சுற்றுச்சூழலுக்கு உகந்த தக்கைத் தரை

By நிஷா

ஓடுகளுக்கும் பளிங்குக் கற்களுக்கும் கிரானைட் கற்களுக்கும் சிறந்த மாற்றாக வருங்காலத்தில் தக்கை ஓடுகள் இருக்கக்கூடும். கடற்கரைகளிலும் புல்வெளிகளிலும் நடக்கும்போது நம் பாதங்கள் உணரும் மென்மையை இந்தத் தக்கைத் தரை (Cork flooring) நமக்கு வீட்டிலேயே அளிக்கும். இந்தத் தக்கைத் தரையை நாம் எளிதில் சுத்தப்படுத்த முடியும். இந்த வகை தரை, குறைந்த செலவில் நம் வீட்டுக்கு ஓர் ஆடம்பரத் தோற்றத்தை அளிக்கும்.

சுற்றுச்சூழலுக்கும் உகந்தது

மண்ணின் நிறத்தை ஒத்த அதன் வண்ணமும் அதன் செழிப்பான இழையமைப்பும் நம் பாதங்களுக்கு மட்டும் அல்ல, கண்களுக்கும் குளுமையை அளிக்கக்கூடியது. முக்கியமாக மரப்பட்டைகளிலிருந்து உருவாக்கப்படுவதால், இது இயற்கையானது மட்டுமல்ல; நம் சுற்றுச்சூழலுக்கும் உகந்தது.

தக்கை ஒடுகளை உருவாக்கும் முறை

தக்கையானது ஓக் மரத்தின் உரிக்கப்பட்ட பட்டைகளின் மூலம் உருவாக்கப்படுகிறது. இந்த ஓக் மரமானது 200 வருடங்கள் உயிர் வாழக்கூடியது. தகுந்த இடைவெளிவிட்டு இந்தப் பட்டைகள் உரிக்கப்படுவதால், மரமானது மீண்டும் எளிதில் வளர்ந்துவிடும். எனவே, இந்தத் தக்கை உற்பத்தியானது மரத்துக்கு எந்தத் தீங்கையும் விளைவிப்பதில்லை.

தக்கையால் ஆன தரை ஓடுகளை உருவாக்குவதும் மிக எளிதான ஒரு செயல். ஓக் மரத்திலிருந்து உரிக்கப்பட்ட பட்டைகள் முதலில் காயவைக்கப்படுகின்றன. பின் அவை தண்ணீரில் கொதிக்கவைக்கப்படுகின்றன. அதன் பின் இறுதியாக, தகுந்த வடிவங்களாக அழுத்தப்படுவதன் மூலம் ஓடுகளாக உருவாக்கப்படுகின்றன. இந்த முறையில் அந்தப் பட்டையின் எந்த ஒரு சிறு பகுதியும் வீணாவதில்லை.

தக்கை ஓடுகளை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

தக்கை தரை ஓடுகளைப் பயன்படுத்துவது சுற்றுச்சூழல் நலனுக்கு மிகுந்த நன்மை அளிக்கக்கூடியது, மேலும், அது இயற்கையாகவே நீர் புக வழி அளிக்காத தன்மை கொண்டது. அது தன்னகத்தே சுபிரின் என்னும் மெழுகுப் பொருளைக் கொண்டுள்ளதால், இது குளிர்காலத்தில் வெது வெதுப்பாக இருக்கும். மேலும், வீட்டில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இருந்தனர் என்றால், அவர்களின் பாதங்களில் இருக்கும் ஒவ்வாமைக்கு இதன் மென்மை இதம் அளிப்பதாக இருக்கும்.

முக்கியமாக, தக்கையானது இயற்கையாகவே நெருப்பை எதிர்க்கும் தன்மையைக் கொண்டது. அது ஒலியை எதிரொலிக்காத தன்மையைக் கொண்டிருப்பதால், வீடு மிகவும் அமைதியாக இருக்கும். அது மட்டுமின்றி ஒலியை எதிரொலிக்காத தன்மையால், ஹோம் தியேட்டர் சிஸ்டத்தின் செயல்பாடு சிறப்பாக இருக்கும்.

எளிதில் பதிக்கலாம்

நாம் இந்தத் தக்கையை வீட்டின் வரவேற்பறை, படுக்கையறை, சமையலறை, உடல் பயிற்சியறை, குளியலறை மற்றும் கழிவறைகளில் உபயோகப்படுத்தலாம். இது மடிக்கப்பட்ட, சதுர வடிவிலான, வட்ட வடிவிலான ஓடுகளாகச் சந்தையில் கிடைக்கிறது, இதைக் கல், பளிங்கு மற்றும் கிரானைட் ஓடுகளைப் பதிப்பது போன்று, நாம் வீட்டின் தரையில் பதிக்கலாம்.

இதன் விலையானது சதுர அடிக்கு 100 ரூபாய் முதல் ஆரம்பிக்கிறது. வண்ணம் மற்றும் வடிவத்தைப் பொறுத்து இதன் விலை மாறுபடும். இந்தத் தக்கை ஓடுகளை நாமே தரையில் சுயமாகப் பதித்துக்கொள்ளும் வண்ணம் மிக எளிதாக இருக்கும். வித்தியாசமான பாணி தேவைப்பட்டால் மட்டும் தான் நமக்கு வல்லுநரின் உதவி தேவைப்படும். வீட்டின் தரையானது மேடு பள்ளம் கொண்டு, சீரற்றதாக இருந்தாலும், தக்கையின் நெகிழ்ச்சித் தன்மை காரணமாக, அதை அப்படியே தரையில் எளிதில் பதிக்கலாம்.

நெகிழ்வுத் தன்மை

கண்ணாடிக் குப்பிகளை மூடப் பயன்படுத்தப்படும் தக்கையானது, அதைக் குப்பியில் இருந்த எடுத்த பின், தன் நெகிழ்வுத் தன்மை காரணமாக, மீண்டும் தன் பழைய நிலைக்குத் துள்ளி திரும்புவதை நாம் அனைவரும் கவனித்திருப்போம். அதே போன்று நம் வீட்டிலும், தக்கை கொண்டு அமைக்கப்படும் தரையானது கால் தடங்கள் மற்றும் கனமான வீட்டு மரச் சாமான்கள் மூலம் ஏற்படும் பள்ளங்களில் இருந்து மீண்டு பழைய நிலைக்குத் துள்ளி திரும்பும் தன்மையை கொண்டது.

மேற்பூச்சு வகைகள்

தக்கை தரை ஓடுகள் இரண்டு விதமான மேற்பூச்சுகளில் கிடைக்கின்றன. அவை பாலியுரேத்தினை அடிப்படையாகக் கொண்ட மேற்பூச்சு மற்றும் தண்ணீரை அடிப்படையாகக் கொண்ட மேற்பூச்சு ஆகும். பாலியுரத்தேன் பூச்சு சற்றுக் கடினத் தன்மை கொண்டது, எனவே, இது தரையைச் சற்று நன்றாகப் பாதுகாக்கும். ஆனால், நீரை அடிப்படையாகக் கொண்ட மேற்பூச்சு, நம் சுற்றுச்சூழலுக்கு நன்மையளிக்கக்கூடியது. அதன் மேல் வெளிச்சம் படும்போது தரை தங்க நிறத்தில் ஜொலிக்கும். பாலியுரேத்தினை ஒப்பிடுகையில், நீர் வகையானது சற்று விலை கூடியது.

தக்கை ஓடுகளில் விரிசல் மற்றும் சிராய்வுகள் ஏற்படாது. முறையாக இதைப் பராமரித்தோம் என்றால், 40 ஆண்டுகளுக்குத் தரை பற்றி எந்தக் கவலையும் இன்றி நாம் நிம்மதியாக வாழலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்