கரோனா சிகிச்சைக்குச் செல்பவர்களின் கவனத்திற்கு... ஒரு பயிற்சி மருத்துவரின் அனுபவப் பகிர்வு

By கரு.முத்து

தஞ்சையைச் சேர்ந்த ஆனந்தி பிரபாகர் தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் படிப்பு முடித்து பயிற்சி மருத்துவராக பணிபுரிகிறார். மாணவ பத்திரிகையாளராக பணிபுரிந்த அனுபவம் உள்ள அவருக்கு சமீபத்தில் கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சையின் மூலம் மீண்டு வந்திருக்கிறார்.

கரோனா குறித்த புரிதல்கள் இன்னும் நம்மக்கள் மத்தியில் சரிவர இல்லாத நிலையில், தொற்றுக்கான அறிகுறிகள் தொடங்கி சிகிச்சை முறைகள் மற்றும் உணவுப் பழக்க வழக்கங்கள் என அனைத்தையும் அனைவரும் அறிந்துகொள்ளக்கூடிய எளிய வார்த்தைகள் வழியே தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார் ஆனந்தி.
இதோ அவரின் அந்த அனுபவ பகிர்வு...

‘புலி வருது... புலி வருது' என சொல்லிக்கொண்டே திரிந்தோம். இதோ இன்று நம் வீட்டு வாசலுக்கும் வந்து நிற்கத் தொடங்கிவிட்டது. எனக்குத் தெரிந்து எதிர்காலத்திலும் இங்கிருக்கும் !
இது என்னுடைய அனுபவமும், என் கருத்துகளும் மட்டுமே.

நான் ஓர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர். 'தனிமனித இடைவெளி' என ஊருக்கு உபதேசமளித்தாலும், நிறைய நோயாளிகளை தினந்தினம் நெருங்கிப் பரிசோதிக்கவும், மருந்து அளிக்க வேண்டிய கடமையும் எங்களுடையது. அப்படித்தான் கரோனா ‘பாசிட்டிவ்’ ஆன ஒரு நோயாளியிடமிருந்து எனக்கும் என் சக நண்பர்களுக்கும் வந்திருக்கும் என நினைக்கிறேன்.

ஜூன் 11-ம் தேதி இரவு மருத்துவமனையில் இரவு தங்கல். எனக்கு அன்று மாலையிலிருந்து லேசான உடல் அசதி இருந்தது. இரவு காய்ச்சலும் சேர்ந்து கொண்டது. வார்டிலிருந்து ஒரு காய்ச்சல் மாத்திரையை வாங்கி போட்டுக் கொண்டு இரவைக் கழித்தேன்.
அடுத்தநாள் ஜூன் 12-ம் தேதி, வெள்ளிக்கிழமை காய்ச்சல் குறையவேயில்லை. தசைவலி. கெண்டைக்காலில் ஆரம்பித்து அப்படியே மொத்த உடம்பும் என்னால் எழ முடியாத அளவுக்கு வலிக்க ஆரம்பித்துவிட்டது.

இந்த அறிகுறிகளைக் கொண்டு எனக்கும் ‘பாசிட்டீவ்’வாக இருக்கலாம் என நான் யூகித்துக் கொண்டதால் என்னை நானே தனிமைப்படுத்திக் கொள்ளத் தொடங்கினேன். நேரமாக நேரமாக தலைவலியும் இருமலும் சேர்ந்து கொண்டது. எனக்கு உடம்பு சரியில்லாமல் போவது, அதுவும் காய்ச்சல் இருமல் வருவதென்பதெல்லாம் அரிதிலும் அரிதாக நிகழ்பவை. எனவே நிச்சயம் கரோனா தான் என்பது எனக்கு தெளிவாகவே புரிந்துவிட்டது.

அடுத்த நாளே என்னை பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டேன். மீண்டும் வந்து என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். இந்த நான்கு நாட்களும் என் அறிகுறிகளுக்கான மருந்துகளை எடுத்துக் கொண்டிருந்தேன்.
ஜூன் 14 அன்று ரிசல்ட் ‘பாசிட்டீவ்’ என்று வந்தது. எனக்கு மட்டுமல்ல. என்னோடு படிக்கும் ஆறு பேருக்கும் சேர்த்து. நாங்கள் அனைவரும் கரோனா தனிமைப்படுத்துதலுக்கென ஒதுக்கப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டோம்.

நான் ஏற்கெனவே கொஞ்சம் யூகித்து வைத்திருந்ததால், ரிசல்ட் என்னை அப்போது பெரிதாக பாதிக்கவில்லை. அடுத்தடுத்த நாட்களில் நீண்ட நேர தனிமையும், தொடர் இருமலும் அதனால் ஏற்ட்ட நெஞ்சுவலியும் கொஞ்சம் கலக்கத்தை ஏற்படுத்தின. பிறகு இரண்டு நாட்களுக்கு தூக்க மாத்திரைகள் போட்டு தூக்கத்தோடு தான் இரவும் பகலும் கழிந்தது.
இந்த இடைப்பட்ட காலத்தில் எனக்கு நுகர்வறியும் திறன் எப்போது போனது என்பதே தெரியவில்லை. மணம், துர்நாற்றம் என எதுவுமே தெரியவில்லை. பற்றாக்குறைக்கு சுவையும் கூட தெரியவில்லை.

'சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு'
என்பான் வள்ளுவன். இதில் நமக்கு இரண்டு அவுட். சாப்பாடெல்லாம் மல்லுக்கட்டி சாப்பிடவேண்டியதாக தான் இருந்தது. ஆனாலும் சாப்பிட்டேன். 12 நாட்களுக்குள் இரண்டு டெஸ்ட்கள். மூன்றாவது டெஸ்டில் தான் ‘நெகட்டிவ்’ என வந்தது. இப்பொழுது தனி அறையில் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். இது இன்னும் ஏழு நாட்களுக்குத் தொடரும்.

கரோனா வந்தால் என்னெவெல்லாம் சாப்பிடணும் என்று நீங்கள் குழப்பிக் கொள்ளவே தேவையில்லை. உங்கள் அறிகுறிகளுக்குத் தேவையான மாத்திரை மருந்துகள், மூன்று வேளை உணவு, எலுமிச்சை, இஞ்சி, புதினா கலந்த ஜூஸ் (அல்லது) மிளகு கலந்த சூப், இரண்டு வேளை டீ, பால், மாலை சிற்றுண்டிக்கு ஏதேனும் பயறுவகைகள், மிளகு, மஞ்சள் தூள் கலந்த பால், தினம் ஒரு முட்டை, தினம் ஒரு பழம் (பெரும்பாலும் ஆரஞ்சு),வெந்நீர், கபசுரக் குடிநீர், முகத்துக்கு மாஸ்க் என உங்களுக்குத் தேவையானதை எல்லா மருத்துவமனைகளிலும் அவர்களின் நேரக் கணக்குப்படி உங்களின் இடத்திற்கே வந்து தருவார்கள்.

இதில் நம்முடைய வேலை 'ஐயோ. சாப்பிட முடியலையே' என்று ஒதுக்கி வைக்காமல் எல்லாவற்றையும் சாப்பிடுவது தான். இது இல்லாமல் ஆரஞ்சு, நெல்லிக்காய், எலுமிச்சை அன்னாசிப்பழம் ஆகியவற்றை நான் தனியாக வாங்கி வரச் சொல்லி சாப்பிட்டேன்.
கரோனா வார்டிற்கு சிகிச்சைக்கு வருபவர்கள் வரும்போதே உங்களுக்குத் தேவையான துணிமணிகளை எடுத்துக்கொள்ளுங்கள். எந்த அளவுக்கு குறைவாக பயன்படுத்த முடியுமோ, அந்த அளவுக்கு குறைவான துணிகள் போதும். மூன்று செட் எடுத்துப் போவதே போதுமானதாக தான் இருக்கும்.

இது இல்லாமல் ஹேண்ட்வாஷ், அவசரத்திற்கென கொஞ்சம் மாஸ்க், குளிக்க துவைக்க சோப், டூத்ப்ரஷ், பேஸ்ட், சீப்பு, வெந்நீர் பிடித்துக் கொள்ள ஃப்ளாஸ்க், டம்ளர் , செல்போன், சார்ஜர் ஆகியவற்றைக் கட்டாயம் எடுத்துக் கொள்ளுங்கள்.
ஹெட்போன், புத்தகங்கள், தலையணை,போர்வை, தட்டு, துணி காயப்போடும் ஹேங்கர் எடுத்துச் செல்வதெல்லாம் அவரவர் விருப்பதிற்குட்பட்டது. உங்களுக்கு வெந்நீர் அடிக்கடி அவசியம் தேவைப்படும் எனும் பட்சத்தில் உங்களிடம் 'கெட்டில்' இருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள். எங்கள் மருத்துவமனையில் இதற்கென தனியாக இன்டெக்‌ஷன் ஸ்டவ் வைத்திருந்தார்கள்.

எனக்கு இருந்த அறிகுறிகள் :

காய்ச்சல், தலைவலி, உடம்புவலி, இருமல், வயிற்றுப்போக்கு, மணம் (வாசனை)சுவை தெரியாமை. இந்த நோய் அறிகுறிகள் உங்களுக்கு இருப்பின் தயவுசெய்து உங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். இது உங்கள் சுற்றத்திற்கு, குடும்பத்திற்கு, நண்பர்களுக்கு நீங்கள் செய்யும் பெரிய உதவி. அறிகுறிகள் இருப்பின் தயங்காது அருகிலுள்ள மருத்துவமனைகளில் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். ‘பாசிட்டிவ்’ என வந்தால், வார்டில் சேர வரும்போது, மேலே குறிப்பிட்டுள்ள 'அவசியம் எடுத்து வர வேண்டிய பொருட்களை' எடுத்து வாருங்கள்.

உங்களுக்கு ஏதேனும் நோய்கள் இருப்பின், அறுவை சிகிச்சை செய்திருப்பின் அதற்கான குறிப்பு அட்டைகள், நோட்டுகள், மருந்து மாத்திரைகளைக் கட்டாயம் எடுத்து வாருங்கள். உங்கள் மருத்துவர்களிடம் மறக்காமல் தெரியப்படுத்துங்கள். கரோனா வார்டில் கட்டாயம் மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள். (அந்த மாஸ்க்கை சரியான முறையில் அப்புறப்படுத்தி விடுங்கள் மக்களே. மருத்துவமனையில் கொடுக்கும் மாஸ்க்கை வாங்கி மடித்து வைத்துவிட்டு, இரண்டு, மூன்று நாட்களுக்கெல்லாம் ஒரே மாஸ்க்கை அணிந்து கொண்டு இருப்பவர்களைப் பார்த்திருக்கிறேன்.)

பாரபட்சம் பார்க்காமல் எல்லாவற்றையும் சாப்பிடுங்கள். அதிகமாக, மிக அதிகமாக நீர் அருந்துங்கள். முக்கியமான ஒன்று, வார்டிலும் உங்களை நீங்கள் தனிப்படுத்திக் கொள்ளுதலே சாலச் சிறந்தது. திருவிழாவுக்கு வந்ததைப் போல ரவுண்டு கட்டி உட்கார்ந்து சாப்பிடுபவர்களைப் பார்க்கும் போது, எனக்கு அவ்வளவு ஆச்சரியமாக இருந்தது. நீங்கள் முறையாக உங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவில்லை என்றால் கூடுதல் பாதிப்புக்கு வழிவகுத்து, உங்களுக்கு குணமடைய நாட்கள் அதிகமாகலாம்.

மற்ற வார்டைப் போல இங்கே நம்மைப் பார்த்துக் கொள்ள குடும்பத்தினர் இருக்க மாட்டார்கள். உங்களைப் பார்க்க உறவினர்கள் வர மாட்டார்கள். கொஞ்சம் கடினமான சூழல் தான். உங்கள் மன இறுக்கத்தைப் போக்கிக் கொள்ள புத்தகங்கள், பாட்டு என மடைமாற்றிக் கொள்ளுங்கள்.

உடல் நலத்திலும் மனநலத்திலும் என்ன பிரச்சினையென்றாலும் அங்குள்ள மருத்துவர்களுக்கோ, செவிலியர்களுக்கோ தெரியப்படுத்தி சரிசெய்து கொள்ளுங்கள். இதுவும் ஒரு சாதாரண காய்ச்சல் போல தான். முறையான மருந்துகளோடும், சரியான உணவோடும் நம்மால் இதை எளிதில் கடந்து வர முடியும் என்கிற நம்பிக்கை மிக முக்கியம்.

இன்றைய சூழலில் உடல்நிலையை விட, மனநிலை மிக முக்கியம். பொருளாதாரம், அடுத்த மாச செலவு என எல்லா சுமைகளையும் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிடுங்கள். உடல்நிலை சரியானதும் அந்தப் போராட்டத்தை எல்லாம் கவனித்துக் கொள்ளலாம்.

உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு:

'பக்கத்துல இருந்து பாத்துக்க முடியலையே' என்று நீங்கள் வருத்தப்படாதீர்கள். அதற்கு பதிலாக அவ்வப்போது, கரோனா சிகிச்சையில் இருக்கும் உங்களது உறவை அலைபேசியில் அழைத்து பேசி உற்சாகப்படுத்துங்கள். அவர்களின் மனநலத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். ‘நாங்கள் இருக்கிறோம்; மீண்டு வருவாய்’ என்ற நம்பிக்கையை எப்போதும் ஏற்படுத்துங்கள்.
ஏனெனில்,
நம்பிக்கை... அதுதானே எல்லாம்!
- ஆனந்தி பிரபாகர்
பயிற்சி மருத்துவர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்