ்சா ஊருக்குப் போகணும்னு நினைச்சிருந்தப்போதான், கவியரசரோட அந்தப் பாட்டு கேட்டேன். என்னை என்னவோ பண்ணுச்சு. என்னிடம் இருந்த எல்லா நெகடீவ் சிந்தனைகளையும் தூக்கிக்கடாசுச்சு அந்தப் பாட்டு. கண்ணதாசனோட அந்தப் பாட்டை அன்னிக்கி கேக்கலேன்னா, இந்த வாலி எப்பவோ காணாமப் போயிருப்பான்’’ என்று வாலி, மேடைகள் தோறும் நன்றியுணர்ச்சியுடன் சொல்லியிருக்கிறார். கண்ணதாசனின் பாட்டு, வாலியை வாழச் செய்த அந்தப் பாட்டு... ‘மயக்கமா கலக்கமா?’

கண்ணதாசனுக்கு போட்டிதான் வாலி. ஆனால், இருவரும் முட்டிக்கொண்டதில்லை. திடீரென்று இரவு 11 மணிக்கு கவியரசர் போன் பண்ணுவார் வாலிக்கு. ‘யோவ், அந்தப் பாட்டைக் கேட்டேன்யா. என்னவோ செய்யுதுய்யா. நல்லா எழுதிருக்கே. உனக்கு விஸ்கி அனுப்பிச்சிருக்கேன்யா. நிறைய எழுதுய்யா’ என்பார். இப்படித்தான் இரண்டு கவிஞர்களும் ஒருவரையொருவர் காதலித்தார்கள்.

எம்ஜிஆருக்கு மட்டுமா... சிவாஜிக்கும்தான் ஏராளமாக எழுதினார். ‘இதோ... எந்தன் தெய்வம் முன்னாலே’ முதலான பாடல்களையெல்லாம் எழுதினார்.

‘தன் வியர்வையிலும் உழைப்பினிலும் வாழ்வை - கண்டு
தொழில் புரிந்து உயிர் வளர்க்கும் ஏழை
அவன் இதழ் மலரும் சிரிப்பொலியைக் கேட்டான் - அந்த
சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்’
என்ற பாடல் வரிகளை கண்ணதாசன் பாட்டு என்று இன்றைக்கும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் பலரும்.

சிவாஜியுடன் ஜெயலலிதா முதன்முதலாக நடித்த படம் ‘கலாட்டா கல்யாணம்’. ‘யோவ் வாலி, அந்தப் பொண்ணு இப்பத்தான் முதல்ல நம்ம கூட நடிக்குது. அப்படியொரு பாட்டை எழுதுய்யா’ என்றாராம் சிவாஜி. வாலி எழுதினார்... ‘வந்த இடம் நீ நல்ல இடம் வரவேண்டும் காதல் மகாராணி’ என்று எழுதினார்.
‘’சர்வர் சுந்தரம்’ படத்தில் ஒரேயொரு பாடலைத் தவிர எல்லாப் பாடல்களும் கண்ணதாசன். திடீரென வாலியை அழைத்து ஒரேயொரு பாட்டு கொடுக்கப்பட்டது. வந்தார். டியூனைக் கேட்டார். கையோடு எழுதிக் கொடுத்தார்.

அவளுக்கென்ன அழகிய முகம்

அவனுக்கென்ன இளகிய மனம்

நிலவுக்கென்ன இரவினில் வரும்

இரவுக்கென்ன உறவுகள் தரும் உறவுக்கென்ன

உயிருள்ளவரை தொடர்ந்துவரும்’

என்கிற இந்தப் பாடல்தான் படத்தின் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது’’ என்று படத்துக்கு கதை, வசனம் எழுதிய பாலசந்தர் சொல்லியிருக்கிறார்.

பாட்டுப் பயணம்... ஜெமினி, ஜெய்சங்கர், முத்துராமன், கமல், ரஜினி, அஜித், விஜய், சூர்யா வரை நீண்டது.

’கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்’ என்று முருகனை உருகி உருகிப் பாடுவார். ‘காதல் வெப்சைட் ஒன்று’ என்று ஹைடெக் பாட்டெழுதுவார். ‘இந்தியநாடு என் வீடு, இந்தியன் என்பது என் பேரு’ என்று தேசப் பக்தி முழங்குவார். ’சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே’ என்று ரயில்விடுவார். ‘முக்காலா முக்காபுலா’ என்று டீன் ஏஜ் குறும்புகளை தெறிக்கவிடுவார். ‘ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது’ என்றும் எழுதுவார். ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே’ என்று தாய்மையைக் கொண்டாடுவார். வெண் தாடியும் விபூதியுமாக வலம் வந்தாலும் அவர் எல்லோருக்கும் வாலிபக் கவிஞராகவே திகழ்ந்தார். ’சுந்தரி கண்ணால் ஒருசேதி’யில் சொக்கிப் போனார்கள் ரசிகர்கள்.

‘பொய்க்கால் குதிரைகள்’ படத்தில் பாலசந்தர் வாலியை நடிகராக்கினார். பிறகு, ‘சத்யா’, ஹேராம்’ என்று பல படங்களில் நடித்தார்.

வாலியின் இன்னொரு ஸ்பெஷல். கண்ணதாசன் வாலியைப் புகழ்ந்தது போலவே, அடுத்த தலைமுறை கவிஞர்களை கொண்டாடினார் வாலி.

‘எம்.எஸ்.வி. அண்ணனைப் பாக்கறதுக்கு முன்னாடி வரைக்கும் சோறு திங்க வக்கில்ல. அவரைப் பாத்த பிறகு எனக்கு சோறு திங்கவே நேரமில்ல’ என்று தனக்கே உரிய பாணியில், வாலி சொல்லாத மேடையே இல்லை. நன்றிக்கு உதாரண புருஷன் இந்த அவதார புருஷன்.

‘ஊக்கு விற்பவனை ஊக்குவித்தால்
ஊக்கு விற்பவன் கூட
தேக்கு விற்பான்’

என்று சொன்னவர், ஊக்குவிக்காமலா இருப்பார்?

ஒப்பனை முகங்களை
ஒப்புக்கும் உப்புக்கும்
பாடியவன் - அந்த
தப்புக்குப் பிராயச்சித்தமாய் - ஓர்
ஒப்பிலாத முகத்தை
தப்பிலாத தமிழில்
பாட வருகிறேன்

என்று அவரே தன்னைச் சொல்லிக்கொள்கிறார். அதுதான் வாலி.

1931ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ம் தேதி பிறந்தார் வாலி. 2013ம் ஆண்டு ஜூலை மாதம் 18ம் தேதி, 82வது வயதில் காலமானார். ஆனால் காலம் உள்ளவரை, நினைவிருக்கும் வரை, வாலியின் வரிகள் அமரத்துவம் வாய்ந்ததாகவே இருக்கும்.

வாலியின் புகழுக்கு காலமும் இல்லை. மரணமும் கிடையாது.

‘வாலிபங்கள் ஓடும் வயதாகக் கூடும்

ஆனாலும் அன்பு மாறாதம்மா’

என்ற வரிகளை எழுதிய வாலியை நினைக்க நினைக்க கூடிக்கொண்டே இருக்கும் அவரின் மீதான அன்பும் மரியாதையும்!

இன்று (ஜூலை 18) கவிஞர் வாலியின் நினைவுநாள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்