ஊருக்குள் மது விற்கவோ, குடிக்கவோ கூடாது என்று ஊர்கூடி எடுத்த முடிவால் ஊருக்குள் பல நன்மைகள் நடந்திருப்பதாக மகிழ்ச்சி அடைகிறார்கள் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தைச் சேர்ந்த சாத்தம்பாடி கிராமத்து மக்கள்.
பொதுவாகவே காடுகள் அதிகம் நிறைந்த அரியலூர் மாவட்டத்தில் சமூக விரோதச் செயல்களுக்குப் பஞ்சமிருக்காது. தற்போது அவையெல்லாம் குறைந்து மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள். ஆனாலும் அவர்களிடம் மதுப் பயன்பாடு அதிகமாக இருக்கிறது.
பல கிராமங்களில் சாராயம் காய்ச்சி விற்கும் நபர்களும் அதிகம். இம்மாவட்ட சாராயத்துக்குப் பிற மாவட்டங்களில் நல்ல வரவேற்பும் இருந்தது. ஆனால், காவல்துறையினரின் தொடர் நடவடிக்கைகளால் தற்போது சாராயம் காய்ச்சுவோர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. சாராயம் காய்ச்சியவர்களில் பலரும் திருந்தி வேறு தொழில் செய்து வருகிறார்கள்.
ஆனாலும் சிலர் மட்டும் பழைய நினைப்பிலேயே இன்னும் இருக்கிறார்கள். சாராயம் காய்ச்சுவதில் இருக்கும் சிக்கல்களை மனதில் கொண்டு அவர்கள் இப்போது காய்ச்சுவதில்லை. அதற்குப் பதிலாக டாஸ்மாக் கடைகளில் போய் மொத்தமாக வாங்கிவந்து வைத்துக் கொண்டு ஐம்பது ரூபாய் அதிகம் விலை வைத்து விற்று வருகிறார்கள். இரவு பகல் என 24 மணி நேரமும் விற்பனை நடப்பதால் கிராமங்களில் மதுப்பிரியர்கள் பலரும் எந்த நேரத்திலும் குடியில் மூழ்கிக் கிடக்கின்றனர்.
சாத்தம்பாடியிலும் இதே நிலைதான். ஐயாயிரம் பேருக்கு மேல் வசிக்கும் இந்த ஊராட்சியில் மதுக்கடை கிடையாது. 10 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சித்தமல்லியில்தான் டாஸ்மாக் இருக்கிறது. அதற்கு நேர் எதிர்த்திசையிலும் 10 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் புதுப்பாளையத்தில் ஒரு மதுக்கடை உள்ளது.
இப்படி மதுக்கடைகள் தொலைவில் இருப்பதால் அதிகம் பேர் குடிக்கச் செல்வதில்லை. உள்ளூர் சாராய வியாபாரிகள் அந்த நிம்மதிக்கு வேட்டு வைத்தார்கள். சாத்தம்பாடி, முத்துவாஞ்சேரி, குஞ்சுவெளி ஊராட்சியில் உள்ள மூன்று கிராமங்களையும் சேர்ந்த மூன்று பேர் மது பாட்டில்களை மொத்தமாக வாங்கிவந்து ஊருக்குள் விற்க ஆரம்பித்துவிட்டனர்.
இதனால் ஊரின் அமைதி கெட்டுப்போனது. பெண்கள், பள்ளி செல்வோர், பெண் குழந்தைகள் நிம்மதியாக சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில், புதிதாகப் பதவியேற்ற ஊராட்சி மன்றத் தலைவர் தங்க.ரவிச்சந்திரன் இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்று முனைப்போடு செயல்பட்டார். பொதுமக்கள், சாராய வியாபாரிகள், ஊர் நாட்டாமைகள், போலீஸ் என அலைந்த அவரது நான்கு மாதத் தொடர் முயற்சிக்கு நல்ல பலனும் கிடைத்தது.
கடந்த மாதம் 10-ம் தேதியன்று விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் நடைபெற்ற இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தை முடிவில், ‘ஊருக்குள் இனி மது விற்பனை செய்ய மாட்டோம்’ என்று எழுதிக் கொடுத்தனர் வியாபாரிகள். அன்றிலிருந்து இன்றுவரை ஊரில் ஒரு சொட்டு மதுகூடக் கிடையாது. உள்ளூரில் குடிக்கவும் கூடாது என்று ஊர் கூடி எடுத்த முடிவால் ஊருக்குள் யாரும் குடிப்பதும் இல்லை. பழக்கம் உள்ளவர்கள் ஊருக்கு வெளியே போய் குடித்துவிட்டு ஓசைப்படாமல் வருகிறார்கள்.
இதைச் சாதித்த ஊராட்சி மன்றத் தலைவர் தங்க.ரவிச்சந்திரனிடம் பேசினேன். " 24 மணி நேரமும் சரக்கு கிடைக்கிறதால மதுப்பிரியர்கள் வீட்டில் உள்ள அண்டா, குண்டானைக் கூட அடகு வைத்துக் குடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. கையில இருக்கிற செல்போனைக் கூட, கொடுத்துட்டு 10 நாளைக்குக் குடிப்பாங்க. பெண்கள் வேலைக்குப் போய் வாங்கிட்டு வர கூலியையும் எடுத்துட்டு போய் குடிச்சி குடும்பத்து நிம்மதி கேட்டுப் போச்சு.
அரசாங்கம் விற்பதை நம்மால் தடுக்க முடியாது. அதே நேரத்தில் ஊருக்குள் விற்பதையாவது தடுக்கலாமே என்றுதான் முயற்சி செஞ்சேன். ஊர் நாட்டாமை, போலீஸ், பொதுமக்கள் என்று எல்லோருமா சேர்ந்து எடுத்த முடிவால் இப்ப ஊருக்குள்ள யாரும் சாராயம் விற்பதில்லை. குடிக்கிறவங்க எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்து போய்விட்டது. இன்னும் 15 வருஷத்துக்கு ஊருக்குள் யாரும் மது விற்கக்கூடாது, மதுக்கடையையும் அனுமதிக்கக் கூடாது என்று முடிவெடுத்துள்ளோம்.
இந்த முடிவுக்கு வந்ததால் கொஞ்சம் எதிர்ப்பும் வந்துச்சு. ‘நீங்க விற்கிற மதுவுக்குத்தான் நான் எதிரி; விற்கிற உங்களுக்கு இல்லை’ன்னு அவங்ககிட்ட தெளிவா சொல்லிட்டேன். இப்ப ஊர்ல பெண்கள் நிம்மதியா இருக்காங்க. நமக்கு அதுதானே வேண்டும்" என்று சொல்லிச் சிரிக்கிறார் ரவிச்சந்திரன்.
மனது வைத்தால் மாற்றம் பிறக்கும் என்பதற்குச் சாத்தம்பாடி மக்கள் சிறந்த உதாரணம்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago