நடிப்புக்கு இலக்கணம், நடிப்பில் மேதை என்றெல்லாம் நடிகர் திலகத்தைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். அப்பேர்ப்பட்ட சிவாஜி கணேசன், எந்தக் காட்சியாக இருந்தாலும் அசால்ட்டாகப் பண்ணி, அப்ளாஸ் வாங்கிவிடுவார். ‘’ஸ்கிரீனில், ஒரு காட்சியில் எம்.ஆர்.ராதா, எஸ்.வி.சுப்பையாவுடன் நானும் நடிப்பதாக இருக்கும் காட்சியில், அந்தக் காட்சி முடியும் வரை மிகவும் ஜாக்கிரதையாக, கவனமாக நடிப்பேன். கொஞ்சம் அசந்தாலும் இவர்கள் நம் நடிப்பை ஓவர்டேக் செய்து, கரவொலியை வாங்கிச் சென்றுவிடுவார்’’ என்று சிவாஜியே குறிப்பிட்டுள்ளார். சிவாஜி சொன்ன பட்டியலில் இன்னொருவரும் உண்டு. கடோதகஜன், எதிரே உள்ள உணவையெல்லாம் விழுங்கிவிடுவது போல், எத்தனைபேர் ஒரு காட்சியில் நடித்தாலும் அத்தனை பேரையும் கடந்து அசத்துவதில் வல்லவர் அவர். அவரின் பெயர்... எஸ்.வி.ரங்காராவ்.
ஆந்திர மாநிலம் இவருக்கு. தெலுங்குதான் தாய்மொழி. 1918ம் ஆண்டு ஜூலை மாதம் 3ம் தேதி பிறந்தார். சாமர்ல வெங்கட ரங்காராவ் என்பதுதான் பெயர். இதுவே பின்னாளில், எஸ்.வி.ரங்காராவ் எனச் சுருங்கியது. பெயர்தான் சுருங்கியது. ஆனால் பேரும் புகழும் விஸ்வரூபமெடுத்து வளர்ந்து உயர்ந்தது.
ஆரம்பப்பள்ளிப்படிப்பு சொந்த ஊரில். பிறகான பள்ளிப்படிப்பும் கல்லூரிப்படிப்பும் சென்னையில். அப்பாவின் மறைவுக்குப் பிறகு சென்னைக்கே வந்தார்கள். இப்படியாகத்தான் போய்க்கொண்டிருந்த வாழ்க்கையில், நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டது. பிறகு விசாகப்பட்டினத்தில் கல்லூரிப் படிப்பு, காக்கிநாடாவில் கல்லூரிப் படிப்பு,அதன் பின்னர் தீயணைப்புத்துறையில் வேலையில் சேர்ந்தார். ஆனால் கலைத்தீ கனன்று கொண்டே இருந்தது.
» நெட்ஃப்ளிக்ஸ் தயாரிக்கும் மெகா பட்ஜெட் படம் : அவெஞ்சர்ஸ் இயக்குநர்கள் ஒப்பந்தம்
» சீரியல்களின் புதிய அத்தியாயங்கள் எப்போது? - சன் டிவி அறிவிப்பு
நாடகத்தில் சேர்ந்தார். வயது முதிர்ந்த கதாபாத்திரத்தில் இவரின் நடிப்பைக் கண்டு மிரண்டுபோனார்கள் எல்லோரும். அப்போது அவருக்கு வயது 20ஐக் கடந்திருந்தது. பிறகு ஏகப்பட்ட நாடகங்களில் நடித்தார். அப்போதுதான் ஆதி நாராயணராவ் நட்பு கிடைத்தது. அஞ்சலிதேவியின் கணவர் இவர். தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என பன்முகம் கொண்ட திறமையாளர்.
சொந்தக்காரர் ஒருவர் படமெடுக்க, ‘வரோதினி’ என்ற படத்தில் நடித்தார். ஆனால் படம் தோல்வி அடைந்தது. நடிப்பா, வேலையா என்று குழம்பினார். வேலையை விட்டார். நடிப்பதுதான் வேலை என்று உறுதிகொண்டார். இரண்டு வருடக் காத்திருப்புக்குப் பிறகு ’மனதேசம்’, ’பல்லெட்டூரி பில்லா’ படங்கள் வந்தன. இவரின் கேரக்டர் கவனிக்கப்பட்டது. அடுத்து ‘செளகார்’ படத்தில் இவரின் கேரக்டர் ரொம்பவே பேசப்பட்டது. ரவுடிக் கதாபாத்திரத்தில் அதகளம் பண்ணியிருந்தார். இந்தப் படத்தில் நடித்த ஜானகி, பின்னர் செளகார் ஜானகி என்று அழைக்கப்பட்டதும் இன்றளவும் அவர் நடித்து வருகிறார் என்பதும்தான் நமக்குத் தெரியுமே!
51ம் வருடம், ரங்காராவ் வாழ்விலும் என்.டி.ராமாராவ் வாழ்விலும் மிகப்பெரிய திருப்புமுனை நிகழ்ந்தது. ‘பாதாள பைரவி’ திரைப்படம் இருவருக்கும் மிகப்பெரிய மாற்றத்தையும் ஏற்றத்தையும் கொடுத்தன. இவரின் நடிப்பைக் கண்டு அதிசயித்தார்கள்.
அவ்வளவுதான். அந்த ஆண்டிலிருந்து அவரைப் போலவே அவரின் திரைவாழ்வும் உயர்ந்தது. புகழும் பணமும் வளர்ந்தது. ‘நடிப்புத்துறைக்கு எதற்காக வந்தீர்கள்?’ என்று பத்திரிகையாளர் கேட்டபோது, ஒரே வரியில் பதில் சொன்னார்... ‘நன்றாக நடிக்கிறேன் என்று பேர்வாங்க வேண்டும்’ என்று! அந்தப் பெயரை, தான் நடித்த ஒவ்வொரு படத்திலும் அடைந்தார் என்பதுதான் ரங்காராவ் எனும் உன்னதக் கலைஞனின் மிகப்பெரிய வெற்றி.
இப்போதெல்லாம் இந்த நடிகர் பணக்கார அப்பா, அந்த நடிகர் ஏழை அப்பா என்றெல்லாம் பார்க்கப்படுகிறது. அதன்படியே கேரக்டர்களும் கொடுக்கப்படுகின்றன. ஆனால், ரங்காராவ் இப்படியாக கோடு கிழித்து, எல்லை வைக்கமுடியாத அசுரத்தனமான நடிகர். ஒரு படத்தில் பணக்கார அப்பாவாக இருப்பார். கோட்டும்சூட்டும் போட்டுக்கொண்டு, பைப் பிடித்தபடி வருவார். இன்னொரு படத்தில் அழுக்குச் சட்டையும் பழுப்பு வேட்டியுமாக, குடிசையில் இருப்பார்.
வறட்டு கெளரவம் கொண்ட பணக்காரன், தர்ம சிந்தனையுள்ள பணக்காரன், பாசத்துக்கு ஏங்கும் அப்பா, மோசம் செய்யும் அப்பா, நம்பியவரை ஏமாற்றும் அப்பா, நம்பி ஏமாறும் அப்பா, முசுடாக இருக்கும் அப்பா, காமெடி கலகல அப்பா என்று எந்த வேடமாக இருந்தாலும் அதை ரங்காராவிடம் கொடுத்தால், அவர் பார்த்துக்கொள்வார். அந்தக் கதாபாத்திரத்தை அப்படியே உலவவிட்டுவிடுவார் என்று இயக்குநர்கள் அவர் மீது நம்பிக்கை வைத்தார்கள்.
‘கல்யாண சமையல் சாதம்’ என்கிற ரங்காராவையும் ரசித்துச் சிரித்தோம். ‘முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக’ என்கிற ரங்காராவையும் பார்த்துக் கலங்கிக் கதறினோம். ‘எங்கவீட்டுபிள்ளை’யில் சரோஜாதேவியின் அப்பாவாக வந்து படம் முழுக்க டைமிங் காமெடியில் அதகளம் பண்ணியதை ரசித்தோம். சிவாஜியுடன் ‘செல்வம்’ படத்தில் ஜாலி டாக்டராக வந்து காமெடிப் பட்டாசுகளைக் கொளுத்திபோட்டுக் கொண்டே இருந்ததையும் ரசித்தோம்.
‘எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதி நானென்றான்...’ என்று ‘ரங்கன்...’ என்று உருகிப் பாடுகிற ‘படிக்காத மேதை’ செல்வந்ந்தர் ரங்காராவ், காலத்துக்கும் மனதில் நிற்பார்.’வாழையடி வாழை’ படத்தில் அப்படியொரு அற்புதமான பணக்கார மாமனாராக வந்து, ஒவ்வொரு கேரக்டரையும் டியூன் செய்து நல்வழிப்படுத்துவார். கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் படம் இது. இந்த ரங்காராவின் கேரக்டரின் நீட்சியாகத்தான், விசுவின் கேரக்டர்களும் நாரதர் நாயுடு மாதிரியான கதாபாத்திரங்களும் அமைக்கப்பட்டன என்பதாகத்தான் தோன்றுகிறது.
‘சர்வர் சுந்தரம்’ படத்தில் முக்கியமான கேரக்டரெல்லாம் இல்லை. திரைப்பட இயக்குநராக ஒரு காட்சியில் வருவார். ஆனால், அந்த ஒரு காட்சியாலே நம் மனதில் இடம்பிடித்தார். அதுதான் ரங்காராவ்.
’’ரங்காராவ் அண்ணா, அற்புதமான நடிகர். நடிப்பு மேதை’ என்று சிவாஜி புகழ்ந்து உருகியிருக்கிறார். ‘என்ன பெரிய விருது? சிவாஜி திரையில் சிரித்தால் ரசிகர்கள் சிரித்தார்கள். சிவாஜி அழுதால் ரசிகர்களும் அழுதார்கள். சிவாஜி ஆவேசமானால் ரசிகர்களும் ஆவேசமானார்கள். ஒரு நடிகனுக்கு இவைதான் விருது. இதைவிட வேறு பெரிய விருதுகள் ஏதுமில்லை ஒரு கலைஞனுக்கு. சிவாஜி அப்படி எத்தனையோ விருதுகளை வாங்கிய மகா கலைஞன்’ என்று ரங்காராவ் புகழ்ந்திருக்கிறார்.
‘சபாஷ் மீனா’, ‘தெய்வத்தின் தெய்வம்’, ‘படித்தால் மட்டும் போதுமா’, கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’ என ரங்காராவ் அசத்தி பிரமிக்க வைத்த படங்களின் பட்டியல் நீளம்.
தெலுங்குத் திரையுலகம் நூற்றாண்டு கொண்டாடிய போது, பல நூறு ஆண்டுகளானாலும் மறக்கமுடியாத கலைஞனாகத் திகழும் ரங்காராவுக்கு தபால் தலை வெளியிட்டு தன்னை கெளரவப்படுதிக் கொண்டது. பின்னர், ஆந்திரத்தில் இவருக்கு இரண்டு இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டன.
எத்தனையோ நடிகர்களின் குரல்களை, மிமிக்ரி கலைஞர்கள் சர்வசாதாரணமாக எடுத்து, மிமிக்ரி செய்து அப்ளாஸ் அள்ளுகிறார்கள். வி.எஸ்.ராகவனின் குரலைக் கூட மிமிக்ரி செய்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால், விறுவிறுப் பேச்சும், படபட கோபமும் தடதட ஆவேசமும் கொண்ட இவரின் வசன ஸ்டைல்... எவருக்கும் வராத ஒன்று. இதுவரை ரங்காராவின் குரலை, எவரும் மிமிக்ரி செய்ததுமில்லை. நடிப்பிலும் அப்படித்தான்!
ஆமாம்... உடலிலும் நடிப்பிலும் உயர்ந்து விளங்கும் எஸ்.வி.ரங்காராவ் எனும் ராட்சதக் கலைஞனுக்கு இன்று (18.7.2020) நினைவு நாள்.
மாபெரும் கலைஞனைப் போற்றுவோம்!
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago