பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எத்தனையோ இயக்குநர்கள் படங்களைத் தந்திருக்கிறார்கள். கதையின் பெண் கேரக்டர்கள் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருப்பார்கள். பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதியானது, கதையின் மையக்கருவாக இருக்கும். அப்படியொரு அநீதியை, ‘சீதையை ராமனே சந்தேகப்பட்டால்...?’ என்கிற ஒன்லைனை வைத்துக்கொண்டு, பாரதிராஜா விடுத்த அறைகூவல்தான் ‘புதுமைப்பெண்’. ஏவிஎம்மின் புதுமைப்பெண்.
அடுத்தவரின் மனைவி என்றும் பாராமல் அபகரிக்க நினைத்து செயல்பட்டான் ராவணன். அசோகவனத்தில் இருந்த சீதையின் கற்பை கேள்வியாக்கினான் ராமபிரான். இந்த இரண்டின்போதும் பாரதி கண்ட புதுமைப்பெண்ணாக, பாரதிராஜாவின் புதுமைப்பெண் என்ன செய்தாள் என்பதைச் சொல்வதுதான் ‘புதுமைப்பெண்’.
கணவனே கண்கண்ட தெய்வம் என்பதை புராண - இதிகாச உதாரணங்களையெல்லாம் விளக்கி உணர்த்துகிற தந்தை - மகள். அந்தப் பெண், வேறொரு இனத்தில் இருந்து ஒருவனைக் காதலிக்கிறாள். வங்கியில் வேலை பார்க்கும் நாயகனின் வீட்டாருக்கு, இந்தக் காதலும் கல்யாணமும் பிடிக்கவில்லை. ஆனாலும் எதிர்ப்பையெல்லாம் மீறி திருமணம் நடக்கிறது. வேறு வழியின்றி, நாயகனின் வீடு ஏற்றுக்கொள்கிறது.
நாயகன் வேலை பார்க்கும் வங்கியின் அதிகாரி, பசுத்தோல் போர்த்திய புலி. நாயகியைப் பார்த்ததும், உடன் பணிபுரிபவரின் மனைவி என்று தெரிந்த பின்பும் நாயகியை அடைய ஆசைப்படுகிறான். வாழைப்பழத்தில் ஊசியேற்றுவது போல், கொஞ்சம் கொஞ்சமாக டீஸ் பண்ணுகிறான். ஆனால் அவன் சால்ஜாப்புக்கெல்லாம் மயங்காமல், திடமாக இருந்து புறக்கணிக்கிறாள். அதேசமயம், அவனுக்குள்ளே இருக்கிற வக்கிர குணத்தையும் செய்து வரும் டார்ச்சரையும் கணவரிடம் சொல்லாமல் தானே அவனை உறுதியாகப் புறக்கணிக்கிறாள்.
» ‘சொர்க்கம் மதுவிலே’, ‘ஆழக்கடலில் தேடிய முத்து’; கமலின் ‘சட்டம் என் கையில்’ வெளியாகி 42 ஆண்டுகள்!
» அஜித்துக்கு அகத்தியன் எழுப்பிய ‘காதல் கோட்டை’! - 24 ஆண்டுகளாகியும் அசைக்கமுடியாத கோட்டை!
இந்தசமயத்தில், நாயகனின் தங்கைக்குத் திருமணம். பணம் பற்றாக்குறையாகிறது. வங்கிக் காசாளாராக இருக்கும் நாயகன் 30 ஆயிரம் ரூபாய் கையாடல் செய்துவிட்டதாக புகார் வருகிறது. ‘அந்தப் பணத்தை குறிப்பிட்ட நாளுக்குள் திருப்பி வைத்துவிடுங்கள்’ என்று வில்லத்தன அதிகாரி, கெடு விதிக்கிறார். ஆனால் அந்தநாளில் பணம் புரட்டமுடியவில்லை. அப்போது அதுவரை இலைமறைகாயாக நாயகியிடம் முயற்சித்துக் கொண்டிருந்த வில்ல அதிகாரி, இப்போது கணவரிடமே, நாயகனிடமே தன் ஆசையைச் சொல்லுகிறார். ‘கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துகொண்டால், இதிலிருந்து நீ தப்பிக்கலாம்’ என்கிறார்.
அந்த மெரினா கடற்கரையில் அலைகளைவிட ஆவேசமாகிறார் நாயகன். அவரை வெளுத்தெடுக்கிறார். மனைவி தடுத்து வீட்டுக்கு அழைத்து வருகிறார். விடிந்ததும் பேப்பர் வருகிறது. பேப்பரில் வங்கி அதிகாரி கொலைச் செய்தி வருகிறது. கூடவே, போலீஸ் வருகிறது. ‘வங்கி அதிகாரியைக் கொலை செய்ததற்காக கைது செய்கிறோம்’ என்று தெரிவித்து கைது செய்து அழைத்துச் செல்கிறது.
அதுவரை சீதையாக வாழ்ந்து வரும் நாயகி, இப்போது கணவனை மீட்க சாவித்திரியாகிறாள். சட்டத்தில் இருந்தும் வழக்கில் இருந்தும் கணவரை விடுவிக்கக் கடுமையாகப் போராடுகிறார். வழக்கிற்கு வக்கீல் ஒருவரும் உதவுகிறார். இறுதியில் கணவன் விடுதலையாகிறார். வீட்டுக்கு வருகிறார்.
ஆனால், வீட்டார் மனைவியைப் பற்றி ஏதேதோ சொல்லிவைக்க, அவளின் கற்பு குறித்தும் ஒழுக்கம் குறித்தும் கேள்விகள் எழுகின்றன. நாயகியிடமே கேட்கிறார். நொறுங்கிப் போகிறாள். உடைந்து கதறுகிறாள். கண்ணீர்விடுகிறாள். அடுத்த கணமே வெடிக்கிறாள். ஆவேசமாகிறாள். சத்தியவான் சாவித்திரியாக இருந்து கணவனை மீட்டுக்கொண்டு வந்தவள், மீண்டும் சீதையைப் போல் சந்தேகத்தீயின் முன்னே நிற்கிறாள். ‘போங்கடா நீங்களும் உங்க ஆணாதிக்க சிந்தனையும்’ என்று கணவனை விட்டு, வீட்டை விட்டுப் புறப்படுகிறாள். தென்றலாக இருந்தவள், புயலெனப் புறப்படுகிறாள். பாரதி கண்ட புதுமைப்பெண்ணென புறப்படுகிறாள்.
1984ம் ஆண்டு ஏவி.எம் நிறுவனம் தயாரிப்பில், பாரதிராஜா இயக்கத்தில் வெளியானது ‘புதுமைப்பெண்’. பாண்டியன், ரேவதி, ராஜசேகர், ஜனகராஜ், பிரதாப் போத்தன், ரா.சங்கரன் முதலானோர் நடித்திருந்தனர். 83ம் ஆண்டு, ‘மண்வாசனை’யில் ரேவதியை அறிமுகப்படுத்தினார். இதையடுத்து ரேவதியை மீண்டும் இந்தப் படத்தில் நடிக்கவைத்தார். பாண்டியனையும்தான்!
‘16 வயதினிலே’, ‘கிழக்கே போகும் ரயில்’, ‘புதிய வார்ப்புகள்’ என கிராமத்துப் படங்கள் பண்ணிய பாரதிராஜா, சிட்டி சப்ஜெக்ட் எடுப்பதற்கு ‘சிகப்பு ரோஜாக்களுடன்’ வந்தார். பிறகு வித்தியாசமானதொரு காதல் கதையை எடுத்துக் கொண்டு, சென்னை, ஊட்டியில் படம் பண்ணினார். வேலையில்லாப் பிரச்சினைகளையும் இளைஞர்களின் கனவுகளையும் ’நிழல்கள்’ மூலமாகத் தந்தார்.
‘மண்வாசனை’ படத்துக்குப் பிறகு தமிழில் இப்படியொரு நகரத்துக் கதையை எடுத்துக் கொண்டு, ‘புதுமைப் பெண்’ணாக உலவவிட்டார் பாரதிராஜா.
பாண்டியன், ஜனகராஜ், ராஜசேகர், பிரதாப், அருந்ததி என எல்லோருமே அவரவருக்கான கேரக்டரை அழகாகச் செய்திருந்தனர். ‘இதுதாண்டா போலீஸ்’ ராஜசேகருக்கு இதுதான் முதல் படம். அறிமுகப்படம். வில்லத்தனத்தில் மிரட்டியிருந்தார். ஆனால் படம் முழுக்க ரேவதி ராஜ்ஜியம்தான் பிரஸ்தாபித்திருந்தது. இடைவேளையில்... இடைவேளை என்று போடாமல், ‘காபி சாப்பிடும் நேரம்’ என்று அந்தக் காட்சியைக் கொண்டே இடைவேளை விட்ட ஸ்டைல் சொன்ன ஸ்டைல் ரசிக்கவைத்தது.
உருகிக் காதலிக்கும் போதும், மாமியார் வீட்டில் காயப்படுத்துகிற போதும், ராஜசேகர் செக்ஸ் டார்ச்சர் கொடுக்கிற தருணங்களிலும் கணவர் பாண்டியன் கைதாகி ஜெயிலுக்குள் இருக்கிற போதும், அவரை வெளியே கொண்டு வர போராடுகிற போதும், இறுதியில் அன்புக்கணவனே சந்தேகப்படுகிறான் எனும் போதும்... என காட்சிக்குக் காட்சி, ரேவதி தன் நடிப்பால், சீதா எனும் கேரக்டரை நம் கண் முன்னே நெருப்பென தகிக்கவிட்டிருந்தார். அநேகமாக, ரேவதி தன் நடிப்பால் முதன்முதலாக எடுத்த விஸ்வரூபம் ‘புதுமைப்பெண்’ணாகத்தான் இருக்கும்.
ஆர்.செல்வராஜின் கதை, பஞ்சு அருணாசலத்தின் வசனம், கண்ணனின் கேமிரா என பாரதிராஜாவுக்கு பக்கபலமாக துணைநின்றன. முக்கியமாக பாடல்களும் இசையும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. ‘காதல் மயக்கம்’, ‘கஸ்தூரி மானே’, ’கண்ணியிலே சிக்காதய்யா கானாங்குருவி’, ‘ஓ.. ஒரு தென்றல் புயலாகி வருதே’ என்ற எல்லாப் பாடல்களையும் ஹிட்டாக்கிக் கொடுத்திருந்தார் இளையராஜா. பாண்டியன் - ரேவதி காதல் போர்ஷன், ரேவதியை செக்ஸ் டார்ச்சர் செய்யும் ராஜசேகர் காட்சிகள், பார்வைற்ற அருந்ததியை வன்புணர்வு செய்யும் கொடூரக் காட்சி என இளையராஜாவின் பின்னணி இசை... கதை ஏற்படுத்தும் உணர்வுகளை இன்னும் அதிகரித்து அழுத்தின.
ஆனாலும், பார்த்தவர்கள் ‘நல்லாத்தானே இருக்கு’ என்று பாராட்டினார்கள். இதனாலேயே, சுமாராகவே ஓடிக்கொண்டிருந்தது. பிறகு அப்போதைய முதல்வர் எம்ஜிஆர், நல்ல சமூகக்கருத்து கொண்ட இந்தப் படத்துக்கு வரிவிலக்கு என்று அறிவித்ததும் குறைந்த கட்டணத்தில் இன்னும் வீறுகொண்டு வெற்றியை நோக்கி ஓடினாள் ‘புதுமைப்பெண்’. இதிலொரு ஆச்சரியம்... தியேட்டரில் கூட்டம் அலைமோதியது. ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடின. படம் பார்க்க வந்து டிக்கெட் கிடைக்காதவர்கள், வரிவிலக்குக்கு முன்னதாக இருந்த டிக்கெட் விலையை விட, வரிவிலக்கின் போது டிக்கெட் கிடைக்காமல், பிளாக்கில் கூடுதல் விலைக்கு வாங்கி படம் பார்த்தார்கள். சில ஊர்களில் 100 நாட்களைக் கடந்தும் 150 நாட்களைக் கடந்தும் மதுரையில் 200 நாட்களைக் கடந்தும் ஓடியது.
இதன் பின்னர் ‘ஒரு கைதியின் டைரி’ படத்திலும் ரேவதிக்கு வாய்ப்பு வழங்கினார் பாரதிராஜா. இந்த முறை மிகப்பிரமாண்டமான வெற்றியைச் சந்தித்தார்.
1984ம் ஆண்டு ஜூலை மாதம் 14ம் தேதி வெளியானது ‘ஏவிஎம்மின் புதுமைப்பெண்’. படம் வெளியாகி 36 ஆண்டுகளானாலும், இன்னும் மக்கள் மனதில், இளையராஜாவின் பிஜிஎம்மில், மலேசியா வாசுதேவனின் கணீர்க்குரலில், ‘ஒரு தென்றல் புயலாகி வருதே’ என நமக்குள் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கிறாள்... பாரதிராஜாவின் ‘புதுமைப்பெண்’.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago