எங்கம்மாவோட பொறந்தவங்க அம்மாவையும் சேர்த்து 5 பொம்பளைங்க. கருப்பராம் பாளையத்து பெரியம்மா ஒருத்தி. குளத்தூர் பெரியம்மா 2-வது. 3-வது எங்கம்மா. 4-வது நாரணாபுரத்து சின்னம்மா. கள்ளம்பாளையத்து நஞ்சாத்தான்னு கடைசி சின்னம்மா. யாருக்குமே படிப்பு கிடையாது. இவங்கள்ல கருப்பராம்பாளையத்து பெரியம்மா நான் குழந்தையா இருந்தப்பவே செத்துப் போயிட்டாங்க. உள்ளதுல வசதியானவங்க கொளத்தூர் பெரியம்மா. கொஞ்சம் வயக்காடு, தென்னந்தோப்பு, ஆடு,மாடு, கோழிக்குஞ்சுன்னு வசதியா இருந்த பொம்பள.
கிணத்துல தண்ணி வசதியெல்லாம் உண்டு. ஆனா 150 அடி ஆழம். சாட்டுக்கவலை பூட்டித்தான் தண்ணி இரைப்பாங்க. தொலைக்கட்டுக்கு மேல உருளை இருக்கும். தரைமட்டத்துல ஒரு உருளை இருக்கும். கீழே உள்ளதுக்கு பேரு ‘பண்ணை உருளை’. சால்பறியை மேலே தூக்கீட்டு வர்றதுக்கு வடக்கயிறு, வால்கயிறுன்னு ரெண்டு கயிறுல ஒண்ணை, பறிக்கு மேல்பக்கமும், 2வது கயிறை சால் பறிக்கு அடியில மாட்டுத்தோலால செஞ்ச தும்பிலயும், இணைச்சிருப்பாங்க. சால்பறி தண்ணி, மொண்டு மேல் வர, இந்த 2 கயிறையும், மாட்டோட நுகத்தடில, ஒரு கொக்கியோட இணைச்சிருப்பாங்க.
மாடுக, தொலைக்கட்டுப் பக்கத்தில வந்ததும், சால்பறி, தண்ணியில முட்டிட்டிருக்கும். கீழே இருக்கிற வால் கயித்தை தூக்கி, லேசா இழுத்தா, சால்பறி, பக்கவாட்டுல சாஞ்சு, தண்ணிய மொண்டுக்கும். அப்புறம், மேல இருக்கிற வடக்கயித்த 2 வாட்டி கீழ்பக்கமா அழுத்தி விட்டு, எருதுகளை ஓட்டி , கொஞ்சம் நகர்ந்ததும், ஓட்ற ஆளு, வடக்கயித்து மேல ஏறி உட்காந்துக்குவான். இப்படி பண்றதுனால எருதுகளோட கழுத்த, சால்பறி தண்ணி கனம் இறுக்காது.
மேலே வாளி 150 அடிபோயி- சால்பறி தணணிய சாய்ச்சவுடனே - எருதுகளோட, நொகத்தடியில இருக்கிற கொக்கிய கழட்டிட்டு, தொலைக்கட்டு நோக்கி அந்த ஆளு ஓடி வருவான்.
» பன்முகக் கலைஞர் சிவகுமார் எழுதும் கோவை மண் மணக்கும் காவியம்; கொங்கு ‘தேன்’: 2- ‘முதல் மரணம்’
» பன்முகக் கலைஞர் சிவகுமார் எழுதும் கோவை மண் மணக்கும் காவியம்; கொங்கு ‘தேன்’: 1- கோசாணம்
இதுக்குள்ளே, 2-வது ஜோடி எருதுக தொலைக்கட்டில் நொகத்தடியோட, ரெடியா இருக்கும். முதல் ஆளு கொக்கியக் கொண்டாந்து 2 -வது செட், எருத்தோட நொகத்தடியில மாட்டீருவான். இப்ப ரெண்டாவது ஆளு, வால்கவுத்த இழுத்து சால்பறிய சாய்ச்சு, தண்ணி ரொம்பினவுடனே, 2 வாட்டி வடக்கவுத்தை அமுக்கி விட்டு எருதுகளை ஓட்டீட்டுப் போய் தண்ணிய மடவாய்க்குழில சாய்ப்பாரு. இதுக்குப் பேருதான் சாட்டுக்கவலை.
தண்ணியை சால்பறி சாச்சதுக்கப்புறம், மாடுகள் 150 அடி ‘ரிவர்ஸ்’ வர்ற நேரத்தை- சுமார் 3 நிமிஷத்தை மிச்சம் பிடிக்க, 2-வது செட் எருதுகளை பயன்படுத்துவாங்க. பெரியம்மா ரங்காத்தாளை எனக்கு ரொம்ப புடிக்கும். சின்ன வயசுலயே எங்கப்பா எறந்திட்டதனால, எங்கம்மாவுக்கு காடுகரையில பாடுபடவே நேரஞ்செரியா இருக்கும். அதனால எனக்கு தண்ணி வாத்துவிட்டு, தலை தொவட்டி, நேர் எடுத்து தலை சீவி உட்டதா நெனைவே இல்லை. எங்க ஊருக்கு வந்தா, எங்க பெரியம்மாதான் இதெல்லாம் பிரியமா எனக்கு செஞ்சு விடுவாங்க.
அமாவாசை முடிஞ்சு மூணாவது நாளு , வானத்துல மூணாம் பிறை நெலா தெரியும். திடீர்ன்னு அது கண்ணுல பட்டா, உடனே பெரியம்மா கண்ணை மூடிட்டு -டேய் சின்னப்பொன்னா! இங்க ஓடியா, ஓடியான்னு கூப்பிடுவாங்க. நான் பக்கத்துல வந்ததும் கண்ணை மூடினாப்பிலயே, எம் முகத்தை புடிச்சு கிட்ட கொண்டாந்து, என் முகத்துல முழிச்சுப் பார்ப்பாங்க ‘உம் மூஞ்சில முழிச்சிருக்கேஞ்சாமி, இந்த மாசாமாவது நல்லா இருக்கட்டும்னு சொல்லுவாங்க.!’
அப்ப , நான் எலிமெண்டரி ஸ்கூல்ல 5-வது படிச்சிட்டிருந்தேன். 9 வயசு இருக்கும் எனக்கு. வாரா வாரம் சூலூர் சந்தைக்கு தூத்துக்கூடையை தூக்கிட்டு பெரியம்மா வருவா. அந்த ஒருவாரத்துக்கு வேண்டிய காய்கறி, கடலை பொறி, கருப்பட்டி எல்லாம் வாங்கி கூடையில வச்சிட்டு ஊருக்கு கிளம்புவா.
பள்ளிக்கூடத்திலயிருந்து 5 மணிக்கெல்லாம் சந்தைப் பேட்டைக்கு வந்து பெரியம்மா பின்னால நாய்க்குட்டியாட்டம் குளத்தூருக்கு நடந்து போவேன்.
சந்தைப் பேட்டைக்கு மேபுறம் சூலூர் குளம் இருக்கு. 1000ம் வருஷத்துக்கு முன்னாடி சோழ ராசா கட்டின கொளம்னு சொல்லுவாங்க. கிட்டத்தட்ட 4 பர்லாங் நீளம், குளத்துமேட்டில- ரோட்டில- நடந்து போனா, நொய்யலாறு வரும். ஆத்தை தாண்டி எடது கைப்பக்கம் ராவத்தூர் ரோடில போவோம். வண்டி போற ரோட்ல போகாம, மூணு கண்ணு பாலத்துக்கு, ஒத்தையடி பாதையில போவோம். ‘சிறுக்கால் தடம்’ன்னு அதைச் சொல்லுவாங்க.
கரும்புக் காட்டை தாண்டினதும் தூரத்துல கருப்பு அவரை விதைய தலைகீழா நட்டு வச்ச மாதிரி மூணு கண்ணு பாலம் தெரியும். கிட்டப் போகப் போக லேசா பயம் தொத்திக்கும். பாலத்துக்குள்ளே எப்படியும் 30 அடி நடந்து அந்தப் பக்கம் போகோணும்.
உள்ளே போயி, ‘டேய் ராமா’ன்னு கத்துனா ரெண்டு மூணு வாட்டி, ‘ராமா... ராமா!’ ன்னு சத்தம் கேக்கும். நம்மளுக்கு பகீர்ன்னு கைகால் எல்லா விறைச்சுக்கும்.
‘என்ன சத்தம் பெரீம்மா?’ன்னு கேட்டேன்
‘அது கண்ணு, இந்த ரயில் பாலத்தை எத்தனையோ தடவை கட்டினாங்களாம். அது பொத்து, பொத்துன்னு உழுந்துட்டே இருந்ததாம். அதனால உஞ்சோட்டு பசங்க 10-20 பேர் தலையை வெட்டி பாலத்து விளிம்பில புதைச்சாங்களாம். அதுக்கப்புறந்தான், பாலம் நின்னுச்சாம். அதனால , நாம உள்ளே போயி கூப்பிட்டா, அந்த பசங்க வந்து இப்படி கத்துவாங்க!’ன்னு சொன்னாங்க.
எனக்கு கிலி புடிச்சிட்டுது.
பின்னாடிதான் தெரிஞ்சுகிட்டேன் அது ‘எதிரொலி’ன்னு. அப்படி கொஞ்சம் தைரியம் வந்ததுக்கப்புறம், ரயில்வே பாலத்து மேல ஏறி, தூரத்தில ரயில் தண்டவாளத்தில வர்றப்ப, காலணா செப்பு காசை தண்டவாளத்து மேல வச்சுட்டு கீழே வந்துடுவேன்.
ரயில் போனதுக்கப்புறம் போயி பாத்தா அந்த காலணா சப்பளிஞ்சு பேப்பர் மாதிரி ஆகியிருக்கும்.
ரயில்வே பாலத்திலிருந்து பார்த்தா ஒரு மைலு தூரத்தில ‘எரமண்’(கருத்தமண்) ஏரி ஒண்ணு நீளமாத் தெரியும். அதுக்கு ஆச்சாங்குளத்து மேடுன்னு பேரு. அந்த ஏரியோட அடிவாரத்தில அரசமரம், வேப்பமரங்களுக்கு நடுவால ஆசிரமம் மாதிரி குடிசை. அதிலதான் இயற்கை வைத்தியர் கப்பினி கவுடர் இருப்பாரு. செக்கச்செவேன்னு ஒடம்பு. 50 வயசுக்குள்ளே இருக்கும். கருந்தாடி. உச்சில குடுமி. உடம்புல எங்கயும் ஒரு மச்சமோ, மருவோ இருக்காது. சிலை மாதிரி இருப்பாரு.
அதிகமா பேசமாட்டாரு. ‘என்ன வியாதி?’ன்னு கேட்டுட்டு மூலிகைகள், பச்சை இலை குடுப்பாரு.
ஆச்சாங்குளம் மேடேறிப் பார்த்தா - கண்ணுக்கெத்தற வரைக்கும் வெள்ளக்காடா இருக்கும். குளத்தில தண்ணி வத்தினதும், வெள்ளரிச்செடி தானா மொளைக்குதா - ஊர்ச்சனங்க, வெள்ளரி விதை போட்டு முளைக்க வைக்கறாங்களான்னு தெரியாது.
மே மாச வெயில்ல வெள்ளரிச் செடில பூப்பூத்து -பிஞ்சுக் காய், முத்தினகாய்- அதுல வெள்ளரிப் பழமாகி ஆரஞ்சு தோல் உறிஞ்சு வந்து, ‘வாங்கடா- வந்து என்னை சாப்பிடுங்கடா’ன்னு கெஞ்சற மாதிரி இருக்கும்.
பெரியம்மா ஊட்டுல, வேலியோரம் சங்கஞ்செடிகள் இருக்கும். கரும்பச்சை நிறத்துல இருக்கற ஒரு இலைய பிடுங்கி, குறுக்கால மடிச்சு ஒடிச்சா, வெள்ளையா பால் வரும். மடிச்ச இலைய வட்டமா பிரிச்சா அந்த பால் ஆடை மாதிரி பரவி அதில் வானவில் கலர் தெரியும்.
பெரியம்மா தோட்டத்துக்கு - தட்டாந்தோட்டம்ன்னு பேரு. அதுக்கு எதுத்தாப்புல கோதா பொட்டி இருக்கு. அதாவது ‘ஜிம். காத்து மண்ணு சுவத்துல காம்பவுண்ட். உள்ளே போனா கர்லா கட்டை, பேரலல் பார், ரிங்பார் எல்லாம் இருக்கும்.
மில்லுக்கு வேலைக்குப் போற என் அண்ணன்மார், சிநேகிதர்களோட, முந்தினநாள் ஊறப்போட்ட கொண்டைக்கடலைய அரைப்படி மென்னு தின்னுட்டு, 5,6 கோழி முட்டைய அப்படியே ஒடைச்சு வாய்க்குள்ளே ஊத்திட்டு உடற்பயிற்சி பண்ணுவாங்க. பக்கத்துல இருக்கிற மாரியம்மன் கோயில் கிணத்தில் தண்ணி சேந்தி அலுப்புத்தீர குளிச்சிட்டு ஊட்டுக்குப் போவாங்க.
எனக்கு நெனைவு தெரிஞ்சு, முத முதல்ல பிரியப்பட்டு எனக்கு காசு குடுத்தது குளத்தூர் பெரியம்மாதான். அது 4 அணா காசு. வெள்ளிக்காசு. முன் பக்கம் 5-ம் ஜார்ஜ், பக்கவாட்டு முகம், தலையில கிரீடம். கழுத்துப்பக்கம் ‘கிராஸா ’ வெட்டியிருப்பாங்க. அதான்படம். பின்பக்கம் புலியோட பக்கவாட்டு தோற்றம், முழு புலியும் சைடில் நிக்கற மாதிரி. புலிக்கு பின்புறம் பேரீச்சம் மரம். கிளைகள், இலைகள் இருக்கிற மாதிரி படம்.
இந்த காசை வச்சு என்ன பண்றதுன்னு தெரியலே. சூலூர் ஸ்கூலுக்கு வந்ததிலேருந்து சீனிவாசா காபி கிளப் மேல ஒரு கண். அந்த ஓட்டல்ல உருளைக்கிழங்கு போண்டா சுடுவாங்க. திருச்சி ரோட்டுல தெக்குப் பாத்த ஓட்டல். அங்கிருந்து அரை பர்லாங் தூரத்துல கவர்மெண்ட் ஆஸ்பத்திரி இருக்கு. ஸ்கூல்லருந்து சாயங்காலம் ஆஸ்பத்திரி வழி வரும்போது அவ்வளவு தூரத்துக்கு வாசனை வந்து மூக்கை தொளைக்கும்.
பெரியம்மா குடுத்த 4 அணா இருக்கு. இன்னிக்கு ஒரு கை பார்த்துருவோம்னு ஓட்டலுக்குள்ளே போனேன். அட்டவணைய பார்த்தேன். உருளைக்கிழங்கு போண்டா 4 அணான்னு எழுதிருந்தது. பக்கத்து டேபிள்ல ஒருத்தர் 2 உருளைக்கிழங்கு போண்டா வச்சு சாப்பிட்டாரு.
இவரு 2 சாப்பிடறாரே, 2-ம் சேர்ந்து 4 அணாவா? ஒரு போண்டா 4 அணாவா? நாம டேபிள்ள உட்கார்ந்ததும் இதே மாதிரி 2 போண்டா கொண்டாந்து வச்சு - நாம சாப்பிட்டதுக்கப்புறம் 8 அணான்னு பில் குடுத்தா என்ன பண்றது? சப்ளையர்கிட்ட ‘ஒரு போண்டா 4 அணாவா, 2 போண்டா 4 அணாவான்னு கேக்க வெக்கப்பட்டு, பித்தளை அண்டாவுல இருந்த தண்ணிய, ஒடுங்கிப் போன பித்தளை டம்ளர்ல மொண்டு குடிச்சிட்டு மாரியம்மன் கோயில் பக்கம் இருந்த கந்தசாமி தேவர் கடையில 2 குச்சி மிட்டாய் வாங்கி சாப்பிட்டு போனேன்.
ஆக, 5-ம் கிளாஸ்லருந்து 10-ம் கிளாஸ் முடியற வரைக்கும் அந்த உருளைக்கிழங்கு போண்டாவை நான் சாப்பிடவே இல்லை.
முக்கியமான விஷயம். இந்த 60 வருஷத்தில நான் மெட்ராஸ்லருந்து கோயமுத்தூர் புறப்பட்டாலும், கிராமத்திலிருந்து சென்னை புறப்பட்டாலும், வீட்ல இருக்கிற சின்னஞ்சிறுசுக, வேலைக்காரங்களுக்கு காசு குடுக்காம போனதே இல்லை. இந்த அன்பளிப்பு பழக்கம் எங்க பெரியம்மாவால வந்ததுதான்.
- சுவைப்போம்...
எழுத்தாக்கம்: கா.சு.வேலாயுதன்
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
3 days ago
வலைஞர் பக்கம்
3 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago