எழுத்து படிப்புன்னு யோசிச்சா முதல்ல நியாபகத்துக்கு வர்றது மூணு வயசுல எங்கூரு புள்ளாரு கோயிலுக்கு -அதாவது பிள்ளையாரு கோயிலுக்குப் போனதுதான். அங்கே பூஜை பண்ற பண்டார அய்யாதான் முதன் முதலா எனக்கு வாத்தியாரா இருந்தாரு.
கோயிலுக்கு பக்கத்துல வண்டித்தடம் ஒண்ணு. அதுல புழுதி மண்ணு ஏகத்துக்கும் இருக்கும். அதெ ரெண்டு கையில நெறையா அள்ளீட்டு வந்து கோயில் திண்ணையில சம்மணம் போட்டு உக்கார்ந்து முன்னால அந்த மண்ணை குவிச்சு, கையில சதுரமா பரப்பிவிட்டு, ஆள்காட்டி விரலை அந்த மண்ணுல பதிய வச்சு ‘அ’ன்னா, ‘ஆ’வன்னா எழுதிப் பழகினோம்.
அதுக்கப்புறம் சில மாதம் பக்கத்தூரு கலங்கல் மாரியம்மன் கோயில் திண்ணையில ‘சொண்ணாங்கை’ (இடது கை பழக்கமுள்ளவர்) வாத்தியாருகிட்ட படிச்சோம். ‘கோசாணத்துல’ தொங்கற அனுபவம் எல்லாம் அங்கேதான். அதுக்கப்புறம் கலங்கல் ஊருக்கு நடுவால ஒரு மொட்டைக் கல் மண்டபம். அது இன்னும் இருக்கு. அது பள்ளிக்கூடமா மாறிச்சு. இல்லையில்லை, நாங்கதான் அதை பள்ளிக்கூடமா மாத்தினோம்.
பள்ளிக்கூடம் போற வழியில மாடு சாணம் போட்டிருக்கும். அப்பத்தான் போட்ட சாணம்னா அதுல ஆவி கூட வரும். அப்படியே அந்த சாணத்தை கூடையில அள்ளீட்டுப் போயி சட்டியில போட்டு தண்ணி ஊத்தி நல்லா கரைச்சு மண்டபத்தோட தரைப் பகுதியில ஊத்தி நாங்களே மொழுகி உடுவோம். போறவங்க, வர்றவங்க வேடிக்கை பார்க்கக் கூடாதுங்கிறதுக்காக மூங்கில் தட்டியை மூணடிக்கு சுத்தியிலும் அடிச்சு பரம்பைப் பாய் வச்சு அதை மறைச்சிருப்போம்.
நாடு சுதந்திரம் அடைஞ்சதுக்கப்புறமா, ‘வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர் ’ - பாட்டு, புத்தகத்தை தொறந்ததும் பொதுவா இடது பக்கத்துல இருக்கும். நாங்க படிச்சது வெள்ளைக்காரன் காலம். அதுல, ‘வாழ்க வாழ்கவே நமது மன்னர் வாழ்கவே. ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் வாழ்கவே!’ன்னுதான் பாட்டு இருக்கும். ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் ராஜா உடையோட இடுப்புல நீண்ட வாளை சொருகிட்டு நிக்கிற மாதிரி படம் அதுல அச்சாகியிருக்கும்.
கல்யாணசாமி நாயுடுதான் அந்த கல்மண்டபத்துல எங்களுக்கு வாத்தியாரு. ஆறடி உயரம் இருப்பாரு. குடுமி. கூர்மையான மூக்கு. லேசா திக்கித் திக்கிப் பேசுவாரு. திருச்சியில இண்டர்மீடியட் படிக்கிறப்ப கணக்குல நூத்துக்கு நூறு வாங்கினவராம். காந்தியவாதி. முழுக்கை கதர் சர்ட்டுதான் போட்டுக்குவாரு. கதர் வேட்டிதான் கட்டுவாரு. ஒண்ணாம் வாய்ப்பாடு முதல் பதினாறாம் வாய்ப்பாடு வரைக்கும் எல்லோரும்..., நீங்க எல்லாம் படிச்சிருப்பீங்க. ஆனா நாங்க. அரை வாய்ப்பாடு, கால் வாய்ப்பாடு, அரைக்கால் வாய்ப்பாடு, வீசம் வாய்ப்பாடு எல்லாம் நாலாம் வகுப்புக்குள்ளாறயே மனப்பாடம் பண்ணி வச்சிருந்தோம்.
‘காலரைக்கா காசுக்கு நாலரைக்கா கத்திரிக்காய்; ஒரு காசுக்கு எத்தனை கத்திரிக்கா?’ அதாவது, ‘கால் அரைக்கால் காசுக்கு நால் அரைக்கால் கத்திரிக்காய். ஒரு காசுக்கு எத்தனை கத்திரிக்காய்?’ன்னு வாத்தியார் கேட்டவுடனே அடுத்த அஞ்சு செகண்ட்ல கணக்குப் போட்டு எழுதி சிலேட்டை கீழே வைக்கணும். இல்லைன்னா அந்த கொண்டைப் பிரம்பு தலைக்கு மேல பிச்சுட்டுப் போயிடும்.
திடீர்னு ஒரு நாள், ‘பள்ளிக்கூடம் விட்டதும் எல்லாப் பசங்களும் சங்கத்துக்கு வாங்கடா!’ன்னு சொன்னாங்க. ஊருக்கு நடுவால ஒரு குட்டி மைதானம். அதுல ஒரு கம்பம் நட்டியிருந்துச்சு. வாத்தியார் வந்து கம்பத்துல கட்டியிருந்த ரெண்டு கயிறை புடிச்சு இழுத்தாரு. ஒரு கலர்த்துணி மூட்டை மேல போயி ‘படார்’னு விரிஞ்சு காத்துல பறந்துச்சு. ஆரஞ்சு, வெள்ளை, பச்சை நிறக் கொடி. நடுவுல ஒரு சக்கரம். அதுதான் தேசியக் கொடி. முதன் முதலா பார்க்கிறோம்.
எல்லோரும் கை தட்டினோம். நாடு சுதந்திரமடைஞ்சுருச்சுன்னு வாத்தியாரு சொன்னாரு. ஒண்ணும் புரியலை. எல்லோருக்கும் ஆளாளுக்கு ரெண்டு ஆரஞ்சு முட்டாய் கொடுத்தாங்க. அதுவரைக்கும் கருப்பட்டி மட்டும்தான் சாப்பிட்டு பழக்கப்பட்ட எனக்கு இந்த ஆரஞ்சு முட்டாயி, ஆரஞ்சு சுளை மாதிரியே பார்க்க அழகாவும் இருந்துச்சு. சாப்பிடறப்ப ருசியாவும் இருந்துச்சு.
சங்கக் கட்டிடத்துக்குள்ளே போர்வை போர்த்தின மொட்டைத் தலை காந்திபடம். ஒரு பக்கம் மிலிட்டரி யூனிபார்ம்ல சுபாஷ் சந்திரபோஸ் நிக்கிற படம். இன்னொரு பக்கம் ‘வெய்ஸ்ட்’ கோட் போட்டு முழுக்கை ஜிப்பா போட்டுகிட்டு தலையில தொப்பியோட நேரு நிக்கிற படம். இது மூணையும் கண்ணாடி போட்டு அங்கெ வச்சிருந்தாங்க. வாத்தியார்தான் அந்தப் படத்தை காட்டி இது யாரு, இது யாருன்னு விளக்கிச் சொன்னாரு. நம்ம நாட்டு தலைவர்கள் படத்தை முதன்முதலா அப்பத்தான் நான் பார்த்தேன். நாலாவது வருஷம் கலங்கல்ல முடிச்சுட்டு சூலூர்ல ‘கவர்ன்மென்ட்’ பள்ளிக்கூடத்துல போயி சேரணும்.
அதுவரைக்கும் பிரைவேட் பள்ளிக்கூடம்ங்கிறதால வாத்தியாரு ஒண்ணாங் கிளாசுக்கு ஒருப்ரூபாய், ரெண்டாங் கிளாசுக்கு ரெண்டு ரூபாய், மூணாங் கிளாசுக்கு மூணு ரூபாய், நாலாங்கிளாசுக்கு நாலு ரூபாய்னு சம்பளம் வாங்கினாரு. கடைசி வருஷம். அப்ப எனக்கு ஏழெட்டு வயசு இருக்கும். வாத்தியாரு மகன் உத்தமன்.
அதாவது அவரோட ரெண்டாவது மகன் உத்தமனுக்கும் அதே வயசுதான் இருக்கும். ரெண்டு பேரும் ஒரே வகுப்புலதான் படிச்சோம்.
ஒரு நாள் மத்தியான சாப்பாட்டுக்கு ‘பெல்’ அடிச்சதும் நாலு பர்லாங் தூரத்துல இருக்கிற எங்கூருக்கு புறப்பட்டுப் போனேன். அமாவாசை நாளுங்கிறதுனால படையல் பண்ணி, பூஜை முடிச்சட்டு அம்மா சாப்பாடு பரிமாறிட்டு இருந்தாங்க. ஒரு மணி நேரத்துல சாப்பிட்டுட்டு பள்ளிக்கூடத்துக்கு வந்தா வாத்தியார் வீட்டு வாசல்ல ஒரே கூட்டம். முண்டியடிச்சு உள்ளே போய்ப் பார்த்தா உத்தமன் படுத்திருந்தான். தூங்கீட்டிருந்தானா? இல்லை, செத்துப் போயிட்டான்.
சாவுன்னா என்னன்னு நாலு வயசுலயே எங்கண்ணனை ‘பிளேக்’குல பறிகொடுத்திருந்த எனக்கு ஓரளவுக்குப் புரியும். உத்தமனைப் பார்த்ததும் ‘திக்’குனு ஆயிருச்சு. எப்படி? ஒரு மணி நேரத்துக்குள்ளே இப்படி?
கிராமப்புறங்கள்ல காடுகரையில பருத்தி வெளைஞ்சதும் விடியற்காலை பனிப்பதத்துல பருத்தி எடுத்துடுவாங்க. அதாவது செடியில காம்புப்பகுதியிலிருந்து பருத்தியைப் பிரிச்சு எடுத்துடறது. வீட்டுக்கு கொண்டாந்து காத்து போகாத பத்தடிக்கு பத்தடி அறைக்குள்ளே போட்டு ரெண்டு பேரு ஏறி மிதிப்பாங்க. நாலடி உயரம், பத்தடி சதுரத்துக்கு இருக்கிற பருத்தியக் கொட்டி ரெண்டு பேரு ஏறி மிதிச்சா, அது ரெண்டடிக்கு அமுங்கிடும். ஆறடி உயரத்துக்கு பரவலா பருத்தியக் கொட்டி ரெண்டு பேரு மிதிச்சா அது இறுகி மூணடி உயரமா குறைஞ்சிரும். இப்படி மிதிச்சு மிதிச்சு எட்டடிக்கு இறுக்கமா பருத்தி போடறதுக்கு பேரு ‘அம்பாரம்’.
மத்தியான சாப்பாட்டு நேரம். கண்ணாமூச்சி விளையாட முடிவு பண்ணினான் உத்தமன். முந்தின நாளே அந்த எட்டடி அம்பாரத்து மேல ஏறி தாவிப் பாய்ஞ்சு பத்தடிக்கு பத்தடி சதுரத்தின் நடுவால பெருச்சாளி வங்கு பறிக்கிற மாதிரி பருத்தியக் கொஞ்ச கொஞ்சமா புடுங்கிப் புடுங்கி ஒரு ஆளு உள்ளே ஒளிஞ்சுக்கிற அளவு ஓட்டை பண்ணீட்டான். இப்ப ‘ஜூட்’டுனு ஒருத்தன் சொன்னவுடனே யாருக்கும் தெரியாம ஓடி வந்து அம்பாரத்துக்கு மேல பாய்ஞ்சு ஏறி அந்தக் குழிக்குள்ளே குதிச்சான். ஏற்கனவே பருத்தி இறுக்கமா இருந்ததனால ‘கப்’புனு மேல் பக்கம் மூடிடுச்சு. ரெண்டு நிமிஷத்துல மூச்சு முட்டி அம்பாரத்துக்குள்ளேயே உத்தமன் உயிரை உட்டுட்டான். ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி உயிரோட விளையாடின உத்தமன் உயிரோட, இப்ப எமன் விளையாடீட்டான். இப்ப நினைச்சாலும் நெஞ்சடைச்சுக்குது...
சுவைக்கலாம்...
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago