குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை: தமிழகம் மூன்றாம் இடம்; போடப்படுமா முற்றுப்புள்ளி?

By செய்திப்பிரிவு

குழந்தைகளுக்கு எதிரான பாலியல்ரீதியான வன்முறை உலகெங்கும் தினசரி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குழந்தைகளின் பாலியல்ரீதியான வன்முறைகளைப் பொறுத்தவரை, உலக நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இந்தியாவில், ஒவ்வொரு 155 நிமிடத்திற்கும், 16 வயதுக்குட்பட்ட ஒரு குழந்தை வன்புணர்வுக்கு ஆளாகிறது. 2007 ஆம் ஆண்டு, பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகம் (Ministry of Women and Child Development) நடத்திய ஆய்வின் மூலம், 22 சதவீதக் குழந்தைகள் கடுமையான பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள்; 51 சதவீதக் குழந்தைகள் மற்ற பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்; தெருவோரக் குழந்தைகள், வேலை செய்யும் குழந்தைகள் மற்றும் நிறுவனங்களில் தங்கி இருக்கும் குழந்தைகள் போன்றோர், பாலியல்ரீதியான துன்புறுத்தல் குறித்து அதிகமான புகார்களைக் கொடுத்துள்ளார்கள்; ஆண் மற்றும் பெண் குழந்தைகள் இருவருமே பாதிக்கப்படுகிறார்கள் என்று தெரிய வருகிறது.

இந்தியாவில் தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின், 2018 ஆம் ஆண்டு அறிக்கையின்படி, ஒவ்வொரு நாளும் 109 குழந்தைகள் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள்; பதிவான மொத்த வழக்குகள் 39,827. இது முந்தைய ஆண்டு (2017) பதிவான 32,608 வழக்குகளை விட 22 சதவீதம் அதிகம். பாலியல் வன்முறை வழக்குகளைப் பொறுத்தவரை, மகாராஷ்டிரா 2,832 வழக்குகளுடன் முதலிடத்திலும், உத்தரப் பிரதேசம் 2,023 வழக்குகளுடன் இரண்டாம் இடத்திலும், தமிழகம் 1,457 வழக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் இருக்கின்றன. இந்தப் புள்ளி விவரத்தின்படி, தமிழகத்தில் தினசரி நான்கு குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள்.

தற்போது, புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 வயதுச் சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட நிகழ்வு பேசுபொருளாக இருக்கிறது. இதற்கு முன்பும் இதைப்போல பல கொடூரமான சம்பவங்கள் நடைபெற்று பேசுபொருளாக இருந்ததும், கொஞ்ச நாள் கழித்து அனைவரும் மறந்துவிடுவதும் தொடர்கதையாகி வருகிறது. கடுமையான சட்டங்கள் இருந்தாலும், இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பது வருத்தத்தையும், வேதனையையும் அளிக்கிறது. தனது சொந்த வீடு கூட குழந்தைகளுக்குப் பாதுகாப்பானதாக இல்லை என்ற எதார்த்த நிலை அதிர்ச்சியைத் தரக்கூடியதாக இருக்கிறது. ஆண் குழந்தைகளுக்கும் இதுபோன்ற பாதிப்புகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் பெரிய அளவில் அவை வெளியில் வருவதில்லை.

எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்கத் திட்டமிட வேண்டும் என்றால் இதற்கான அடிப்படைக் காரணங்களைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். துன்புறுத்தலுக்கான அடிப்படைக் காரணங்களைப் புரிந்துகொள்ளாமல் அதற்கான தீர்வை நம்மால் எட்ட இயலாது. உலகெங்கிலும் குழந்தைகளுக்கு எதிரான துன்புறுத்தல்களும், வன்முறையும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் அதிகாரச் சமமின்மை (unequal power). எங்கெல்லாம் அதிகாரம் சமமாக இல்லையோ அங்கெல்லாம் மனரீதியான, உடல்ரீதியான மற்றும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் நடைபெற வாய்ப்புகள் அதிகம். திருப்பிச் சொல்ல வேண்டுமென்றால், எங்கெல்லாம் துன்புறுத்தல்கள் நடக்கிறதோ அங்கெல்லாம் அதிகாரச் சமமின்மையை நம்மால் காணமுடியும். (Abuse happens when the power is unequal).

எதன் அடிப்படையில் இந்த அதிகாரச் சமத்துவமின்மை நிலவுகிறது என்று ஆராய்ந்தால், ஆணாதிக்கச் சிந்தனை கொண்ட நம் சமூகத்தில் பாலினச் சமத்துவமின்மை முக்கியப் பங்கு வைக்கிறது. ஆண்கள் அதிகாரமிக்கவர்களாகவும், பெண்கள் பலவீனமாக, அதிகாரமற்றவர்களாகவும் கட்டமைக்கப்படுகிறார்கள். இத்துடன் சாதி, மதம், மொழி, பதவி, பொருளாதார நிலை , சமூக அந்தஸ்து, வாழுமிடம், செய்யும் தொழில் போன்ற பல காரணிகளும், பாலியல் சமத்துவமின்மையைப் பயன்படுத்தி துன்புறுத்தல்களை ஊக்குவிக்கின்றன.

புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், பெண்ணாக இருப்பது ஒரு மடங்கு பாதிப்பை ஏற்படுத்துமென்றால், அவள் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்றால் இரண்டு மடங்கும், அவள் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்து, ஏழையாகவும் இருந்தால் மும்மடங்கு பாதிப்பும் ஏற்படும். இதுபோல் ஒவ்வொரு காரணிகளும் கூடக்கூட அவருடைய அதிகாரச் சமமின்மையின் தன்மை கூடிக்கொண்டே செல்லும். இது குழந்தைகளுக்கு மட்டுமல்ல அனைவருக்குமே பொருந்தும். உதாரணமாக ஆசிரியர் – மாணவர், போலீஸ்-குற்றவாளி, உயரதிகாரி -பணியாளர், பெற்றோர் -குழந்தை, கணவன் -மனைவி: இவற்றில் அதிகாரம் யாருக்கு அதிகமாக இருக்கிறதோ, அவர்கள் மற்றவர்களைத் துன்புறுத்துவது நாம் தினசரி கண்கூடாகக் காணக்கூடிய விஷயம்.

குழந்தைப் பருவத்தில் இருந்தே இச்சமூகம் ஆண் மற்றும் பெண்களுக்கான பங்கைக் கட்டமைக்கத் தொடங்குகிறது. ஆண் குழந்தைகளுக்கும், பெண் குழந்தைகளுக்கும் கொடுக்கப்படும் வாய்ப்புகளில் மிகப்பெரிய அளவில் வேறுபாட்டைக் காண முடியும். உணவு, படிப்பு, விளையாட்டு, பொழுதுபோக்கு, திறன் வெளிப்பாடு என எல்லா விஷயங்களிலும் வேறுபாட்டைக் கண்கூடாகக் காணமுடியும். வீடுகளில், வேலைகளைப் பகிர்ந்தளிப்பதிலும் வேறுபாடுகளைக் காணலாம். சமூக நிறுவனங்களும் (பள்ளிக்கூடங்கள், குடும்பம், மதக் கோட்பாடுகள், ஊடகங்கள், சமுதாயம் சார்ந்த அமைப்புகள் போன்றவை), பெண்கள் ஆண்களுக்குக் கீழானவர்கள் என்பதை வலியுறுத்துகின்றன. யாரும் உங்க அப்பா என்ன சமையல் செய்தார் என்று கேள்வி கேட்பதில்லை. காரணம் சமையல் என்றாலே பெண்கள் சார்ந்த விஷயம் என்ற மனப்பாங்கு அனைவரிடத்திலும் இருக்கிறது. குழந்தைப் பருவத்திலிருந்தே ஆண் குழந்தைகள், பெண் குழந்தைகளைவிட அதிகாரம் மிக்கவர்கள் என்ற எண்ணத்துடன் வளரத் தொடங்குவதால், பெண்களைத் துன்புறுத்தத் தொடங்குகிறார்கள். இத்துடன் சாதி, மதம், பொருளாதார நிலை மற்றும் மேலே சொல்லப்பட்ட காரணங்களும் அதிகாரத்தை அதிகப்படுத்துகிறது. இந்த அதிகாரச் சமமின்மையைச் சரி செய்யாதவரை, துன்புறுத்தல்கள் நடப்பது தொடர்கதையாகவே இருக்கும்.

இதைத் தடுக்க நீண்டகாலத் திட்டம் தேவை. தடுப்பு நடவடிக்கைகள், குழந்தைப் பருவத்திலிருந்து தொடங்கப்பட வேண்டும். தற்போதுள்ள குழந்தைகளிடத்தில், நாம் இந்த அதிகாரச் சமமின்மையைப் போக்க, அங்கன்வாடி மற்றும் பள்ளிகளில் பாடத்திட்டத்துடன் கூடிய பயிற்சி கொடுத்தால், அடுத்த பதினைந்து அல்லது இருபது ஆண்டுகளில் இதுபோன்ற துன்புறுத்தல்கள் பெருமளவில் குறையும்.

இரண்டாவதாக, எல்லா பாலியல் துன்புறுத்தல்களும் மிகவும் திட்டமிடப்பட்டு நடத்தப்படுபவை. திடீரென்று நடப்பவை அல்ல. விதிவிலக்காக சில நிகழ்வுகள் மட்டுமே சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலையின் அடிப்படையில் நடைபெறும். குடிபோதையில் செய்து விட்டார்; குழந்தைகள் அணிந்திருந்த ஆடை உணர்வுகளைத் தூண்டி விட்டது; தனிமையாக இருந்ததால் நடந்துவிட்டது போன்ற அரைவேக்காட்டுத்தனமான நியதிகள் கற்பிக்கப்படுகின்றன. இது முற்றிலும் தவறு.

இதுபோல் குழந்தைகளை பாலியல்ரீதியாகத் துன்புறுத்துபவர்களில், 90 சதவீதத்திற்கு மேல் குழந்தைக்கு நன்கு அறிமுகமான நபர்களாகவே இருக்கிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன. குழந்தைகளைத் துன்புறுத்துபவர்கள், முதலாவதாக குழந்தையின் அபிமானத்தையும் அன்பையும் பெறுவதற்காக குழந்தைக்குப் பிடித்த விஷயங்களைச் செய்வார்கள். தின்பண்டங்கள் வாங்கித் தருவது, விளையாடுவது, கதைகள் சொல்வது, பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுப்பது போன்ற விஷயங்களைச் செய்வார்கள். இதனால் குழந்தையின் நம்பிக்கையைப் பெற்றுவிடுவார்கள்.

அடுத்த கட்டமாக, குழந்தைக்கு ரகசியத்தைப் பாதுகாக்கப் பழக்குவார்கள். உதாரணமாக ஐஸ்க்ரீம் / குழந்தைக்குப் பிடித்த ஏதேனும் பொருளை வாங்கிக் கொடுத்துவிட்டு, ‘வீட்டில் சொல்லாதே: பெற்றோர் திட்டுவாங்க’ என்று கூறுவார்கள். பெற்றோரிடம் கூறிவிட்டது என்றால், அந்தக் குழந்தையை விட்டுவிட்டு வேறு குழந்தைகளைத் துன்புறுத்தத் திட்டமிடுவார்கள். குழந்தை ரகசியத்தைக் காக்கிறது என்றால் துன்புறுத்த ஆரம்பிப்பார்கள். இதுபோல் செய்பவர்கள் ஏதோ ஒரு குழந்தையிடம் மட்டும்தான் செய்கிறார்கள் என்று தவறாகக் கருதக்கூடாது. அனைத்துக் குழந்தைகளிடமும் இப்படித்தான் செய்வார்கள். இவர்களைப் பெற்றோர்கள் அடையாளப்படுத்தாவிட்டால், மற்ற குழந்தைகளிடம் தங்கள் கைவரிசையைக் காட்டத் தொடங்குவார்கள்.

ஆகவே பெற்றோர்கள் குழந்தைகளிடம் தொடர்ந்து உரையாடுவது, எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள ஊக்குவிப்பது அவசியம். பெற்றோரிடம் சொல்கிறது என்று தெரிந்தாலே, அந்தக் குழந்தையை விட்டு விலகி விடுவார்கள். பெரும்பாலான நிகழ்வுகளில் பெற்றோர், வெளியில் தெரிந்தால் குடும்பத்திற்கு அவமானம், குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று எண்ணி மறைத்து விடுகிறார்கள். நிகழ்வுகளை மறைக்கும்போது அவர்கள் வேறு குழந்தைகளைத் துன்புறுத்தத் தொடங்குவார்கள். துன்புறுத்துபவர்களை அடையாளம் காட்டினால் மட்டுமே, மற்ற குழந்தைகளைப் பாதுகாக்க முடியும். இது குழந்தையின் தவறல்ல. ஆகவே, அதன் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று பெற்றோர்கள் கருத வேண்டிய அவசியம் இல்லை.

மூன்றாவதாக, எது பாலியல் துன்புறுத்தல் என்ற புரிதல் பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் முழுமையாக இல்லை. வெளிவரும் செய்திகள், பெரும்பாலும் வன்புணர்வு செய்யப்பட்ட குழந்தைகள் பற்றியே இருக்கிறது. ஒரு குழந்தையைத் தொடாமலேயே பாலியல்ரீதியாகத் துன்புறுத்த முடியும் என்ற புரிதல் பெரும்பாலானருக்கு இல்லை. உதாரணமாக, தவறான செய்கை, ஒலி, பொருட்களைக் காட்டுதல், மறைவான பாகங்களைக் காட்டச் சொல்லுதல் அல்லது காட்டுவது, குழந்தைகள் உடை மாற்றும் பொழுது / குளிக்கும் பொழுது மறைந்து நின்று பார்த்தல், ஆபாசப் படங்கள் காட்டுதல், ஆபாசக் கதைகள் சொல்லுதல், ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்புதல், வாட்ஸ் அப் போன்றவற்றில் தவறான செய்திகள் / படங்கள் அனுப்புதல் இதுபோன்ற செயல்கள் அனைத்துமே குழந்தையைத் தொடாமலேயே பாலியல்ரீதியாக துன்புறுத்துதல் ஆகும். கட்டிப்பிடிப்பது, முத்தமிடுதல் மறைவான பாகங்களைத் தொடுதல், மறைவான பாகங்களை தொடச் சொல்லுதல் போன்ற குழந்தைகளைத் தொட்டுத் துன்புறுத்துவதும் நடக்கிறது. ஆனால் இவையெல்லாம் புகார்களாகச் சொல்லப்படுவதில்லை. குடும்பத்திற்குக் கெட்ட பெயர் என்று பெற்றோர்கள் மறைக்கும் நிலை தொடர்கிறது.

குழந்தைகளைப் பாலியல் துன்புறுத்தலிருந்துத் தடுக்க குழந்தைகளுக்கு நல்ல தொடுதல் (Good touch) மற்றும் கெட்ட தொடுதல் (bad touch) அல்லது பாதுகாப்பான தொடுதல் (safe touch) மற்றும் பாதுகாப்பற்ற தொடுதல் (unsafe touch) குறித்துச் சொல்லப்படுகிறது. மாறாக, தொட வேண்டிய அவசியமில்லை (Don’t touch) என்பதைக் குழந்தைகளுக்கும் புரிய வைக்க வேண்டும். ஒரு குழந்தையை காரணமின்றித் தொட வேண்டியதில்லை. உதாரணமாக, கைகுலுக்கித்தான் பாராட்ட வேண்டும் என்பது இல்லை. கரவொலி எழுப்பித் தொடாமலேயே பாராட்ட முடியும். மேலும் குழந்தைகளின் நான்கு தனிப்பட்ட உறுப்புகளை – முகம், மார்பு, கால்களுக்கிடையில் மற்றும் பின்பக்கம் யாரும் தொடக் கூடாது என்பதைத் தெளிவாக அவர்களுக்குச் சொல்ல வேண்டும். அப்படி யாராவது முயற்சித்தால் No-Go-Tell என்ற வழிமுறையைப் பின்பற்றப் பயிற்சியளிக்க வேண்டும். தொட வேண்டாம் (No) என்று கத்த வேண்டும்; உடனடியாக அந்த இடத்தை விட்டு அகல வேண்டும் (Go); பின்னர், நம்பிக்கையானவரிடம் சொல்லி (Tell) உதவி பெற வேண்டும் அல்லது 1098 க்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்; தவறாக நடக்க முயன்றவர் குறித்து அனைவரிடமும் சொல்லி அடையாளப்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு இதைக் குறித்து சமூகம் மற்றும் பள்ளிகளில் தொடர்ந்து விழிப்புணர்வும், பயிற்சியும் (mock drill) கொடுக்க வேண்டும்.

நான்காவதாக, தற்போதுள்ள குழந்தைகளைப் பாலியல் குற்றங்கள் இருந்து பாதுகாக்கப் போடப்பட்டச் சட்டம் (POSCO Act 2012) மிகவும் கடுமையான சட்டம். ஆனால் சட்டம் செயல்படுத்தப்படும் விதம் மிகவும் வருத்தத்திற்குரியது. தொடாமல் துன்புறுத்துவது மற்றும் தொட்டுத் துன்புறுத்துவது இரண்டும் தண்டனைக்குரியக் குற்றங்களாக இருந்தாலும், பொதுவாக புகார்கள் கொடுக்கப்படுவதில்லை. ஒருவேளை புகார் கொடுக்க முன் வந்தாலும், இந்த வழக்குகள் அனைத்தும் உள்ளூரிலேயே கட்டப்பஞ்சாயத்து மூலம் பேசி முடிக்கப்படும்; அல்லது காவல்துறையின் உதவியுடன் பேசி முடிக்கப்படும். வன்புணர்வு செய்த வழக்குகளைக் கூடப் பதியாமல் அலைக்கழிப்பது நிதர்சனமான உண்மை.

காவல்துறையினரை குறை சொல்வதற்காகக் கூறவில்லை. ஆனால் எதார்த்த நிலையைச் சொல்லவில்லையென்றால் இதைச் சரி செய்ய இயலாது. பாலுறவு அல்லது வன்புணர்வு வழக்குகளில், வழக்கைப் பதிவு செய்யாமல், பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தினரை / குழந்தைகளை மிரட்டுவது, உதவிக்குச் செல்லும் உறவினர்கள், தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனப் பணியாளர்களை மிரட்டுவது, வழக்குப் பதிவு செய்தாலும் மேல் நடவடிக்கை எடுக்காதது, உரிய நேரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதது என பலப் பிரச்சினைகள் இருக்கின்றன. விதிவிலக்காக, ஒரு சில நல்ல அதிகாரிகள் மட்டுமே வழக்கை முறையாகப் பதிவு செய்து நடத்துகிறார்கள்.

இதையெல்லாம் மீறி வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தால் அரசு வழக்கறிஞர்கள் வழக்கைத் தாமதப்படுத்துவது நடைபெறுகிறது. சட்டங்களால் மட்டும் குற்றங்களைக் குறைக்க முடியாது என்பது வரலாற்று உண்மை. ஆனால் குற்றம் செய்தால் விரைவாக தண்டனை கிடைக்கும் என்ற நிலை, குற்றமிழைப்பவரை சற்று சிந்திக்க தூண்டும். விரைவான தீர்வு காண, குழந்தையின் சாட்சியத்தைப் பதிவு செய்வதற்கான கால அளவு 30 நாட்களுக்குள் என்றும் விசாரணை ஓராண்டுக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்றும் சட்டத்தில் பிரிவு 35- ல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் இது செயல்படுத்தப்படவில்லை. இந்த வழக்குகளை விசாரிப்பதற்கு வழிகாட்டுதல்கள் 18-03-2015 அன்று அரசால் வெளியிடப்பட்டுள்ளது. இப்படி ஒரு வழிகாட்டுதல் இருப்பது பெரும்பாலானோருக்குத் தெரியாது.

ஆகவே, சட்டத்தைச் செயல்படுத்துவதில் சம்பந்தப்பட்ட காவல்துறை, மருத்துவப் பணியாளர்கள், குழந்தைகள் நலக்குழு, சைல்டு லைன், தொண்டு நிறுவனங்கள் மற்றும் சம்பந்தப்பட்டத் துறைகளுக்கு விழிப்புணர்வுப் பயிற்சிகள் கொடுக்க வேண்டியது அவசியம். மேலும் உடனடியாகப் புகார்களைப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க மறுக்கும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வழிவகை செய்ய வேண்டும். போக்சோ சட்டத்தின்படி, விரைவாக தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தச் சட்டம் செயல்படுத்தப்படுவதைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பில் உள்ள மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அதன் பணிகளை முழுமையாகச் செய்யவில்லை. அதற்கான உட்கட்டமைப்பு வசதிகளும் நிதி ஒதுக்கீடும் இல்லை. மாநிலத் குழந்தை உரிமைகள் ஆணையம் போதிய நிதி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளுடன் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் ஆணையமாக மாற வேண்டும்; கண்காணிக்கும் பணிகளைத் தீவிரமாகச் செய்ய வேண்டும்.

இறுதியாக, தற்போது தனிக் குடும்பங்களாக உள்ள நிலையில், தன் குடும்பம் மற்றும் குழந்தைகளைப் பற்றி மட்டுமே யோசிக்கிறார்கள். மற்றவர்களின் குழந்தைகள் மீதான அக்கறையும் பரிவும் இல்லாத ஒரு சூழல் நிலவுகிறது. தனது குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பி விட்டு மற்றவர்கள் குழந்தையை வேலைக்கு வைக்கும் போக்குப் பல இடங்களில் தொடர்கிறது. இந்த எண்ணத்தில் மாற்றத்தை உருவாக்க வேண்டும். குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதில் சமுதாயத்திற்கு மிகப் பெரும் பங்கு இருக்கிறது.

ஆதரவற்ற குழந்தைகளை அல்லது பெற்றோர் பராமரிப்பற்ற குழந்தைகளைப் பாதுகாக்கும் பொறுப்பும் கடமையும் அச்சமூகத்தைச் சேர்ந்ததாகும். குழந்தைகள் பாதுகாப்பு என்பது சமூகத்தின் கூட்டுப்பொறுப்பு என்ற நிலையை உருவாக்க வேண்டும். ஒரு சமூகம் நினைத்தால், சட்டம் தர முடியாத பாதுகாப்பையும், வசதிகளையும் குழந்தைகளுக்குத் தர முடியும். தொடர்ச்சியான விழிப்புணர்வுகள், குழந்தை நேய கிராமத் திட்டமிடல், செயலாக்கத்தில் பங்களிப்பு என்று பல்வேறு வகைகளில் சமூகம் பங்கேற்க முடியும். மேலும் பொதுவாக பாதிப்புக்குள்ளாகும் விழிப்புணர்வு கொடுப்பது பெண் வழக்கத்தில் உள்ளது. அத்துடன் ஆண்களுக்கும் தொடர்ச்சியாக விழிப்புணர்வைக் கொடுப்பதன் மூலம் பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதில் அவர்களுக்குள்ள கடமையை உணரச் செய்ய முடியும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் அனைத்து விதமான துன்புறுத்தல்களையும், திட்டமிடுதல் மற்றும் பொருத்தமான செயல்பாடுகளைச் செய்வதன் மூலம் தடுக்க முடியும். குழந்தைகளின் பாலியல்ரீதியான துன்புறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால், பாலியல் துன்புறுத்தல் இல்லாத கிராமங்களையும், நகரங்களையும் உருவாக்க இலக்கு வைத்துச் செயல்பட வேண்டும். சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு அனைவரும் சமம் என்ற புரிதலை ஏற்படுத்துதல், பாலியல் துன்புறுத்தல் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துதல், சட்டங்களை தீவிரமாகச் செயல்படுத்துதல் மற்றும் கண்காணித்தல் போன்ற செயல்பாடுகளை, குழந்தை, சமூகம், பஞ்சாயத்து அமைப்புகள், சமுதாயம் சார்ந்த அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து அரசு செயல்படுத்தினால், பூஜ்ஜிய சகிப்புத் தன்மையை (Zero Tolerance) உருவாக்கி பாலியல் துன்புறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். இது அரசின் கடமை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

கட்டுரையாளர்: முனைவர். ப. பாலமுருகன்,

மனித உரிமைச் செயற்பாட்டாளர்,

தொடர்புக்கு: balaviji2003@gmail.com.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

6 hours ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

21 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

24 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்