வினோபா பாவே 10

By ராஜலட்சுமி சிவலிங்கம்

பூமிதான இயக்கத் தந்தை வினோபா பாவே

சுதந்திரப் போராட்ட வீரரும், பூமிதான இயக்கத் தந்தையுமான ஆச்சார்ய வினோபா பாவே (Vinoba Bhave) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 11). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# மகாராஷ்டிர மாநிலம் கொலபா அருகே ககோடா என்ற கிராமத்தில் (1895) பிறந்தார். முழு பெயர் விநாயக் நரஹரி பாவே. இவரது ஆழமான அறிவுத் தேடலை பாடப் புத்தகங்கள் தணிக்காததால், துறவிகள், தத்துவ ஞானிகளின் புத்தகங்களைப் படித்தார்.

# காந்திஜியின் போதனைகளால் ஈர்க்கப்பட்டார். 1916-ல் அவரை நேரில் சந்தித்தார். காந்திய வழியைப் பின்பற்ற உறுதிபூண்டார். காந்தியின் ஆசிரமத்தில் தங்கி கற்றல், கற்பித்தல், ராட்டை சுற்றுதல் போன்ற பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். வார்தா ஆசிரமத்துக்கு 1921-ல் பொறுப்பேற்றார்.

# ‘மகாராஷ்டிர தர்மா’ என்ற மாத இதழை 1923-ல் தொடங்கினார். அதில் உபநிடதங்கள் பற்றி பல கட்டுரைகளை எழுதினார். கதர்ஆடை, கிராமத் தொழில்கள், கிராம மக்களின் கல்வி, சுகாதார மேம்பாட்டுக்காகவும், தீண்டாமை ஒழிப்புக்காகவும் பாடுபட்டார்.

# சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு பலமுறை சிறை சென்றார். இவர் மேலும் படிக்கவும், புத்தகங்கள் எழுதவும் சிறைச்சாலை சிறந்த களமாக அமைந்தது. பகவத்கீதையை மராத்தியில் மொழிபெயர்த்தார்.

# கீதை குறித்து சிறையில் இவர் ஆற்றிய உரைகள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளியிடப்பட்டது. ஞானேஸ்வர், ஏக்நாத், நாம்தேவ் உள்ளிட்ட துறவிகள் எழுதிய அபங்க, பஜனைப் பாடல்களைத் தொகுத்தார்.

# ஆந்திர கிராமங்களில் 1951-ல் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தற்போது தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளிக்கும் சென்றார். அங்கிருந்த ஏழைகள் இவரிடம், தாங்கள் விவசாயம் செய்ய அரசிடம் நிலம் பெற்றுத் தருமாறு கோரினர். அதே ஊரை சேர்ந்த ராமச்சந்திர ரெட்டி என்பவர், 100 ஏக்கர் நிலத்தை வழங்க முன்வந்தார்.

# தேவையுள்ளவர்கள் அதிகம் இருக்கும் இங்கு, கொடுக்கும் மனம் உள்ளவர்களும் நிறைய பேர் இருப்பதை புரிந்துகொண்ட வினோபா, இரு தரப்பினருக்கும் பாலமாக இருக்க முடிவு செய்தார். ‘பூதான்’ எனப்படும் பூமிதான இயக்கத்தை தொடங்கினார்.

# நாடு முழுவதும் பாதயாத்திரை சென்று, பூமிதானத்தின் முக்கியத்துவம் பற்றி உரையாற்றினார். மக்களிடம் நன்கு பழகுவதற்காக தென்னிந்திய மொழிகளையும் கற்றார். இந்த புனிதப் பயணத்தில் ஏராளமான இளைஞர்கள், தலைவர்கள், வெளிநாட்டு ஆர்வலர்கள் பங்கேற்றனர். பணக்கார விவசாயிகளிடம் நிலங்களை தானமாகப் பெற்று ஏழை விவசாயிகளுக்கு வழங்கினார்.

# கிராமத்தையே தானமாக வழங்கிய நிகழ்வுகளும் நடந்தன. தமிழகத்தில் உத்திரமேருர் அருகே களியாம்பூண்டி கிராமம் தானமாக வழங்கப்பட்டது. 13 ஆண்டுகளில் நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான மைல்கள் நடைபயணம் மேற்கொண்டார். சுமார் 40 லட்சம் ஏக்கர் நிலத்தை தானமாகப் பெற்றார். 1979-ல் உண்ணாவிரதம் இருந்து, பசுவதை தடைச் சட்டத்தை கொண்டுவரச் செய்தார்.

# ‘என்னைவிட காந்தியத்தை சிறப்பாக உள்வாங்கிக்கொண்டவர்’ என்று காந்திஜியால் புகழாரம் சூட்டப்பட்டவர். மக்களாலும் தலைவர்களாலும் ‘ஆச்சார்யா’ என்று போற்றப்பட்ட வினோபா பாவே 87-ம் வயதில் (1982) மறைந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்