மருந்தகங்களில் குவியும் கூட்டம்; ஹோமியோபதிக்கு திரும்பிவிட்டார்களா மக்கள்?

By கே.கே.மகேஷ்

இந்த பொதுமுடக்க காலத்தில் ஒரு விஷயம் நம் கண்களில் பளிச்சென தென்பட்டிருக்கும். அவை 'மெடிக்கல் ஷாப்' என்று அழைக்கப்படும் மருந்தகங்கள். எல்லாக் கடைகளும் மூடியிருக்க அவை மட்டுமே திறந்திருந்ததும், அங்கே வழக்கத்திற்கு மாறான கூட்டம் இருந்ததுமே இந்தக் கவன ஈர்ப்புக்குக் காரணம். கூடவே, "அட நம்மூரில் இத்தனை ஹோமியோபதி மருந்தகங்கள் இருக்கின்றனவா... இந்த வழியாக எத்தனை முறை போயிருப்போம், கண்ணில் பட்டதில்லையே?" என்ற ஆச்சரியமும் ஏற்பட்டிருக்கும்.

கரோனோ பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள 'ஆர்சனிகம் ஆல்பம் 30 சி' என்ற ஹோமியோபதி மருந்தையும் பயன்படுத்துமாறு அரசே விளம்பரம் செய்ததன் விளைவு இது. இப்போது அலோபதி மருந்துக்கடைகளிலும், பலசரக்குக் கடைகளிலும் ஒரு சில மளிகைக் கடைகளிலும் கூட ஒரு குடும்பத்துக்குத் தேவையான 'ஆர்சனிகம் ஆல்பம் 30 சி' ஹோமியோ மருந்து வெறும் 30 ரூபாய்க்கு கிடைக்கிறது. மக்களும் ஆர்வமாக வாங்கிச் செல்கிறார்கள்.

"ஹோமியோபதி மருத்துவத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்துவிட்டதா... அதன் பக்கம் மக்கள் சாயத் தொடங்கிவிட்டார்களா?" என்று நமக்கு கேள்வி எழ, மதுரை செனாய் நகரைச் சேர்ந்த ஹோமியோ மருத்துவர் கே.முனியராஜாவிடம் பேசினோம்.

"ஜெர்மனியைச் சேர்ந்த அலோபதி மருத்துவரான டாக்டர் சாமுவேல் ஹானிமன், 1796-ல் கண்டறிந்ததுதான் ஹோமியோபதி மருத்துவம். அலோபதி மருத்துவத்தின் பக்க விளைவுகள் குறித்து சங்கடம் கொண்டிருந்த டாக்டர் ஹானிமனுக்கு பெரும் நிம்மதியைத் தந்த மருத்துவமுறை இது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே இந்த சிகிச்சை முறை இந்தியாவுக்கு வந்துவிட்டது. ‘என்னுடைய அகிம்சா தர்மம் ஒருபோதும் தோற்றுப் போகாது. அதே போலத்தான் ஹோமியோபதியும் தோற்காது’ என்று மகாத்மா காந்தி சொல்லியிருக்கிறார். ‘இந்தியா போன்ற ஏழை நாடுகளுக்கு ஹோமியோபதிதான் உகந்தது’ என்று ரவீந்திரநாத் தாகூரும் வழிமொழிந்திருக்கிறார்.

மோதிலால் நேரு, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், பாபு ஜெகஜீவன்ராம் போன்ற பெரிய பெரிய பெரிய தலைவர்கள் எல்லாம் ஹோமியோபதியை முன்மொழிந்திருக்கிறார்கள். ஆனாலும், இது வெகுமக்கள் மருத்துவமாக மாறவில்லை. முதல் காரணம், "இவ்வளவு மலிவான விலையில் எப்படி நல்ல சிகிச்சை தரமுடியும்?" என்ற நம் மக்களின் மனநிலை. அடுத்தது அரசின் போதிய ஆர்வமின்மை.

கரோனா காலத்தில் ஒவ்வொரு நகரத்திலும் லட்சக்கணக்கானோர் 'ஆர்சனிகம் ஆல்பம் 30 சி' மாத்திரையை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். அரசும், தன்னார்வ அமைப்புகளும் கூட மொத்தமாக வாங்கி மக்களுக்கு விநியோகிக்கிறார்கள். அதனைப் பயன்படுத்தியவர்கள் நோய்த் தொற்று ஏற்படாமல் தப்பித்துமிருக்கிறார்கள் அல்லது குறைந்த பாதிப்புடன் மீண்டிருக்கிறார்கள் என்பதை நன்றாகவே உணர முடிகிறது. ஆனால், இதை வைத்துக்கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு வந்துவிட்டது, ஹோமியோபதி பக்கம் வந்துவிட்டார்கள் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். காரணம், எங்களுக்கு இப்படி நிறைய அனுபவம் இருக்கிறது.

1802-ல், 'கார்லட்' காய்ச்சல் ஏற்பட்டு பல நாடுகளில் மக்கள் முகமெல்லாம் அம்மை போல சிவந்து இறந்தார்கள். அப்போது அவர்களைக் காப்பாற்றியது 'மெலடோனா' என்ற ஹோமியோ மருந்துதான். 1930-ல் கொல்கத்தாவில் 'மலேரியா'வால் மக்கள் கொத்துக்கொத்தாகச் செத்தபோது அவர்களைப் பாதுகாத்தது, 'வெரைட்ரம் ஆல்பம்' என்ற ஹோமியோ மருந்து. விவேகானந்தரே அதைப் பாராட்டி, மக்களுக்குப் பரிந்துரைக்கவும் செய்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு 'சிக்குன்குனியா'வும், பிறகு 'டெங்கு'வும் தமிழ்நாட்டில் பலரை முடக்கி, உயிரிழக்க வைத்தபோது கைகொடுக்க வந்தது 'ஆர்சனிகம் ஆல்பம் 30 சி' தான். இப்படி சீசனுக்கு சீசன் மக்கள் ஹோமியோபதி பக்கம் வருகிறார்களே தவிர, முழுமையாக அவர்கள் ஹோமியோபதிக்கு மாறுவதில்லை. ஆனால், கரோனா கொஞ்சம் கூடுதல் விழிப்புணர்வைத் தந்திருப்பது உண்மைதான். இருந்தபோதிலும் எந்த மருத்துவம் தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்கிறதோ அதுதான் மக்களை ஈர்க்கும். எனவே, ஹோமியோபதி மருத்துவத்தை வளர்த்தெடுக்க அரசு தனித் துறையை ஏற்படுத்த வேண்டும், நிறைய மருத்துவர்களை உருவாக்க வேண்டும்" என்றார் முனியராஜா.

"அலோபதி மருந்தகங்களில் விற்கும் ‘ஆர்சனிகம் ஆல்பம் 30 சி’ மருந்தை வாங்கிப் பயன்படுத்தலாமா?" என்று அவரிடம் கேட்டபோது, "தவறில்லை. ஆனால், அதனை எப்படி உட்கொள்ள வேண்டும் என்று அவர்கள் சரியாக விளக்கம் சொல்வதில்லை. உதாரணமாக, இந்த மருந்தைக் காலையில் பல் துலக்கிய 15 நிமிடத்துக்குப் பிறகு வெறும் வயிற்றில், சுவைத்துச் சாப்பிட வேண்டும்.

ஏனென்றால் ஹோமியோ மருந்துகள் நாக்கில் இருந்தே வேலையைத் தொடங்கி விடும். இதை எல்லாம் அவர்கள் சொல்லுவதில்லை. எனவே, ஹோமியோ மருத்துவர், அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஹோமியோ மருந்தகங்களில் மருந்து வாங்குவதுதான் சரியானது. அங்குதான் நியாயமான விலையிலும் போலிகள் இல்லாமலும் மருந்து கிடைக்கும்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

13 hours ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

21 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

24 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்