’சோ’ அறிமுகமாகி 57 ஆண்டுகள்; ’மெட்ராஸ் பாஷை’யில் அசத்திய முதல் படம்!   

By வி. ராம்ஜி

பல முகங்கள் உண்டு என்று சிலரைச் சொல்லுவோம். எல்லாத்துறைகளிலும் பேரும்புகழும் பெறுவது சாதாரணமல்ல. அப்படி எடுத்த பேரையும் புகழையும் கட்டிக்காப்பதும் அசாதாரணமானதுதான். இப்படிப் பலதுறைகளிலும் கால்பதித்து, தன் திறமையால் மிகப்பெரிய புகழைப் பெற்றவர்களில் முக்கியமானவர்... சோ.
வக்கீலுக்குப் படித்தார். வக்கீலாக வாதாடினார். பல முன்னணி நிறுவனங்களுக்கு சட்ட ஆலோசகராத் திகழ்ந்தார். ஆனால் எழுத்து சரளமாக வரவே, நாடகத்தின் பக்கம் ஈர்ப்பாகவே, நாடகத்துறையில் இறங்கினார். மேடையேறினார். ஒருபக்கம், வக்கீல், இன்னொரு பக்கம் நாடகம் என்று பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தவருக்கு இன்னொரு வாய்ப்பும் வந்தது. அது... சினிமாத் துறை. சொல்லப்போனால், இந்த மூன்றாவது துறைதான் அவரை மொத்தத் தமிழகத்துக்கும் முதன்மையாகக் கொண்டுசேர்த்த துறையாக அமைந்தது.

சினிமாவுக்குள் நடிகராக அறிமுகமானார். அடுத்தடுத்து பல படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர், சினிமாவுக்கு கதை எழுதினார். வசனம் எழுதினார். நாடகத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘முகமது பின் துக்ளக்’ திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. பிரமாண்ட வெற்றியையும் பெற்றது.

எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, முத்துராமன் என பலருடனும் நாயகனின் தோழனாக, நகைச்சுவை நடிகனாக ஏகப்பட்ட படங்களில் நடித்தார். அடுத்து, ரஜினி, கமல் படங்கள் வரை நடித்தார். முட்டைக்கண்ணும் வத்தலான உடலமைப்பும் அப்பாவித்தனத்தை அச்சுஅசலாகக் காட்டுவதற்கு உதவின. சோ - வின் டைமிங் வசனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ரசிக்கப்பட்டன. காதல் காட்சியில் பேசுகிற வசனத்திலும் அரசியலை ஏகடியம் செய்தார். இன்னும் கரவொலி எகிறியது.

’முகமது பின் துக்ளக்’கின் வெற்றியும் படங்களில் சின்னச்சின்னதாக வைத்த அரசியல் நையாண்டிச் சரவெடியும் இவரை அடுத்தக் கட்டத்துக்கு அழைத்துச் சென்றன. ‘துக்ளக்’ எனும் பத்திரிகையைத் தொடங்கினார். முழுக்க முழுக்க அரசியலை கேலியும் கிண்டலும் செய்தார். நிறுவனங்களுக்கு சட்ட ஆலோசகராகத் திகழ்ந்தவர், பின்னாளில் அரசியல் ஆலோசகராகவுமானார். ‘சோ’ எனும் ஒற்றையெழுத்து, டெல்லி வரை பறந்தது. தெரிந்தது.

நாடகத்துறை தொடங்கி அரசியல் ஆலோசகர் எனும் நிலை வரைக்குமான சோ வின் வாழ்க்கை, ஆளுமையின் வெளிப்பாடாகவே அமைந்தது. இத்தனை புகழ் வெளிச்சத்துக்கும் காரணம்... அவரின் சினிமாப் பிரவேசம். அதற்கு அச்சாரம் போட்டது... ‘பார் மகளே பார்’.

1963ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி வெளியானது ‘பார் மகளே பார்’. சிவாஜி, செளகார் ஜானகி, எம்.ஆர்.ராதா, முத்துராமன், விஜயகுமாரி, புஷ்பலதா, ஏ.கருணாநிதி, மனோரமா முதலானோர் நடித்த இந்தப் படத்தில்தான் சோ அறிமுகமானார். டைட்டிலில் ‘புதுமுகம் - சோ’ என்று போடப்பட்டது. ஏ.பீம்சிங் இயக்கத்தில், ஆரூர்தாஸ் வசனத்தில், வலம்புரி சோமநாதன் திரைக்கதையில் வெளியானது இந்தப் படம்.

கார் மெக்கானிக் கதாபாத்திரம். சிவாஜி வீட்டின் கார் டிரைவர். ஏ.கருணாநிதியின் மகள் மனோரமாவின் முறைமாமன். கார் மெக்கானிக் என்பதால், காட்சிக்குக் காட்சி இவர் பேசும் வசனங்களில், கார் சம்பந்தப்பட்ட பஞ்ச் வசனங்கள் ஒவ்வொரு கியர் போட்டு வந்துகொண்டே இருக்கும். கார், புதுமாடல், பழைய மாடல், கியர், பிரேக், ஆக்ஸிலேட்டர், டிக்கி, மெக்கானிக் ஷாப், ஆக்ஸிடெண்ட், துரு, காயலான் கடை என கார் சம்பந்தப்பட்ட விஷயங்களைச் சொல்லியே சோவின் வசனங்கள் இருந்தன.
இதில் இன்னொரு விஷயம்... சோ பேசிய மெட்ராஸ் பாஷை. படம் முழுக்க சென்னை பாஷையில் வெளுத்து வாங்குவார். ‘இந்த பாஷைப் பேச்சை விடு. எங்களைப் போல சாதாரணமாப் பேசு. அப்பதான் எம்பொண்ணை உனக்குக் கல்யாணம் பண்ணிக்கொடுப்பேன்’ என்று ஏ.கருணாநிதி சொல்லும் அளவுக்கு மெட்ராஸ் பாஷையில் பொளந்துகட்டுவார் சோ.

சிவாஜி படம். ஏ.பீம்சிங் படம். மெல்லிசை மன்னர்கள் இசை. கவியரசர் கண்ணதாசன் பாடல்கள். பாட்டும் ஹிட்டு. படமும் ஹிட்டு. படத்தில் சோ- வின் காமெடியும் ஹிட்டடித்தது. அடுத்தடுத்து படங்கள் வந்தன. வெற்றி பெற்றன. சோ - வும் ஒரு நடிகராக, காமெடியனாக வெற்றிபெற்றார். அதன் பிறகான பல்துறை வளர்ச்சியும் அரசியல் நெருக்கமும் நாம் அறிந்ததுதான்.

இத்தனைக்கும் அஸ்திவாரமாக அமைந்தது... சினிமாப் பிரவேசம். அந்த சினிமாவின் கதவு திறந்தது... ‘பார் மகளே பார்’ படத்தில்!

1963ம் ஆண்டு ஜூலை மாதம் 12ம் தேதி வெளியானது ‘பார் மகளே பார்’. திரைப்படம் வெளியாகி, 57 ஆண்டுகளாகின்றன. அதாவது, சோ எனும் பல்துறை வித்தகர் நடிகராக தமிழ் உலகு மொத்தத்துக்கும் அறிமுகமாகி 57 ஆண்டுகளாகின்றன.

திரையுலகில், நாடகத் துறையில், அரசியல் அரங்கில், ஆன்மிக உலகில்... சோ எப்போதுமே ஆச்சரியக்குறிதான்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

1 day ago

வலைஞர் பக்கம்

1 day ago

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

29 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்