ஆன்லைன் வகுப்பு; குழந்தைகள் கண்களைப் பாதுகாத்துக் கொள்ள டாக்டர் தீபா தரும் எளிய பயிற்சிகள்!

By குள.சண்முகசுந்தரம்

கரோனா இன்னும் சிறிது காலத்துக்கு நம்முடனயே நடைபழகிப் பயணிக்கும் என்பதால் தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கான வகுப்புகளை ஆன்லைன் மூலமாக நடத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றன.

ஆன்லைன் வகுப்புகளால் பள்ளிப் பிள்ளைகளுக்கு சிற்சில பிரச்சினைகள் ஏற்படலாம் என பெற்றோர் தரப்பில் ஆட்சேபங்கள் எழுகின்றன. ஆனாலும் இதற்கு வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கும் மத்திய அரசு, ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு வருவதாகவும், ஜூலை 15-ம் தேதிக்குள் அவற்றை வெளியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஆன்லைன் வகுப்புகளுக்குச் செல்லும் குழந்தைகளின் கண்கள் பாதுகாப்பு குறித்தும் அவர்களின் மன இறுக்கத்தைப் போக்குவது குறித்தும் நம்மிடம் விரிவாகப் பேசினார் சென்னையிலுள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் உதவிப் பேராசிரியரும் துறைத் தலைவருமான டாக்டர் தீபா.

“குழந்தைகளின் கைக்கு எந்தவொரு விஷயம் போகக்கூடாது என்று இதுவரை நாம் நினைத்தோமோ அதற்கு நேர்மாறாக நாமே இப்போது நம் பிள்ளைகளின் கையில் செல்போனைக் கொடுத்திருக்கிறோம். அவர்களின் இணைய வழிக் கல்விக்காக. எதிர்காலம் இப்படித்தான் இருக்கப் போகிறது எனத் தெரிவதால் இப்போது நாம் அதற்கேற்ப நம்மைத் தயார்படுத்திக் கொள்ளவும் வேண்டும். அதற்கான முயற்சிகளில் தான் அரசும் இறங்கி இருக்கிறது.

பொதுவாகவே, யாராக இருந்தாலுமே அதிக நேரம் டிவி, கணினி, செல்போன் உள்ளிட்ட இணையத் திரைகளை உற்று நோக்கிக் கொண்டே இருந்தால் கண்களில் எரிச்சல், கண்பார்வை மங்குதல், சரியான தூக்கமின்மை உள்ளிட்ட சிக்கல்களுக்கு ஆளாகலாம். குழந்தைகளும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால், கல்விக்காக இணையத் திரைகளைப் பயன்படுத்துவது இப்போது அத்தியாவசியமான சூழலாக மாறிவருவதால் அதனால் ஏற்படும் தாக்கத்தைச் சமாளிப்பதற்கு இப்போது நாம் நம்மைத் தயார்படுத்திக் கொள்ளவேண்டும்.

இதற்காக மருந்து மாத்திரைகள் எல்லாம் எடுக்கத் தேவையில்லை. முறையான மூச்சுப் பயிற்சியுடன் கண்களுக்கான சில எளிய பயிற்சிகளையும் செய்து வந்தாலே பார்வைக் குறைபாடு உள்ளிட்ட சிக்கல்கள் நம் பிள்ளைகளுக்கு வராமல் பார்த்துக் கொள்ளலாம். கண்களை இடம், வலமாக - மேலும் கீழுமாக சுழற்றி செய்யப்படும் எளிய பயிற்சிகளை எடுத்துக் கொண்ட பிறகு ‘ட்ராட்டகம்’ (TRATAKAM) என்றொரு பயிற்சியிலும் பிள்ளைகளை ஈடுபடுத்த வேண்டும்.

யோகிக் கிரிய முறை என்று சொல்லப்படும் ‘ட்ராட்டகம்’ பயிற்சியானது பிள்ளைகளின் மனதை ஒருநிலைப்படுத்தி அவர்களின் ஞாபக சக்தி மற்றும் கவனித்தல் திறனை அதிகரிக்கும். இந்தப் பயிற்சியானது ஆன்லைன் படிப்பில் இருக்கும் பிள்ளைகளுக்கு மனச் சோர்வு ஏற்படாத வகையிலும் கண் பிரச்சினைகள் ஏற்படாமலும் பார்த்துக் கொள்ளும்.

எப்படி இந்தப் பயிற்சியை செய்வது?

இருட்டான ஒரு அறைக்குள் ஒரு சிறு நாற்காலியைப் போட்டு அதன் மீது விளக்கொன்றை ஏற்றி வைத்துவிட வேண்டும். அதன் எதிரே அரை மீட்டர் தொலையில் இலகு ஆசனத்தில் மாணவரை உட்காரவைக்க வேண்டும். மாணவர் தனது கவனத்தை வேறெங்கும் சிதறவிடாமல் அந்த விளக்கின் ஜூவாலையை மட்டும் உற்றுநோக்க வேண்டும்.

சுமார் 5 முதல் 10 நிமிடங்கள் வரை கண்களை மூடாமல் விலக்கின் ஜூவாலையைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது கண்களில் இருந்து தண்ணீர் வரலாம். அப்படி வந்தாலும் கண்களை மூடக்கூடாது. அப்படியே கண்களைத் திறந்த நிலையில், தீபத்தின் நிறம், அதன் வெளிச்சம் எந்த அளவுக்கு பரவியிருக்கிறது, ஜூவாலையைச் சுற்றியுள்ள ஒளிவட்டம் எவ்வளவு தூரம் இருக்கிறது என்பதை எல்லாம் உள்வாங்க வேண்டும்.

பத்து நிமிடங்கள் கழிந்த பிறகு மெதுவாகக் கண்களை மூடவேண்டும். பிறகு இரண்டு கைகளையும் நன்றாக உரசித் தேய்த்துவிட்டு அதன் சூட்டை கண்களில் வைக்க வேண்டும். அதன்பிறகு கண்களை மூடிய நிலையிலேயே, அந்த தீபமானது நமது இரு கண்களுக்கும் நடுவில் இருப்பது போல் உருவகம் செய்து கொண்டு சில நிமிடங்கள் தியானிக்க வேண்டும். பிறகு, கண்களைத் திறந்து சகஜ நிலைக்கு வரலாம். இதைக் குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் செய்யலாம். குழந்தைகள் வாரத்தில் இரண்டு முறை இந்த ‘ட்ராட்டகம்’ பயிற்சியை எடுத்தாலே போதும்.

முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம், வலிப்பு நோய் இருப்பவர்கள் மருத்துவர் உதவி இல்லாமல் இந்தப் பயிற்சியில் ஈடுபடக்கூடாது. அதேபோல், ‘கிளாக்கோமா’ (Glaucoma) என்று சொல்லப்படும் கண் நீர் அழுத்த நோய் பிரச்சினை இருப்பவர்கள் இந்தப் பயிற்சியைச் செய்ய வேண்டாம்.

இந்தப் பயிற்சியை முறையாக எடுத்துக் கொண்டால் கண்கள் பாதுகாக்கப்படுவதுடன் குழந்தைகளுக்கு மன அழுத்தம் நீங்கி அவர்களின் கற்றல் திறனும் மேம்படும். சொல்பேச்சுக் கேட்காமல் இருக்கும் குழந்தைகள் சொன்ன சொல்லுக்குக் கட்டுப்படுவார்கள். எப்போதுமே ஒருவித பயத்திலேயே இருக்கும் வயோதிகர்கள் இந்தப் பயிற்சியை எடுத்துக் கொண்டால் பயம் தவிர்த்து நிம்மதியாக இருக்கலாம்.

அடுத்ததாக, கண்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள தினமும் இரண்டு வேளை கண்களை சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும். கைகளை ‘மக்’ போல மடித்துக்கொண்டு அதில் தண்ணீரை அள்ளி கண்களில் வைத்து தண்ணீருக்குள் கண்களைப் பல திசைகளிலும் சுழற்ற வேண்டும். ஆன்லைனில் அதிக நேரம் இருக்கும் பிள்ளைகளும் எந்நேரமும் டிவி திரைக்கு முன்னால் உட்கார்ந்திருக்கும் பெரியவர்களும் இதைக் கட்டாயம் செய்ய வேண்டும்.

இதையும் தாண்டி, கண்களில் சோர்வு நீங்க இன்னொரு பயிற்சியும் இருக்கிறது. சுத்தமான கைக்குட்டையைச் சாதாரண தண்ணீரில் நனைத்து அதை நான்காக மடித்து அப்படியே இரண்டு கண்களிலும் போட்டுக் கொண்டு கொஞ்ச நேரம் படுத்திருந்தால் போதும். தொடர்ச்சியாக இணையத் திரைகளைக் கவனித்துக் கொண்டே இருப்பதால் கண்களில் நீர்ச்சத்து குறைந்து கண்கள் வறண்டுவிடக் கூடும். அதனால் கண்களில் எரிச்சல் ஏற்படும். இதைச் சரிசெய்ய கண்களுக்கு தினமும் ஒருவேளை 15 முதல் 20 நிமிடங்கள் இப்படி கைக்குட்டை வைத்தியம் கொடுத்தால் போதும். கண்களுக்கு குளிர்ச்சி ஏற்படும்; கண்களுக்கு சோர்வே வராது” என்று சொல்லி முடித்தார் டாக்டர் தீபா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்