அவருக்கு மெல்லிய குரலுமில்லை. ஏழுகட்டை குரலுமில்லை. அப்படி இரண்டுமில்லாமல், அம்சமான குரலைக் கொண்டவர் அவர். அதனால்தானோ என்னவோ... அவரின் பாடல்களை அவர் குரலில் பாட எவராலும் முடிவதில்லை. அந்த அம்சமான குரல்... தெய்வாம்சமான குரல் என்றே எல்லோராலும் கொண்டாடப்பட்டது; கொண்டாடப்பட்டு வருகிறது. குரலுக்குச் சொந்தக்காரர்... டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா.
இன்றைக்கு ஆந்திர மாநிலத்தின் சிறிய கிராமம். அன்றைக்கு ஒருங்கிணைந்த மெட்ராஸ் மாகாணம். கிழக்கு கோதாவரியில், சங்கரகுப்தம் என்கிற கிராமத்தில், இசைக்குடும்பத்தில் பிறந்த குழந்தை, பின்னாளில் இசைமேதையாக உலகுக்கே உதாரணமாகத் திகழப் போகிறது என்பதை எவரும் அறியவில்லை. பட்டாபிராமையாவுக்கும் சூரியகாந்தம்மாவுக்கும் பிறந்த குழந்தைக்கு, முரளி கிருஷ்ணா என்று பெயரிட்டு வளர்த்தார்கள்.
அப்பா புல்லாங்குழல் வித்வான். அம்மாவுக்கோ வீணையின் நாதம் மொத்தமும் அத்துபடி. அதனால்தான் பாலமுரளிகிருஷ்ணாவின் குரலில் குழலின் இனிமையும் வீணையின் மென்மையும் இழைந்து இணைந்து ஜாலம் காட்டியது.
சிறுவயதிலேயே, அத்தனை வாத்தியங்களையும் இசைப்பதில் வல்லவராகத் திகழ்ந்தார். பத்துவிரல்களிலும் சரஸ்வதி கடாக்ஷம் நிறைந்திருந்தது. ஒருநாள்... மேடையில் கச்சேரி பண்ணிக்கொண்டிருந்த சிறுவன் முரளிகிருஷ்ணாவின் இசையிலும் இசைந்து வரும் குரலிலும் கூட்டம் மொத்தமும் சொக்கிப் போனது. ஆந்திரத்தில் ஹரி கதை சொல்வதில் மேதை என்று கொண்டாடப்பட்ட முதுசூரி சூரிய நாராயண மூர்த்தி, சிறுவன் முரளி கிருஷ்ணாவை அழைத்தார்.சிரசில் கைவைத்து ஆசீர்வதித்தார். ‘இந்தப் பொடியன் சாமான்யனில்லை. ஆனால் எவ்வளவு பெரியவனானாலும் இவனின் குரலில் ஒரு குழந்தையின் குரல் இருந்தபடியே இருக்கும். மிகப்பெரிய புகழைப் பெறப்போகிறான். இனி இவன் முரளிகிருஷ்ணா இல்லை. பாலமுரளி கிருஷ்ணா’’ என்று ஆசீர்வதித்தார்.
சென்னை வானொலியில் ‘ஏ கிரேடு’ ஆர்ட்டிஸ்ட் என்று இளம் வயதிலேயே அங்கீகாரம் கிடைத்தது. திருவையாறு தியாகபிரம்மம் ஆராதனை விழாவில், இவர் பாடுவதற்கு நேரம் குறைவாகவே கொடுக்கப்பட்டது. அப்போது அவருக்கு 11 வயது. ஆராதனை விழாவில், அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் முதலான ஜாம்பவான்கள் அடுத்து பாடுவதற்கு அமர்ந்திருந்தார்கள். சிறுவன் பாடப்பாட, மொத்த இசைக்கலைஞர்களும் ரசிகர்களும் வியந்து பிரமித்தார்கள். ‘அந்தப் பையன் இன்னும் கொஞ்சம் பாடட்டும் இன்னும் கொஞ்சம் பாடட்டும்’ என்று நேரத்தை விட்டுக் கொடுத்தார்கள். பாட்டையும் அவர் பிடித்த சங்கதிகளையும் கேட்டு வியந்து ரசித்தார்கள். ரசித்து வியந்தார்கள். இதையடுத்து, கர்நாடக சங்கீத உலகில், எல்லோராலும் கவனிக்கப்பட்டார். முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
வயலின் வாசிப்பார். கஞ்சிராவில் கில்லாடி. மிருதங்கத்திலும் விற்பன்னராக இருந்தார். வீணை வாசிப்பதிலும் அசத்தினார். எல்லாவற்றுக்கும் மேலாக பாடுவதில் தனித்திறன் பெற்றிருந்தார். அரியங்குடி ராமானுஜ அய்யங்கார், செம்பை வைத்தியநாத பாகவதர், மகாராஜபுரம் சந்தானம், ஜி.என்.பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட இசை மேதைகளுக்கு வயலின் வாசித்து பேரெடுத்தார்.
ஏவிஎம்மின் ‘பக்த பிரகலாதா’ திரைப்படத்தில் மெய்யப்பச் செட்டியாரின் விருப்பத்துக்காக நடித்தார். பல மொழிகளில் டப் செய்யப்பட்டு, எல்லா மாநிலங்களிலும் இவரை நடிக்க அழைத்தார்கள். ஆனால் நடிப்பதில் நாட்டமில்லை. பிறகு மலையாளப் படமொன்றில் பாடகர் கதாபாத்திரத்தில் நடித்தார்.
ஆந்திர திரையுலகில் இவரைப் பாட அழைத்தார்கள். ’சதிலீலாவதி’ எனும் படத்தில் பாடினார். மிகப்பெரிய ஹிட்டடித்தது இந்தப் பாடல். பி.லீலாவுடன் இணைந்து பல பாடல்களை அங்கே பாடினார்.
அந்த காந்தக் குரல் மெல்லிசை மன்னர்களை இழுத்தது. ஸ்ரீதரின் ‘கலைக்கோவில்’ படத்தில் அந்தப் பாடலைக் கொடுத்தார். இவரும் பாடினார். அந்தப் பாடலை இப்போது கேட்டாலும் தங்கரதம் ஒன்று வீதியில் அசைந்து அசைந்து வருவது போன்ற உணர்வைக் கொடுக்கும். அந்தப் பாடல் ‘தங்கரதம் வந்தது வீதியிலே’ என்று சொல்லவும் வேண்டுமா என்ன?
அடுத்து, மதுரையம்பதியில் எனக்கு நிகராக பாடுபவர்கள் இருக்கிறார்களா என ஹேமநாத பாகவதர் மன்னரிடம் கேட்கிறார். எல்லோரும் மிரண்டுபோகிறார்கள். அப்படிப்பட்ட ஹேமநாத பாகதவரின் திறனைச் சொல்ல ஒரு பாடல் வேண்டும். அந்தப் பாட்டைக் கேட்டு நாமே மிரண்டுதான் போகவேண்டும். அதனால் திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன், ஹேமநாத பாகவதருக்காக ஒரு பாடலை தயார் செய்தார். ‘ஒருநாள் போதுமா?’ என்ற பாடலை இன்றைய தலைமுறையினர் கேட்டாலும் கிறங்கித்தான் போவார்கள்.
இப்படி அத்தி எப்போதாவது பூப்பது போல், திரையுலகில் எப்போதாவதுதான் பாடினார். அதனால்தான் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேடைகளில் கச்சேரி பண்ணினார் அவர். எழுபதுகளின் இறுதியில், இளையராஜா ஐந்தாறு படங்கள் பண்ணியிருந்த வேளையில், பால முரளிகிருஷ்ணாவிடம், ‘நீங்கள் ஒரு பாட்டு பாடவேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார். அந்த டியூன், வாத்தியக்கருவிகளின் இசைக்கோர்ப்பு ஆகியவற்றையெல்லாம் பார்த்து, இளையராஜாவை மனம் திறந்து பாராட்டினார் பால முரளிகிருஷ்ணா. ’கவிக்குயில்’ படத்தின் ‘சின்னக்கண்ணன் அழைக்கிறான்’ என்ற பாடலுக்கு அந்தக் கண்ணனே வந்து பாட்டை ரசித்துக் கேட்டிருப்பான்.
கர்நாடக இசையுலகில், நான்கு ஸ்வரங்கள் கொண்ட ராகம், மூன்று ஸ்வரங்கள் கொண்ட ராகம், இரண்டு ஸ்வரங்கள் கொண்ட ராகம் என்று பல முயற்சிகளை மேற்கொண்டு பிரமிப்பூட்டினார். இவரே புதுப்புது ராகங்களை உருவாக்கினார்.
பாலசந்தரின் ‘நூல்வேலி’ படத்தில், ‘மெளனத்தில் விளையாடும் மனசாட்சியே’ பாடல் நம் மெளனத்தை இன்னும் அடர்த்தியாக்கிவிடும். இன்னும் எத்தனையோ பாடல்கள்... பாண்டிராஜ் இயக்கி, ஜேம்ஸ் வசந்தன் இயக்கத்தில் ‘அன்பாலே அழகாகும் வீடு’ என்ற பாடல் காட்சிக்கு இன்னும் அழகூட்டியது.
கமல்ஹாசன், எஸ்.பி.ஷைலஜா, ஜெயலலிதா இன்னும் எண்ணற்ற பிரபலங்களுக்கு இசை கற்றுக் கொடுத்த வாத்தியாராகவும் திகழ்ந்த மாமேதை பால முரளிகிருஷ்ணா. பத்மஸ்ரீ, பத்மவிபூஷன் உள்ளிட்ட எத்தனையோ விருதுகள் தேடி வந்து, இவரின் சிரசில் உட்கார்ந்து அலங்கரித்தன. இன்று வரை மட்டுமின்றி காலங்கள் உள்ளவரை, இசையுலகை அலங்கரித்துக் கொண்டே இருப்பார் டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா.
- இசைமேதை பால முரளிகிருஷ்ணாவின் 90வது பிறந்தநாள் இன்று.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
5 hours ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago