கன்னத்தில் கைவைத்து உட்காராமல் கரோனாவை சமாளிக்கும் ஷேக்

By என்.சுவாமிநாதன்

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா தொற்றுப் பரவல் பல தொழில்களையும் அடியோடு முடக்கிப்போட்டுள்ளது. வீட்டு விசேஷங்களுக்கு பந்தியில் பரிமாறுவதற்கு ஆட்களை வழங்கும் கேட்டரிங் சர்வீஸ் நிறுவனங்களும் இப்போது பெரும் சரிவைச் சந்தித்திருக்கின்றன.

அப்படி கன்னியாகுமரியில் 124 பேரைவைத்து கேட்டரிங் சர்வீஸ் நடத்திக் கொண்டிருந்த ஷேக் , அந்தத் தொழிலுக்கு இப்போதைக்கு வேலை இருக்காது என்பதால் அந்தக் கடையை மூடிவிட்டு ‘இளநீர் சர்பத்’ கடையைத் திறந்திருக்கிறார்.
குமரியில் நொங்கு சர்பத், குலுக்கி சர்பத் ஆகியவை மிகவும் பிரபலம். என்றாலும் இப்பகுதிவாசிகளுக்கு இளநீர் சர்பத் புதுவரவு என்பதால் ஷேக் கடையில் கூட்டமும் கூடுகிறது.

கரோனாவால் தொழில் வாய்ப்புகள் குறைந்தாலும், மாற்றியோசித்திருக்கும் ஷேக் இதுகுறித்து நம்மிடம் பேசுகையில் “நான் அடிப்படையில் எம்பிஏ பட்டதாரி. நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்தேன். முதல்ல நானும் ஒரு கேட்டரிங் சர்வீஸ் நிறுவனத்தில் பந்தி பரிமாறும் வேலைக்குத்தான் போனேன். தொழிலைக் கத்துக்கிட்டு பிறகு நானே தனியாக இதைச் செய்ய ஆரம்பிச்சேன்.

குறைச்சுப் பார்த்தாலும் வருசத்துக்கு 850 ஆர்டர் இருக்கும். ஒரே நாள்ல அஞ்சாறு இடத்துல பந்தி பரிமாறுறதுக்கு ஆட்களை அனுப்பிருப்பேன். நான் கேட்டரிங் சர்வீஸ் தொழிலுக்கு வந்து 9 வருசம் ஆச்சு. என்கிட்ட மொத்தம் 124 பேர் வேலைசெய்யுறாங்க.

கடந்த 3 மாசத்துல மட்டும் 15 லட்சம் ரூபாய்க்கு வாய்ப்புகளை இழந்துருக்கேன். இதில் என்னோட வருமானம் மட்டும் இரண்டரை லட்சம் ரூபாய் போயிடுச்சு. பந்தக்கால் நட்டு சொந்தபந்தங்களை கூப்பிட்டு தடபுடலா நடந்த கல்யாணங்கள் இப்போ ஐம்பது, நூறுபேருக்கானதா சுருங்கியிருக்கு. பொதுவா ஒரு விசேஷ வீட்டுல பத்து பேரை பரிமாறுவதற்கு அனுப்புவோம். ஆனா இப்ப, 50 பேரை வெச்சுத்தான் கல்யாணமே நடத்துறாங்க. அதனால எங்களுக்கு வேலை இல்லை.
ஏப்ரல், மே, ஜூன் மாசங்கள் தான் எங்களுக்கு உச்சகட்ட சீசன். அந்த சீசனையே இழந்துட்டோம். கல்யாண மண்டபங்களை இனி எப்ப திறப்பாங்கன்னே தெரியல. கரோனா ஒழிந்து கல்யாண மண்டபங்களைத் திறந்தால் தான் எங்களுக்கு பழையபடி தொழில் சூடுபிடிக்கும். அதுக்காக அதுவரைக்கும் சும்மா இருக்க முடியாதே. அதனால தான் இளநீர் சர்பத் கடையைத் திறந்துட்டேன்.

எங்க மாவட்டத்துக்கு இது புதுசு. அதனால நல்ல வரவேற்பு இருக்கு. ஒரே சமயத்துல 124 பேருக்கு வேலைகொடுத்த என்கிட்ட இப்போ இந்தக்கடையில் ஒரே ஒருத்தர்தான் வேலை பார்க்கிறாரு. இந்த புதுத்தொழில் நான் எதிர்பார்த்ததை விடவும் நல்லாவே போகுது. என்கிட்ட வேலைபார்த்த அத்தனை பேருக்கும் வேலைகொடுக்குறாப்புல ஒரு மாற்றுத் தொழிலைப் பத்தி யோசிச்சுகிட்டு இருக்கேன். இளநீர் சர்பத் கடையையே இன்னும் சில இடங்களில் திறந்து அவங்கள வேலைக்கு அமர்த்தும் எண்ணமும் இருக்கு” என்றார்.

தொழில் இழப்பு ஏற்பட்டதும் கன்னத்தில் கைவைத்து உட்காருபவர்கள் ஒருபுறமென்றால், இப்படியான மாற்றுத் தொழில் நோக்கியும் பலரை நகர்த்தி யிருக்கிறது கரோனா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்