ஒரே லட்சியத்தைக் கொண்ட இருவர் ஏதோ ஒரு புள்ளியில் முரண்பட்டு எதிரெதிராக மாறும் கதைகள் புனைவுகளில் மட்டுமல்ல... வரலாற்றிலும் நிகழ்ந்திருக்கிறது. அவ்வாறு தமிழக வரலாற்றில் முரண்பட்ட, இருபெரும் ஆளுமைகள் பண்டிதர் அயோத்திதாசரும், புரட்சியாளர் இரட்டைமலை சீனிவாசனும்.
அயோத்திதாசரும் (1845-1914) இரட்டைமலை சீனிவாசனும் (1860-1945) சமகாலத்தவர்கள். ஒடுக்கப்பட்டோர் நலனில் ஒரே இலக்கை நோக்கிப் பயணித்தவர்கள். ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள். இருவரும் சென்னை மற்றும் நீலகிரியை மையமாகக் கொண்டு செயல்பட்டவர்கள். அக்காலகட்டத்தில் இருவருக்கும் கர்னல் ஆல்காட், பிளாவாட்ஸ்கி போன்ற பொதுவான நண்பர்களும் இருந்திருக்கிறார்கள்.
அயோத்திதாசர் மரபான கல்வி பயின்றவர். சீனிவாசன் நவீனக் கல்வி பயின்ற முதல் தலைமுறைப் பட்டதாரி. அடிப்படையில் இருவரும் பத்திரிகையாளர்கள். இரட்டைமலை சீனிவாசன் 'பறையன்' இதழை 1893 முதல் 1900 வரை 7 ஆண்டுகள் நடத்தினார். அயோத்திதாசரும் 'தமிழன்' இதழை 1907 முதல் 1914 வரை 7 ஆண்டுகள் நடத்தினார். அயோத்திதாசர் வைணவ மரபையும், இரட்டைமலை சீனிவாசன் சைவ மரபையும் கொண்ட குடும்பப் பின்னணியைக் கொண்டவர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக அயோத்திதாசர், சீனிவாசனின் சகோதரியை மணந்தவர். உறவு முறையில் இருவரும் மாமன்- மைத்துனர். தொடக்கக் காலத்திலும், இத்திருமணக் காலத்திலும் இருவரும் இணைந்திருந்ததாகக்கூடச் சொல்லப்படுவது உண்டு.
அயோத்திதாசரின் தனிப்பட்ட வாழ்க்கை, தொடக்ககாலச் செயல்பாடு உள்ளிட்டவை தொடர்பான தெளிவான பதிவுகள் எதுவும் கிடைக்கவில்லை. அவரது இறுதி காலகட்டம் குறித்த சில பதிவுகள் 'தமிழன்' (1907 -1914) இதழின் மூலமாகக் கிடைக்கின்றன.
» உத்தரப் பிரதேசத்தின் வீரப்பனா விகாஸ் துபே?- அரசியல் அரவணைப்பில் வளர்ந்த சமூக விரோதியின் கதை
இரட்டைமலை சீனிவாசன் 'ஜீவிய சரித்திர சுருக்கம்' என்ற பெயரில் தன் சுயசரிதையை எழுதி இருந்தாலும், அதில் அவரது தொடக்கக்காலச் செயல்பாட்டைப் பற்றி விரிவாக எழுதவில்லை. அயோத்திதாசரும், இரட்டைமலை சீனிவாசனும் ஒருவரை ஒருவர் நெருக்கமாக அறிந்திருந்தனர். ஆனாலும் தம் எழுத்துக்களில் ஒருவரை ஒருவர் நேரடியாகக் குறிப்பிடவே இல்லை. மறைமுகமாகக் கூட ஓரிரு இடங்களில் மட்டுமே பெயரைச் சுட்டாமல் குறிப்பிடுகின்றனர்.
முரண்பட்ட இடம்
அயோத்திதாசரும், இரட்டைமலை சீனிவாசனும் இவ்வளவு முரண்பட்டு இருந்ததற்குக் காரணம் சொத்துப் பிரச்சினையோ, கட்சிப் பிரச்சினையோ அல்ல. ஒடுக்கப்பட்டோர் அடையாளம் சார்ந்த கருத்தியல் பிரச்சினை. 'பறையன்', 'பவுத்தன்', 'தமிழன்', 'திராவிடன்' ஆகிய அடையாளங்கள் தொடர்பான கருத்து முரண்தான் இருவருக்கும் இடையே ஏற்பட்டிருக்கிறது. இந்த அடையாளங்களை ஒருவர் ஏற்றும், மற்றவர் நிராகரித்தும் வந்தனர். இருவரின் பின்னாலும் பெருங்கூட்டம் இருந்ததால் இந்த அடையாளங்கள் குறித்துத் தீவிரமாக விவாதித்திருக்கின்றனர். தாங்கள் நடத்திய பத்திரிகைகளில் கருத்தியல் யுத்தமும் நடத்தி இருக்கின்றனர்.
அயோத்திதாசர் தரப்பின் கருத்துகள் 'திராவிட பாண்டியன்' (1896) இதழிலும், இரட்டைமலை சீனிவாசன் தரப்பின் கருத்துகள் 'பறையன்' (1893-1900) இதழிலும் தொடர்ந்து வெளியாகி இருக்கிறது. இந்தக் கருத்து மோதலை பூலோகவியாஸன் (1903- 1917) இதழின் ஆசிரியர் பூஞ்சோலை முத்துவீரன் பிள்ளை குறிப்பிட்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் இருவருக்குமான கருத்து மோதல் வழக்காக மாறி, நீதிமன்றத்தில் போய் நின்றிருக்கிறது. அதன் பின்னர் 1900-ல் இரட்டைமலை சீனிவாசன் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றதன் மூலம் இந்த முரண் முடிவுக்கு வந்திருக்கிறது.
காலகட்டத்தின் முரண்
அயோத்திதாசர் மரபான பண்பாட்டு ஆய்வுகளின் வழியாகவும் இலக்கிய வழக்காறுகளின் மூலமாகவும் பவுத்தத்தைக் கண்டடைந்தார். திருவள்ளுவர், நந்த மன்னன், அவ்வை உள்ளிட்டோரின் வழியாக பவுத்தன் அடையாளத்தை மீட்டெடுத்தார். பூர்வ பவுத்தர்களை இழிவு செய்யும் பொருட்டு, 'பறையன்' என்ற பெயரால் அழைக்கப்பட்டனர் என்றார்.
இரட்டைமலை சீனிவாசன் கும்பகோணத்தில் சிதைக்கப்பட்ட நந்தன் கோட்டை மதில், தஞ்சாவூர் பிரவியடை சாம்பான், யானையேறும் பெரும்பறையன் சமாதி உள்ளிட்டவற்றை நேரில் ஆராய்ந்து தனது சிவ அடையாளத்தை வலுப்படுத்திக்கொண்டார். எந்தப் பெயரால் இழிவுபடுத்தினார்களோ, அதே பெயரைக் கொண்டு முன்னேறிக் காட்ட வேண்டும் என்றார். 'பறையன்' என்ற பெயரில் இதழ் தொடங்கி, பறையர் மகாஜன சபை உருவாக்கி அரசியல் தளத்தில் தீவிரமாகச் செயலாற்றினார்.
இந்த அடையாளங்கள் சார்ந்த அயோத்தி தாசருக்கும் இரட்டைமலை சீனிவாசனுக்குமான கருத்தியல் முரண் என்பது, ஒரு லட்சியவாதிக்கும் எதார்த்தவாதிக்கும் இடையிலான புரிதலில் இருக்கும் மாறுபாடுதான் என்கிறார் ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம். இந்த முரணை நோக்கும்போது, அது இருவருக்கு மட்டுமான பிரச்சினை அல்ல, அன்றைய காலகட்டத்தின் பிரச்சினை எனப் புரிகிறது. பிரிட்டிஷாரின் ஆட்சிக் காலத்தில் அடையாளங்களை வரையறுத்துக்கொள்ள முற்பட்ட இந்திய சாதிய சமூகத்தின் ஒட்டுமொத்தப் பிரச்சினையும் அதுவாகத்தான் இருந்தது. இருவரும் அடையாளத்தைச் சரியாக வகுத்துக்கொண்டு யார் தம் மக்களுக்கு அரசின் அனுகூலங்களைப் பெற்றுத் தருவது என்று போட்டி போட்டார்கள் என்றுகூடப் புரிந்து கொள்ளலாம்.
இணைந்த கரங்கள்
ஒடுக்கப்பட்டோருக்கான அடையாளத்தை வரையறுப்பதில் அயோத்திதாசரும், இரட்டைமலை சீனிவாசனும் முரண்பட்டு இருந்தாலும், அம்மக்களுக்கான நலனைப் பெற்றுத் தருவதில் இணைந்தே இருந்தனர். கல்வி, வேலை வாய்ப்பு, சாதி ஆதிக்க எதிர்ப்பு, சுதேசிகளின் மீதான விமர்சனம், சமூக நலன், நில உரிமை உள்ளிட்ட பிரச்சினைகளில் ஒரே இலக்கை நோக்கிப் பயணித்தனர்.
1894-ல் ஐசிஎஸ் தேர்வை இங்கிலாந்தில் நடத்த பிரிட்டிஷ் அரசாங்கம் முடிவெடுத்தது. அதனை இந்தியாவில் நடத்த வேண்டும் என தேசியவாதத் தலைவர்கள் சில நூறு கையொப்பங்களோடு விண்ணப்பம் அனுப்பினர். ஆனால், இரட்டைமலை சீனிவாசன், அந்தத் தேர்வை இந்தியாவில் நடத்தினால் ஆதிக்க வகுப்பினர் பங்கேற்று, ஒடுக்கப்பட்டோர் மீது சாதிப் பாகுபாடு காட்டுவார்கள். எனவே அதை இங்கிலாந்திலே நடத்த வேண்டும் என 3,412 பேரின் கையொப்பங்களை பெற்று எதிர் விண்ணப்பம் அனுப்பினார்.
1911-ல் மீண்டும் இந்த தேர்வை இந்தியாவில் நடத்த வேண்டும் எனக் காங்கிரஸ் தலைவர்கள் கோரிய போது, இரட்டைமலை சீனிவாசன் விட்டுசென்ற எதிர்ப்புப் பணியை அயோத்திதாசர் தொடர்ந்தார். தனது 'தமிழன்' இதழில் காங்கிரஸின் கோரிக்கையைத் தொடர்ந்து விமர்சித்து எழுதினார். இங்கிலாந்தில் போய் தேர்வு எழுதி, அங்கு சென்று பயிற்சி பெறும்போது இங்குள்ளவர்களின் மனதில் இருக்கும் சாதி வித்தியாசத்தை மறந்து மக்களுக்குப் பணியாற்றுவர். பிரிட்டிஷார் சாதியற்றவர்களாக இருப்பதால் அவர்கள் சாதி வித்தியாசம் இல்லாமல் செயல்படுவார்கள் எனவும் குறிப்பிட்டார்.
இதே போல 1897-ம் ஆண்டு திண்டிவனம் அருகே விட்லாபுரத்தில் ராகவன் என்ற ஒடுக்கப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் ஆதிக்க சாதியினரால் கொல்லப்படுகிறார். அதற்குக் காரணம் ராகவன் தன் நிலத்தில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு அதிகக் கூலி கொடுத்தார். அதனால் தொழிலாளர்கள் ஆதிக்க சாதியினரின் தோட்டத்துக்கு வேலைக்குச் செல்லாமல், ராகவனின் தோட்டத்துக்கு வேலைக்குச் சென்றிருக்கின்றனர். இதனால் கோபமடைந்த ஆதிக்க சாதியினர் ராகவனைக் கொன்ற விவகாரத்தை, அது தொடங்கிய புள்ளியில் இருந்து இரட்டைமலை சீனிவாசன் ‘பறையன்’ இதழில் பதிவு செய்திருக்கிறார்.
அவர் இதழை நிறுத்திவிட்டு, தென்னாப்பிரிக்கா சென்ற பின், அயோத்திதாசர் தனது 'தமிழன்' இதழ் வாயிலாக இந்த வழக்கைப் பின்தொடர்ந்திருக்கிறார். இவ்வழக்கு குறித்துப் ‘பறையன்’ இதழின் துணை ஆசிரியர் மு.தங்கவேலு பிள்ளை எழுதிய கடிதத்தையும் தமிழனில் பிரசுரித்திருக்கிறார். இரட்டைமலை சீனிவாசனுடன் கருத்து முரண் இருந்த போதும், சமூக நலன் கருதி அயோத்திதாசர் இதை மேற்கொண்டிருப்பதை அறிய முடிகிறது.
காலம் இணைத்தது
1914-ல் அயோத்திதாசர் மறைந்தபோது இரட்டைமலை சீனிவாசன் தென்னாப்பிரிக்காவிலே இருந்தார். 1920-ல், தமிழகம் திரும்பும் இரட்டைமலை சீனிவாசன் 'பறையன்' அடையாளத்தை விடுத்து, காலப்போக்கில் இந்திய அரசியலில் மாறிவந்த ஒடுக்கப்பட்ட வகுப்பினர், ஆதிதிராவிடர், பட்டியல் சாதி ஆகிய அடையாளங்களை ஏற்றுக்கொண்டு செயல்பட்டார். சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த போதும், வட்டமேஜை மாநாட்டில் பங்கேற்ற போதும், பூனா ஒப்பந்தத்தின் போதும் அனைத்துப் பட்டியல் வகுப்பினரின் உரிமைக்காகவே பேசினார்.
இன்னும் ஒருபடி மேலே போய் 1936-ல் மெட்ராஸ் மாகாணமாக இருந்த காலத்திலே, 'தமிழ்நாடு தமிழருக்கே' என்ற கோரிக்கையை முன்வைத்தார். இதே கோரிக்கையைத்தான் பெரியார் 1939-ல் எழுப்பினார். 1968-ல் அண்ணா 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டினார்.
கடந்த காலத்தில் கருத்தியலால் பிரிந்திருந்த அயோத்திதாசரையும், இரட்டைமலை சீனிவாசனையும் காலம் இணைத்து வைத்திருக்கிறது. 21-ம் நூற்றாண்டில் முற்போக்கு அரசியலைப் பேசும், எழுதும் எல்லோரும் இருவரையும் இணைத்தே பதிவு செய்கிறார்கள். எல்லா மேடைகளிலும், எல்லாப் பதாகைகளிலும் இருவரும் சேர்ந்தே, எதிர்காலத்துக்கு வழிகாட்டுகிறார்கள்.
- இன்று இரட்டைமலை சீனிவாசனின் 161-வது பிறந்த நாள்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago