எனக்கு நெனவு தெரிஞ்ச நாளிலருந்து எங்க வீட்ல அம்மா ஒரு வெள்ளை மாடு வச்சிருந்தாங்க. அது வருஷ ஈத்துக் கறவை. 6 மாசம் பால் கறக்கும். அப்புறம் ‘பயிரா’யிரும் (கர்ப்பம் தரிக்கும்). கன்னு போடறதுக்கு 3 மாசம் முன்னாடி வரைக்கும் கடைசிக்கு அரை லிட்டர் பாலாவது கறக்கும். 10 வருஷம் எங்க ஊட்ல இருந்தது. அந்த மாடு வருஷம் ஒரு கன்னு குட்டின்னு 8 தடவை கன்னு போட்டுது.
சனி, ஞாயிறு 2 நாளும் காத்தால 8 மணிக்கு அந்த மாட்டை புடிச்சுட்டு போயி தோட்டத்து பொழிக்கால்ல 2 மணி நேரம் மேய்ப்பேன். மூக்கணாங்கயிறு, தலைக்கயிறு ரெண்டையும் சேர்த்து 6 அடி நீளக்கயிறு இணைச்சு அதனோட ஒரு முனைய புடிச்சுட்டு புஸ்தகம் படிப்பேன். பொழிக்கால்ல அதிகமா அருகம்புல்தான் இருக்கும்.
அதுக்கு நடுவுல அசையாக்கட்டை வேர் ஒண்ணு இருக்கும். பார்த்தா தெரியாது. மறுநாள் மாட்டுப்பால்ல ஒரு மாதிரி மொடை வாசனை வந்தா அசையாக்கட்டை வேரை மாடு மேய்ஞ்சிருச்சுன்னு அர்த்தம்.
5, 6 மாசம் ஆச்சுன்னா மாடு ‘நசியம்’ எடுத்துக்கும். அதாவது மீண்டும் கருத்தரிக்க ஆசைப்படுதுன்னு அர்த்தம். பிறப்பு உறுப்பில தண்ணி மாதிரி ‘வழு வழு’ன்னு ஒண்ணு ஒழுகும். அதுதான் அறிகுறி. அப்பவும் நாம கண்டுக்காம இருந்தம்னா, காட்டுல மேயற இந்த மாடு அடுத்த மாட்டு மேல தொத்தும் (ஏறும்). அதுதான் பயிராகறதுக்கு அது நூறு சதவீதம் ரெடின்னு அர்த்தம்.
» பன்முகக்கலைஞர் சிவகுமார் எழுதும் கோவை மண் மணக்கும் காவியம்; கொங்கு ‘தேன்’-3: சாட்டுக்கவலை!
» பன்முகக் கலைஞர் சிவகுமார் எழுதும் கோவை மண் மணக்கும் காவியம்; கொங்கு ‘தேன்’: 2- ‘முதல் மரணம்’
எங்க ஊருக்கு தெக்கால 2 கல் தொலைவில அப்பநாயக்கன்பட்டின்னு ஒரு கிராமம். அதோட மொகதலையில (முன்னால) அடப்பக்காட்டு நாய்க்கன் தோட்டம் இருக்கு.
அங்கதான் காங்கயம் காளைகளோட, ‘க்ராஸ்’ ஆயி பொறந்த காளைகள் இருக்கும். விடிகாலையில போனா ரெண்டு மூணு மாடுகளை கருத்தரிக்க வைக்கும். அந்த காளைகள் ‘கெடா’ சைசுல (பெரிய அளவு) இருக்கும். நாம கொண்டு போற மாடு குட்டியூண்டு இருக்கும். காளை பின்னால ஏறுனதும் அதனோட கனம் தாங்காம நம்ம மாடு, ‘பொத்து’ன்னு கீழே உழுந்துடும். அதைத் தடுக்க ‘தொக்கடவு’ மாதிரி ‘Y’ ஷேப்புல ஒரு மொளையை தரையில ஊன்றி வச்சிருப்பாங்க. அதில் மாட்டுக்கழுத்தை மாட்டி, நாம தலைய புடிச்சிட்டா காளை மாட்டோட சேர்றப்ப கீழே உழுகாது.
பயிரானதும், வீட்டுக்கு ஓட்டீட்டு போயி வேப்பமரத்து கிளையில தலைக்கவுத்தை இணைச்சு தூக்கி கட்டிருவோம். மத்தியானத்துக்குள்ள மாடு படுத்தா பிறப்பு உறுப்பிலருந்து காளையோட விந்து ஒழுகிறும். மறுபடியும் காளைகிட்ட கூட்டீட்டு போக வேண்டியாயிடும். மாடு கன்னு போடறதைப் பத்தியும், அதுல சீம்பால் கறந்து சாப்பிடறது பத்தியும் சொன்னா இந்த அனுபவம் கொஞ்சம் நீளும். அதனால இன்னொரு எடத்துல அதெ சொல்றேன்.
மாடு ஆண் கன்னு போட்டா காளைக்கன்னுன்னும், பெண் கன்னு போட்டா கெடாரிக்கன்னுன்னும் சொல்லுவோம்.
விடியக்கால கன்னு குட்டிய அவுத்து உட்டா ‘ச்சங்கு’ன்னு குதியாட்டம் போட்டு அம்மாகிட்ட போய் பால் குடிக்கிற அழகை பாத்துத்தான் அனுபவிக்க முடியும். வாயில நுரை வர்ற அளவுக்கு மடிய முட்டிமுட்டி குடிக்கும். முழுசா அதுக்கு வயிறு ரொம்பிட்டா, நம்ம குழந்தைங்க காஞ்சு போகுமே. அதுக்காக பாதி வயிறு ரொம்புனதும், கழுத்தல கயித்தப் போட்டு இழுத்தா லேசில வராது. சித்த நேரம் முண்டிப் பாத்துட்டு அப்புறம் கம்முன்னு வரும்.
கன்னு போட்டு ஒரு வாரம் தாண்டிட்டா, அந்தக் கன்னுக்குட்டிக மண்ணு திங்க ஆரம்பிச்சுரும். அதனால வாக்கூடை ( வாய்க்கு கூடை) மாட்டி உட்ருவோம். அதை கழட்டச் சொல்லி முசு, முசுன்னு தகராறு பண்ணும்.
காளைக்கன்னு ஒண்ணு பெரிசா வளர்ந்ததும் கல்லம்பாளையத்தில இருக்கிற தாய்மாமனுக்கு எங்கம்மா குடுத்திட்டாங்க. அது நல்லா வளர்ந்து பார வண்டி இழுத்துச்சு.
தானியம், தவசம் கூட்டு வண்டில ஏத்தி வண்டியப் பூட்டி பொள்ளாச்சி ரோட்ல உட்டுட்டு எங்க மாமன் அந்த கூட்டு வண்டிக்குள் பூந்து மூட்டை மேல படுத்து தூங்கீருவாரு.
பல்லடத்தில் 4 ரோடு வருது. கிழக்கே காங்கயம் போற ரோடு, மேக்கே கோயமுத்தூர் போற ரோடு, தெக்கே பொள்ளாச்சி போற ரோடு. இந்த எருதுக நூல்புடிச்சாப்புல பொள்ளாச்சி ரோட்ல போயிகிட்டே இருக்கும். இடது பக்கம், உடுமலைப் பேட்டை ரோடு. அதுல திரும்பாது. நேரா போகும். காமநாயக்கன்பாளையம் பிரிவுல 3 ரோடு வரும். கண்டுக்காது. சுல்தான் பேட்டையில 3 ரோடு, சூலூர் பிரிவு வரும். அதிலெல்லாம் திரும்பாது. நெகமம் போயி, பொள்ளாச்சிக்குள்ளே நுழைஞ்சு, இடதுபக்கம் உடுமலை ரோடு. வலதுபக்கம் பாலக்காடு ரோடு- அதிலெல்லாம் போகாம - அது ‘சிவனே’ன்னு தேர்முட்டியை கடந்து, கடை வீதிக்குள்ளே நுழைஞ்சு, கரெக்ட்டா ரயில்வே ஸ்டேஷன் பக்கம் இருக்கிற சந்தைப் பேட்டையில விடியக்கால போய் நிக்கும். எங்க மாமன் ஒரு வாட்டி கூட தூக்கத்துலயிருந்து எழுந்து ஒழுங்காப் போகுதான்னு பாக்கவே மாட்டாரு. அவ்வளவு அறிவு அந்த மாடுகளுக்கு.
பத்து வருஷங் கழிச்சு வயசாயிப் போச்சுன்னு அந்த எருதை எங்க மாமா ஊருக்குள்ளே ஒரு கவுண்டருக்கு வித்திட்டாரு. மூணு நாளு பச்சைத் தண்ணி குடிக்காம, ‘என்னை ஏன் வித்தே?’ன்னு நெனச்சு கண்ணீர் விட்டுதாம். என்ன பாசம் அந்த பிராணிக்கு.
எங்கப்பிச்சி (அம்மாவின் அப்பா) ஒரு ‘வில்லு வண்டி’ வச்சிருந்தாராம். பாரம் ஏத்தற வண்டி, பெரிசா இருக்கும். சக்கரங்கள் உசரமா இருக்கும். சக்கரம் தேயக்கூடாதுங்கறதுக்கு ‘பட்டை’ போட்டிருப்பாங்க (மரச்சக்கரத்தைச் சுற்றி, இரும்புப்பட்டை). ‘வில்லு’ வண்டி சிறிசு. புருஷன் பொண்டாட்டி, 2 குட்டிப்பசங்கதான் அதுல சவாரி பண்ண முடியும். கூட்டு வண்டிங்கறது மேல்பக்கம் ‘ஆர்ச்’ மாதிரி, கூடாரம் மாதிரி, பிரம்புகளை சுத்தி, பாய் அடிச்சு தயார் பண்ணியிருப்பாங்க. ரோட்ல, குழியில சக்கரம் எறங்கறப்போ, வண்டிக்குள்ள இருக்கறவங்க, ‘முன்ன-பின்ன’ ஆடி, வண்டியில முதுகு மோதாம இருக்கறதுக்கு சக்கரம் பொருத்தப்பட்ட இருசு மேல வில்பட்டை 2 பக்கமும் இருக்கும். ‘ஷாக் அப் சார்பர்’ மாதிரி இது குழியில சக்கரம் எறங்கறப்போ, பேலன்ஸ் பண்ணும். வண்டிக்குள்ளே குலுங்காது.
மலையான் எருது ரெண்டு எங்கப்பிச்சி வச்சிருந்தாராம். காங்கயம் காளைகள் அழகா, பெரிசா இருக்கும். அதிகமா பாரவண்டி இழுக்க பயன்படும். ஆனா வேகமா ஓடாது. மலையான் எருதுகள் வண்டில பூட்டினா சிட்டா பறக்கும். நீங்க அடிச்சு ஓட்ட வேண்டாம். மூக்கணாங்கயிறை இழுத்துப் புடிக்கவே நேரம் சரியா இருக்கும்.
ஒரு நாள் சாயங்காலம், வில்லு வண்டி பூட்டி, எங்கப்புச்சி சூலூர் தாண்டி முத்துக்கவுண்டனூர் போயிட்டிருந்தாரு. சூலூர் சந்தைப்பேட்டைக்கு மேபுறம், அந்தக்குளம் 1000 வருஷம் பழமையான குளம், இன்னும் இருக்கு. அந்த குளத்து மேட்டில வண்டி போகுது.
லாரிங்கிற ஒரு வஸ்து கண்டுபிடிக்கப்பட்ட காலம் அது. பஸ்கள் ஒண்ணு ரெண்டு மெயின் ரோட்ல எப்பவாச்சும் வந்து போகும். கார்கள் அபூர்வமா கண்ணுல படும்.
ஊர் சனங்களுக்கே லாரின்னு ஒரு வாகனம் இருக்கறது பெரிசா தெரியாது. இந்த மலையான் காளைகள் கார், பஸ் எல்லாம் அதிகமா பார்த்ததில்லே. அதைப் பார்த்தாலே கண்ணை பெரிசு பண்ணி, மிரண்டு, வாலைத்தூக்கி, சாணி போட்டுட்டு, இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும் பம்மும்.
இப்ப வண்டி மேக்கால குளத்து மேட்டுல போயிட்டிருக்கு. ‘பென்ஸ்’ லாரி ஒண்ணு பூதங்கணக்கா ‘கரே’ன்னு நொய்யல் ஆத்துலயிருந்து குளத்து மேடு ஏறி வருது.
பார(ம்) வண்டிங்கறதனால மேடு ஏர்றப்போ ‘ஃபர்ஸ்ட் கீர்’ போடறான் டிரைவர். ங்ர்..ங்ர்ர்..ங்ர்ர்...’ன்னு லாரி சத்தம் போட்டு முக்கீட்டு மேல வருது.
பொழுது உழுகற நேரமாச்சு. லாரிக்காரன் ‘ஹெட் லைட்’டை பளிச்சுன்னு போட்டான். எருதுக நடுங்கீட்டு நகர மாட்டேங்குது. அடுத்து சித்த நேரத்தில வண்டி வெலகணும்ங்கிறதுக்காக ‘பாங்கு’ன்னு ‘பாஷ்’ ஹாரனை அடிச்சான் பாருங்க.
கன்னங்கரேல்ன்னு யானையாட்டமா ஏதோ ஒண்ணு எதுத்தாப்பல வருது. கண்ணு கூசற மாதிரி வெளக்குப் போடுது. இப்ப கொலையே நடுங்கற மாதிரி ஹார்ன் சத்தம்.
அவ்வளவுதான்...
வில் வண்டி இப்ப ஆகாயத்தில பறக்குது. குளத்து மேட்லருந்து எருதுங்க தாவி வண்டியோட குளத்துக்குள்ளே குதிச்சிட்டுது.
மாடுக நீந்துது. வண்டி தலைகீழா மொதக்குது. உள்ளேயிருந்து எங்கப்புச்சி நீந்தி வெளியே வந்து, ‘இன்னெய்க்கு யாரு மூஞ்சியில முழிச்சனோ, இப்படி ஆயிருச்சின்னு சிரிக்கறாரு...
சுவைப்போம்...
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago